Friday, April 9, 2010

பாடம் 049: கருவிகளற்ற சர்வசக்திமான் (பிரம்ம சூத்திரம் 2.1.30-31)

எவ்வித கருவி கரணங்களற்ற பரமன் எவ்வாறு இவ்வுலகை படைக்க முடியும் என்று சந்தேகிப்பவர்களுக்கு கைகளில்லாமல் அழுத்தி பிடிக்கவல்லவன், கால்கள் இல்லாமல் விரைந்து செல்ல வல்லவன், கண்களில்லாமல் கூர்ந்து பார்க்கும் சக்தி உள்ளவன், காதுகளில்லாமல் தெளிவாக கேட்கும் சக்தியுள்ளவன் என்று பரமனை பற்றி விவரிக்கும் உபநிஷத் மந்திரத்தை மேற்கோள் காட்டி இப்பாடம் விளக்கமளிக்கிறது.

மிகச்சிறந்த மாஜிக் நிபுணன்

நம் கண் முன்னாலேயே இருக்கும் பொருளை இல்லை என்றும் இல்லாத பொருளை கொண்டுவந்தும் தந்திரகாட்சிகள் செய்யும் மாஜிக் நிபுணனை நாம் வியப்புடன் பார்க்கிறோம். அவன் கை, கால் என்று எவ்வித கருவி கரணங்களையும் உபயோகப்படுத்தாமல் நம் கைக்குள் இருக்கி பிடித்து வைத்திருந்த நாணயத்தை பிடுங்கி நம் நண்பரின் சட்டைப்பைக்குள் போட்டுவிடும் அதிசயத்தை பார்க்கிறோம்.

ஒரு சாதாரண மாஜிக் நிபுணன் செய்வது போல் ஏன் பரமன் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் இவ்வுலகை படைத்திருக்க முடியாது என்று கேட்டால் நாம் மாஜிக் நிபுணன் உண்மையில் ஒன்றும் செய்வதில்லை, இல்லாத பொருளை இருப்பதாக நம்மை நம்பவைக்கிறான் என்று பதில் சொல்வோம்.

பரமன் செய்வதும் அதே போல்தான். பரமன் உண்மையில் இவ்வுலகை படைக்கவில்லை. இல்லாத உலகை இருப்பதாக நாம் நம் அறியாமையால் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.

உலகம் மாயை என்று புரிந்து விட்டால் பரமன் எப்படி இவ்வுலகை உருவாக்கினான் என்ற கேள்வி மனதில் தோன்றாது. பரமனை ஒரு மிகச்சிறந்த மாஜிக் நிபுணன் என்று போற்றுவோம்.

உலகை உண்மை என்று எண்ணினால் பரமன் எவ்வித கருவி கரணங்களும் இல்லாமல் இவ்வுலகை படைக்கவல்ல சர்வசக்திமான் என்பதை ஒப்புக்கொள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை.

எல்லாம் அவன் செயல்

பரமனுக்கு கண் கிடையாது. ஆனாலும் அவனால் பார்க்க முடியும். எப்படியெனில் இவ்வுலகில் வாழும் எண்ணிலடங்கா உயிரினங்களின் கண்கள் மூலம் பார்ப்பது பரமனே.
நாம் ஒரு பொருளை தொடுகிறோம் என்பதை உணர்வது யார்? இந்த கேள்விக்கு 'என் விரல்' அல்லது 'என் கை' என்று அறிவு கூர்மையற்றவர்கள் பதில் சொல்வார்கள். பெரும்பாலோர் 'என் மனது' என்பார்கள். மனது என்பது யாது? அதில் உணர்வு என்பது எப்படி வருகிறது என்பதை தகுந்த ஆசிரியரின் துணையுடன் தீவிரமாக விசாரித்தால் உண்மையில் பொருள்களை தொடுவது பரமன் என்று விளங்கும்.

நாம் செய்யும் அனைத்து செயல்களும் பரமனின் செயலே. பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, முகர்வது போன்ற அனைத்து காரியங்களையும் உண்மையில் செய்வது தனக்கென்று கண், காது, நாக்கு, மூக்கு போன்ற எவ்வித கருவி கரணங்களற்ற பரமன்தான்.

எண்ணிலா அதிசயங்கள் செய்து காண்பிப்பவன் பரமன்.

எவ்வித கரணங்களுமில்லாமல் இருக்கும் பரமன் சர்வசக்திமான் என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? இது மிக எளிது. நம் கண்ணில் படும் எந்த பொருளையும் இது எப்படி வந்தது என்பதை தீர ஆராய்ந்தால் பரமனின் சக்தியை புரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு கைபேசியை (mobile phone) எடுத்துக்கொள்வோம். எவ்வளவு அற்புதமான பொருள்! உலகமுழுவதையும் நம் கைக்குள் கொண்டுவந்து விடுகிறது. உலகத்தின் மறுபுறத்தில் இருப்பவருடன் எதிரில் அமர்ந்திருப்பவருடன் பேசுவதைப்போல பேசமுடிகிறது. இத்தகைய அற்புதத்தை நிகழ்த்தியது யார்? அலக்ஸாண்டர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) தான் ஆதி காரணமா? அவர் எப்படி தொலைபேசியை கண்டுபிடித்தார்?

தொடர்ந்து இது போல கேள்விகள் கேட்டுக்கொண்டே போனால் கைபேசி என்ற அதிசயத்தை நிகழ்த்தியது முதன் முதலில் கல், குச்சி போன்றவற்றை உபகரணங்களாக பயன்படுத்திய கற்காலத்தை சேர்ந்த ஆதி மனிதன் என்ற பதிலில் கூட நாம் திருப்தியடைய மாட்டோம்.

உலகத்தை உருவாக்கியது யார்? அதில் உயிரினங்கள் எப்படி தோன்றின? என்பது போன்ற கேள்விகள் கேட்டு கடைசியில் பரமன் என்ற பதில் கிடைத்தபின்தான் நமது தேடல் முடிவடையும்.

ஆக நம்மை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும், நாம் நடப்பது பார்ப்பது உள்ளிட்ட அனைத்து அதிசயங்களையும் செய்து காண்பிப்பவன் யாரோடும் சம்பந்தப்படாமல் எவ்வித கரணங்களும் இல்லாமல் எவ்வித செயல்களும் செய்யாத பரமன் என்பதை நாம் அறிந்துகொள்வதே நமக்கு முக்தி.

முடிவுரை :

இது இப்படி நடக்க நான் மட்டுமே காரணம் என்று யாரும் எப்பொழுதும் கூறமுடியாது. முழுமரத்தின் மௌனச்சம்மதமின்றி எந்த ஒரு இலையும் பழுப்பாவதில்லை. உலகில் உள்ள அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. எனவே இந்த பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இன்று வரை நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரே ஒருவன்தான் காரணம். அவன்தான் பரமன்.

அந்த பரமனுக்கு கருவி கரணங்கள் ஏதேனும் இருந்தால் அவை எங்கிருந்து வந்தன, அவற்றை உருவாக்கியது யார் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்காது. எனவே இரண்டற்ற பரமன்தான் இவ்வுலகை உருவாக்கி தொடர்ந்து இயக்கி வரும் சர்வசக்திமான் என்பதை புரிந்து கொள்பவர்கள் எவ்வித மனக்கவலையுமின்றி இன்பமாக வாழலாம். அவ்வாறின்றி பரமனை மறுத்து நான்தான் அல்லது என் பெற்றோர் போன்ற மற்றவர்கள்தான் என் வாழ்க்கையின் இந்த நிலமைக்கு காரணம் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து வருத்தப்படுவதை தவிர்க்க முடியாது.

பயிற்சிக்காக :

1. பரமன் எவ்வித கருவிகளுமில்லாமல் எவ்வாறு இவ்வுலகை படைத்தான்?

2. அதிசயங்கள் என்று இப்பாடத்தில் குறிப்பிடபடுபவை யாவை?

சுயசிந்தனைக்காக :

1. நம் கண்கள் மூலம் பார்ப்பது பரமனென்றால் நம் துன்பங்களை அனுபவிப்பதும் பரமன்தானே?

2. நான்தான் எல்லாம் என்று நினைப்பவர்கள் முக்தியடைய முடியாதா?