Wednesday, February 17, 2010

பாடம் 017: காணமுடியாதவன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.2.21-23)

பார்ப்பவை அனைத்தும் பரமன் என்றாலும் பலருக்கும் இன்னும் பரமன் ரகசியமாகத்தான் இருக்கிறான். கண்ணால் காண முடியாதவன் பரமன் என்ற இந்த பாடத்தின் மூலம் பரமனை பற்றிய இன்னுமொரு விளக்கத்தை வேதம் நமக்களிக்கிறது. பார்ப்பதற்கும் காண்பதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஒரு குழந்தை பார்க்கிறது. ஆனால் பார்க்கும் பொருள்களை பற்றிய அறிவை அது அடைவதில்லை. பார்ப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்பதை அறியவும் செய்வதை காண்பது என்ற சொல் குறிக்கிறது. இந்த உலகத்தை வெறும் ஜடப்பொருளாக பார்க்காமல் பரமனின் வெளிப்பாடாக காண்பதை அனைவராலும் செய்யமுடியாது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்: அனைத்துக்கும் ஆதாரம் பரமன்

பரமனை காண முடியாமல் இருப்பதற்கு முதல் காரணம் அவனே முதல் காரணமாக இருப்பதால்தான். பானைக்கு ஆதாரம் களிமண். களி மண்ணுக்கு ஆதாரம் அணுக்களின் கூட்டமைப்பு. அணுக்களின் ஆதாரம் பரமன். பரமனுக்கு ஆதாரம் என்று எதுவும் கிடையாது. பரமன் தான் முதல் காரணம்.

நாம் பார்க்கும் எந்த ஒரு பொருளையும் வர்ணிக்க சொன்னால் நாம் ஒரு முக்கியமான ஒன்றை கவனிக்காமல் விட்டுவிடுவோம். உதாரணமாக ஒரு மரத்தை பார்க்கும் பொழுது அதில் கிளைகள், இலைகள், பூக்கள் என்று மரத்தின் அனைத்து பாகங்களையும் நாம் வரிசை படுத்துவோம். ஆனால் அந்த மரத்தின் மீது முழுவதும் படர்ந்து அதன் இருப்பை நமக்கு அறிவிக்கும் ஒளியை நாம் கவனிப்பதில்லை.

பரமன் ஒளிவடிவானவன். பரமன்தான் அனைத்து பொருள்களையும் விளக்குகிறான். ஆனால் நாம் பொதுவாக பரமனை காண்பதில்லை. ஒளியை வெளியிடும் பொருள்களான சூரியன், சந்திரன், விளக்கு ஆகியவற்றை நாம் பார்க்க முடியும். ஆனால் ஒளியை நம்மால் பார்க்கவே முடியாது. ஒளி இல்லாவிட்டால் முழுவதும் இருளாயிருக்கும். நம்மால் எதையும் பார்க்க முடியாது. ஒளி இருப்பதை நாம் அதனால் ஒளியேற்றப்பட்ட பொருள்களை பார்ப்பதனால் மட்டுமே அறிய முடியுமேயன்றி ஒளியை நேரடியாக பார்த்து அறிய முடியாது. எங்கும் இருளாயில்லாமல் நம்மால் எதையாவது பார்க்க முடிந்தால் அங்கு ஒளி இருக்கிறது என்று அறிந்து கொள்வோம். அது போல இந்த உலகம் இருப்பதை பார்க்கும்பொழுது நாம் பரமன் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நான் ஒளியை நேரடியாக பார்த்தால் தான் ஒளி என்று ஒன்று இருக்கிறது என்று நம்புவேன் என்பது அறிவீனம். அது போல பரமனை நேரில் பார்க்க வேண்டும் என்ற துடிப்பும் அறிவீனம். அறிவுள்ளவர்கள் மட்டுமே தங்கள் ஞானக்கண்களால் பரமனை எப்பொழுதும் காண்கிறார்கள். மற்றவர்களுக்கு பரமன் காண முடியாதவனாகவே இருக்கிறான்.

இரண்டாம் காரணம்: காண்பவனை காண்பதரிது.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்தால் பரமனை காணமுடியாது. பரமன் இல்லாத இடம் என்றொன்றில்லை. அப்படிப்பட்ட இடத்தைதான் பெரும்பாலோர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அறியாமைதான் இதற்கு காரணம்

பரமார்த்த குருவின் பத்து சீடர்கள் ஒரு ஆற்றை நீந்தி கடந்த பின் எல்லொரும் பத்திரமாக கரை சேர்ந்துவிட்டார்களா என்பதை அறிய சீடர்களில் ஒருவன் அனைவரையும் விரலால் சுட்டிக்காட்டி எண்ணினான். தன்னை கூட்டி கொள்ளாததால் ஒன்பதை தாண்டி பத்து என்ற எண் யார் கூட்டினாலும் வரவில்லை. தொலைந்து போன பத்தாவது மனிதனை எல்லோரும் தேட ஆரம்பித்தார்கள். அப்பொழுது அங்கு வந்த குரு 'நீதான் அந்த பத்தாவது மனிதன்' என்ற அறிவை கொடுத்தார்.

இந்த அறிவை அடைவது அவ்வளவு சுலபமில்லை.

நாம் எந்த ஒரு பொருளை பார்க்கும் பொழுதும் நம் எண்ணங்கள் நம் கண்ணின் மூலம் வெளியேறி அந்த பொருளை விளக்கி மறுபடியும் நம் கண்ணின் மூலம் நமது மனதுக்குள் வந்து அங்கு பார்க்கப்பட்ட பொருளைப் போன்ற ஒரு எண்ணத்தினால் ஆன பொருளை வடிவமைக்கின்றன. இந்த காரியத்தை செய்ய நமது அகம்பாவத்தின் துணை அவசியம். நம் கண் பார்வை இங்குமங்கும் என்று பல இடங்களில் சென்றாலும் நாம் பார்க்க விரும்பும் பொருள்களை மட்டும் தான் பார்க்கிறோம். பாய்ந்து செல்லும் ஈட்டியின் முனைப்பகுதியில் இருக்கும் கூர்மையான இரும்பு பகுதிதான் வேட்டையாடப்படும் மிருகத்தின் உடலில் தைக்கும். அந்த கூர்மையான இரும்பு முனை போல் நம் எண்ண அலைகளின் முன்னிருந்து செயல்படுவது நமது அகம்பாவம். எனவே நாம் ஒரு பொருளை பார்ப்பதற்கு அகம்பாவத்தின் துணை அவசியம்.

அகம்பாவம் என்பது பரமன் என்ற உணர்வின் நிழல். நிலவின் வெளிச்சத்தின் துணையுடன் நம்மால் சூரியனை பார்க்கவே முடியாது. அது போல அனைத்தையும் விளக்கும் பரமனை அதன் பிரதிபலிப்பான அகம்பவத்தால் விளக்க முடியாது. சூரியனை பார்க்க நமக்கு நிலவின் துணை தேவையில்லை. சூரியன் சுயமாக பிரகாசிக்கும் தன்மை உள்ளது. அதை பார்க்க வேறு ஒரு ஒளி தேவையில்லை. அது போல பரமன் சுயமாக பிராகாசிக்கும் தன்மை உள்ளவன். நான் இருக்கிறேன் என்று உணர்வதற்கு நமக்கு நம் எண்ண அலைகளின் துணையோ, அகம்பாவத்தின் துணையோ அல்லது கண்ணின் துணையோ தேவையில்லை. எனவே பரமனான நான் இருக்கிறேன் என்பது ஞானிகளின் பார்வை.

நான் என் பக்கத்து வீட்டு மனிதரை பார்ப்பது போல் என் கண்கள் மூலம்தான் எனக்கு பரமன் தென்பட வேண்டும் என்று தேடுபவர்களுக்கு பரமன் காண முடியாதவனாகவே இருக்கிறான்.

முடிவுரை :

உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பது பரமன். நமது அகம்பாவம் பரமனின் பிரதிபலிப்பு. நமது அகம்பாவத்தின் துணையுடன் நாம் உலகில் இருக்கும் பொருட்களை அறிகிறோம். இந்த பேரண்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பொருளாக பரமனை நினைத்து அவனை தேடுவது அறிவீனம். நம்முடைய உணர்வாக இருந்து அனைத்தையும் நமக்கு உணர்த்தும் பரமனை நாம் நேரடியாக உணருவதே பரமனை காணும் வழி. இது வேதத்தை முறையாக பயின்றால் மட்டுமே முடியும். ஆகையினால் பெரும்பாலோரின் கண்களால் காணப்படாதவனாக இருக்கிறான் பரமன்.

பயிற்சிக்காக :

1. பார்ப்பதற்கும் காண்பதற்கும் என்ன வித்தியாசம்?
2. பரமனை நேரடியாக காண முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
3. நாம் பொருட்களை பார்க்க நமது அகம்பாவம் எவ்விதம் துணை செய்கிறது?
4. அகம்பாவம் என்பது யாது?
5. பரமனை காணும் வழி யாது?

சுயசிந்தனைக்காக :

1. தியானத்தில் அமர்ந்திருக்கும்பொழுது நாம் இடம், காலம், காரணம் இவையனைத்தையும் கடந்து பரமனாகவே மாறிவிடுவோம் - இது உண்மையா?
2. பரமனை அறிந்து கொண்டால் நமது அகந்தை இன்னும் அதிகமாகிவிடும் - இது சரியா?
3. ஞானக்கண் என்றால் என்ன?