பரமன்தான் இந்த உலகமாக தோற்றமளிக்கிறான் எனில் ஏன் இந்த உலகம் இன்ப துன்பங்களின் கலவையாக இருக்கிறது? உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வறுமைக் கொடுமையால் வதைக்கப்படும் மக்கள் ஒரு பக்கம், போர், உள்நாட்டு கலவரம், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற சமூக தீவினைகளால் வாடும் மக்கள் மறுபக்கம் என்று ஒரு நரகமாக இருக்கும் உலகத்திற்கு பதிலாக எங்கும் செழுமையும் அமைதியும் தவழும் ஒரு சொர்க்கலோகமாக இவ்வுலகத்தை ஏன் இறைவன் படைக்கவில்லை?
பசுமை புரட்சி, தொழில் துறையில் வியக்கத்தகு முன்னேற்றம் மற்றும் மருத்துவத்துறையில் நம்ப முடியாத சாதனைகள் என்று மனிதன் பல்வேறு முயற்சிகள் செய்தும் உலகம் தொடர்ந்து வறுமை, நோய், கல்வியின்மை என்ற கொடுமைகளின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. மக்கள் நலம் விரும்பி, உறுதியுடனும் திறமையுடனும் செயல்பட்ட பல அரசியல் தலைவர்களின், 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற கனவு கனவாகவே தொடர்கிறது. இவ்வுலகத்திலிருந்து வன்முறையையும் வறுமையையும் அகற்ற முடியாது என்பது ஆண்டவன் கட்டளையா?
உலகத்தின் இந்த நிலைமைக்கு மனிதன் மட்டும்தான் காரணம். இறைவன் குற்றமற்ற நிரபராதி என்று வேதம் கூறுகிறது. பரமன் இந்த உலகமாக தோன்றுவதில் இறைவனுக்கும் மனிதனுக்கும் தனித்தனி பங்குகள் உள்ளன. இவற்றை வேதம் விரிவாக விளக்குகிறது.
படைப்பில் மனிதனின் பங்கும் இறைவனின் பங்கும்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் இறைவன், இந்த படைப்புக்கு அறிவுக்காரணமாகவும் (Intelligent cause) பொருட்காரணமாகவும் (Material cause) இருக்கிறான். இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனிதன் தன் செயல்கள் மூலமும் விருப்பத்திற்கிணங்கவும் தீர்மானிக்கிறான். இறைவன் இந்த உலகத்தை தன் விருப்பபடி மாற்றியமைக்க சக்தியற்றவன்.
மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் இந்த உறவை ஒரு வீடு கட்டும் சொந்தக்காரருக்கும் ஒப்பந்தக்காரருக்கும் உள்ள உறவுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்.
இறைவன் ஒரு ஒப்பந்தக்காரர்(Contractor).
ஒரு வீட்டை கட்டும் அறிவுத்திறனும் செயல்பாட்டுத்திறனும் எல்லோருக்கும் இருப்பதில்லை. வீடு கட்டுவதில் பல வருட அனுபவம் பெற்று, வீடு கட்ட தேவைப்படும் பொருள்களின் அறிவும், வரைபடத்தில் காட்டப்பட்ட வீட்டை உண்மையில் நிர்மாணிக்கும் திறமையும் ஒரு சிலருக்கே இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக வீடு கட்டித்தரும் ஒப்பந்தக்காரர்களாவார்கள். கடவுள் இந்த உலகை நிர்மாணிக்கும் திறன் கொண்ட ஒரு ஒப்பந்தகாரர்.
வீடு கட்டித்தரும் ஒப்பந்தக்காரர் தான்தோன்றித்தனமாக ஒரு வீட்டை கட்டுவதில்லை. ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையோ அதற்கு வேண்டிய பணமோ அவரிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சொந்தமாக வீடு வேண்டும் என்று விரும்புபவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமே அவரது தொழில். அதே போல இந்த உலகத்தை படைக்க வேண்டும் என்றோ அழிக்க வேண்டும் என்றோ கடவுளுக்கு எப்பொழுதும் விருப்பம் ஏற்படுவது கிடையாது. எந்த மாதிரி வடிவமைப்பில் உலகம் அமைய வேண்டும் என்ற வரைபடமும் கடவுளால் நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இவ்விரண்டு வேலைகளும் மனிதனின் பங்கு.
மனிதன் வீட்டுச்சொந்தக்காரன் (Owner).
மனிதன் தான் செய்யும் நன்மை தீமைகளின் பலனை அனுபவித்தே தீரவேண்டும். மனிதனாகப்பிறப்பதற்கே அவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். வீடு கட்ட வேண்டிய பணம் இந்த புண்ணியமாகும். உயிரினங்கள் எண்ணிலடங்கா பிறவிகள்தோறும் சேர்த்து வைத்த பாவபுண்ணியங்களின் விளைவே இந்த உலகத்தின் நிலமைக்கு காரணமாகும். எல்லோரும் எப்பொழுதும் அமைதியான சூழ்நிலையைத்தான் விரும்புவார்கள். ஆனால் அதற்கு தேவையான அளவு புண்ணியம் செய்யாதபொழுது இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாதது கடவுளின் குற்றமில்லை. வீட்டுக்குள் ஒரு நீச்சல் குளம் வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து அதற்குத்தேவையான பணத்தை கொடுக்காமல் 'என் விருப்பத்திற்கேற்றாற்போல் அமையவில்லை' என்று ஒப்பந்தக் காரரை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்?
ஒவ்வொரு மனிதனின் விருப்பதிற்கும் சக்திக்கும் (பாவ புண்ணியங்கள்) ஏற்றவிதத்தில் கடவுள் இந்த உலகத்தை மிகச்சரியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு உயிரினமும் அதன் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்றாற்போல எந்த சூழ்நிலையில் வளர வேண்டும் என்ற அதன் சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் இந்த உலகம் கடவுளால் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்கலும் அழித்தலும்
மொத்த உயிரினங்களின் கூட்டு தொகையான பாவபுண்ணியங்கள் ஒரு முடிவுக்கு வரும்பொழுது இந்த உலகம் கடவுளால் அழிக்கப்படுகிறது. எப்பொழுது மறுபடியும் அவை பருவமடைகிறதோ அப்பொழுது கடவுள் மீண்டும் உலகத்தை தோற்றுவிக்கிறார். சொல்வதை சரியாக செய்யும் ஒரு பணியாளை நாம் எப்படி குறை சொல்ல முடியாதோ அது போல தன் தொழிலை மிகச்சரியாக செய்யும் கடவுளை நாம் இந்த உலகத்தின் நிலமைக்கு காரணம் என்று கூறமுடியாது.
முடிவுரை :
நமது பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து உறவினர்கள், நம் நண்பர்கள், சகத்தொழிலார்கள் மற்றும் நாம் நம் வாழ்வில் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்கள், எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலைகள் இவையாவும் நமது விருப்பபடியும் நமது முன்வினைப்பலனாகவும்தான் அமைகின்றன. நமது பாவங்களுக்கு சரியான தண்டனையாக நமக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்படுத்துவது கடவுளே. ஒரு சிலருக்கு செல்வத்தையும் மற்றவருக்கு ஏழ்மையையும் அவரவர் செயல்களுக்கேற்றவாரு வழங்குவதும் கடவுளே. பாவ புண்ணியங்களுக்கு சரியான பலனளித்தல் என்ற தனது ஒரு முக்கியமான வேலையை கடவுள் மிகச்சரியாக செய்கிறார். எனவே இன்பமும் துன்பமும் கலந்த இந்த உலகின் நிலைக்கு கடவுளை பொறுப்பாளியென்று நினைப்பது அறிவீனம்.
நாம் நமது செயல்களின் சரியான பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நமது நிலைமை இப்பொழுது இருப்பதைவிட இன்னும் சிறப்பாக அமைவது நமது கையில்தான் இருக்கிறது. நம்மால் நமது சொந்த வாழ்க்கையின் தரத்தைதான் நிர்ணயிக்க முடியுமே தவிர உலகம் முழுவதையும் சீரமைக்க முடியாது. உலகம் என்பது பல்வேறு மனிதர்களின் வேறுபட்ட அனுபவத்திற்காக ஏற்படுத்தபட்ட ஒரு இடம். அவரவர்களின் சுயமுயற்சியால் மட்டுமே அவர்களால் தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
தனி மனிதர்களின் சுயநலபோக்கினாலும் வல்லரசுகளின் ஆதிக்க கொள்கையாலும் இந்த உலகத்தை பீடித்திருக்கும் ஏழ்மை, வன்முறை போன்ற கொடுமைகளை முற்றிலும் நம்மால் மாற்ற முடிந்தாலும் நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை கருவிகளின் மூலம் எப்படியாவது அனைத்து உயிரினங்களின் அனுபவத்திற்கு ஏற்றவாறு இந்த உலகத்தை மாற்றிவிடுவது இறைவனின் கடமை.
எனவே இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும் இந்த உலகம் பரமனின் இயல்பான தோற்றம்தான் என்று நாம் உணர வேண்டும்.
பயிற்சிக்காக :
1. இந்த உலகத்தை வடிவமைப்பதில் கடவுளின் பங்கு என்ன? மனிதனின் பங்கு என்ன?
2. என்றேனும் ஒரு நாள் இந்த உலகம் முழுதும் உள்ள மக்கள் இன்பமாக வாழும் சூழல் ஏற்படுமா?
3. மக்கள் வறுமை மற்றும் வன்முறையால் வாட காரணம் என்ன?
சுயசிந்தனைக்காக :
1. உலகத்தை நிர்மாணிப்பதில் இறைவனுக்கு அனுபவம் உள்ளதா?
2. ஒரு சமூக நலம் விரும்பும் தொண்டு நிறுவனம் மக்களின் ஏழ்மையை மாற்ற முடியுமா?
3. தருமத்திற்கு சோதனை ஏற்படும்பொழுதெல்லாம் அவதரிக்கும் இறைவன், உலகம் முழுவதிலும் தர்மம் நிலை நாட்டப்பட்டால், அதர்மத்திற்கு துணையாக அவதரிப்பானா?