முண்டக உபநிஷத் மந்திரம் ஒன்று 'பரமனை அறியும் ஒருவன் பரமனாகவே ஆகிவிடுகிறான்' என்று கூறுவதன் மூலம் வெற்றி-தோல்வி, புகழ்-இகழ், லாபம்-நஷ்டம் போன்ற இருமைகள் கலந்த இந்த உலகத்தில் எப்படி மனிதன் எப்பொழுதும் ஆனந்தமாக வாழ முடியும் என்பதை விவரிக்கிறது. மனித குலத்தின் துயரத்தின் காரணம், துயரத்திலிருந்து விடுபட உபாயங்களும் வழிமுறைகளும், துயரங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு முக்தியடைந்த நிலையை பற்றிய விளக்கம் ஆகிய மூன்று ஆன்மீக கருத்துக்களை இந்த பாடம் கொடுக்கிறது.
சென்ற பாடத்தில் கொடுக்கப்பட்ட உலகம், கடவுள் மற்றும் மனிதன் ஆகியவற்றின் விளக்கத்தை முழுவதுமாக அறிந்த பலர் நிரந்தர அமைதியுடனும் குறையாத இன்பத்துடனும் இருப்பதை பார்ப்பதிலிருந்து வேதங்கள் சரியான முடிவான முரண்பாடற்ற உண்மைகளை தருகின்றன என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
நம் துன்பமும் அதற்கு காரணமும்
நான் இப்பொழுது இன்பமாகத்தானே இருக்கிறேன் எனக்கு எதற்கு வேதாந்தம் என்று எண்ணுபவர்களுக்கு பரமனை அறிந்தால் மட்டுமே நாம் அனுபவிக்கும் இன்பம் முழுமையானது என்ற கருத்தை வேதம் கூறுகிறது. பரமனை அறிந்து கொள்ளாமல் நாம் இன்பத்தை அனுபவித்தால் அதுவே நமது துன்பத்திற்கு வித்தாகிவிடும்.
நாம் பரமனை அறியும் வரை நம் இன்பத்துக்கு காரணம் பொன், பொருள், கணவன் அல்லது மனைவி, உறவினர்கள், நண்பர்கள், பட்டம், பதவி, இளமை, ஆரோக்கியம் போன்றவை. இவையனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பவை. எனவே நாம் இந்தக்காரணங்களினால் இப்பொழுது இன்பமாக இருந்தால் அவை மாற்றமடையும் பொழுது துன்பபடுவது உறுதி. எனவே நாம் அனுபவிக்கும் இன்பம், துன்பத்துடன் கலந்தது என்றும் குறைவில்லாத நிரந்தர இன்பமல்ல என்றும் நாம் உணர்ந்து கொள்ளுவது அவசியம்.
துன்பத்திற்கு காரணம் வெளி உலகில் இருந்தாலும் துன்பம் என்பது நமது மனதினுள்தான் இருக்கிறது, ஒருவர் நம்மை தகாத வார்த்தைகளால் தூற்றினால் அது துன்பத்திற்கு காரணமாக அமையலாம். ஆனால் துன்பபடுவதும் படாததும் நம் கையில்தான் இருக்கிறது. புத்தர் இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சிறிதும் துன்பபடாமல் அமைதியாக இருந்தார். தமக்கு ஒருவர் உணவு கொடுக்கும்பொழுது அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த உணவு கொடுப்பவரை சேர்ந்தது. அதே போல் மற்றவர் திட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாம் துன்பபடவேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை அவர் விளக்கினார்.
உலகில் உள்ள யாருக்கும், எந்த பொருளுக்கும், எந்த சூழ்நிலைக்கும் நம்மை துன்பபடுத்தும் சக்தி கிடையாது. நாம் துன்பபட்டால் அதற்கு ஒரே காரணம் நம் மனம் மட்டும்தான். நமது மனம் பண்பட்டு இருந்தால் நம்மால் எப்பொழுதும் இன்பமாக இருக்க முடியும்.
வேதம் முதலில் நாம் துன்பத்தில் மூழ்கியுள்ளோமென்று நமக்கு அறிவிக்கிறது. பின் துன்பத்திற்கு காரணமான வெளியுலகை மாற்ற முடியாது என்கிறது. வெளியுலகை மாற்றாமலேயே நம் மனதை பண்படுத்திக்கொள்வதன் மூலம் துன்பத்தை அகற்றி இன்பமாக வாழ வழி பல கூறுகிறது.
துன்பத்தை முற்றாக தவிர்க்கும் வழி
மனிதர்களின் அறிவு ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடுகிறது. வேதம் அனைத்து தரப்பினருக்கும் துன்பத்தை முற்றாக தவிர்க்கும் உபாயங்களையும் வழிமுறைகளையும் தருகிறது. வேதத்தின் முதல் பகுதியான கர்மகாண்டம் ஏன் என்று கேள்விகேட்டு அதன் பதில்களை முற்றாக ஆராய்ந்து உண்மையை அறியும் அறிவுக் கூர்மையற்றவர்கள் செய்யவேண்டிய காரியங்களை பட்டியலிட்டு கொடுக்கிறது. வேதத்தின் இறுதி பாகமான வேதாந்தம் அறிவுக்கூர்மையுடன் மனப்பக்குவமடைந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை முறைப்படி தருகிறது. ஆக உலகில் உள்ள அனைத்து மக்களும் இன்பமாக வாழ வேதம் வழி காண்பிக்கிறது.
ஒன்று நாம் எந்த கேள்வியையும் கேட்காமல் அனைத்துக்கும் காரணம் இறைவன் என்று நம்பி கர்மகாண்டத்தில் நமக்கு விதிக்கப்பட்ட செயல்களை செய்து எந்த கவலையும் இல்லாமல் வாழலாம். அல்லது கடவுள் யார், எங்கிருக்கிறார், எப்படி இந்த உலகத்தை படைத்தார், நம் வாழ்வின் குறிக்கோள் என்ன என்பது போன்ற கேள்விகளை கேட்டு நான் பரமன் என்று அறிந்து கொண்டு குறைவில்லாத இன்பத்துடனும் தடையில்லாத நிம்மதியுடனும் வாழலாம்.
அறிவியல் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைதரம் ஆகியவை நமக்கு நிரந்தர இன்பத்தை தராது என்று நமக்கு உறுதியாக தெரிந்தால்தான் வேதத்தின் அவசியம் நமக்கு தெரிய வரும். வேதம் நமது அறிவின் முதிர்ச்சிக்கேற்ற வழி வகைகளை தருகிறது. அவற்றை ஒரு குருவின் துணையுடன் கேட்டு அதன் படி நடந்து நமது துன்பத்தை முற்றாக தவிர்க்கலாம்.
முக்தியடைந்த நிலை
உலகில் உள்ள யாருக்கும், எந்த பொருளுக்கும், எந்த சூழ்நிலைக்கும் நமக்கு இன்பத்தை கொடுக்கும் சக்தியும் கிடையாது.நாம் இன்பமாக இருப்பதன் ஒரே காரணம் ஆனந்தம் நமது இயல்பு நிலை என்பதால் மட்டுமே. உலகம் நமது இன்பத்திற்கு காரணம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது அறியாமை.
நம்மால் நம்முடைய முகத்தை நேரடியாக பார்க்க முடியாது. ஒரு கண்ணாடியின் துணைகொண்டு அதில்தான் நம் முகத்தின் பிரதிபலிப்பை பார்க்க முடியும். அதே போல் நமது இயல்பான ஆனந்தத்தை நேரடியாக அனுபவிக்கமுடியாது. நமது மனது என்னும் கண்ணாடியில் தோன்றும் ஆனந்தத்தின் பிரதிபலிப்பைத்தான் நாம் இன்பம் என்று அனுபவிக்கிறோம். கண்ணாடியில் அழுக்கு இருந்தால் எப்படி பிரதிபிம்பம் சரியாக தெரியாதோ அது போல நமது மனதில் தோன்றும் கவலைகள் நமது இயல்பான ஆனந்தத்தை சரியாக பிரதிபலிப்பதில்லை. நாம் ஒரு திரைப்படம் பார்க்கும்பொழுதோ அல்லது நண்பர்களுடன் உரையாடும்பொழுதோ நம் கவலைகளை மறக்கிறோம். அப்பொழுது நமது இயல்பான ஆனந்தம் நமது மனதில் முழுநிலவு போல் பிரகாசிக்கிறது. எனவே நாம் அந்த திரைப்படம் அல்லது நமது நண்பர்கள்தான் நமது இன்பத்துக்கு காரணம் என தவறாக முடிவு செய்து விடுகிறோம்.
வேதத்தை முறையாக பயின்றால் நம் மனது மற்றும் எண்ணங்கள் பற்றிய முழு அறிவையும் பெற்று வெவ்வேறு எண்ணங்கள் மனதில் இருந்தாலும் நம் இயல்பான ஆனந்தத்தை தொடர்ந்து அனுபவிக்கும் ஆற்றல் நமக்கு கிடைக்கும். நமது முகம் தெளிவாகவும் அழககாகவும் உள்ளது என்று நமக்கு தெரிந்து விட்டால் கணணாடியில் இருக்கும் தூசியை நாம் பொருட்படுத்தப்போவதில்லை. அது போல இருமைகள் மாறி மாறி வந்தாலும் நமது வாழ்வில் இயல்பான ஆனந்தத்தை என்றும் அனுபவிக்க நாம் தெரிந்து கொள்வோம்.
முடிவுரை :
வேதம் ஒரு வழிகாட்டி புத்தகம் என்றும் நம் வாழ்வை செம்மையாக வாழ அதன் துணை அவசியம் என்றும் மூன்றாவது பாடத்தில் படித்தோம். வேதம் என்பது பல்வேறு முனிவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் தவவலிமையால் இறைவனின் வார்த்தைகளை கேட்டு தங்கள் சீடர்களுக்கு வாய்மொழியாக வழங்கினர். இவையனைத்தையும் தொகுத்து நான்கு வேதங்களாக அருளியவர் வியாசர். அது மட்டுமல்லாமல் வேதம் கூறுவது இதுதான் என்று முறையாக மேற்கூறப்பட்ட ஆறு ஆன்மீக கருத்துக்களையும் விளக்கி 555 சூத்திரங்களுடன் கூடிய பிரம்ம சூத்திரம் என்ற நூலை அவர் எழுதினார்.
வேதங்களை முறையாக தொகுக்காமல் நேரடியாக மேற்கோள் காட்டி பல்வேறு மதங்கள் வியாசர் காலத்தில் நிலவி வந்தன. அவையனைத்தும் வேதத்தையே சார்ந்து ஆனால் வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தை தீர்க்கும் முகமாக பிரம்ம சூத்திரம் எழுதப்பட்டது.
பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. வேதத்தில் கூறப்பட்ட அனைத்து தத்துவங்களின் முறையான விளக்கத்தை கொடுத்து இந்த நான்காம் பகுதியுடன் முதல் அத்தியாயம் முற்று பெறுகிறது.
பயிற்சிக்காக :
1. பரமனை அறியாமல் இன்பத்தை அனுபவிப்பதில் என்ன தவறு?
2. வெளி உலகத்தால் நம்மை மனதளவில் துன்பமடைய செய்ய முடியுமா?
3. வேதம் ஏன் இரண்டு பாகங்களை கொண்டிருக்கிறது?
4. உலகம் நமக்கு இன்பமளிக்கிறது என்று நாம் நினைப்பதில் என்ன தவறு?
5. வேதத்தை முறையாக பயிலுவது நாம் எப்பொழுதும் இன்பமாக இருக்க எப்படி உதவும்?
சுயசிந்தனைக்காக :
1. உடலில் அடிபட்டாலோ, நோய் ஏற்பட்டாலோ ஏற்படும் வருத்தை வேதம் படிப்பதால் எப்படி தவிர்க்க முடியும்?