Tuesday, February 16, 2010

பாடம் 016: உள்ளிருந்து ஆள்பவன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.2.18-20)

அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அணுக்களின் அசைவு மட்டுமே இந்த பேரண்டத்தில் உள்ள அத்தனை பொருட்களுமாக காட்சியளிக்கிறது. ஓயாமல் அலை பாய்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு அணுவும் எந்த இடத்தில் எப்பொழுது இருக்கவேண்டும் என்று முடிவு செய்வதும், ஒவ்வொரு உயிரினத்தின் அனைத்து செயல்களை கட்டுபடுத்துவதும் பரமன்.

இந்த விதி சுயமுயற்சியும் பகுத்தறிவும் உள்ள நமக்கும் பொருந்தும். எந்த செயலை நாம் செய்யப்போகிறோம் என்பதில் நமக்கு இருப்பதாக தோன்றும் சுதந்திரம் ஒரு கற்பனையே. உள்ளிருந்து ஆட்சி செய்யும் பரமனே நமது அனைத்து செயல்களையும் அவற்றால் விளையும் பலன்களையும் தீர்மானிப்பவன்.

தனிமனிதனின் சுதந்திரம்

எப்பொழுது நாம் நம்மை சுற்றியிருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் வைக்க ஆரம்பித்தோமோ அப்பொழுதிலிருந்தே நாம் இந்த பரந்த உலகத்திலிருந்து தனிபட்ட ஒரு சுதந்திரமான மனிதன் என்ற கற்பனை நமது மனதில் வளரத் தொடங்கிவிட்டது. உண்மையில் நாம் பரமனால் தோற்றுவிக்கப் பட்ட மாயமான உலகின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம்.

நமது கனவு உலகில் நாம் நம்மை சுற்றி பற்பல பொருள்களையும் மனிதர்களையும் பார்க்கிறோம். கனவில் நடமாடும் நமது உடலும் மற்ற மனிதர்களின் உடலும் நமது மனதால் தோற்றுவிக்கப்பட்ட எண்ண உருவங்களே. ஆனால் நாம் ஒவ்வொரு உருவத்திற்கும் ஒரு பெயரிட்டு அவற்றில் ஒன்றுக்கு மட்டும் 'நான்' என்று பெயரிட்டு, அடிப்படையில் ஒன்றான உருவங்களை வேறுபடுத்துகிறோம். கனவில் நம்முடன் பேசும் ஒரு நபர் என்ன வார்த்தை பேசுகிறாரோ அது நமது மனதிலிருந்தே வருகிறது. அவரது பேச்சுக்கு என்ன பதில் நாம் சொல்லப்போகிறோம் என்பதும் நமது மனதில் தோன்றும் எண்ணமே. ஆயினும் பதில் சொல்வதில் மட்டும் நமக்கு ஒரு சுதந்திரம் இருப்பது போல் நாம் நினைத்து கொள்கிறோம். கனவில் நம் மனதால் தோற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் என்ன செய்யப்போகிறார் என்பதில் 'அந்த நபருக்கு' எப்படி எந்த வித சுதந்திரமும் இல்லையோ அதேப்போல் கனவில் இருக்கும் எனக்கும் எவ்வித சுதந்திரமும் கிடையாது.

இந்த கனவு உதாரணம் நம் நிஜ வாழ்வுக்கும் முற்றிலும் பொருந்தும்.

விதி என்பதன் சரியான பொருள்

நம்முடைய செயல்களையும் அதனால் விளையும் பயன்களையும் தீர்மானிக்கும் நமக்கு அப்பாற்பட்ட ஏதோஒரு சக்தியை பொதுவாக நாம் விதி என்ற பெயரில் அழைக்கிறோம். இது தவறு. விதி என்பது நமது முழு கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஒரு தத்துவம். விதி என்பதன் சரியான பொருள் நாம் ஏற்கனவே செய்த செயல்களின் விளைவு என்பதே.

உள்ளிருந்து அனைத்தையும் ஆளுவது பரமன் என்கிறது வேதம். இதை நாம் அனுபவத்திலும் அறிகிறோம். எப்பொழுதெல்லாம் நாம் நினைத்தபடி எல்லாம் நடக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அவை சுயமுயற்சியின் பலனென்றும் எப்பொழுது எதிர்பாராமல் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதோ அப்பொழுது அதை விதி என்றும் நாம் அறியாமையில் பேசுகிறோம். உண்மையில் எல்லாம் அவன் செயல்.

இந்த உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அனைத்து நிகழ்வுகளும் அனைவரின் செயல்களும் ஒரு அறிவியல் பூர்வமான கட்டுபாட்டுடன் மிகவும் உறுதியான கோட்பாடுகளின்படிதான் நடக்கின்றன.

இந்த கோட்பாட்டை விதி என்ற பெயரில் அழைக்கலாம். விதி என்பதற்கு சரியான பொருள் நமது செயலின் நேரடியான விளைவு என்பதே.



நமது ஒவ்வொரு செயலும் மூன்று வகையான விளைவுகளை ஏற்படுததும்.

முதல் விளைவு : நம் பாவ புண்ணியங்கள்

நமது ஒவ்வொரு செயலும் மற்றவருக்கு நன்மை ஏற்படுத்துகிறதா அல்லது துன்பம் தருகிறதா என்பதை பொறுத்து நமக்கு ஏற்படும் பாவ புண்ணியம் நமது செயல்களின் முதல் விளைவு. நமது செயல்களின் பலன்களாக நமக்கு கிடைக்கும் வெற்றி தோல்விகளை நமது பாவ புண்ணியம் மட்டுமே தீர்மானிக்கிறது. அதாவது நம்மிடம் இருக்கும் பணம், பெயர், புகழ், செல்வாக்கு, அனைத்து சுற்றத்தார்கள், நண்பர்கள், பகைவர்கள் மற்றும் நமது சுற்றுச்சூழல் இவையனைத்தும் நமது பாவ புண்ணியத்தினால் மட்டுமே ஏற்பட்ட விளைவுகள்.

வாழ்க்கையில் வெற்றி பெற ஊக்கம், கடுமையான உழைப்பு, விடாமுயற்சி போன்ற பல்வேறு நல்ல குணங்கள் அவசியம் என்று நாம் பொதுவாக நினைப்பது தவறு. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. இது நம் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஆனாலும் நாம் நமது ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் அதன் காரணங்களை ஆராய்ந்து, இதனால்தான் நாம் தோல்வியடைந்தோம் என்று முடிவு செய்யாமலிருப்பதில்லை. அதே போல் 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?' என்ற கேள்வியின் பதிலை நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றினால் நமக்கும் வெற்றி கிடைக்கும் என்ற தவறான எண்ணம் நம்மை விட்டு அகல்வதில்லை. அனைவரின் வெற்றி தோல்விகளின் ஒரே ரகசியம் விதி. அதாவது நம் பாவ புண்ணியங்கள் மட்டுமே நமது வெற்றி தோல்விகளை முழுவதுமாக நிர்ணயிக்கின்றன.

பரமன் எங்கோ இருந்து கொண்டு நம் முயற்சிக்கேற்ற பலனை தராமலிருப்பதில்லை. பரமன் நம்முள்ளிருந்து நம் முந்தய செயல்களின் பலனாக நமக்கு கிடைக்க வேண்டிய பலனை தவறாமல் நம்மிடம் சேர்க்கிறான்.



இரண்டாம் விளைவு: நம் விருப்பு வெறுப்புகள்

பரமன் நம் உள் இருந்து நம்மை ஆட்டுவிப்பது நமது விருப்பு வெறுப்புகளின் மூலமே. நாம் என்ன செயல்களில் ஈடுபடுகிறோம் என்பது நம் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே அமையும். நம் விருப்பு வெறுப்புகளை அவ்வளவு எளிதாக நம்மால் மாற்ற முடியாது. அவற்றை அறிவு பூர்வமாக நாம் நம்மிடம் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான பழக்கவழக்கங்களின் மூலமாக மட்டுமே மாற்ற முடியும்.
நமது அறிவும் நமது செயல்களின் விளைவே. ஆகவே நாம் எந்த செயல் செய்கிறோம் அதனால் என்ன பயன் கிடைக்கிறது ஆகிய இரண்டும் பரமனின் விளையாட்டு. நமக்கு அதில் எந்த வித சுதந்திரமும் கிடையாது.

மூன்றாம் விளைவு: நம் அறிவு

பரமன் ஆனந்த மயமானவன் என்ற அறிவோ நான்தான் பரமன் என்ற அறிவோ நம்மிடம் இயற்கையாக இருப்பதில்லை. ஆகவே உலகத்திலுள்ள பொருட்களில்தான் இன்பமிருக்கிறது என்ற அறிவின் அடிப்படையில் நமது செயல்கள் அமைகின்றன. நம் மனதிற்கு பிடித்தவற்றை அடையவும் பிடிக்காதவற்றை தவிர்க்கவும் தொடர்ந்து நாம் செயல்களில் ஈடுபடுகிறோம். இந்த செயல்களின் மூலம் நாம் எதிர்பார்க்கும் பலன் எப்போழுதும் கிடைப்பதில்லை. அதனால் நம் அறிவு பக்குவமடைகிறது. நமது அறிவின் திறத்திற்கேற்ப நமது செயல்களில் மாறுதல் ஏற்படுத்தி அதனால் தொடர்ந்து நாம் அறிவை பெருக்கிக் கொள்கிறோம்.

நமது செயல்களினால் நமக்கு கிடைக்கும் புண்ணியம் பெரும்பாலும் நாம் விரும்பும் பணம், பதவி, ஆரோக்கியம் போன்றவைகளாக நமக்கு பலன் கொடுக்கும். சில நேரங்களில் இந்த புண்ணியம் நல்ல ஆசிரியர் என்ற பலனையும் தரலாம். அப்பொழுது நாம் சரியான அறிவை பெற்று பரமனை அறிந்து கொள்கிறோம். அதன் பின் குறைவில்லாத இன்பத்துடன் இந்த உலக வாழ்வை அனுபவிக்க துவங்குகிறோம்.



முடிவுரை :

பரமன் நம்முடைய செயல்களின் மூலம் நம்மை உள்ளிருந்து ஆட்சி செய்கிறான். நமது செயல்கள் நம் அறிவையும் விருப்பு வெறுப்புகளையும் நமக்கு கொடுத்து அதன் மூலம் மேலும் செயல்களில் நம்மை ஈடுபடுத்துகிறது. நமது பாவ புண்ணியங்கள் நமது செயல்களின் பலன்களை நிர்ணயிக்கின்றன.

இப்படி எல்லாம் பரமனின் செயல் என்றால் நம் சுய முயற்சிக்கே இடம் இல்லையா என்ற கேள்வி எழக்கூடாது. ஏனெனில் பரமனும் நானும் வேறில்லை. நம்முடைய முயற்சிதான் பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடு. இருப்பது ஒன்றுதான். அதை என்னுடைய சுயமுயற்சி என்றோ பரமனின் விளையாட்டு என்று சொல்வதோ அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் பரமனைப் பற்றி அறியாதவர்கள் எல்லாவற்றையும் தான்தான் செய்வதாக நினைத்துக் கொள்வதற்கும் பரமனை அறிய விரும்பும் நம் போன்றவர்கள் எல்லாவற்றையும் பரமன் உள்ளிருந்து ஆட்சி செய்வதால் நடக்கும் நாடகமாக நினைப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

எல்லாம் தன் செயல் என்று நினைத்து செயல்படுபவர்கள் எப்பொழுதும் தங்கள் செயல்களில் திருப்தி அடைவதில்லை. 'இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்' என்ற எண்ணம் எப்பொழுதும் அவர்களை வாட்டிக்கொண்டிருக்கும். அதே போல் அவர்கள் தங்கள் செயல்களின் பலன்களில் முழுமையான திருப்தி அடைவதில்லை. என்றும் ஏதாவது குறை இருந்து கொண்டேயிருக்கும்.

எல்லாம் அவன் செயல் என்று செயலாற்றுபவர்கள் 'குறையொன்றும் எனக்கில்லை' என்ற மனோபாவத்தை கொண்டவர்கள். இவர்கள் தங்களால் இயன்ற அளவு முழு ஈடுபாட்டுடன் ஒரு செயலில் ஈடுபடுவார்கள். ஏனெனில் அவர்கள் பரமனின் ஒரு கருவியாக செயல்படுபவர்கள் என்ற உண்மையை அவர்கள் அறிந்தவர்கள். பலனில் அக்கறையில்லாமல் செயலில் எந்த குறையும் இல்லாமல் இன்பத்துடன் செயல்படுவார்கள். செயல்களினால் அவர்களுக்கு ஏற்படும் பலன்களை அவர்கள் தங்கள் முயற்சியோடு எந்நாளும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. எனவே அவர்கள் இன்பத்திற்காகவன்றி இன்பமாக இருப்பதால் செயல்படுவார்கள்.

பயிற்சிக்காக :

1. நம் செயல்களினால் விளையும் மூன்று விளைவுகள் யாவை?
2. விதி என்பது யாது?
3. பரமன் எவ்வாறு நம் உள்ளிருந்து நம் செயல்களை கட்டுப்படுத்துகிறார்?
4. வாழ்க்கையில் வெற்றி பெற நாம் என்ன செய்யவேண்டும்?
5. உள்ளிருந்து ஆட்சி செய்பவன் பரமன் என்ற உண்மையை தெரிந்து கொள்வதனால் என்ன பலன்?

சுயசிந்தனைக்காக :

1. 'எல்லாம் அவன் செயல்' என்றால் மக்கள் சோம்பேறிகளாக மாறிவிட மாட்டார்களா?
2. விதியை மதியால் வெல்லலாம் என்பதன் பொருள் என்ன?