Tuesday, February 23, 2010

பாடம் 019: விண்ணும் மண்ணும் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.1-7)

பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடுதான் இந்த உலகம். ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற மூன்று தனிமங்களின் (elements) கூட்டுப்பொருளான மாயை இந்த பேரண்டத்தின் ஆதாரம் என்பதை விண்ணும் மண்ணும் பரமன் என வேதம் விளக்குகிறது.

பெண்களின் கூந்தல் எப்படி மூன்றாக பிரிக்கப்பட்டு பின் ஒரே பின்னல்லாக பின்னப்படுகிறதோ அதே போல பரமனிடமிருந்து வெளிப்படும் ஒன்றான மாயா சக்தி ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய மூன்றின் சேர்மமாக (compound) இயங்குகிறது.இந்த மூன்று தனிமங்களுக்கு தனித்திருக்கும் திறன் இல்லை. இத்தனிமங்களை வெவ்வேறு விகிதங்களில் (ratio) கலப்பதினால் கிடைக்கும் மூன்று வகைபட்ட கலவைகள் இந்த அண்டத்தை வியாபிக்கின்றன.

1. ஜடம் ஓங்கிய சேர்மம் (Matter dominant compound)

கல், மண் போன்ற அனைத்து அஃறிணை பொருள்களும் இந்த வகையை சேர்ந்தவை. இவற்றில் சக்தியும் ஒளியும் மிகக்குறைந்த அளவில் கலந்து இருப்பதால் இவை ஜடப்பொருள்களாக இருக்கின்றன. 'உணர்வு', 'ஆனந்தம்' மற்றும் 'இருத்தல்' ஆகிய மூன்றின் உருவாக இருக்கும் பரமனின் 'இருத்தல்' என்ற இயல்பை மட்டும் இந்த ஜடப்பொருள்கள் பிரதிபலிக்கின்றன.

சக்தியும் ஜடமும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறலாம் என்ற அறிவியல் கோட்பாட்டின் படி நட்சத்திரங்கள் தம்மிடமுள்ள ஜடப்பொருளை தொடர்ந்து சக்தியாக மாற்றி செயல் படுவதுபோல் தோற்றமளிக்கின்றன. அதே போல் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி என்ற ஐந்து அடிப்படை பொருள்களும் உணர்வின்றி செயல் படுகின்றன.

2. சக்தி ஓங்கிய சேர்மம் (Energy dominant compound)

மனிதனை தவிர அனைத்து உயிரினங்களும் இந்த வகையை சேர்ந்தவை. இவற்றின் உடல்கள் ஜடப்பொருளாயிருந்தாலும் மனம் என்ற சக்தி ஓங்கிய சேர்மம், இவற்றை உயிரற்ற ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுத்துகிறது. இவை செயல் பட காரணமாயிருப்பது சக்தி என்கிற தனிமம். 'உணர்வு', 'ஆனந்தம்' மற்றும் 'இருத்தல்' ஆகிய மூன்றின் உருவாக இருக்கும் பரமனின் 'இருத்தல்' மற்றும் 'உணர்வு' ஆகிய இரண்டு இயல்புகளை இந்த உயிரினங்கள் பிரதிபலிக்கின்றன.

உயிரினங்கள் யாவையும் அஃறிணை பொருள்களோடு ஒப்பிடும்போது அதிக அளவில் சக்தியை பெற்றிருப்பினும் சக்தியின் அளவு உயிரினங்களுக்குள் மாறுபடுகிறது. உதாரணமாக தாவரங்களில் உள்ள சக்தியின் அளவு மிருகங்களை ஒப்பிடும்போது குறைவு. இது போல ஒவ்வொரு உயிரின வகைகளும் சக்தியின் அளவுக்கேற்றாற்போல ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.

3. ஒளி ஓங்கிய சேர்மம் (Aura dominant compound)

மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறு படுவதற்கு முக்கிய காரணம் அவன் ஒளி மேலோங்கிய சேர்மமாக இருப்பதால்தான். கல் மண் போன்ற அஃறிணை பொருள்களுக்கு உணர்வு கிடையாது. எல்லா உயிரினங்களுக்கும் உணர்வு உண்டு. ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் தன்னுணர்வு உள்ளது. அதனாலேயே மனிதன் மற்ற விலங்குகளை போலன்றி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறான். என்றும் இன்பமாக இருக்க வேண்டும் என்பது எல்லா உயிரினங்களின் விருப்பமாக இருந்தாலும் அந்த விருப்பதை செயலாக்கும் திறன் படைத்தவன் மனிதன் மட்டுமே.

மனிதனின் உடல் ஜடம் ஓங்கிய சேர்மமே. ஆனால் அவனுக்கு ஒளி ஓங்கிய மனதின் துணையிருப்பதால் பரமனின் 'இருத்தல்', 'உணர்வு' மற்றும் 'ஆனந்தம்' ஆகிய மூன்று தன்மைகளையும் ஒரு சேர பிரதிபலிக்கும் சக்தியுள்ளது.

ஒளி ஓங்கிய சேர்மம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவாக இருந்தாலும் தனிமங்களின் அளவு மனிதருக்கு மனிதர் பெரிதும் வேறுபடுகிறது. ஜடத்தனிமம் அதிகமாகவுள்ள மனிதர்கள் சோம்பலாகவும் சக்தி தனிமம் அதிக அளவில் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக எப்பொழுதும் ஏதேனும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டும் இருப்பார்கள். ஒளித்தனிமம் அதிகமுள்ள மனிதர்கள் பரமனை அறிந்து கொள்ளும் செயல்களில் ஈடுபட்டு தான் பரமன் என்ற பரம ரகசியத்தை அறிந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

முடிவுரை :

ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கூட்டுப்பொருளான பரமனின் மாயை இந்த அண்டத்தின் பல்வேறு பொருள்களாக தோற்றமளிக்கிறது. ஒளி அதிக அளவில் இருக்கும் ஒரு சில மனிதர்கள் பரமனாகவே செயல்படுவார்கள். இவர்கள் பரமனின் முற்றிலுமான வெளிப்பாடுகள். தன்னுணர்வுள்ள அனைத்து மக்களும் இந்த உண்மையை அறிய தகுதி வாய்ந்தவர்களென்றாலும், பெரும்பாலோர் சக்தி தனிமத்தின் தூண்டுதலால் பணம் பதவி போன்ற உலக சுகங்களை தேடுவதில் தங்கள் முழு முயற்சி மற்றும் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருப்பார்கள். ஆயினும் எப்பொழுதெல்லாம் அவர்கள் தன்னை மறந்து ஆனந்தமாக இருக்கிறார்களோ அந்த கணங்களில் அவர்கள் பரமனை முழுதாக பிரதிபலிக்கிறார்கள்.

மனிதனை தவிர மற்ற உயிரினங்களுக்கு பரமனை அறிந்து கொள்ளும் தகுதியில்லை. அவை சக்தி தனிமத்தின் தூண்டுதலால் உணர்வுடன் செயல் படுகின்றன. அஃறிணை பொருள்கள் ஜடத்தனிமத்தின் உதவியால் இருக்கின்றன.

ஒரு இருட்டு அறையில் உள்ள பொருள்களின் இருப்பை ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். அதே போல் இவ்வுலகில் இருக்கும் அனைத்து பொருள்களின் இருப்பை காட்டிக்கொடுப்பது பரமன். அறையிலிருக்கும் ஒரு கண்ணாடி மெழுகுவர்த்தியின் ஒளியை பிரதிபலிப்பது போல இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் பரமனின் உணர்வை பிரதிபலிக்கின்றன. மெழுகுவர்த்தியின் சுடர் மற்றொரு மெழுகுவர்த்தியை பற்றவைத்தால் அதுவும் முதல் மெழுகுவர்த்திக்கு இணையாக செயல்படும். அது போல பரமனை அறிந்து கொள்பவர்கள் பரமனாகவே மாறி 'இருத்தல்', 'உணர்வு' ஆகிய இரண்டு இயல்புகளுடன் 'ஆனந்தம்' என்ற மூன்றாவது இயல்பையும் முழுமையாக பிரதிபலிக்கிறார்கள்.

பயிற்சிக்காக :

1. மாயை எந்த மூன்று தனிமங்களின் கூட்டுப்பொருள்?

2. இவ்வுலகம் எந்த மூன்று வகையான சேர்மங்களால் உருவாக்கப்பட்டுள்ளது?

3. அஃறிணை பொருள்கள், மற்ற உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் பரமனின் எந்தெந்த இயல்புகளை பிரதிபலிக்கிறார்கள்?

4. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள முக்கியமான இரண்டு வேறுபாடுகள் என்னென்ன?

5. உயிரினங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்கு காரணம் என்ன?

6. மனிதர்களுக்குள் காணப்படும் வேறுபாடுகள் யாவை? அவற்றிற்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஜடம் ஓங்கிய சேர்மங்களைத்தவிர வேறு எதையும் நாம் கண்ணால் பார்க்கவோ மற்ற புலன்களால் அறியவோ முடியாது. இது உண்மையா?

2. அஃறிணை பொருள்களிலும் ஒளி தனிமம் உள்ளது. இது சரியா?