Thursday, February 4, 2010

பாடம் 008: ஆகாயம் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.1.22)

பரமன் ஒருவன் இருக்கிறான். அவன் இந்த உலகத்திற்கு ஆதாரம் என்று கூறிய வேதம், இந்த அண்டத்தின் படைப்பை விவரிக்கும்பொழுது ஆகாயமே பரமன் என்கிறது. முதன் முதலில் தோன்றியது ஆகாயமே. ஆகாயம் அல்லது விண்வெளி என்பது எங்கோ தொலைவில் உள்ள ஒரு பொருள் அல்ல. எல்லோருக்கும் வெளி (Space) என்பதன் பொருள் தெரிந்திருந்தாலும் 'வெளி என்றால் என்ன?' என்ற கேள்விக்கு தெளிவான மிகச்சரியான பதிலை கொடுக்க வல்லவர்கள் மிகச்சிலரே.

இடம் கொடுப்பது வெளி, என்று வேதம் ஆகாயத்தை விளக்குகிறது. பூமி, சூரிய குடும்பம் மற்றும் அனைத்து நட்சத்திரங்கள் இவையனைத்திற்கும் இடம் கொடுப்பது வெளி. எனவே படைப்பு என்பது முழுவதும் ஆகாயத்தின்னுள்ளே அடக்கம். இது நமது யுக்திக்கு பொருத்தமாக உள்ளது. மேலும் அறிவியல் வல்லுனர்களும் தற்போது வெளி என்பதும் படைக்க பட்ட (அல்லது தோன்றிய) முதல் பொருள் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

படைப்பு முழுவதும் ஆகாயத்திலிருந்து தோன்றியது என்னும் கருத்து நமது யுக்தி, அறிவியல் மற்றும் வேதம் ஆகிய அனைத்தினாலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இதிலிருந்து நமக்கு ஆகாயம் பரமன் என்ற கருத்து சரி என்று தோன்றவில்லை. பரமன் அறிவு உருவானவன், ஆனந்த மயமானவன் என்பதும் ஆகாயம் இந்த தன்மைகளற்றது என்றும் நமக்கு தெரியும். வேதம் ஆகாயம் பரமன் என்று கூறுவது படைப்பை விளக்குவதற்காக. ஆனால் நாம் பரமன் வேறு ஆகாயம் வேறு என்றும் முடிவு செய்ய முடியாது. ஏனெனில் வேதம் பரமன் மட்டுமே இருக்கிறது என்றும் பரமனைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஆகவே பரமனை முழுமையாக நாம் அறிந்து கொள்ளும் வரை இது போன்று சற்று முரண்பாடுடன் கூடியதாக தோன்றும் கருத்துக்களை அதிகமாக ஆராயாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதம் என்ன சொல்கிறது என்று முழுமையாக தெரிந்த பின் இதுபோன்ற தற்காலிக முரண்பாடுகள் மறைந்து விடும்.

ஆகாயம் பரமன் என்பதன் பொருள், இந்த அண்டம் முழுவதும் ஆகாயத்திலிருந்துதான் தோன்றியது என்றும் இந்த உலகத்திலுள்ள எந்த பொருள்களும் பரமனிடமிருந்து வேறுபட்டவை அல்ல என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்த பரமனை எல்லாவிடங்களிலும் வியாபித்து இருக்கும் ஆகாயத்துடன் ஒப்பிட்டு வேதம் நமக்கு விளக்குவதற்காகவே ஆகாயம் பரமன் என்கிறது.

பரமன் என்பது நமக்கு தெரியாதது. ஆகாயம் நமக்கு தெரிந்தது. ஆகாயத்தை பற்றி நமக்கு தெரிந்த கருத்துக்களை ஆராய்ந்து தெரியாத பரமனை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

பரமன் - ஆகாயம்

நாம் ஒரு வானளாவிய கட்டிடத்தை கட்டுவதனால் வெளியின் அளவு குறைந்துவிடாது. ஒரு பொருளின் இருப்போ இல்லாமையோ வானவெளியை எந்தவிதத்திலும் பாதிப்பது இல்லை. இந்த பேரண்டத்தின் இருப்போ மறைவோ பரமனை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை.

விண்வெளிக்கு ஒரு எல்லை கிடையாது. அது போல பரமனுக்கும் ஒரு எல்லை கிடையாது.

விண்வெளிக்கு ஒப்பாக வேறு ஒரு பொருள் கிடையாது. பரமனுக்கு ஒப்பாக வேறு ஒரு பொருள் கிடையாது.

பூவிலிருந்து வரும் வாசமோ தொழிற்சாலைகளிலிருந்து வரும் மாசுடன் கூடிய புகை மண்டலமோ ஆகாயத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. அதே போல நல்லவை கெட்டவை என்ற பேதமில்லாமல் அனைத்துக்கும் ஆதாரமாயிருப்பது பரமன்.

பானைக்குள் இருக்கும் ஆகாயத்திற்கும் பானைக்கு வெளியே இருக்கும் ஆகாயத்திற்கும் எந்த வித வித்தியாசமும் கிடையாது. ஆயினும் பானையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து சென்றால் பானைக்குள் இருக்கும் ஆகாயமும் பானையுடன் நகர்ந்து செல்வது போல் தோன்றுகிறது. ஆயினும் உண்மையில் ஆகாயம் நகர்வது இல்லை என்று நமக்கு தெரியும். அது போலவே விண்வெளியிலுள்ள அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் தொடர்ந்து நகர்ந்தாலும் ஆகாயம் மாற்றமில்லாமல் இருக்கிறது. அது போல பரமனும் மாற்றத்திற்கு அப்பாற்பட்டவன்.

மேல், கீழ் மற்றும் கிழக்கு மேற்கு போன்ற வார்த்தைகளுக்கு விண் வெளியில் எந்த பொருளும் கிடையாது. ஏனெனில் ஆகாயம் எந்த பாகுபாடோ பகுதிகளோ அற்று எப்பொழுதும் முழுமையாக இருப்பது. அதே போல பரமனும் முழுமையானவன்.

முடிவுரை :

பரமனை நமக்கு அறிவிக்கும் முயற்சியில் 'ஆகாயம் பரமன்' என்று கூறுகிறது வேதம். நாம் நமக்கு தெரிந்த ஆகாயத்தை ஆராய்ந்து நமக்கு தெரியாத பரமனை பற்றிய நமது அறிவை சற்று பெருக்கி கொள்ள வேண்டும்.

பயிற்சிக்காக :

1. வெளி என்றால் எனன?
2. பரமனுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?
3. நாம் எதற்காக ஆகாயத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்?

சுயசிந்தனைக்காக:
1. பரமனுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஆய்க