Monday, February 1, 2010

பாடம் 006: பரமன் ஆனந்தமயமானவன் (பிரம்ம சூத்திரம் 1.1.12-19)

பாடம் 006: பரமன் ஆனந்தமயமானவன்.               பாடல்: 012-019 (I.1.12-19)

குறைவில்லாத இன்பம் என்பது ஆன்மிக வட்டத்தில் பேரின்பம் என்ற பெயரில் குறிப்பிடப்படும். ஆனால் மக்களுக்கு இந்த பேரின்பம் சிற்றின்பத்திலிருந்து எந்த விதத்தில் வேறானது என்பதில் பெரிய குழப்பம் உள்ளது. பெரும்பாலோர் பேரின்பம் என்பது கடவுள் தொடர்பால் பெறுவது என்றும் சிற்றின்பம் என்பது மற்ற உலக விவகாரங்களில் ஈடுபடுவதனால் கிடைப்பது என்றும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாரம் முழுதும் உழைத்து விட்டு வெள்ளிக்கிமை மாலை கோவிலுக்கு செல்வதால் கிடைக்கும் மன அமைதி நண்பர்களுடன் ஊர் சுற்றுவதால் கிடைக்கும் மன ஓய்விலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல.

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் இன்பம் என்ற அடிப்படையில் எந்த வித வேறுபாடும் இல்லை. அதாவது நாம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறும்போதோ, அதிக ஊதியத்துடன் நல்ல வேலை கிடைத்தவுடனோ அல்லது நாம் விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைந்தவுடனோ நமக்கு ஏற்படும் இன்பமும் பரமனை அறிந்து கொள்வதால் பெறும் பேரின்பமும் ஒன்றுதான்.

அதனால் நாம் பேரின்பத்திற்காக சிற்றின்பத்தை விட்டுவிட வேண்டும் என்பது முழுவதும் உண்மையல்ல. நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் பேரின்பம் என்று சொல்வதைவிட 'என்றும் தொடரும் சிற்றின்பம்' என்று சொல்வதில் தவறில்லை. ஏனெனில் என்றும் தொடரும் சிற்றின்பமே பேரின்பம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இதையே நாம் குறைவில்லாத இன்பம் என்று இங்கு குறிப்பிட்டு வருகிறோம்.

ஆக நாம் அனைவரும் பேரின்பத்தை அறிவோம், அனுபவித்துள்ளோம். ஆனால் அது நிலைத்து நிற்காததால் அதை பேரின்பம் என்ற பெயரில் குறிப்பிடாமல் சிற்றின்பம் என்று அழைக்கிறோம்.

இன்பம் என்பது நமக்கு பொதுவாக துன்பத்துடன் கலந்தே கிடைக்கிறது. புதிதாக வாங்கிய ஒரு பொருளினால் நமக்கு ஏற்படும் இன்பம் அந்த பொருளை வாங்க செலவிட்ட பணத்தை நினைக்கும்போது ஏற்படும் துன்பத்துடன் கலந்தே இருக்கிறது. இப்படிப்பட்ட துன்பம் எதுவும் இல்லாமலிருந்தால் அதே இன்பத்தை நாம் பேரின்பம் என்று கூறலாம்.

பரமனை முழுவதும் அறிந்து கொண்டால் நாம் நம்முடைய எல்லா சிற்றின்பங்களையும் பேரின்பமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் பரமனே இன்பமயமானவன் என்பதுதான்.

வேதம் பரமனை உணர்வு மயமானவன் என்றும் ஆனந்த மயமானவன் என்றும் கூறுகிறது.நாம் சில சமயம் இன்பத்துடனும் சிலசமயம் துன்பத்துடனும் இருக்கிறோம். பரமனின் நிலை அப்படியல்ல. பரமன் வேறு இன்பம் வேறல்ல. பரமனே ஆனந்தம்.

பேரின்பம் பரமனிடமிருந்து நமக்கு கிடைப்பதல்ல. பரமனை தெரிந்து கொண்டால் நம்மால் எல்லா சிற்றின்பங்களையும் துன்ப கலப்பு இல்லாமல் இடைவிடாமல் தொடர்ந்து அனுபவிக்க முடியும். எனவே வாழ்க்கை முழுவதும் நாம் இன்பமாக இருக்கலாம்.

முடிவுரை :

பரமன் ஆனந்தமயமானவன். அவனை தெரிந்து கொண்டால் துன்ப கலப்புடன் அவ்வப்பொழுது நாம் அனுபவிக்கும் சிற்றின்பங்களை வாழ்வு முழுதும் நீடிக்கும் பேரின்பமாக மாற்றிக்கொள்ள முடியும்.

பயிற்சிக்காக:

1. சிற்றின்பம் பேரின்பத்திலிருந்து எவ்விதத்தில் வேறுபட்டது?
2. பரமனை தெரிந்து கொள்வதால் ஏற்படும் நன்மை என்று வேதம் குறிப்பிடுவது யாது?

சுயசிந்தனைக்காக :
1. மன அமைதிக்காக கோவிலுக்கு செல்வது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதைவிட எவ்விதத்தில் மேலானது?
2. நாம் பேரின்பத்தை அடைவதற்காக நமது சிற்றின்பத்தை தியாகம் செய்ய வேண்டும் என்ற வாதத்தில் உண்மையுள்ளதா?