Monday, April 19, 2010

பாடம் 052: படைப்பிற்கு கடவுள் அவசியம் (பிரம்ம சூத்திரம் 2.1.37)

இறைவன் இருக்கின்றானா என்ற மனிதனின் முதல் கேள்விக்கும் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் என்ற இரண்டாம் கேள்விக்கும் இந்த பாடம் விடை கொடுக்கிறது. மேலும் எவ்வித செயலிலும் ஈடுபடாத பரமன் எவ்வாறு இந்த உலகத்தை படைக்க முடியும் என்ற சந்தேகத்தையும் இந்த பாடம் நீக்குகிறது.

இறைவனை பார்க்க முடியுமா?

இறைவன் யார், எப்படியிருப்பான், அவன் தொழில் என்ன என்பது போன்ற முழு விவரங்களை அறிந்து கொள்ளாமல் இறைவனை பார்க்க முடியுமா என்று கேள்வி கேட்பதில் அர்த்தமேயில்லை.

கழுத்தில் பாம்புடன் தலையில் ஜடாமுடியுடன் உடலெங்கும் விபூதியுடன் யாரேனும் நம் வாசல் கதவை தட்டினால் அவனை சிவன் என்று வணங்க மாட்டோம். ஏதோ பிச்சைக்காரனென்று விரட்டிவிடுவோம். ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால் உண்மையான சிவன் என்றால் ஏன் கதவை தட்டிக்கொண்டு வெளியே நிற்கவேண்டும், பூட்டிய கதவை திறக்காமலேயே அதை கடந்து உள்ளே வரவேண்டியதுதானே என்று புத்திசாலித்தனமாக பதில் சொல்வோம்.

ஒருவேளை வாசல் கதவை தட்டாமல் நேராக அவன் உள்ளே வந்து விட்டால் திருடன் திருடன் என்று கூப்பாடு போட்டு ஊரை கூட்டுவோமே தவிர காலில் விழுந்து நமஸ்கரிக்க மாட்டோம். ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால் தினமும் பூஜை செய்யும் எனது மனைவிக்கு காட்சி கொடுக்காமல், 'இறைவனே இல்லை' என்று சொல்லும் என் முன்னே சிவன் வருவான் என்பதை எப்படி நம்புவது என்போம்.

இதுபோல் ஏதாவது காரணம் சொல்லி இறைவன் உண்மையிலேயே நம் கண்முன் தோன்றினாலும் அதை மறுத்துவிட்டு தொடர்ந்து இறைவன் இருக்கின்றானா என்று கேள்விகேட்டு கொண்டிருப்போம். இறைவனை பற்றிய அறியாமையே இதற்கு காரணம்.  

கணவன் காலை அலுவலகத்திற்கு செல்லும்பொழுது வீட்டிலிருக்கும் மனைவியிடம் 'மதியம் முருகன் வருவான். அவனிடம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடு' என்று சொன்னவுடன் அவள் சரி என்று பதில் கூறினால் அவளுக்கு முருகன் என்பது யார் என்றும் அவனுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் என்று அர்த்தம். இல்லாவிட்டால் அவள் முருகன் என்பது யார், அவன் எப்படி இருப்பான், அவன் வந்து 'நான் முருகன்' என்று சொன்னால் எப்படி நம்புவது இது போல பல கேள்விகள் கேட்டிருக்க வேண்டும்.

அது போல இறைவனை என்னால் பார்க்க முடியுமா என்று கேட்பதற்கு முன் இறைவன் எப்படி இருப்பான், அவன் என் எதிரில் வந்து 'நான்தான் இறைவன்' என்றால் எப்படி நம்புவது என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான பதிலை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

இறைவனை பற்றிய பூரண அறிவை அடைந்தபின் இறைவனை பார்க்க முடியுமா என்ற கேள்வியே நம் மனதில் எழாது.

இறைவனை பார்க்காமல் இருக்க முடியுமா?

நம் யாராலும் இறைவனை பார்க்காமல் இருக்க முடியாது. இறைவன் யார் என்று தெரிந்து 
கொண்டால் நாம் பார்ப்பவை எல்லாம் இறைவன் என்று புரிந்து விடும்.

பரமன் எதனுடனும் சம்பந்தபடமால் எவ்வித செயலையும் செய்யாமல் எவ்வித மாற்றமும் அடையாமல் இருப்பவன். உணர்வையும் ஆனந்தத்தையும் இயல்பாக கொண்டு என்றும் இருக்கும் பரமனைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்று வேதம் சொல்வதால் பரமன்தான் இவ்வுலகத்துக்கு காரணமாயிருக்க வேண்டும்.

பரமனின் மாயா சக்தி இந்த உலகமாக தோற்றமளிக்கிறது. தோற்றம், தொடர்ந்த மாற்றம், மறைவு மறுபடியும் தோற்றம் எனும் சுழற்சியின் ஆதாரம் பரமன். இச்செயல்களை பரமன் செய்யவில்லை. பரமனை ஆதாரமாக கொண்டு மாயை செய்கிறது. இந்த மாயாசக்தியுடன் கூடிய பரமனைத்தான் நாம் இறைவன் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இறைவன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கிறான். நம் உடல் மனம் உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் வடிவம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதன் பொருள் சமையற்காரர் இல்லாமல் கோதுமை தானாக சப்பாத்தியாக மாறாது என்பது போன்றதல்ல. கோதுமை, அடுப்பு, சமையற்காரர், அணு இவையனைத்தின் வடிவில் இருப்பது இறைவன் என்பதுதான் சரியான பொருள்.

இறைவன் என்று ஒரு தனிப்பட்டவன் எங்கும் இல்லை. இறைவனைத்தவிர வேறு ஒன்றுமில்லை. இதை புரிந்து கொண்டால் இறைவனை பார்க்க முடியுமா என்ற கேள்வி மனதில் எழாது.

முடிவுரை :

நம் கண் முன்னே இருக்கும் உலகம்தான் இறைவன் இருக்கிறான் என்பதற்கு சாட்சி. இருப்பதை வைத்து இல்லாததை அறியும் திறன் படைத்த வெகு சில அறிஞர்கள் மட்டுமே இறைவனை நேரடியாக பார்க்கும் சக்தி வாய்ந்தவர்கள்.

உணர்வற்ற பொருள்கள் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் உள்ளது என்றால் கடவுள் கிடையாது என்ற வாதத்தில் உண்மையிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்வு மற்றும் ஜடப்பொருள்களின் கலவையாக காணப்படும் இவ்வுலகத்தை காண்கையில் இது தானாக உருவாகியிருக்க முடியாது என்பதும் ஜடப்பொருள்கள் உணர்வை உண்டாக்கியிருக்க முடியாது என்பதும் எல்லோருக்கும் எளிதில் விளங்கிவிடாது. பரமன் என்ற உணர்வும் மாயாசக்தி என்ற ஜடப்பொருளும் சேர்ந்த சேர்க்கைதான் இறைவன் என்று அறிந்து கொள்பவர்களுக்கு கடவுளைத்தவிர வேறு ஒன்றும் கண்ணில் தென்படாது.  வர்களால் மட்டுமே என்றும் இன்பம் என்ற வாழ்வின் முக்தி நிலையை அடைய முடியும்,

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்கள் சரியானவை என்றும் அவற்றில் எவ்வித குறைபாடோ முரண்பாடோ இல்லை என்றும் முறையான விளக்கங்களை கொடுத்து இந்த இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. உலகத்தை படைத்தது பரமனா இறைவனா?

2. இறைவனை பார்க்க முடியுமா?

3. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. உதாரணத்துடன் விளக்குக.

சுயசிந்தனைக்காக :

1. ஜடப்பொருள்களிலிருந்து தான் உணர்வு தோன்றியது என்பது உண்மையாக இருக்குமானால் அதன் விளைவுகள் என்னென்ன?