Thursday, February 25, 2010

பாடம் 021: அழியாதவன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.10-12)

தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகம் தோற்றம்-மறைவு என்ற காலக்கட்டுப்பாட்டுக்குட்பட்டது. 'உலகம் பரமன்' என்ற விளக்கம் பரமனும் அழிவுக்குட்பட்டவன் என்ற தவறான கருத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக வேதம், 'அழியாதவன் பரமன்' என்ற விளக்கத்தை தருகிறது.

எல்லாம் எப்பொழுதும் மாற்றமடைந்து கொண்டிருந்தாலும் எதோ ஒரு நிலையான உலகம் இருப்பது போல நமக்கு ஏற்படும் தோற்றத்திலிருந்து நாம் பரமனின் மாயாசக்தியை தெரிந்து கொள்ளலாம். நமது உடல் மனம் மற்றும் நாம் காணும் பொருள்களனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாக தோன்றி பின் மறைந்து மற்றொன்றாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த மாறும் உலகம் ஒரு நாள் முற்றிலும் அழிந்து விடும். அறிவியலும் இந்த உண்மையை நமக்கு அறிவிக்கிறது.

ஒரு பாடகன் பாடுவதை நிறுத்திவிட்டால் எப்படி பாடல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறதோ அதே போல பரமனின் மாயா சக்தி ஒடுக்க நிலையை அடைந்து விட்டால் நாம் வாழும் இந்த பேரண்டம் முழுவதும் அழிந்து விடும். பாடகனால் எப்படி எப்பொழுது வேண்டுமானாலும் மறுபடியும் பாட்டைத் துவங்க முடியுமோ அதே போல மறுபடியும் இந்த உலகத்தை தோற்றுவிக்க பரமன் எந்த வித முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

மேடையில் பாடகன் பாடுவது பாடலை கேட்பவர்களின் விருப்பத்திற்கேற்றபடி தொடரும் அல்லது முடியும். அனைத்து உயிரினங்களின் பாப புண்ணியத்திற்கேற்றவாறு அமையும் இந்த உலகம் அவர்களின் ஒட்டு மொத்த நிலைக்கேற்ப ஒரு முடிவுக்கும் வரும்.

அழியும் உலகமும் அழியா பரமனும்

ஒரு பெரிய விளையாட்டுத்திடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தின் நிழல் காலை முதல் மாலை வரை மாறிக்கொண்டேயிருக்கும். காலையில் பெரியதாகத் தெரியும் நிழல் தொடர்ந்து சிறியதாக மாறி உச்சிப்பொழுதில் முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. பிறகு அது மறுபடியும் தோன்றி மாலையில் வளர்ந்து பின் இரவில் மறைகிறது. நிழலின் இந்த தொடர்ந்த மாற்றங்களும் தோற்றமும் மறைவும் கொடிக்கம்பத்தை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. கொடிக்கம்பத்தின் உயரம் கூடுவதோ குறைவதோ இல்லை. ஆனாலும் நிழலின் நீளத்தில் தொடர்ந்து மாற்றம் காணப்படுகிறது. நிழல் முற்றிலும் இல்லாமல் போனாலும் கொடிக்கம்பம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

அதே போல பரமன் என்றும் மாறாதவன். அழியாதவன். உலகம் கொடிக்கம்பத்தின் நிழல் போல தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும்.

நிழலும் நிஜமும்

நிழலின் இருப்புக்கும் மாற்றத்திற்கும் காரணம் நிஜமாக இருக்கும் கொடிக்கம்பமும் சூரிய ஒளியும். அதுபோல உண்மையில் இருக்கும் பரமனின் வடிவாக இந்த உலகத்தை மாயாசக்தி உருவாக்குகிறது. சூரிய ஒளி நிஜமான கொடிக்கம்பத்தின் சாயலில் தற்காலிகமாக ஒரு நிழலை உருவாக்குவது போல இந்த இருத்தல் என்ற பரமனின் இயல்பை தற்காலிகமாக உபயோகித்து மாயை இந்த உலகம் இருப்பதாக காண்பிக்கிறது.

முடிவுரை :

பரமன் அழிவில்லாதவன். பரமனின் மாயாசக்தி இவ்வுலகத்தை இருப்பது போல சிலகாலம் காண்பித்து பின் அதை ஒடுக்கிவிடுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் பரமன் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கிறான். அவற்றால் பரமனுக்கு எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

பயிற்சிக்காக :

1. இந்த உலகத்தின் தோற்றத்திற்கும் மறைவுக்கும் காரணமாக இருப்பது யார்?

2. பரமனிடம் மாயா சக்தி இருப்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?


சுயசிந்தனைக்காக



1. மாயா சக்தியின் செயல்களை பரமனின் செயல் என்று ஏன் சொல்ல முடியாது?