Tuesday, February 9, 2010

பாடம் 011: நீதான் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.1.28-31)

பரமன் அறிவு வடிவானவன். பரமன் ஆனந்த மயமானவன். பரமன் இருத்தலை இயல்பாக கொண்டவன். இந்த மூன்று விளக்கங்களை கேட்கும்பொழுது வேதம் எங்கோ இருக்கும் பரமனை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கொண்டிருந்தோம். பின் ஆகாயம் பரமன், பிராணன் பரமன் என்ற விளக்கங்களின் மூலம் பரமன் எங்கோ இந்த உலகத்துடன் சம்பந்தம் இல்லாமல் இருப்பவன் அல்ல, இந்த அண்டம் முழுவதும் பரமனின் வடிவம் என்று அறிந்த போதும் 'நீதான் பரமன்' என்ற வாக்கியம் ஒரு அதிர்ச்சியை உண்டுபண்ணுகிறது.

பரமனை பற்றிய அறிவை அறியத்தொடங்குமுன் வேதம் சொல்லும் கருத்து நமது யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தி வரவேண்டும் என்று படித்தோம். நாம் இப்பொழுது இருக்கிறோம். அவ்வப்பொழுது ஆனந்தமாயிருக்கிறோம். ஏதோ கொஞ்சம் அறிவு இருக்கிறது. ஆனால் அதற்காக நான்தான் பரமன் என்று சொன்னால் எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

இவன்தான் கொலையாளி என யாரையோ சொல்லப்போகிறது என்ற ஆவலுடன் மர்ம நாவலை படித்துக் கொண்டிருக்கும் பொழுது கதையில் வரும் எந்த காதாபாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் சிவனே என்று கதை படித்துக்கொண்டிருக்கும் என்னைத்தான் கொலையாளி என்றால் என்ன செய்ய தோன்றும்? புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வேறு வேலை செய்வதுதான் உத்தமம். ஆனால் நீங்கள் படித்துக் கொண்டிருப்பது மர்ம நாவல் இல்லை. உங்களை பற்றி மிக உயர்வாக கூறும் வேதாந்தத்தின் சாரத்தை நீங்கள் இப்பொழுது முழுவதுமாக படித்து உண்மையை அறிந்து கொள்வதை தவிர வேறு முக்கியமான வேலை எதுவும் இருக்க முடியாது.

தான்தான் இந்த பரந்த தேசத்தின் உண்மையான அரசன் என்று ஒரு பிச்சைக்காரன் அறிய நேரிட்டால் அவனது அடுத்த எண்ணம் அரண்மனைக்கு சென்று தனது உரிமையை நிலை நாட்டுவது எப்படி என்று இருக்குமே தவிர அடுத்த வேளை சாப்பாட்டுக்கு எந்த தெருவிற்கு பிச்சை எடுக்க போகலாம் என்பதாக இருக்காது. அது போல வேதம் நம்மை பரமன் என்று கூறுவது நமக்கு புரிந்தால் நமது தலையாய காரியம் 'நான் எப்படி பரமனாக இருக்க முடியும் என்பதை தீர விசாரித்து அறிந்து கொண்டு பரமனாக வாழத்தொடங்குவதேயன்றி சாதாரண மனிதனாக தொடர்ந்து செயல்படுவதன்று.

எனவே இந்த பரமரகசியத்தை முழுதும் தெரிந்து கொள்ளாமல் நம்மால் படிப்பதை நிறுத்திவிட முடியாது.

முடிவுரை :

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. 'இந்த உலகத்தின் ஆதாரமான பரமன் அறிவு உருவாகவும் ஆனந்த மயமாகவும் இருக்கும் நீதான்' என்ற கருத்துடன் முதல் அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது. பரமன் எப்படி நீயாக இருக்க முடியும் என்ற விளக்கம் அடுத்த பகுதியில் தொடர்கிறது.

பயிற்சிக்காக :

1. நான் பரமன் என்பது உண்மை என்பதற்கும், இல்லை என்பதற்கும் என்னென்ன கருத்துக்கள் ஆதாரமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளன?

2. நான் பரமன் என்ற கருத்து புரிந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நான்தான் பரமன் என்று வேதம் கூறுவது நன்றாக புரிந்தாலும் கூட நமக்குள் எந்த வித மாற்றமும் ஏற்படாதது ஏன்?

2. நான் பரமன் என்றால் மற்ற மனிதர்கள் யார்?