நாம் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் பரமன். பரமனை நம் கண்ணாலோ வேறு புலன்களாலோ அறியமுடியாது. இவ்விரு வாக்கியங்களில் இருப்பது போல் தோன்றும் முரண்பாட்டை 'பார்ப்பவை பரமன்' என்ற இப்பாடத்தின் மூலம் வேதம் நீக்குகிறது.
இருத்தல் என்பது பரமனின் இயல்பு.
ஒரு பொருள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய நமக்கு நமது கண், காது போன்ற புலன்கள் மட்டும் போதாது. நம்முடைய அறிவும் தேவை. நாம் கண்ணால் காணும் ஒரு பொருள் ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருந்தால் நாம் அந்த பொருளை இருக்கிறது என்று சொல்ல மாட்டோம். பூனை யானையாகவும் யானை புலியாகவும் தொடர்ந்து நம் கண்ணெதிரே மாறிக்கொண்டே இருந்தால் நாம் இங்கு ஏதோ மாயம் நடக்கிறது, பூனையோ யானையோ உண்மையில் எதுவும் இங்கு இல்லை என்று கூறுவோம். இவை இது மாதிரி ஒவ்வொரு நொடியும் மாறாமல் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருந்தால் நமது கருத்து என்னவாயிருக்கும்?
ஒரு பொருளை இருக்கிறது என்று சொல்வதற்கு அது என்றும் மாறாமல் இருக்க வேண்டும். இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் எது மாறாமல் இருக்கிறதோ அதை மட்டுமே 'இருக்கிறது' என்ற சொல்லுக்கு பொருளாக கொள்ள முடியும். மற்றவை எதுவும் இல்லை. அவை இருப்பது போல தெரியும் மாயத்தோற்றங்களே.
அதாவது இந்த உலகம் இருப்பது போல தோன்றும் ஒரு மாயை. உண்மையில் அது இல்லவே இல்லை. இருப்பது பரமன் மட்டுமே.
ஒரு பொருள் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் 'ஆம்' என்று நம்மால் பதில் சொல்ல முடியுமா? முடியும். 'நான் இருக்கிறேன்' என்ற ஒரே ஒரு பதிலைத்தான் நமது உடல், புலன்கள் மற்றும் மனது ஆகியவற்றின் துணையின்றி நம்மால் உறுதியாக உணரமுடியும். இந்த 'நான்' என்ற உணர்வே பரமன். பரமன் மட்டும்தான் இருக்கிறான். நமது உடல், புலன்கள், 'நான்' என்ற எண்ணத்துடன் கூடிய நம் மனம் இவையனைத்தும் மாறிக்கொண்டேயிருக்கும் இந்த உலகத்தைச் சேர்ந்தவை. ஆகவே அவை மாயை. இவற்றையெல்லாம் அறியும் நான் மாறாத பரமன்.
இந்த உலகத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் அனைத்தும் வெறும் அணுக்களின் கூட்டமைப்பேயாகும். அணுவின் அடிப்படை தன்மையை ஆய்ந்தறிந்த அறிஞர்கள் அணு என்பது உண்மையில் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானமாக சொல்ல முடியாது என்று உறுதியாக சொல்கிறார்கள்.*a
உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் 'இருத்தல்' என்ற தன்மையை பரமனிடமிருந்து கடன் வாங்கியுள்ளன என்ற வேதத்தின் கருத்தை விஞ்ஞானிகள் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபித்துள்ளனர்.*b
நாம் இதை நமது அனுபவபூர்வமாகவும் அறிந்து கொள்ளலாம். நாம் கனவு காணும் பொழுது கனவுலகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் நமது எண்ணத்தின் வெவ்வேறு வடிவங்களே தவிர உண்மையில் அவற்றுக்கு 'இருத்தல்' என்ற தன்மையில்லை. நமது கனவு தொடரும் வரை கனவுலகில் இருக்கும் எல்லா பொருட்களும் இருப்பது போல் தோற்றமளிக்கும். கனவில் யாரேனும் நம்மிடம் நாம் அனுபவிக்கும் கனவுலகம் உண்மையல்ல, அது ஒரு மாயத் தோற்றம் என்று கூறினால் நாம் அவரை நம்ப மாட்டோம். கனவில் நடப்பதுதான் உண்மை என்ற உறுதி நம் மனதை விட்டு விலகாது. ஆனால் உறக்க நிலையிலிருந்து விழித்துக்கொண்டால் அதுவரை நாம் அனுபவித்த கனவுலகம் முழுவதும் ஒரு மாயை என்று உணர்வோம்.
அதே போல் இவ்வுலகை நாம் அனுபவிக்கும்பொழுது அது இல்லை, உலகம் ஒரு மாயை என்ற கூற்றை நாம் பொதுவாக அலட்சிய படுத்திவிடுவோம். ஆனால் வேதம் மற்றும் அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்பு ஆகிய இரண்டும் இதை உறுதியுடன் கூறுவதால் நாம் 'உலகம் ஒரு மாயை' என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லலாமே தவிர அதை உண்மையில்லை என்று கூறமுடியாது. உலகம் உருண்டை என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதில் தவறு இல்லை. ஆனால் உலகம் உருண்டையாக இருக்கமுடியாது என்று சாதிப்பதுதான் தவறு. அதே போல் இந்த உலகம் நமது கனவு உலகத்தைப் போல ஒரு மாயத்தோற்றம், உண்மையில் அது இல்லை என்ற கருத்தை நாம் நமக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு ஆசிரியரின் உதவியுடன் நமது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு எப்படி கண்ணுக்கு முன்னால் இருந்து கொண்டிருக்கும் உலகத்தை இல்லை என்று சொல்ல முடியும் என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குறைவில்லா இன்பத்தை நாம் அனுபவிக்க இந்த அறிவு மிகவும் முக்கியமானது.
நமது கனவிலிருக்கும் எந்த பொருளும் நமது எண்ணத்திற்கு அப்பாற்பட்டு இருக்கமுடியாது. அதேபோல் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களும் பரமனிடமிருந்து வேறானவையல்ல.
நமக்கு கனவுலகை உருவாக்கும் சக்தியிருப்பது போல பரமனுக்கு இந்த உலகத்தை இருப்பதாக காட்டும் சக்தி உண்டு. 'உண்மை' என்பது மூன்று வகைப்படும். கனவு என்பது நமக்கு மட்டும், கனவு காணும் நேரத்தில் மட்டும் இருக்கும் தனி உண்மை (Subjective reality). இவ்வுலகிலிருக்கும் அனைத்து பொருட்களும் நிகழ்வுகளும் நமக்கும் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இருக்கும் பொதுவான உண்மை (Relative reality). பரமன் மட்டுமே என்றும் மாறாத முக்கால உண்மை (Absolute reality). பொது உண்மையான நமது மனம் தனி உண்மையான கனவுலகத்தை படைப்பது போல முக்கால உண்மையான பரமன் இந்த பொது உண்மையான உலகத்திற்கு அடிப்படை.
முடிவுரை :
பரமன் மட்டுமே இருக்கிறான். இந்த உலகம் இருப்பது போல தோன்றும் மாயத்தோற்றம். கயிறு பாம்பாக தெரிவது போல பரமன் இந்த உலகமாக நம் கண்களுக்கு தெரிகிறான். கயிற்றை பாம்பாக பார்த்து பயம் கொள்ளுவது அறிவீனம். பார்க்கும் பாம்பு உண்மையில் கயிறுதான் என்ற அறிவு நமக்கு ஏற்பட்டால் நமது பயம் தெளிந்து நிம்மதி பிறக்கிறது.
கனவிலிருந்து விழித்தவுடன் கனவில் அனுபவித்த துன்பங்கள் எப்படி உடனே மறையுமோ அது போல தகுந்த ஆசிரியரின் உதவியுடன் நாம் இந்த மாய உலகத்திலிருந்து விழித்துக்கொண்டால் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் உண்மைகள் அல்ல என்று புரிந்து கொள்வோம். பின் வாழ்வு முழுவதும் குறைவில்லாத இன்பம்தான்.
பயிற்சிக்காக :
1. மூன்று விதமான உண்மைகள் யாவை?
2. இருப்பது போல் தோற்றமளிக்கும் இந்த உலகம் உண்மையில் இல்லை என்பதை அறிவியல் மூலம் விளக்குக.
3. நான் என்ற உணர்விற்கும் நான் என்ற நினைவிற்கும் என்ன வேறுபாடு?
சுயசிந்தனைக்காக :
1. நம் வீட்டில் நடக்கும் ஒரு சோக நிகழ்வை கனவாக கருதி எப்படி நம்மால் தொடர்ந்து இன்பமாக இருக்க முடியம்?
2. மாறாத உண்மையைத்தவிர எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கும் உண்மை என்று ஏதேனும் இருக்கிறதா?
3. கனவு காணும் பொழுதே இது கனவுதான் என்ற அறிவுடன் கனவில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க முடியுமா?
*a Uncertainty principle of Werner Heisenberg
*b MIT's Frank Wilczek and Richard Feynman