Monday, February 8, 2010

பாடம் 010: ஒளி பரமன் (பிரம்ம சூத்திரம் 1.1.24-27)

நம் கண்ணுக்கு கண்ணாயிருந்து நமக்கு அனைத்தையும் காட்டிக் கொடுப்பவன் பரமன். சூரிய ஒளி நாம் காண்பதற்கு மட்டுமின்றி இந்த உலகம் செயல் பட காரணமாய் இருப்பது போல பரமன் இந்த அண்டம் முழுதிற்கும ஆதாரமாகவும் அதன் இருப்பை விளக்குபவனாகவும் இருக்கிறான்.

பரமனின் ஒளி ஞான ஒளி. நாம் வேதத்தின் மூலம் பரமனைப் பற்றிய அறிவை அடைந்த பின் நமக்கு கிடைப்பது ஞானக்கண். இந்த ஞானக்கண்ணின் துணையுடன் நம்மால் இந்த உலகத்தின் இருப்பை சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும்.

நமது சாதாரண பார்வைக்கு சூரியன் நிலையாக இருக்கும் பூமியை சுற்றிவருவது போல் தெரிந்தாலும் அறிவியலின் துணையோடு பார்த்தால் உண்மையில் நிகழ்வது என்ன என்று நாம் அறிவோம். அதேபோல் பரமனை தெரிந்து கொண்ட பின் நமக்கு கிடைக்கும் ஞான ஒளி இதே உலகத்தின் உண்மையான தன்மையை நமக்கு காட்டிக் கொடுக்கும்.

நமது செயல்கள் அனைத்தும் நமது அறிவின் அடிப்படையில் தான் அமையும். நாம் சந்திக்கும் ஒருவரைப் பற்றிய நமது எண்ணம்தான் அவரிடம் நாம் எப்படி பழகுவோம் என்பதை தீர்மானிக்கும். பரமனைத் தெரிந்துகொள்ளும் வரை நம்மை சுற்றி உள்ள உலகத்தை பற்றிய நமது அறிவு தவறான அறிவு. அதனாலேயே நம்மிடம் கோபம், வெறுப்பு, ஏமாற்றம் போன்ற இன்பத்திற்கு எதிரான உணர்ச்சிகள் தோன்றுகின்றன. உலகத்தைப் பற்றிய சரியான அறிவு பரமனை நாம் தெரிந்து கொண்ட பின் நமக்கு கிடைக்கும். வெளித்தோற்றத்தில் எவ்வித மாற்றமில்லாவிட்டாலும் நாம் ஞானக்கண் கொண்டு பார்க்க துவங்கிவிட்டால் இதே உலகம் உண்மையில் இன்பத்தை மட்டுமே அளிக்குமிடம் என்பதை அறிவோம்.

நம் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளிலோ, நமக்கு வரும் உயர்வு தாழ்வுகளிலோ எவ்வித மாறுபாடும் நாம் பரமனை தெரிந்து கொள்வதால் ஏற்படாது. எல்லாம் வழக்கம் போல்தான் இருக்கும். ஆனால் நம்மால் எல்லாவற்றையும் ஒரு புதிய சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அதனால் நம்மால் குறைவில்லாத இன்பத்தை அனுபவிக்க முடியும்.

முடிவுரை :

பரமன் ஒளி வடிவானவன். இந்த ஞான ஒளியைத் தெரிந்து கொண்டால் நம்மால் இந்த உலகத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அதனால் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் எப்படியிருந்தாலும் நம்மால் குறைவில்லாத மகிழ்வுடனும், தடையில்லாத பாதுகாப்புடனும், என்றும் தொடரும் நிம்மதியுடனும் வாழமுடியும்.

பயிற்சிக்காக :

1. பரமனைத் தெரிந்து கொள்வதால் உலகத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்படுமா?
2. பரமன் ஒளிவடிவானவன் என்பதன் மூலம் வேதம் நமக்கு சொல்லும் கருத்துக்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. சாதாரண ஒளியால் இவ்வுலகத்தை பார்ப்பதற்கும் பரமனின் ஞான ஒளியால் பார்ப்பதற்கும் என்ன வேறுபாடு?
2. அறிவுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பை ஆய்க.