'உண்பவன் பரமன்' என்ற கருத்தின் மூலமாக உண்ணும் செயலை செய்பவனாகவும் உணவின் சுவையையும் அதனால் கிடைக்கும் சக்தியையும் அனுபவிப்பவனாகவும் இருப்பது பரமனே என்கிறது வேதம். நானே பரமன் என்பதால் இதில் புதிதான கருத்து ஏதுமில்லை என்பது போலத் தோன்றும். ஆனால் இந்த 'செய்பவன் மற்றும் அனுபவிப்பவன்' என்ற கருத்தை ஆராய்வதன் மூலம், 'நான் பரமன்' என்ற நமது உரிமையை நிலை நாட்ட நமக்கு தேவையான பல உண்மைகளை வேதம் நமக்கு அறிவிக்கிறது.
நான் பரமன் என்பது உண்மை. இதை உணராமல் நாம் நம்மை இந்த சாதாரண அழியக்கூடிய உடலாகவும் மாறக்கூடிய மனமாகவும் நினைத்துக் கொண்டுள்ளோம். இந்த அறியாமையே நமது துன்பத்திற்கெல்லாம் காரணம். அறியாமையை நீக்க அறிவை அடைவது ஒன்றே வழி. அறிவு என்பது தானாக நம் மனதில் தோன்றாது. வேதத்தில் உள்ள இந்த உண்மைகளை தகுந்த ஆசிரியரின் வாய்மொழியாக கேட்டு ஆராய்ந்து அறிய வேண்டும். இந்த உண்மைகள் அறிவியல் அறிவைவிட மேம்பட்டவை. விஞ்ஞானத்தால் எட்ட முடியாத கடவுளிடமிருந்து நமக்கு கிடைத்த உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்று உடல்கள்.
உடலியல் அறிஞர்கள் நமது உடலை தசை மண்டலம், எலும்புக்கூடு என்று பல்வேறு பாகங்களாக பிரித்து அதன் செயல்பாடுகளை ஆராய்கிறார்கள். அது போல நம் செயல்பாடுகளை தெளிவாக நமக்கு உணர்த்த வேதம் நம் உடலை மூன்றாக பிரிக்கிறது.
காரண உடல் (Causal body): நாம் செய்யும் எல்லா காரியங்களும் நமக்கு மூன்று விதமான பயன்களை கொடுக்கின்றன. அவை பாவபுண்ணியங்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு. நாம் நமது பாவபுண்ணியங்களின் பயனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். நாம் இந்த உலகில் பிறப்பதற்கு காரணமே, நாம் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகள்தான். எனவேதான் நமது பாவபுண்ணியங்களின் கணக்கை எழுதியிருக்கும் இடத்தை நமது 'காரண உடல்' என்று வேதம் கூறுகிறது.
நுண்ணிய உடல் (Subtle body): நமது விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு இருக்குமிடம் நுண்ணிய உடல். இதில் 19 பாகங்கள் உள்ளன. அவை நமது மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஐந்து பிராணன்கள் (பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன்) ஐந்து புலன்கள் (மெய், வாய் [சுவைக்கும் நாக்கு], கண், செவி, மூக்கு), மற்றும் ஐந்து கரணங்கள் (கை, கால், வாய் [பேசும் நாக்கு], எருவாய், கருவாய்). இந்த 19 உறுப்புகளும் நமது நுண்ணிய உடலை சேர்ந்தவை. இவை நம்மிடம் இருக்கின்றன என்று நன்றாக தெரிந்தாலும் எவ்வித அறிவியல் கருவிகளாலும் இவற்றை அறிய முடியாது. உதாரணமாக நமக்கு காது கேட்கிறதா இல்லையா என்பதையோ மனது எப்படியிருக்கிறது என்பதையோ நம்மைத்தவிர வேறு யாராலும் துல்லியமாக அறியமுடியாது. ஆகவேதான் இந்த 19 உறுப்புகளாலான உடலை 'நுண்ணிய உடல்' என்று வேதம் கூறுகிறது.
பரு உடல் (Gross body or Physical body): இது நுண்ணிய உடலின் வாகனம். நுண்ணிய உடலில் உள்ள நமது மனம் உள்ளிட்ட 19 உறுப்புகள் செயல்பட நமக்கு இந்த பரு உடல் அவசியம். அறிவியல் ஆய்வுக்குட்பட்டது இந்த உடல் மட்டுமே. நுண்ணிய உடலின் செயல்பாடுகளை இந்த பரு உடலின் செயல்பாடுகளாக விஞ்ஞானம் தவறாக கருதிவருகிறது. உண்மையில் பருவுடலை இயக்குவது நுண்ணிய உடல்தான். ஒரு காரோட்டி எப்படி காரை விட மேலானவனோ அதேபோல நுண்ணிய உடல் பருவுடலைவிட மேலானது. கார் என்பது உயிரோ அறிவோ இல்லாத ஜடப்பொருள். பருவுடலும் அதே போல வெறும் ஜடப்பொருள்தான். நுண்ணிய உடலுக்குத்தான் அறிவும் செயல் படும் திறமும் இருக்கிறது. நுண்ணிய உடல் பருவுடலிலிருந்து விலகுவது மரணம்.
செயல்களும் செயல்களின் காரணமும்
பரு உடலை காப்பாற்றுவதற்காகவும் உணவின் சுவைக்காகவும் நாம் உணவு உண்ணும் செயலை மேற்கொள்கிறோம். இதை படிப்படியாக ஆராய்வதன் மூலம் நமது மூன்று உடல்களின் செயல்பாடு பற்றி நாம் இதுவரை அறியாத பல உண்மைகளை வேதம் நமக்கு சொல்கிறது. உதாரணமாக நாம் செயல்படுவதன் காரணம் பலனை அனுபவிப்பதற்காக என்று நமக்குத் தெரியும். ஆனால் நாம் பலனை அனுபவிப்பதனால்தான் செயலில் ஈடுபடுகிறோம் என்ற புதிய கருத்தை வேதம் விளக்குகிறது. அதாவது நாம் நமக்கு செயல் செய்ய அல்லது செய்யாமல் இருக்க முழு சுதந்திரம் இருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளோம். இது தவறு. ஒரு செயலின் பலனை அனுபவிப்பதனால் நாம் எவ்வாறு ஒரு அடிமையை போல செயலில் தூண்டப்படுகிறோம் என்பது கிழே விளக்கப்படுகிறது.
1. பரு உடலின் செயல்பாடு: பசி என்ற உணர்வை உடல் நம் மனதுக்கு தெரிவிக்கிறது. எந்த உணவை உண்டாலும் பசி அடங்கிவிடும். உடல் எனக்கு இந்த குறிப்பிட்ட உணவுதான் வேண்டும் என்று எவ்வித கோரிக்கையையும் முன்வைப்பதில்லை.
நமது உடலே உணவாலானதுதான். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் உயிர் வாழ ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. நிலம், நீர், காற்று மற்றும் சூரிய ஒளியினால் உணவு தயாரிக்கும் தாவரங்கள் இந்த உணவுச்சக்கரத்தின் தொடக்கத்தில் உள்ளன. உடலுக்கும் உணவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. உணவால் வளரும் உடல் தானே மற்றொரு உடலுக்கு உணவாகிறது. நமது உடலும் இதற்கு விதிவிலக்கல்ல.
அறிவியல் கண்ணோட்டத்தின் படி இந்த பேரண்டம் முழுவதும் உள்ள அனைத்து பொருள்களும் அணுக்களின் தொகுப்புதான். உயிருள்ளவை உயிரற்றவை என்ற பாகுபாடு அணுக்களின் நிலையில் ஏதுமில்லை. ஒன்று மற்றொன்றாக தொடர்ந்து நடைபெறும் மாற்றத்தின் ஒரு அங்கம்தான் நமது உடல் உணவை உட்கொள்ளுவது. ஒருவகை உணவு மற்றொரு வகை உணவாக மாறுகிறது.
2. புலன்களின் செயல்பாடு: சுவைத்து உணரும் நாக்கு நமது பழக்க வழக்கங்களுக்கேற்ப சில விதமான உணவு வகைகளை பிடித்தவை என்றும் வேறுசிலவற்றை பிடிக்காதவை என்றும் பாகுபாடு செய்துள்ளது. பிடித்தவற்றை வேண்டுமென்றும் பிடிக்காதவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் தொடர்ந்து புலன்கள் பிடிவாதம் பிடிக்கின்றன. புலன்கள் மனதின் கட்டுப்பாட்டில் செயல் படவேண்டியவை. ஆனால் பெரும்பாலான மனிதர்களின் புலன்கள் மனதைவிட பலம் வாய்ந்தவையாக செயல்படுகின்றன. அவை உலகில் உள்ள கண்டு கேட்டு தொட்டு நுகர்ந்து சுவைத்து அறியும் பல்வேறு நுகரும் பொருட்களினால் கவரப்பட்டு அவற்றை நாடிச்செல்ல மனதுக்கு உத்தரவிட்டுக்கொண்டே இருக்கின்றன.
3. மனதின் செயல்பாடு: மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவற்றிற்கும் முதற்காரணம் நமது புலன்கள்தான். புலன்களின் வழியேயல்லாமல் நமது மனதில் வேறு எண்ணம் எதுவும் எப்பொழுதும் தோன்றாது. நுகர் பொருள்களின் தொடர்பு அனைத்தையும் தவிர்த்து நாம் தியானம் செய்ய அமர்ந்தால் நமது மனதில் எண்ணங்கள் தோன்றுவது எப்படி? ஏற்கனவே புலன்கள் வழியாக உள்ளே வந்து நமது சித்தத்தில் சேகரித்து வைத்துள்ள எண்ணங்களே அவை. ஆக நமது மனதில் உள்ள எண்ணங்கள் நாம் அனுபவிக்கும் நுகர் பொருட்களால் தீர்மானிக்கப் படுகின்றன.
4. புத்தியின் செயல்பாடு: இது பிடிக்கும் இது பிடிக்காது என்று மனதில் நடமாடும் எண்ணங்களை இது நல்லது இது தீயது என்று தனது அறிவிற்கேற்றாற்போல் புத்தி பாகுபாடு செய்கிறது. எந்த செயலில் ஈடுபடவேண்டும் என்று தீர்மானிப்பது புத்தி. சாம்பார் சாதமும் உருளைக்கிழங்கு வருவலும்தான் வேண்டும் என்ற மனதின் எண்ணங்களை கவனிக்காமல் சப்பாத்தியும் பச்சை காய்கறிகளை மட்டும் உண்ணவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி புத்திக்கு மட்டும் தான் இருக்கிறது. எண்ணங்களை விருப்பமாக மாற்றுவது புத்தி.
ஒருபக்கம் நுகர்பொருள்களின் சக்தியும் மறுபுறம் அறிவும் எவ்வித எண்ணங்கள் விருப்பமாக மாற்றபடுகின்றன என்பதை முடிவு செய்கின்றன. நமது எல்லா செயல்களும் நமது விருப்பத்தின் அடிப்படையிலேயே அமையும்.
முடிவுரை :
ஆக நமது செயல்கள் நமது புலன்களை நுகரும் பொருட்களோடு தொடர்பு கொள்ள வைத்து நமக்கு அனுபவத்தை தருகின்றன. தொடர்ந்து ஏற்படும் அனுபவங்கள் நமது மனதை கவரும் சக்தியை நமது புலன்களுக்கு கொடுக்கின்றன. அனுபவத்தால் அறிவும் ஏற்படுகிறது. இவ்விரண்டும் நம் விருப்பத்தை தீர்மானித்து அதன் மூலம் நம்மை மீண்டும் செயலில் ஈடுபடுத்துகின்றன.
உதாரணமாக நாம் தினமும் தொடர்ந்து ஒரு மனிதருடன் சில நேரம் செலவிட்டால் அவரை நமக்கு பிடித்து போகிறது. சிறிது காலம் சென்ற பின் ஒரு நாள் நம்மால் அவரை சந்திக்க முடியாமல் போனால் மனது என்னவோ போல் இருக்கும். அவருடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணங்கள் நமது மனதை ஆக்ரமிக்க தொடங்கும். நம் அறிவுக்கேற்றாற் போல அவ்வெண்ணங்கள் விருப்பமாக மாற்றப்பட்டு நமது செயல்கள் தீர்மானிக்க படுகின்றன.
நாம் சந்திக்கும் நபர் நம்மைப் போல் ஒருவரென்றால் திரைப்படம், இசை, உணவு விடுதி போன்ற உலக விஷயங்களில் இருந்து நம்மால் குறைவில்லாத இன்பத்தை பெற முடியும் என்ற தவறான அறிவு மேலும் தொடர்ந்து தவறான வழியில் நம்மை அழைத்து செல்லும். ஆனால் அவர் பரமரகசியத்தை உணர்ந்த குருவாயிருந்தால் இன்பம் என்பது நுகரும் பொருட்களில் இல்லவேயில்லை என்பதை நம் அறிவுக்கு புலபடுத்தி அதனால் நம் வாழ்வை சரியான திசையில் செலுத்த உதவுவார்.
எனவே அறிவாளிகளால் மட்டுமே வாழ்க்கையை தொடர்ந்து சரியான வழியில் நடத்தி சென்று இன்பத்தை அனுபவிக்க முடியும். ஒவ்வொருவரின் இன்பத்தை அடையும் சக்தியும் அவரது அறிவின் திறத்தை பொருத்தே அமையும். அறிவு நாம் ஈடுபடும் செயல்களை சார்ந்து இருக்கும். செயல்கள் நமது அறிவால் தீர்மானிக்க படுகின்றன.
இந்த சக்கரத்தில் ஓயாமல் சுழலும் நாம், எப்பொழுது நமது புண்ணியம் நமக்கு சரியான ஆசிரியரைத் தருகிறதோ அப்போழுது பரமனை அறிந்து இன்பத்திற்காக அல்லாமல் இன்பமாயிருப்பதால் செயலில் ஈடுபடுவோம்.
பயிற்சிக்காக :
1. வேதம் நமது உடலை மூன்றாக பிரித்து ஆராய்வதன் நோக்கம் என்ன?
2. காரண உடல் , நுண்ணிய உடல் இவற்றின் பெயர்க்காரணம் என்ன?
3. நாம் செய்யும் செயல்களிலிருந்து நமக்கு கிடைக்கும் மூன்று பலன்கள் என்னென்ன?
4. நுண்ணிய உடலில் உள்ள 19 உறுப்புகள் யாவை?
5. பருவுடலுக்கும் நுண்ணிய உடலுக்கும் உள்ள உறவை விளக்குக.
6. நமது அனுபவம் எவ்வாறு நமது செயல்களை தீர்மானிக்கிறது என்பதை விளக்குக.
சுயசிந்தனைக்காக :
1. நுண்ணிய உடல் அழியுமா?