எங்கும் நிறைந்திருக்கும், முக்காலத்திலும் உண்மையான பரமனும் கால தேசத்துக்குள் கட்டுப்பட்ட நானும் எப்படி ஒன்றாயிருக்க முடியும் என்ற நமது நியாயமான சந்தேகத்தை தீர்க்க வேதம் மனமே பரமன் என்ற விளக்கத்தை தருகிறது.
நம் மனதை அதில் ஓடும் எண்ணங்களின் அடிப்படையில் நான்காக பிரிக்கலாம். மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் என்பவை அந்த நான்கு பிரிவுகள்.
மனம்: சஞ்சல படுவது மனம். இது சரியா தவறா, இப்படி செய்யலாமா வேண்டாமா, இவர் நல்லவரா கெட்டவரா இவை போன்ற ஒன்றுக்கொன்று முரண்பட்ட எண்ணங்களுக்கு நடுவே கடிகாரத்தின் பெண்டுலம் போல தொடர்ந்து அலைக்கழிந்து கொண்டிருப்பது மனம்.
புத்தி: நிச்சயம் செய்வது புத்தி. அலைபாயும் மனதை இதுதான் சரியான முடிவு, இப்படித்தான் செய்யவேண்டும் என்ற கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவது புத்தி.
சித்தம்: நினைவலைகள் சித்தம். நம்மை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், பொருள்களையும், மனிதர்களையும் ஞாபகம் வைத்துக்கொள்வது சித்தம்.
அகங்காரம்: நான் எனது என்ற எண்ணங்கள் அகங்காரம்.
நமது ஐந்து புலன்கள் நம்மை சுற்றியுள்ள உலகத்தை பற்றிய செய்திகளை சேகரித்து முதலில் மனதுக்கு அனுப்புகின்றன. மனம் அவற்றை ஆய்ந்து அறிவாக மாற்றி சித்தத்துள் சேகரித்து வைக்கிறது. புத்தி இந்த அறிவை பயன்படுத்தி நமது வாழ்க்கைக்கு தேவையான செயல்களில் நம்மை ஈடுபடுத்துகிறது.
நமது மனம், புத்தி, சித்தம் மற்றும் உடலின் செயல்களை தன் செயலாக தவறாக பாவித்து 'நான் பார்த்தேன்', 'நான் சிந்தித்தேன்', 'நான் முடிவு செய்தேன்' என்று சொல்லிக்கொள்வது மட்டுமே அகங்காரத்தின் வேலை.
மனம், புத்தி, சித்தம் இந்த மூன்று வகையான எண்ணங்களுக்கு ஆதாரமான பொருள்கள் நம் மனதுக்கு வெளியே இருக்கும் இந்த உலகத்தில் உள்ளன. இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்தும் கண்டு, கேட்டு, தொட்டு, சுவைத்து மற்றும் நுகர்ந்து அறியப்படும் பொருள்களாகும்.
அகங்காரம் என்ற எண்ணத்தின் உண்மையான பொருள் அறிபவனான பரமன். ஆனால் நாம் இந்த உண்மையை அறிவதில்லை. நான் என்ற வார்த்தைக்கு நமக்கு சரியாக பொருள் தெரிவதில்லை. இந்த உடல் என்றும், மனம் என்றும், உடலும் மனமும் சேர்ந்த ஒரு கலவை என்றும், நான் என்ற சொல்லுக்கு வெவ்வேறு பொருள்களை வெவ்வேறு சமயங்களில் அறியாமையால் உபயோகிக்கிறோம்.
நான் என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் பரமன். நாம் பார்க்கும் பொருளை பற்றிய நமது மனதில் உள்ள எண்ணம் அந்த பொருளிலிருந்து வேறு பட்டது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் பரமனை குறிக்கும் நான் என்ற எண்ணத்தில் நமக்கு பின்வரும் குழப்பங்கள் உள்ளன.
1. நான் என்பதன் பொருள் நமக்கு சரியாக தெரியாமல் சில சமயம் 'நான் வருகிறேன்' என்று நமது உடம்பை நானாகவும் சில சமயம 'என் உடம்பு சரியில்லை' என உடம்பை நமது உடமையாகவும் குறிப்பிடுகிறோம். அதே போல் 'என் மனது சரியில்லை' என்று கூறும் பொழுது நான் வேறு என் மனது வேறு என்று புரிந்திருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் நான் என்பது மனதை குறிப்பதாக நினைத்து கொண்டுள்ளோம்.
2. பரமன் எங்கும் வியாபித்திருப்பவன். நான் என்ற வார்த்தை உண்மையில் பரமனைத்தான் குறிக்கிறது. இது தெரியாமலேயே நாம் இந்த உலகத்தை என்னுடைய உலகம் என்றும், என்னுடைய சூரிய குடும்பம் என்றும் குறிப்பிடுகிறோம். உண்மையில் எல்லாமே நம்முடையதுதான். அதனால்தான் நாம் விரும்பும் பொருள்களை நமதாக்கி கொள்ள விழைகிறோம்.
3. நாம் பார்த்து அறியும் பொருள்களெல்லாம் எப்பொழுதும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே மனம், புத்தி மற்றும் சித்தம் என்பவை தொடர்ந்து சூழ்நிலைக்கேற்றவாறு மாறுவது என்பது வெகு ஆரோக்கியமான நிலை. காலம் மாற மாற மனது மட்டும் மாறாமல் இருந்தால் அது ஒரு பின்தங்கிய தேங்கிய ஆரோக்கியமில்லாத இடைவெளியை (Generation gap) ஏற்படுத்தும்.
இந்த உலகத்தை போலல்லாமல் பரமன் என்றும் மாறாமல் இருப்பவன். நான் என்ற உணர்வும் என்றும் மாறுவதில்லை. நமது சிறிய வயது முதல் முதுமை வரை நான் என்ற உணர்வில் எவ்வித மாற்றமும் இருப்பதில்லை. ஆனால் நான் என்பதற்கு உடல்/ மனது என்ற தவறான பொருளுடன் நாம் என்றும் இளமையுடன் இருக்க விழைகிறோம்.
4. பரமன் என்றும் அழியாதவன். நான் என்பதற்கு பரமன் என்ற பொருள் நமக்கு தெரியாவிட்டாலும் கூட நமக்கு என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்ற அவா உள்ளது.
5. பரமன் ஆனந்தமயமானவன். ஆகவேதான் நாமும் என்றும் ஆனந்தமாக இருக்க ஆசைப்படுகிறோம்.
அகங்காரம் 'நான்' என்னும் மாறாத பரமனையும் 'உடல் மற்றும் மனம்' என்னும் மாறும் பொருளையும் தவறாக சம்பந்தபடுத்தியுள்ளது. இந்த தவறான அறிவுதான் நமது துன்பத்திற்கெல்லாம் அடிப்படை காரணம். என் மனதையும் உடலையும் உணரும் நான் யார் என்று நாம் தீவிரமாக சிந்தித்தால் நான் வேறு என் உடமைகள் வேறு என்று புலப்படும். மேற்கூறிய குழப்பங்கள் மறைந்து நான் என்பதன் உண்மைப் பொருள் பரமன் என்பது விளங்கும்.
உணர்வு மயமாகவும் இன்ப மயமாகவும் இருக்கும் பரமன்தான் நான் என்ற அறிவு நமது புத்தியில் நிலை பெற்று விட்டால். அதன் பின் நமது அகங்காரம் நமது மனதின் அலை பாயும் இயல்பையோ உடலின் அழியும் தன்மையையோ தன்னுடைய நிலை என நினைத்து வருத்தப்படாது. உலகத்தின் துன்பங்கள் நம்மை பாதிக்காது. ஆகவே நாம் குறைவில்லா இன்பத்தை நுகரத் தொடங்குவோம்.
முடிவுரை :
இது என்று சுட்டிக்காட்ட முடியகூடிய நமது இந்த உடல், மனம் உட்பட்ட இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்தும் அறியப்படும் பொருள்கள் என்ற தொகுப்பில் அடங்குபவை. அறிபவனான பரமன் இந்த தொகுப்பில் அடங்காதவன். மனம் அறிபவன் அல்ல. மனம் அறிபவன் என்றால் மனது சரியாக இருக்கிறது அல்லது இல்லை என்பதை அறிவது யார்? மனது அறிபவன் போல செயல்படுவதற்கு காரணம் பரமன். ஒரு குளிர்சாதன பெட்டி எப்படி மின்சாரம் இல்லாமல் இயங்காதோ அது போல நமது மனம் பரமனின் துணையில்லாமல் அறியாது.
மனம் ஒரு சாதனம். அதன் மூலம் நாம் பரமன் இருப்பதை அறிகிறோம். நம்மால் நமது முகத்தை நேரடியாக பார்க்க முடியாது. நமது முகத்தை நாம் பார்க்க அதை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியின் உதவி தேவையிருப்பது போல நானாகிய பரமனை பிரதிபலிப்பது மனம். நிழல் படத்தில் இருக்கும் நமது பிரதிபிம்பத்தை 'இதோ நான்' என்று நாம் குறிப்பிட்டு காண்பிப்பதை போல மனதில் பிரதிபலிக்கும் பரமனை 'மனமே பரமன்' என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுக்கிறது.
பயிற்சிக்காக :
1. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் - விளக்குக
2. நான்கு வகையான எண்ணங்களின் பொருள்கள் எங்குள்ளன?
3. நான் என்ற எண்ணத்தில் நமக்கு இருக்கும் ஐந்து குழப்பங்கள் யாவை?
4. மனமே பரமன் என்று வேதம் சொல்வதற்கு காரணம் யாது?
சுயசிந்தனைக்காக :
1. மனம் அல்லது புத்தி இவற்றில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
2. ஆனந்த மயமான பரமன் நான் என்றால் இன்பமாயிருக்க நமக்கு இந்த உலகம் தேவையில்லையா?
3. ரமண மகரிஷியின் உபதேசங்களை ஆய்வு செய்க.