Tuesday, April 13, 2010

பாடம் 050: பரமனின் லீலை (பிரம்ம சூத்திரம் 2.1.32-33)

பாடம் 050: பரமனின் லீலை                               பாடல்:166 -167 (II.1.32-33)

வேதத்தில் விளக்கப்பட்டது போல் பரமன் முழுமையானவனாகவும் தன்னிறைவுடன் எப்பொழுதும் முழுதிருப்தியுடனும் இருப்பவனென்றால் இவ்வுலகத்தை உருவாக்க காரணம் என்ன? பரமனுக்கு எவ்வித ஆசையும் இல்லையெனில் கட்டுகோப்புடன் முறையாக இயங்கும் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை படைக்கவேண்டிய அவசியம் என்ன? பரமன் ஆசை உள்ளவனென்றால் அவன் எப்பொழுதும் நிறைவானவன் என்று கூறமுடியாது. ஆசையற்றவன் என்றால் உலகத்தை படைத்திருக்க கூடாது.

இவ்வாறான கருத்துக்களை மறுத்து பரமன்தான் இவ்வுலகை படைத்தவன் என்றும் படைப்பிற்கான காரணம் அது ஒரு விளையாட்டு என்றும் இந்த பாடம் விளக்கமளிக்கிறது.

மண்கோட்டை

மாலை வேளைகளில் கடற்கரை மணலில் கடலுக்கு அருகே சிறுவர்கள் மணல் கோட்டை கட்டுவதை பார்க்கிறோம். அலைகளிடையே ஒடியாடி ஒய்ந்த பின் அவர்கள் ஒன்றாகச்சேர்ந்து பல மாடி கட்டிடத்துடனும் நிலாவெளி முற்றத்துடனும் கூடிய மணல் கோட்டையை மதில் சுவர் அதை சுற்றி தண்ணீருடன் கூடிய அகழி போன்ற நுணுக்கமான விவரங்களுடன் நிர்மாணிப்பார்கள். உண்மையான கட்டிடத்தை கட்டும் பொறியாளர்களைப்போல் முழு ஈடுப்பாட்டுடன் வேலைசெய்து கோட்டையை கட்டி முடித்த பின், அதை அழகு செய்வதிலும் மற்றவர்கள் அதை அழித்துவிடாமல் காப்பதிலும் அலை மதில் சுவரை கலைத்து விட்டால் அதை செப்பனிடுவதிலும் நேரத்தை செலவிடுவார்கள். வீடு திரும்ப நேரமாகிவிட்டது என்று பெரியவர்கள் அவர்களை கூப்பிடும்பொழுது அவர்களாகவே அந்த மணல் கோட்டையின் மீது நர்த்தனமாடி அது இருந்த இடம் தெரியாமல் சின்னாபின்னமாக்கிவிடுவார்கள்.

மணல் கோட்டை என்பது எவ்வித உபயோகமும் இல்லாத ஒன்று என்று அவர்களுக்கு தெரியும். பின் ஏன் அதை கட்டினீர்கள் என்று கேட்டால் 'சும்மா' என்று பதில் கிடைக்கும். கோட்டையை உருவாக்கும்பொழுதும் காக்கும்பொழுதும் அழிக்கும்பொழுதும் அவர்களின் இன்பம் மாறுவதில்லை. மணல் கோட்டையை கட்டினால்தான் அவர்கள் இன்பம் அடைவார்கள் என்பதில்லை. இன்பமாக இருப்பதால்தான் அவர்கள் மணலில் கோட்டை கட்டி விளையாடுகிறார்கள்.

அது போல பரமன் ஆனந்த மயமானவன். அவன் ஆனந்தமாக இருப்பதால் ஒரு பொழுதுபோக்காக இவ்வுலகை படைத்துள்ளான். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றிலுமே சிறுவர்களைப்போல் சீரான ஆனந்ததுடன் பரமன் ஈடுபடுகிறான்.

சிறுவர்கள் காலை எழுந்ததும் இன்று கடற்கரைக்கு சென்று மணல் கோட்டை கட்ட வேண்டும் என்ற தீர்மானத்துடனோ தீவிர குறிக்கோளுடனோ நாளை கழிப்பதில்லை. ஏதோ கடலில் ஆடியபின் மணல் கோட்டை கட்ட தோன்றியது, கட்டினார்கள். பரமனும் படைத்தால்தான் ஜென்ம சாபல்யம் ஏற்படும் என்ற தீவிரத்துடன் இந்த உலகை உருவாக்கவில்லை. ஏதோ நான் பலவாக ஆவேனாக என்ற சங்கல்பம் ஏற்பட்டவுடன் இந்த பிரபஞ்சம் தோன்றியது. இது பரமனின் விளையாட்டு.

விளையாட்டில் வேறுபாடு

படைப்பு பரமனின் ஒரு விளையாட்டு என்பதை நாம் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

கிரிகெட், கால்பந்து போன்று வளர்ந்தவர்கள் ஆடும் விளையாட்டுகளில் பணம், புகழ் என்று பல குறிக்கோளிருக்கும். வெற்றி பெற வேண்டுமென்றோ நன்றாக ஆட வேண்டுமென்றோ ஒரு ஆசை இருக்கும். பரமனின் விளையாட்டு இவை போல இல்லை.

எப்பொழுதும் இன்பமாக இருக்கும் ஒன்றுமறியா பாலகர்கள் எவ்வித குறிக்கோளோ ஆசையோ இல்லாமல் மணல் கோட்டை கட்டுவதை ஒரு விளையாட்டு என்பதைவிட ஒரு பொழுதுபோக்கு செயல் எனலாம். பரமனின் இந்த ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் என்பது இது போன்ற ஒரு விளையாட்டு.

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.

அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள துடிப்பது மெத்த படித்தவர்களின் இயல்பான குணம். எந்த ஒரு செயலை செய்ய வேண்டுமானாலும் அவர்கள் ஏன் இதை செய்ய வேண்டும், இதனால் என்ன பயன், இதை செய்யாவிட்டால் என்னவாகும் என்பது போன்ற கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டவர்கள். இப்படிபட்டவர்களுக்கு இவ்வுலகம் பெரிய புதிராகவே இருந்து வருகிறது.

பல்வேறு நட்சத்திரங்களும் கிரகங்களும் உள்ளடக்கிய பிரம்மாண்டமான இந்த பிரபஞ்சம் ஏன் படைக்கப்பட்டது, இதன் நோக்கம் என்ன, மனிதன்தான் இந்த படைப்பின் இறுதி நோக்கமா இல்லை நம்மைவிட பலமடங்கு உயர்ந்த அறிவுஜீவிகளை (Gnostic beings) உருவாக்க இருக்கும் பரிணாம வளர்ச்சியில் மனிதன் ஒரு படிக்கட்டா... இது போன்ற பல கேள்விகள் அவர்கள் மனதை தொடர்ந்து ஆட்கொண்டு வருகின்றன.

அவர்களிடம் பரமனின் விளையாட்டுதான் இந்த படைப்பு என்ற பதிலை கூறினால் அவர்கள் திகைக்கிறார்கள். மணலில் வீடு கட்டுவதை அறியாமை அல்லது பொழுதை வீணடித்தல் என்று கருதும் பெரியவர்களின் மனதை மாற்ற முடியாது. உண்மையான வீட்டை கட்டுவதை விட மணல் வீடு கட்டும்பொழுதுதான் நாம் இன்பமாக இருந்தோம் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் விளையாட்டாக நேரத்தை செலவழிப்பது வீண் என்ற அவர்களது முரட்டு பிடிவாதத்தை தகர்ப்பது கடினம்.

பரமனின் விளையாட்டுதான் இவ்வுலகமென்றும் இன்பமாக இருப்பதன்றி வேறு ஒரு குறிக்கோளும் நம் வாழ்வில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் நாம் எப்பொழுது தெரிந்து கொள்கிறோமோ அப்பொழுது நாம் முக்தியடைவோம். அது வரை முக்தி என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வரும்.

முடிவுரை :

தீராத விளையாட்டு பிள்ளை பரமன். ஆக்கல், காத்தல், அழித்தல் என்பவை மூன்று வெவ்வேறான செயல்களல்ல. நேற்று, இன்று, நாளை என்பது நமது கற்பனையே. இருப்பது இந்த ஒரு நொடிதான். சோப்பு நுரையில் ஊது குழல் கொண்டு ஊதினால் உண்டாகும் நீர் குமிழி உருவாவதிலிருந்து மறையும் வரை தொடர்ந்து நிகழும் ஒரே நிகழ்வு. அது போல ஆக்கல், காத்தல், அழித்தல் என்பது ஒரே நிகழ்வு. நீர்குமிழியை ஊதி உருவாக்கி அழிக்கும் விளையாட்டுபோல பரமனின் லீலைதான் இந்த உலகம்.

நான் ஒரு விளையாட்டு பொம்மையா என்று அறியாமையில் புலம்பாமல் பரமன் யாரென்பதை அறிந்து கொண்டு தீராத விளையாட்டுப்பிள்ளையாக நம்மை மாற்றிக்கொள்வதே வேதம் பயில்வதின் ஒரே குறிக்கோள்.

வேதத்தை மறுத்து படைப்பிற்கு விளையாட்டு என்பதைத்தவிர மற்ற காரணங்களை கற்பித்து பரமன் நிறைவில்லாதவன் என்று நிரூபிப்பதில் ஈடுபட்டால் தொடர்ந்து துன்பபடுவதை தவிர்க்க முடியாது.

பயிற்சிக்காக :

1. பரமன் இந்த படைப்பிற்கு காரணம் என்பதில் என்ன முரண்பாடு சுட்டிக்காட்ட படுகிறது?

2. ஏன் என்ற கேள்வி கேட்பது தவறா?

சுயசிந்தனைக்காக :

1. சிறுவர்கள் எப்பொழுதும் இன்பமாக இருப்பவர்கள் என்று இந்த பாடத்தில் குறிப்பிடப்படுவது சரியா?

2. மண்கோட்டை கட்டுவதற்கும் இந்த உலகத்தை உருவாக்குவதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.

3. அறிவுஜீவிகளை (Gnostic beings) பற்றிய அரவிந்தரின் கருத்துக்களை அறிந்து கொள்க.