Thursday, April 1, 2010

பாடம் 044: இருமை முக்தியை தராது (பிரம்ம சூத்திரம் 2.1.13)


இந்த உலகில் உள்ள எந்த பொருளும் எனக்கு அன்னியமானவை அல்ல. பார்க்கப்படும் அனைத்து பொருள்களும் பார்க்கும் என் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ள தோற்றங்கள். உண்மையில் இருப்பது பரமனாகிய நான் மட்டும்தான். வேதத்தில் கூறப்பட்ட இந்த கருத்துக்கள் உண்மையாக இல்லாமால் நான் வேறு நான் அனுபவிக்கும் பொருள்கள் வேறு என்பதுதான் உண்மையென்றால் நமக்கு முக்தி கிடைக்கவே கிடைக்காது என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

இன்பமாயிருக்க எனக்கு அது வேண்டும்

பொம்மை வேண்டும் என்று அடம் பிடித்து அது கையில் கிடைத்ததும் மனதில் சந்தோஷம் ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் பொம்மை கையிலிருக்கும்போதே அந்த சந்தோஷம் கொஞ்ச கொஞ்சமாய் குறைந்து கடைசியில் காணாமல் போய்விட்டது. சின்ன வயதில் இன்பமாயிருக்க எனக்கு இது வேண்டும் அது வேண்டுமென்று தொடர்ந்து எதையாவது தேடி அலைந்து கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அதே தவறை நம்மில் பல பேர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

நான் வேறு நான் பார்க்கும் பொருள்கள் வேறு என்பது உண்மையாயிருந்தால் நாம் இன்பமாயிருக்க பொருள்களை எப்பொழுதும் தொடர்ந்து தேடிக்கொண்டே ருப்போம்.

மன்னரும் மந்திரியும்

நிறைய பணம் செலவு செய்து தேர்தலில் வென்று மந்திரியான பின் மனம் பொதுநலத்திற்கும் சுயநலத்திற்குமிடையே தொடர்ந்து ஊசலாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஐந்து வருடத்திற்கு பின் மந்திரிப்பதவி தொடரும் என்று எவ்வித உத்தரவாதமும் கிடையாது. எனவே ஆற்றில் ஓடும் மீன் தண்ணீர் குடிப்பதுபோல பொதுவாழ்வில் செயல்படும் அரசியல்வாதிகள் தனி வாழ்வை வளப்படுத்திக்கொள்ள மக்களின் பணத்தை தொடர்ந்து கையாடுவார்கள்.

அவர்களுக்கும் இவ்வளவு பொருள் இருந்தால் போதும் என்று தோன்றாது. ஏனெனில் பொருள்களுக்கு ஒரு எல்லையிருப்பதில்லை. எவ்வளவு பொருள் இருந்தாலும் நிறைவு என்பது யாருக்கும் ஏற்படாது.

ஆனால் ஒரு நாட்டின் மன்னரின் நிலை வேறு. நாட்டில் உள்ள அனைவரது சொத்துக்களுக்கும் அவருடையவைதான். பொதுநலத்திற்கும் சுயநலத்துக்கும் மன்னரை பொறுத்தவரை எவ்வித பாகுபாடும் இல்லை. நாட்டில் உள்ள எந்த பொருளும் அவருக்கு அந்நியமானவை அல்ல. எனவே எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று அலைபாயும் அவசியம் அவருக்கில்லை.

அது போல உலகில் உள்ள அனைத்து பொருள்களும் என்னுடைவைதான் என்ற அறிவு நமக்கு ஏற்பட்டால் நாமும் பொருள்களை நாடி அலைய மாட்டோம்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

மனிதமனம் எப்பொழுதும் முழுமையை தேடியலைந்து கொண்டிருக்கும். எவ்வளவு இருந்தாலும் இன்னும் வேண்டுமென்ற உணர்வு நம்மை விட்டு விலகாது. எவ்வளவு பொருள்களை உள்ளே போட்டாலும் ஓட்டை பானையை நிரப்ப முடியாது. அது போல செயல்களை செய்து பொருளை ஈட்டி மனதின் தேவைகளை நிறைவேற்றிவிடலாம் என்பது முடியாத காரியம்.

வயிற்றுப்பசியை உணவு பற்றிய அறிவால் நீக்கமுடியாது. அதே போல் மனதின் அறிவுப்பசியை உலகத்து பொருள்களால் தீர்க்க முடியாது. அடுத்த இலையில் சாப்பிடுபவருக்கு மட்டும் தோசை பெரியதாகவும் முறுகலாகவும் இருக்கிறது. எனக்கு அது போல கிடைக்கவில்லையே என்ற மனதின் ஏக்கத்தை பொருள்களால் தீர்க்கவே முடியாது. மனதை நிறைக்க அறிவினால் மட்டுமே முடியும்.

என் தேவைகளைவிட என்னிடமிருப்பவை அதிகமானவை என்று எவனுக்கு தெரிந்திருக்கிறதோ அவன்தான் உண்மையில் பணக்காரன். நம் உடலும் மனமுமே நமக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்துக்கள். இது அறிந்து கொள்ள வேண்டியது. அடைய வேண்டியவையல்ல.

முடிவுரை :

நானும் உலகத்திலுள்ள அனைத்து பொருள்களும் ஒன்று என்ற ஞானம் மட்டுமே நம் அறிவுப்பசியை தீர்த்து நான் இன்பமாக இருக்க எனக்கு எந்த பொருள்களும் தேவையில்லை என்ற உண்மையை நமக்கு உணர்த்தி நம்மை முக்தி அடைய செய்யும்.

இந்த ஒற்றுமையை புரிந்து கொள்ளாமல் நான் வேறு பொருள்கள் வேறு என்ற இருமை அல்லது பன்மையை உண்மையென நினைத்துகொண்டிருந்தால் நாம் இடைவிடாமல் பொருள்களை தனதாக்கி கொண்டு, அவற்றை காப்பாற்றுவதிலும் பெருக்கிக் கொள்வதிலும் நமது நேரத்தை செலவுசெய்து கொண்டிருப்போம்.

பொருள் வேண்டும் என்று நினைப்பது மனது. பொருளை அடைந்த பின்னும் திருப்தியடையாதது மனது. இதில் பொருள்களின் மேல் எந்த குற்றமும் இல்லை. சரியான அறிவை கொடுத்து மனதை நாம் திருப்திபடுத்த வேண்டும். பொருள்களின் மீதுள்ள கவனத்தை மனதின் மேல் செலுத்தினால் மட்டுமே நம்மால் முக்தியடைய முடியும்.

பயிற்சிக்காக :

1. பொருள்களுக்கும் நமக்கும் உள்ள உறவை பற்றி வேதம் கூறும் கருத்துக்கள் என்னென்ன?

2. மன்னருக்கும் மந்திரிக்கும் உள்ள வேறுபாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் கருத்து என்ன?

3. மனதின் தேவைகளை ஏன் உலகப்பொருள்கள் தீர்க்க முடியாது?

சுயசிந்தனைக்காக :

1. போதுமென்ற மனது வேண்டும் என்பதை பிரபலப்படுத்துவது சோம்பேறித்தனத்தை ஊக்குவிப்பதாகாதா ?