Monday, March 22, 2010

பாடம் 037: கேட்பதும் பார்ப்பதும் யார்? (பிரம்ம சூத்திரம் 1.4.19-22)

பிருஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று 'பரமனை மட்டுமே பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், நினைக்க வேண்டும், தியானிக்க வேண்டும்' என்கிறது. அப்படி பார்த்து, கேட்டு, நினைத்து, தியானித்து உணர்ந்து விட்டால் நாம் பரமனாகவே ஆகிவிடுவோம். பரமனை பார்க்கவும் கேட்கவும் வேண்டுமென்றால் பார்ப்பதும் கேட்பதும் யார் என்ற கேள்விக்கு இந்த பாடம் மூலம் வேதம் விளக்கமளிக்கிறது. பார்ப்பதும் பார்க்கப்படும் பொருளும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்பதை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம்.

உயிர் என்றால் என்ன?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் உயிருள்ளவை உயிரற்றவை என்று இரண்டாக பிரிக்கலாம். உயிருள்ள மனிதர் இறந்து விட்டால் எஞ்சியிருப்பது உயிரற்ற உடல். எனவே மூளை முதல் கை கால்கள் உள்ளிட்ட நம் உடல் 'உயிரற்றவை' என்ற பிரிவை சேர்ந்தது. நம்மால் கண்டு கேட்டு முகர்ந்து தொட்டு சுவைத்து உணரும் அனைத்தும் உயிரற்றவையே. உயிர் அறிவியல் ஆய்வுக்கு அப்பாற்பட்டதென்பதால் வேதத்தின் மூலமாகத்தான் நாம் உயிர் என்றால் என்ன என்று அறிய முடியும்.

பத்தொன்பது உறுப்புக்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், ஐந்து பிராணன்கள்) கொண்ட நமது நுண்ணிய உடல்தான் உயிர். நம் பருவுடலிலிருந்து நுண்ணிய உடல் வெளியேறுவதையே நாம் 'உயிர் பிரிந்துவிட்டது' என்றும் 'மரணம் அடைந்து விட்டார்' என்றும் வழக்கத்தில் கூறுகிறோம். 'இயற்கை எய்தினார்', 'இறைவனடி சேர்ந்தார்', 'சமாதியானார்' போன்ற வார்த்தைகள் மறுபடியும் பிறக்காமல் பரமனுடன் ஒன்றான ஞானிகளின் மரணத்திற்கு மட்டுமே பொருந்தும்.

உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் உள்ள வேறுபாடு

நுண்ணிய உடல் உள்ளிருந்தால் உயிரற்ற உடல்கள் உயிருள்ளவைகளாகின்றன. உணவிலிருந்து உருவாகும் பருவுடலினுள் நுண்ணிய உடல் சேர்வதையே நாம் கருத்தரித்தல் என்கிறோம். நமது நுண்ணிய உடலின் ஒரு பாகமான மனது பரமனின் அறிவை பிரதிபலிக்கும் சக்திவாய்ந்தது. பரமனின் இந்த பிரதிபிம்பம்தான் நுண்ணிய உடலின் உணர்வுக்கு ஆதாரம். எனவே உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் உள்ள ஒரே வேறுபாடு உணர்வுமயமான பரமனின் பிரதிபிம்பமான அகம்பாவம். அனைத்து உயிரினங்களுக்கும் அகம்பாவம் என்பது இருந்தாலும் நான் என்ற தன்னுணர்வான அகங்காராம் மனிதர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. மற்ற உயிரினங்களுக்கு தான் ஒரு தனிபிரதி என்ற எண்ணமே இல்லாததால் அவற்றிக்கு அகங்காரம் இல்லை.

கேட்பதும் பார்ப்பதும் யார்?

நம் உடலில் இருக்கும் கண் ஒரு மைக்ராஸ்கோப் (Microscope) அல்லது டெலஸ்கோப் (Telescope) போன்ற ஒரு உபகரணம். இந்த உபகரணத்தை உபயோகித்து பார்க்கும் செயலை செய்வது நுண்ணிய உடலின் ஒரு பாகமான அகக்கண். இந்த அகக்கண் மனதின் கட்டுப்பாட்டில் செயல் படும். மனதின் துணையின்றி அகக்கண்ணால் மட்டும் எதையும் பார்க்க முடியாது. மனது செயல் பட அகம்பாவத்தின் துணை அவசியம். ஆக பார்ப்பதும் கேட்பதும் யார் என்ற கேள்விக்கு பதில் 'அகம்பாவம்' என்பது தான்.

அகம்பாவம் என்பது பரமனின் பிரதிபலிப்பு. எனவே உண்மையில் பார்ப்பதும் கேட்பதும் பரமன்தான். 'அரசர் மறைந்து விட்டார். அரசர் வாழ்க வாழ்க' (The King is dead. Long live the King!) என்ற சொற்றொடர் கேட்பதும் பார்ப்பதும் பரமனா அகம்பாவமா என்ற குழப்பத்திற்கு விடை தரும். மன்னராட்சி நடைபெறும் ஒரு நாட்டில் அரசாங்கத்தை நடத்தும் மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது செயலை மன்னரின் ஆணைப்படியே செய்வார்கள். மன்னர் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தாலும் நாட்டு நடப்புகள் அனைத்தும் அவர் பெயரில் நடத்தப்படும். அதே போல பரமன் எந்த செயலை செய்யாமல் இருந்தாலும் பரமனின் பிரதிபிம்பமான அகம்பாவத்தின் அனைத்து செயல்களுக்கும் அவனே ஆதாரமாவான்.

முடிவுரை :

நமது ஐந்து புலன்களால் அனுபவிக்கும் இந்த உலகத்தை இல்லை என்று சொல்ல முடியாது. வேதம் நமது ஆறாவது புலன். வேதம் பரமனைத்தவிர வேறொன்றுமில்லை என்று கூறுவதால் உலகம் உண்மையில் இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஒரு இந்திரஜால காட்சியில் (Magic show) நாம் பார்ப்பவை நமது கற்பனையல்ல. மந்திரவாதி இல்லாததை இருப்பதாக காண்பிப்பது மாயை. இதே போல் இல்லாத உலகத்தை இருப்பதாக நமது புலன்களுக்கு அனுபவத்தை ஏற்படுத்துவது பரமனின் மாயை. ஒரு வித்தியாசம் என்னவெனில் இருப்பது பரமன் மட்டுமே.

லட்டு என்று ஒரு பொருள் இருக்கிறது என்று நமக்கு எப்படி தெரியும். அதன் உருவத்தையும் நிறத்தையும் பார்க்கிறோம். அதை தொட்டு உணர்கிறோம். சுவைக்கிறோம். இது போல நம் ஐந்து புலன்களுக்கும் அந்த பொருளின் அனுபவம் ஏற்படுவதால் லட்டு இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். நம் மனம், உடல் மற்றும் ஐந்து புலன்களும் லட்டை போன்ற வெறும் ஜடப்பொருள்கள்தான். லட்டு நம் நாக்கில் படும்பொழுது லட்டுக்கு எந்த உணர்ச்சியும் ஏற்படாது. அதே போல நாக்குக்கும் சுவைக்கும் சக்தி கிடையாது. நாக்கு, நுண்ணிய உடலை சேர்ந்த அகநாக்கு, மனம் ஆகியவற்றின் மூலம் சுவைப்பது நம் அகம்பாவம்தான்.

அகம்பாவமோ பரமனின் பிரதிபிம்பம். இருப்பது பரமன் மட்டுமே. லட்டு, நாக்கு, நம் நுண்ணிய உடல் இவையனைத்தும் பரமனின் மாயையின் வெளிப்பாடு. நம் மனதில் உள்ள அறியாமை காரணமாக நமது அகம்பாவத்திற்கு உயிரற்ற உடலையும் மனதையும் பொருளாக கருதி 'கேட்பதும் பார்ப்பதும் நான்' என்ற அறிவுடன் இருக்கிறோம். உண்மையில் இருப்பது பரமன் மட்டுமே என்றும் மற்றவை பரமனின் மாயாசக்தியால் இருப்பதாக காண்பிக்கப்படும் பொருள்கள் என்றும் தெரிந்து கொண்டால் பார்ப்பதும் பார்க்கப்படும் பொருளும் ஒன்றே என்பது நமக்கு புரிந்து விடும்.

பயிற்சிக்காக :

1. பரமனாகவே மாறுவதற்கு உபநிஷத் கூறும் வழி என்ன?

2. உயிர் என்றால் என்ன?

3. மரணமடைவதற்கும் இயற்கை எய்துவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

4. உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

5. கேட்பதும் பார்ப்பதும் யார்?

6. பார்க்கும் பொருளும் பார்க்கப்படும் பொருளும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?

சுயசிந்தனைக்காக :

1. இவ்வுலகில் போர், வறுமை போன்ற துன்பங்கள் இருப்பதன் காரணம் என்ன?