Tuesday, February 2, 2010

பாடம் 007: அனைத்துமாக விளங்குபவன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.1.20-21)

பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்று கூறும் வேதம் பரமன் மட்டுமே இருக்கிறான் என்றும் கூறுகிறது. இதன் பொருளை அறிந்து கொள்ள நாம் பின்வரும் இரு வாக்கியங்களிடையே இருக்கும் வேற்றுமைகளை ஆராய வேண்டும்.

'என் வீட்டில் ஒரு மரம் இருக்கிறது' என்று சொல்வதற்கும் 'பரமன் ஒருவன் இருக்கிறான்' என்று சொல்வதற்கும் ஏழு வேற்றுமைகள் உள்ளன.

முதல் வேற்றுமை : இடமில்லா தன்மை

மரம் இருக்குமிடம் என் வீடு. இந்த மரம் என் வீட்டில் இருப்பதால் அது வேறு எங்கும் இல்லை என்ற கருத்து சொல்லாமலேயே விளங்கும். ஆனால் பரமனுக்கு இது போல 'இருக்கும் இடம்' என்ற ஒரு தன்மை கிடையாது. பரமன் இல்லாத இடம் என்று ஒன்றில்லை. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் பரமன்.

இரண்டாம் வேற்றுமை : காலமில்லா தன்மை

இப்பொழுது மரம் இருக்கிறது என்று கூறினால், ஒரு காலத்தில் இந்த மரம் இல்லாமல் இருந்தது என்றும் பல வருடங்களுக்கு பிறகு அது இல்லாமல் போகுமென்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் பரமன் காலத்தை கடந்தவன். அவன் இல்லாத காலம் இது வரை இருந்ததில்லை இனி இருக்கப்போவதுமில்லை. பரமன் எப்பொழுதும் இருப்பவன்.

மூன்றாம் வேற்றுமை : மாற்றமின்மை

மரம் சிறிய செடிபோல் இருந்து இப்பொழுது பெரிதாக வளர்ந்துள்ளது. வசந்த காலத்தில் இருக்கும் மரம் இலையுதிர் காலத்தில் இருக்கும் மரத்திலிருந்து மிகவும் மாறுபட்டாதாயிருக்கும். பரமன் எப்பொழுதும் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பவன். மரம் தோற்றம், வளர்ச்சி, இளமை, முதுமை, மறைவு என்று பல மாறுதல்களுக்கு உட்பட்டது. பரமன் மாறாத தன்மையுடையவன்.

நான்காம் வேற்றுமை : பாகமில்லாத முழுமை

வேர், அடிமரம், கிளைகள், இலைகள் என்று பல்வேறு பாகங்களுடன் கூடியது மரம். பரமன் எந்தவித பாகங்களுமில்லாமல் எப்பொழுதும் முழுமையாக இருப்பவன்.

ஐந்தாம் வேற்றுமை : ஒப்பில்லா தனிமை

என் வீட்டில் இருப்பது மாமரம் என்றால் எண்ணிக்கையற்ற மாமரங்களில் ஒன்று என் வீட்டில் உள்ளது என்று அர்த்தம். பரமன் இருக்கிறான் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட பரமன்கள் இருப்பது சாத்தியமில்லை என்றும் இருப்பவன் பரமன் மட்டுமே என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறாம் வேற்றுமை : ஒன்றுபட்ட தனிமை

பலா மரம், தென்னை மரம் போன்ற மரங்கள் மாமரத்திலிருந்து வேறுபட்டவை. என் வீட்டில் இருப்பது மாமரம் என்றால் அதனுடன் ஒரு தென்னை மரம் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. பரமன் இருக்கிறான் என்றால் பரமனை போல வேறு எதுவும் எங்கும் இல்லை என்று பொருள்.

ஏழாம் வேற்றுமை : வேறுபாடில்லா தனிமை

குருவி, கரடி போன்றவை மரத்திலிருந்து வேறானவை. இது போல பரமனிடமிருந்து வேறான எதுவும் கிடையாது.


பரமன் இருக்கிறான்.

மேல் சொல்லப்பட்ட ஏழு வேற்றுமைகளையும் நன்றாக புரிந்து கொண்டால் பரமன் இருக்கிறான் என்பதன் பொருள் நமக்கு ஓரளவு விளங்கும். இருத்தல் என்பது பரமனின் தன்மை. பரமன் அறிவு உருவானவன், ஆனந்த மயமானவன் என்று நாம் அறிந்து கொண்டது போல பரமன் இருத்தலில் இருந்து வேறுபட்டவனல்ல என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

வெப்பம் என்பது தண்ணீரின் இயல்பான தன்மையல்ல. நீர் குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருக்கலாம். வெப்பம் நீரின் ஒரு தற்காலிக நிலை. அது போல இருத்தல் என்பது பொருள்களின் ஒரு நிலை. அவை இருக்கலாம் அல்லது இல்லாமலுமிருக்கலாம்.
ஆனால் வெப்பம் நெருப்பின் இயல்பு. நெருப்பு எப்பொழுதும் சுடும். அது போல பரமன் எப்பொழுதும் இருப்பவன். இருத்தல் பரமனின் இயல்பு.

நீர் சூடாக இருந்தால் அது நெருப்பின் சுடும் தன்மையை தற்காலிகமாக கடன் வாங்கியுள்ளது என்று அர்த்தம். நெருப்பிலிருந்து நீரை விலக்கி விட்டால் அது தன் வெப்பத்தை இழந்துவிடும். அதே போல ஒரு பொருள் இருக்கிறது என்றால் அது இருத்தல் என்ற தன்மையை பரமனிடமிருந்து கடன் வாங்கியுள்ளது என்று அர்த்தம்.

சுடுவதெல்லாம் நெருப்பு. இருப்பதெல்லாம் பரமன்.

முடிவுரை :

பரமன் அறிவு உருவானவன். ஆனந்த மயமானவன். இருத்தல் அவனது இயல்பு. பரமன் ஒருவன் இருக்கிறான் என்பது மற்ற பொருள்கள் இருக்கின்றன என்று சொல்வதிலிருந்து ஏழு விதங்களில் மாறுபட்டது.


பயிற்சிக்காக :

1. பரமன் இருப்பதற்கும் ஒரு மரம் இருப்பதற்கும் உள்ள ஏழு வேறுபாடுகள் யாவை?
2. பரமனின் மூன்று இயல்புகள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக

1. மரமும் பரமனும் ஒன்றா அல்லது வெவ்வேறானவையா?

2. பொருட்கள் இருத்தல் என்ற தன்மையை பரமனிடமிருந்து கடன் வாங்கியிருப்பின் அவை இல்லை என்று ஆகும் பொழுது பரமனுடன் தொடர்பற்றவைகளாக மாறிவிடுமா?

3. சச்சிதானந்தம் என்று வழக்கில் இருந்து வரும் பெயரின் பொருளை ஆராய்க.