Wednesday, April 7, 2010

பாடம் 048: பாகங்கள் இல்லாத பன்மை (பிரம்ம சூத்திரம் 2.1.26-29)

பரமன் உலகமாக காட்சியளிக்கிறானென்றால் உலகத்தைவிட்டு பரமன் தனித்து இருக்க முடியாது. உலகம் பரமனின் ஒரு பாகம் என்றால் பரமன் பாகங்களுடன் கூடியவனாக இருக்க வேண்டும். பரமன் பாகங்களற்றவன் என்றும் அதே நேரத்தில் உலகம் அழிந்தாலும் பரமன் அழிவதில்லை என்றும் வேதம் கூறுவது அறிவுக்கும் தர்க்கத்திற்கும் பொருந்தவில்லை என்ற கருத்துக்கு இந்த பாடம் விளக்கம் அளிக்கிறது.

எதற்கும் பாகங்கள் இல்லை

பரமனுக்கு மட்டுமல்ல. இந்த பிரபஞ்சத்திலிருக்கும் எந்த பொருளுக்கும் பாகங்கள் இல்லை. பாகம் என்பது எதையும் கூறுபோட்டு ஆராயும் அறிவியலின் அடிப்படையில் தோன்றிய கற்பனை. உண்மையில் எதற்கும் பாகங்களே கிடையாது.

உதாரணமாக மரம் என்ற ஒன்றை எடுத்துக்கொள்வோம். கிளை, இலை, பூ, காய், வேர் என்று பல பாகங்கள் மரத்துக்கு இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். இலை மரமா என்று யாரேனும் கேட்டால் இல்லை என்று தயங்காமல் பதில் சொல்வோம். உடனே அவர் மரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் பிய்த்து எறிந்து விட்டு பூ, காய், கனி போன்ற அனைத்து பாகங்களுக்கும் அதேகதியை அளிக்கிறார். எஞ்சியிருக்கும் மரத்தின் கிளையை காண்பித்து இது மரமா என்று கேட்டால் நாம் தயக்கத்துடன், 'இல்லை. அது மரத்தின் கிளை' என்போம். அனைத்து கிளைகளையும் வெட்டிப்போட்டபின்  நமக்கு உண்மை மெள்ள தெரிய ஆரம்பிக்கிறது.

ஒரு குறிப்பிட்ட வடிவத்தை நாம் மரம் என்ற பெயரில் வழங்கி வருகிறோம். அந்த வடிவத்தில் உள்ள பாகங்களை எடுத்து விட்டால் மரம் என்று ஒன்று எஞ்சியிருக்க போவதில்லை.

ஊமத்தம்பூவின் படம் வரைந்து அதன் பாகங்களை குறி - என்ற அறிவியல் பாட கேள்விக்கு பதிலாக பூவிலிருக்கும் அனைத்து பாகங்களையும் குறித்த பின்னர் பூ எங்கிருக்கிறது என்ற சந்தேகம் வருவதில்லை.

ஆழ்ந்து சிந்தித்தால் எலக்ட்ரான், நியூட்ரான் என்று பல பாகங்கள் உள்ளதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அணுவிலிருந்து நட்சத்திரம், கிரகங்கள் என்று பல பாகங்களிருப்பதாக கருதும் பிரபஞ்சம் வரை எதற்கும் பாகங்களில்லை என்பது புலப்படும்.

பாகங்கள் இல்லாத பரமன் நான் பலவாக ஆகுவேனாக என்ற சங்கல்பம் செய்தவுடன் இந்த பிரபஞ்சம் தோன்றியது. பன்மையாக தெரியும் பிரபஞ்சம் இரண்டற்ற பரமனே. பரமன் ஒன்று பிரபஞ்சம் மற்றொன்று என்பது தவறு. இருப்பது பரமன் மட்டுமே. பிரபஞ்சம் என்பது பன்மையாக தோற்றமளிக்கும் பரமனின் மாயை. அதில் பல வடிவங்களை கற்பித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரிட்டு அறியாமையில் ஆழ்ந்திருப்பதால் இருப்பது ஒன்றே என்ற உண்மையை நாம் உணர்வதில்லை.

அக்பரும் பீர்பாலும்

அக்பர் பீர்பாலை நாடு கடத்த உத்தரவிட்டார். “இனி என் நாட்டுக்குள் நுழைந்தால் உமக்கு சிரச்சேதம்" என்ற அக்பரின் கொடுமையான வார்த்தைகளுக்கு பீர்பால் அமைதியாக நீர் கடவுளை விட பெரியவர். ஏனெனில் கடவுளால் யாரையும் அவரது சாம்ராஜ்யத்தை விட்டு வெளியேற்ற முடியாது" என்று பதிலுரைத்தார்.

இது இந்திய நாடு என்பது நமது கற்பனை. காஷ்மீருக்கு சென்றால் அங்குள்ள மக்கள் "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?” என்று கேட்கும்பொழுது நமது கற்பனையை நமது நாட்டில் உள்ள மக்களே ஒத்துக்கொள்ளவில்லை என்பது தெரிய வரும். உலகத்தின் பரந்த நிலப்பரப்பில் ஒரு பகுதியை தனியான வண்ணத்தில் வரைபடத்தில் காட்டுவதாலோ தேசியகீதம் பாடுவதாலோ இந்தியா வேறு உலகம் வேறு என்று பிரித்து விடமுடியாது.

அதேபோல் நமக்கு பிடித்த வண்ணத்தில் உடையணிந்து கொண்டு இங்குமங்கும் உலா வருவதால் நாம் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்களாகிவிட மாட்டோம். நான் எனது என்பதெல்லாம் சற்றும் உண்மை கலக்காத கற்பனைகள்.

இருப்பது பாகங்களற்ற பரமன் மட்டும்தான்.

முடிவுரை :

பாகங்களற்ற பரமன் பன்மையான உலகமாக நமக்கு தெரிவது நமது அறியாமையால் மட்டுமே.

ஒருவேளை பரமனின் ஒரு பாகம்தான் உலகம் என்றால் மக்களின் துயரம் பரமனையும் பாதிக்கும். தன்னுடைய துன்பத்தையே தீர்த்துக்கொள்ள முடியாத பரமனை நாம் தெரிந்து கொள்வதால் நமக்கு முக்தி கிடைக்காது என்பது உறுதி.

பயிற்சிக்காக :

1. பரமன் பாகங்களுடன் கூடியவன் என்று கருதுவதற்கு காரணம் என்ன?

2. பரமன் பாகங்களுடன் கூடியவன் என்றால் ஏன் நமக்கு முக்தி கிடைக்காது?

சுயசிந்தனைக்காக :

1. பரமன் பாகங்களுடன் கூடியவன் என்றால் அவன் மாறுதலுக்கும் அழிவுக்கும் உட்பட்டவன் என்று பொருள் - இது சரியா?