Friday, February 12, 2010

பாடம் 014: இருதயத்தில் இருக்கும் இருவர் (பிரம்ம சூத்திரம் 1.2.11-12)

நான் பரமன் என்றால் என்னை சுற்றி இருக்கும் மற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு நமது இருதயத்தில் இருப்பது இருவர் என்ற கருத்தின் மூலம் வேதம் பதிலளிக்கிறது.

இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து மரிக்கும் அனைத்தும் உயிருள்ள ஜீவராசிகள் ஆகும். இந்த நான்கு வேலைகளையும் ஜடமான பருவுடலை செய்யத்தூண்டுவது அதனுள் வசிக்கும் நுண்ணிய உடலே. உயிரினங்களை மண்ணில் பிறப்பவை, ஈரத்தில் தோன்றுபவை, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என நான்காக பிரிக்கலாம். இந்த நான்கு வகை உயிரினங்களுக்குள்ளும் நுண்ணிய உடல்கள் உள்ளன.
ஆனால் நுண்ணிய உடல்களுக்குக்கூட தானாக செயல்படும் சக்தி கிடையாது.

அவை செயல் பட பரமனை சார்ந்து உள்ளன. நுண்ணிய உடல்களுக்கு கண்ணாடியைப்போல் பரமனை பிரதிபலிக்கும் சக்தியுண்டு. இருப்பது ஒரே சூரியன் என்றாலும் எண்ணிலடங்கா பிம்பங்கள் இருக்கலாம். அது போல இருக்கும் ஒரே பரமன் எண்ணிலடங்கா நுண்ணிய உடல்களில் பிம்பமாக தோன்றுகிறான். ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் அருகே நாம் அமர்ந்திருக்கும்பொழுது சட்டென்று பார்ப்பவர்களுக்கு நாம் ஒருவராக இல்லாமல் இருவராக தோன்றலாம். இவ்வாறு ஒருவரை இருவராக பார்ப்பது தவறான பார்வை. வெவ்வேறு கோணங்களில் ஒராயிரம் கண்ணாடிகள் அமைக்கப்பட்ட ஒரு அறையில் நாம் நுழைந்தால் எந்தபக்கம் பார்த்தாலும் நம்மைப் போல் ஒரு மனிதர் பார்வைக்கு தெரிவார். ஒவ்வொரு பிம்பமும் ஒவ்வொரு கோணத்திலிருந்தாலும் அவையனைத்தும் நாம்தான் என்ற உறுதியான எண்ணம் நம்மை விட்டு மறைவதில்லை.

ஆனால் நிஜ வாழ்வில் இந்த தவறை செய்து கொண்டிருக்கிறோம். பரமனின் எண்ணற்ற பிம்பங்களை பார்க்கும் நாம் அவையனைத்தும் தனித்தனியான உணமைகளென்றும் உண்மையில் இருக்கும் பரமனை இல்லையென்றும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளோம். நாம் பார்க்கும் உயிரினங்கள் அனைத்தும் பார்வைக்கு வெவ்வேறு மாதிரியிருந்தாலும் வெவ்வேறு மாதிரி இயங்கினாலும் அவையனைத்தும் பரமனின் பிம்பங்களே.

மின்விளக்கு, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்சார சாதனங்கள் நாற்காலி, கட்டில் பொன்ற பொருட்களைப் போலன்றி 'தானாக' இயங்கும் சக்தியுடன் கூடியவை. மின்சாரத்தை எடுத்துக்கொண்டு அதன் மூலம் ஒளிர்வது, சுழல்வது போன்ற வெவ்வேறு செயல்களை செய்வதால் இவை நாற்காலி, கட்டில் போன்ற பொருட்களை விட உயர்ந்தவை போல தோன்றும். ஆனால் உண்மையில் இவ்வேலைகளனைத்தையும் செய்வது மின்சாரம் மட்டுமே. இதேபோல்தான் பரமனிடமிருந்து அறியும் சக்தியை பெற்று ஜீவராசிகளனைத்தும் எல்லா செயல்களை செய்கின்றன. உண்மையில் செயலாற்றுவது பரமனின் சக்தியே. நுண்ணிய உடலுக்கு பரமனை பிரதிபலிக்கும் சக்தி இருப்பதால் உணர்வு மயமான பரமனின் பிம்பம் 'தானே' வேலை செய்வதைப் போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. நமது ஒவ்வொரு அசைவையும் வெவ்வேறு மாதிரி அசையும் பிம்பங்களாக அறையிலிருக்கும் கண்ணாடிகள் காண்பித்தாலும் எப்படி நாம் வேறு நமது பிம்பங்கள் வேறு என்று நினைக்க மாட்டோமோ அது போல இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களின் அனைத்து செயல்பாடுகளும் பரமனின் செயல்பாடு என்று நாம் உணரவேண்டும்.



பரமாத்மாவும் ஜீவாத்மாவும்

பரமனை பரமாத்மா என்றும் ஒவ்வொரு நுண்ணிய உடலிலும் பிரதிபலிக்கும் பரமனின் பிரதிபிம்பங்களை ஜீவாத்மாக்கள் என்றும் வேதம் நமக்கு விளக்குகிறது. ஒரு அறையில் அமர்ந்திருப்பது நான் மற்றும் என் எதிரில் இருக்கும் நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருக்கும் எனது பிம்பம் ஆகிய இருவர் என்று சொல்வது போல நம் இருதய குகைக்குள் வசிப்பவர்கள் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா என்ற இருவர் என்று வேதம் கூறுகிறது. இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் எல்லா உயிரினங்களுக்குள்ளும் பரமாத்மாவை பிரதிபலிக்கும் நுண்ணிய உடல் உள்ளது.

ஆயிரம் கண்ணாடிகளில் எண்ணிக்கையற்ற அளவில் என் முகம் தெரிந்தாலும் இருப்பது நான் ஒருவனே. எண்ணிக்கையிலடங்கா ஜீவாத்மாக்கள் இருந்தாலும் உண்மையில் இருப்பது பரமன் மட்டுமே. ஆக இருதய குகைக்குள் இருக்கும் இருவரும் ஒருவரே என்று வேதம் விளக்குகிறது.

கண்ணாடிகளில் தெரியும் நம் எந்த பிரதிபிம்பத்தை காண்பித்து 'இது யார்' என்று கேட்டாலும் 'நான்' என்று தயங்காமல் பதில் சொல்லுவோம். அது போல நாம் ஒவ்வொரு ஜீவாத்மாவும் பரமாத்மாதான் என்று உணரவேண்டும்.

நுண்ணிய உடலில் வேறுபாடு:

மின்சார சாதனங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுவது போல வெவ்வேறு உயிரினங்களில் இருக்கும் நுண்ணிய உடல்கள் ஒன்றிலிருந்து ஒன்று வெகுவாக வேறுபடும். ஒவ்வொரு நுண்ணிய உடலும் எண்ணிக்கையிலடங்கா பிறவிகள் எடுத்து பற்பல செயல்களை செய்து அவை மூலம் விருப்பு-வெறுப்புகளையும் அறிவையும் சேகரித்து வைத்துள்ளன. செய்யும் செயல்கள் அளவிலும் தன்மையிலும் வேறுபடுவதால் நுண்ணிய உடல்கள் வேறு படுகின்றன. மனதின் தன்மைக்கேற்றாற்போல் அவற்றின் செயல்பாடு அமையும். நமது அனுபவத்திலிருந்து மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம் என்பது நமக்கு தெரிந்த செய்திதான். ஆனால் ஏன் மனிதர்கள் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபடுகிறார்கள் என்ற கேள்விக்கு சரியான விடை வேதத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சமூகவியல் அறிஞர்கள் இந்த வேறுபாட்டிற்கு பாரம்பரியம், வளர்க்கப்பட்ட விதம், சுற்றுப்புற சூழல், கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் என்று பல தவறான காரணங்களை போதித்து வருகிறார்கள்.

நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் வேறுபட்டு இருப்பதற்கு நாம் என்ன செயல்களில் ஈடுபடுகிறோம் என்பது மட்டுமே காரணம். எண்ணிலடங்கா பிறவிகள்தோறும் நாம் செய்து வரும் செயல்கள் நமது அறிவையும் விருப்பு-வெறுப்புகளையும் வெவ்வேறு நிலையில் வேறுபடுத்தியுள்ளன. நுண்ணிய உடலின் தன்மை மட்டும் வேறுபடுகிறதே தவிர எல்லா நுண்ணிய உடல்களும் ஒரே பரமனை பிரதிபலிப்பதன் மூலம்தான் இயங்குகின்றன. எப்படி மின்விளக்கை இயக்கும் மின்சாரத்திற்கும் மின்விசிறியை இயக்கும் மின்சாரத்திற்கும் எவ்வித வேற்றுமையுமில்லையோ அதே போல மரம்,செடி, கொடிகளில் உள்ள ஜீவாத்மாவிற்கும் ஆடு, மாடு மற்றும் மனிதன் போன்ற உயிரினங்களிடம் உள்ள ஜீவாத்மாவிற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் கிடையாது.


பருவுடலில் வேறுபாடு:

உயிரினங்களின் பருவுடல்களும் வெகுவாக ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டுள்ளது. உதாரணமாக மனிதன், ஆடு, புறா ஆகியவை ஒன்றுக்கொன்று உருவத்தில் வேறுபட்டு இருப்பதற்கும் மேலே விவரிக்கப்பட்ட அதே காரணம்தான்.

நுண்ணிய உடல்கள் கடந்த பிறவிகளில் செய்த செயல்கள் பாவத்தையோ புண்ணியத்தையோ தருகின்றன. அதன் பலனை அனுபவிப்பதற்கு ஏற்றாற்போல் மனித உடலோ அல்லது மற்ற வகை உடலோ நுண்ணிய உடலுக்கு கிடைக்கிறது. மனித உடலை நாம் பெறுவதற்கு நாம் சென்ற பிறவிகளில் மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் மனித உடல் கிடைத்தால் மட்டுமே நமக்கு பரமனை பற்றிய இந்த பரமரகசியத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.


முடிவுரை :

பரமாத்மா என்ற பரமனின் பிரதிபிம்பங்கள்தான் பல்வேறு உயிரினங்களின் நுண்ணியவுடலில் தோன்றும் ஜீவாத்மாக்கள். பல்வேறு உயிரினங்களின் பருவுடலும் நுண்ணிய உடலும் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவை. ஆகவே அவற்றின் தோற்றம், தன்மை, செயல்பாடுகள் போன்றவற்றில் வேறுபாடு காணப்படும். ஆயினும் அவையனைத்தும் பரமாத்மாவினாலேயே இயக்கப்படுகின்றன.

பயிற்சிக்காக :

1. உயிரினங்களின் நான்கு அடிப்படை செயல்கள் யாவை?

2. பிறப்பின் அடிப்படையில் உயிரினங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

3. இருதயத்தில் இருப்பது எத்தனை பேர்?

4. மனிதர்களிடையே இருக்கும் வேற்றுமைகளுக்கு காரணம் என்ன?

5. செயல் செய்வது பரமாத்மாவா இல்லை ஜீவாத்மாவா?

சுயசிந்தனைக்காக :

1. நாம் செய்த பாவ புண்ணியத்தால் இப்பிறவி ஏற்பட்டதெனில் முதன்முதலில் நாம் பிறந்ததற்கு என்ன காரணம்?

2. மற்ற உயிரினங்கள் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்க என்ன செய்யவேண்டும்?

3. உயிர் பிரிவது என்றால் என்ன?