Friday, February 19, 2010

பாடம் 018: கடவுள் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.2.24-32)

கடவுளை தெரிந்து கொள்வது என்பது ஒரு மனிதரை தெரிந்து கொள்வது போல்தான். அவர் யார், அவர் செய்யும் தொழில் என்ன, அவர் எப்படிப்பட்டவர் என்ற தகவல்களை கொடுத்து கடவுளை நமக்கு வேதம் அறிமுகம் செய்து வைக்கிறது.

கடவுள் யார்?

நீதான் பரமன் என்று கூறிய வேதம் இப்பொழுது கடவுளை பரமன் என்கிறது.

நானும் பரமன். கடவுளும் பரமன். ஆகவே நானும் கடவுளும் ஒன்றா என்றால், நிச்சயமாக இல்லை. கடவுள் ஆளுபவர். நாம் அவரது ஆட்சிக்குட்பட்டவர்கள். கடவுள் சர்வ வல்லமை பொருந்தியவர். நாம் அற்பமானவர்கள். இது போல் கடவுளுக்கும் நமக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பிறகு ஏன் வேதம் இருவரையும் பரமன் என்று கூறுகிறது? காரணம் இருப்பது பரமன் மட்டுமே. கடவுளும் நாமும் பரமனின் பிரதிபிம்பங்கள்.

நமக்கு முன்னால் ஒரு உட்குவிந்த கண்ணாடியும் (Concave mirror) ஒரு புரம்குவிந்த கண்ணாடியும் (Convex mirror) இருந்தால் நமது இரு பிம்பங்கள் ஒரேமாதிரி தெரிவதில்லை. ஒன்று மிகப்பெரியதாகவும் மற்றொன்று மிகச்சிறியதாகவும் தெரியும். இரண்டு பிம்பங்களில் எந்த ஒன்றை சுட்டிக்காட்டி இது யார் என்று கேட்டாலும் அது நான்தான் என்று பதில் சொல்வோம். ஏனெனில் அங்கு இருப்பது நான் மட்டுமே. அது போல இருப்பது பரமன் மட்டுமே. உபாதியின் (medium) அடிப்படையில் மனிதர்களாகவும் கடவுளாகவும் பரமனே தோற்றம் அளிக்கிறான்.

பரமன் உண்மையில் எந்த காரியமும் செய்வதில்லை. பரமனிடமிருக்கும் மாயா சக்தியால் இந்த உலகம் இருப்பது போல் தோன்றுகிறது. பாட்டு பாடும் சக்தியுள்ள ஒரு மனிதரை பாடகர் என்று குறிப்பிடுவது போல மாயா சக்தியுடன் கூடியுள்ள பரமனை நாம் கடவுள் என்று அழைக்கிறோம்.

கடவுளுக்கும் பரமனுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

கடவுள் பரமனின் பிரதிபிம்பம் என்றாலும் கடவுளுக்கும் பரமனுக்கும் பின்வரும் வித்தியாசங்கள் உள்ளன.

1. பரமனுக்கு ஒரு குறிப்பிட்ட உருவமோ பெயரோ குணமோ கிடையாது. கடவுள் எந்த உருவத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும் சக்தியுடையவர். எனவே அவருக்கு எண்ணிலடங்கா பெயர்களும் உருவங்களும் உள்ளன. அனைத்து குணங்களுடன் கூடியவர் கடவுள்.

2. பரமன் எந்த மாற்றத்தையும் அடையாமல் எப்பொழுதும் இருப்பவன். கடவுள் தொடர்ந்து மாற்றத்தை அடைந்துகொண்டு எப்பொழுதும் இருப்பவர்.

3. பரமன் பகுதிகளோ பாகங்களோ இல்லாமல் என்றும் முழுமையானவன். கடவுள் ஒளி (Aura / ஸத்வம்), சக்தி (Energy / ரஜஸ்) மற்றும் ஜடம் (Matter / தமஸ்) என்ற மூன்று பொருள்களின் கலவை. சூரியனுடைய ஒளியிலிருந்து சக்தியும் ஜடமும் (Energy and Matter) தோன்றுவது போல பரமனிடமிருந்து இந்த மூன்றும் கடவுளாக வெளிப்படுகின்றன.

4. பரமன் முக்கால உண்மை (Absolute reality). கடவுள் பொது உண்மை (Relative reality).

கடவுள் எப்படி பட்டவர்?

1. கடவுள் மூன்று உடல்கள் கொண்டவர்.

நமக்கு பருவுடல் (Physical body), நுண்ணிய உடல் (Subtle body) மற்றும் காரண உடல் (Causal body) என்று மூன்று உடல்கள் இருப்பது போல் கடவுளுக்கும் மூன்று உடல்கள் உண்டு. எல்லா உயிரினங்களின் காரண உடலின் தொகுப்புதான் கடவுளின் காரண உடல். அதேபோல எல்லா நுண்ணிய உடல்களின் கூட்டமைப்பு கடவுளின் நுண்ணிய உடல். நாம் நமது ஐந்து புலன்களாலும் பார்த்து அனுபவிக்கும் இந்த பேரண்டம்தான் கடவுளின் பருவுடல். ஆகவே நாம் எப்பொழுதும் கடவுளை தொடர்ந்து பார்த்து அனுபவித்து கொண்டுதான் இருக்கிறோம்.

2. கடவுள் அனைத்தையும் உள்ளடக்கியவர்.

ஒரு காடு என்பது பல்வேறு மரங்கள் சேர்ந்த ஒரு இடம். அது போல கடவுள் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பிற்கு பெயர். எப்படி ஒரு கூட்டதிற்கு அதிலடங்கியுள்ள தனி மனிதர்களின் கூட்டுச்சக்தியை விட அதிக சக்தியிருக்கிறதோ, ஒரு தனித்தன்மை இருக்கிறதோ அது போல கடவுளுக்கு கடவுளில் உள்ளடங்கியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் கூட்டுத்தொகையை விட அதிக சக்தியும் தனித்தன்மையும் உண்டு.

3. கடவுள் சர்வ சக்திமான்.

எல்லாம் வல்லவர் கடவுள். கடவுளின் கட்டளை படியே இந்த உலகம் முழுதும் இயங்கிவருகிறது. அனைத்து பௌதீக விதிகளையும் வகுத்தவர் அவர். அறிவியல் என்பது அவர் வகுத்த விதிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக மனிதன் செய்யும் முயற்சி. தான் வகுத்த விதிகளை தேவைப்பட்டால் அவரால் மீறவும் முடியும்.

4. கடவுள் அனைத்தையும் அறிபவர்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்கள் முழுவதையும் கடவுள் அறிவார். இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்ற மூன்றுகாலங்களையும் முற்றும் உணர்பவர் கடவுள்.

கடவுளின் தொழில் யாது?

1. உலகத்துக்கு காரணம் கடவுள்.

இந்த உலகத்தை படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்பது கடவுளின் செயல். ஒரு பானையை செய்ய அறிவுள்ள ஒரு குயவனும் ஜடமான களிமண்ணும் தேவை. அதே போல பரமனின் அறிவை பிரதிபலித்து தன்னிடமுள்ள ஒளி/சக்தி/ஜடம் ஆகிய பொருட்களால் இந்த உலகத்தை கடவுள் உருவாக்கினார். எனவே இந்த உலகத்திற்கு அறிவுக்காரணமும் (Intelligent cause) பொருட்காரணமும் (Material cause) கடவுளே.

2. பாவ புண்ணியங்களுக்கு பலன் அளிப்பவர்.

நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் உண்டான பாவ புண்ணியங்களின் பலன்களை சரியாக நிர்ணயித்து அதை தவறாமல் நாம் அனுபவிக்கும் படி அதற்கேற்ற சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குவது கடவுளின் வேலை.

முடிவுரை :

மாயா சக்தியுடன் கூடிய பரமனை கடவுள் என அறிமுகப்படுத்திய வேதம், பின்வரும் உதாரணத்தின் மூலம் அனைத்தையும் விளக்குகிறது.

நாம் கடற்கரையில் நின்று பார்க்கும்பொழுது பல்வேறு அலைகள் கடலில் தோன்றி சில மணித்துளிகள் ஆரவாரத்துடன் செயலாற்றி பின் மறைகின்றன. எல்லா அலைகளும் கடலை சார்ந்து இருப்பவை. அலைகள் மிகச்சிறியவனவாகவும் கடல் மிகப்பெரியதாகவும் நமக்கு காட்சியளிக்கின்றன. ஆனால் கடலும் அலைகளும் வெறும் தோற்றங்களே. உண்மையில் இருப்பது நீர் மட்டும்தான்.

இந்த உதாரணத்தில் அலைகளை வெவ்வேறு மனிதர்களுக்கும் கடலை கடவுளுக்கும் ஒப்பிட்டால் இருப்பது நீர் என்கிற பரமன் மட்டும்தான்.

மாற்றமில்லாமல் எந்த வித செயலிலும் ஈடுபடாமலும் எப்பொழுதும் எதனுடனும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பவன் பரமன். பரமனின் மாயா சக்தியிலிருந்து ஒளி, சக்தி, ஜடம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக தோன்றும் இறைவன் இந்த உலகத்தை பல்வேறு உயிரினங்களின் அனுபவத்திற்காக தோற்றுவித்து காத்து அழிக்கும் வேலையை செய்து வருகிறார்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. 'நீதான் பரமன்' என்பதன் முழுமையான விளக்கத்துடன் கடவுளை பற்றிய அறிமுகத்தையும் செய்ததுடன் முதல் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.



பயிற்சிக்காக :

1. கடவுளுக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரிசை படுத்துக.

2. பரமனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

3. கடவுள் எந்த மூன்று பொருள்களின் கூட்டமைப்பால் செய்யப்பட்டவர்?

4. கடவுள் எப்படி பட்டவர்?

5. கடவுளின் தொழில் யாது?

சுயசிந்தனைக்காக :

1. கடவுளை தெரிந்து கொள்பவர்களை விட கடவுளை நம்புபவர்களும் நம்பாதாவர்களும் அதிகமாக இருப்பதன் காரணம் யாது?

2. பரமனும் கடவுளும் என்றுமிருப்பவர்களென்றால் உயிரினங்களும் என்றுமிருப்பவையா?

3. கடவுளுக்கு இந்த உலகத்தை எப்படி உருவாக்குவது என்பதில் முழுச்சுதந்திரம் உள்ளதா அல்லது இந்த மாதிரிதான் இருக்க வேண்டும் என்ற வேறு யாரவது அவருக்கு அறிவுருத்தி அதற்கேற்றாற்போல் உலகத்தை அவர் படைக்கிறாரா