எதனோடும் சம்பந்தபடாமல் எவ்வித மாற்றமும் அடையாமல் இரண்டாவது என்று ஒன்று இல்லாமல் தனித்திருக்கும் பரமனால் எவ்வித மூலப்பொருளுமில்லாமல் இவ்வுலகத்தை படைத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களின் எண்ணம் தவறு என்பதை இந்த பாடம் தெளிவுபடுத்துகிறது. மேலும் பரமன்தான் இவ்வுலகின் ஆதாரம் என்பதை மறுப்பவர்களுக்கு முக்தி கிடைக்காது என்பதும் இங்கு விளக்கப்படுகிறது.
சீனப்பெருஞ்சுவரும் பூமியும்.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரின் பெருமைக்கு முக்கிய காரணம் அதை கட்டி முடிக்க செலவான பொருள், உழைப்பு, காலம் போன்றவை மிக அதிகம் என்பதாகும். ஆனால் இந்த பூமியின் அளவை ஒப்பிட்டால் அந்த சுவர் ஒரு கால்பந்தின் மேல் வரையப்பட்ட பென்சில் கோட்டுக்கு கூட சமமாகாது. இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டிய முயற்சி, பொருள், காலம் இவை மனித சக்திக்கு அப்பாற்பட்டவை.
பிரபஞ்சம் ஒரு மூலப்பொருளிலிருந்து வந்தது என்றால் அந்த மூலப்பொருள் எதிலிருந்து வந்தது? கொழியிலிருந்து முட்டையா அல்லது முட்டையிலிருந்து கோழியா என்ற முடிவில்லாத கேள்வித்தொடரை தவிர்க்க அறிவு பூர்வமாக நமக்கு கிடைக்கும் ஒரே பதில் எவ்வித மூலப்பொருளுமில்லாமல் இவ்வுலகம் உருவாக்கப்பட்டது என்ற வேதம் தரும் விளக்கம் தான்.
பாட்டி சொன்ன கதை
'ஒரு இராஜகுமாரன் பறக்கும் குதிரையில் வலம் வந்து கொண்டிருக்கும்பொழுது மின்னலென தோன்றி மறைந்த கடல்கன்னியை மோகித்து சமுத்திர அரக்கனோடு போர் புரிந்து..... ' என்பது போன்ற நம்பமுடியாத கற்பனை கதைகளை பாட்டி சொல்ல கேட்கும் சிறுவர்களுக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையானவை. மறுநாள் மாலை கடற்கரைக்கு சென்று விளையாடும் நேரத்தில் ஆகாயத்தில் இராஜகுமாரனை அவர்கள் தேடினால் அதில் ஆச்சரியமில்லை.
பாட்டி சொன்ன கதை கற்பனையென்று புரிந்தால் கதை முழுவதையும் சுவாரசியமாக கேட்கலாம். கதையை உண்மையென்று நம்பினால் கடல் கன்னியை விழுங்கிய சமுத்திர அரக்கன் மீது கோபம் மற்றும் இராஜகுமாரனின் சோகம் போன்ற துன்ப உணர்வுகள் சிறுவர்களை வாட்டிவதைத்துவிடும். முக்கியமான கட்டத்தில் 'தொடரும்' என்று பாட்டி முடித்துவிட்டால் அவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது.
சமுத்திர அரக்கனும் கடல் கன்னியும் எவ்வித மூலப்பொருள்களுமில்லாமல் பாட்டியின் கற்பனையில் உதித்தவர்கள். அது போல பரமனின் கற்பனையில் எவ்வித மூலப்பொருளும் இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட இவ்வுலகை உண்மையென்று நினைப்பவர்களின் நிலை கதை கேட்டு பயத்திலும் துக்கத்திலும் அழும் அச்சிறுவர்களின் நிலை போன்றது. இவ்வுலகம் கற்பனையல்ல, உண்மைதான் என்று நினைப்பவர்களால் தொடர்ந்து வாழ்க்கையின் இருமைகளிடையே ஊசலாடி தவிப்பதை தவிர்க்க முடியாது.
உலகம் மூலப்பொருளேதுமில்லாமல் பரமனால் கற்பனையாக உருவாக்கப்பட்டது என்ற ஞானத்தை பெறுவது மட்டுமே துன்பத்திலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான ஒரே வழி.
கடவுள் செய்த பொம்மை
மனிதன் அறிவியலில் மிக முன்னேற்றம் அடைந்த பின் இனி படைக்க கடவுள் என்று ஒருவன் வேண்டியதில்லை என்று அறைகூவினான். போட்டியை ஏற்றுக்கொண்ட கடவுள் கொஞ்சம் மண்ணை எடுத்து அதிலிருந்து ஒரு சிறிய பொம்மையை செய்து இது போல உன்னால் செய்ய முடியுமா என்று கேட்டார். மனிதன் இது என்ன பிரமாதம் என்று மண்ணை எடுக்க குனிந்தான். உடனே கடவுள், "அது நான் செய்த மண். அதை தொடாதே" என்றார்.
இந்த உலகை உருவாக்கியது கடவுளென்றும் அதில் தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர் போன்ற உலக அதிசியங்களை உருவாக்கியது மனிதன் என்றும் நாம் நினைப்பது தவறு. மனிதன் செய்யும் அனைத்து செயல்களும் கடவுளின் செயல்களே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளிருந்து செயல்படுவது கடவுள் மட்டுமே.
கடவுள் என்பவர் மனிதனுக்கு அப்பாற்பட்டு இருக்கும் ஒருவரல்ல.
ஒருவேளை மிகச்சக்தி வாய்ந்த கடவுள் என்று ஒருவர் எங்கோ இருந்து கொண்டு உருவாக்கிய விளையாட்டு பொம்மைதான் இந்த பிரபஞ்சம் என்றால் நமது நிலை கிரேக்க மக்களின் கேளிக்கைக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் கிளேடியேட்டர்(gladiator)களைவிட மோசமானது. நாம் இன்பமாக இருக்க வேண்டும் என்று செய்யும் எந்த செயலுக்கும் அர்த்தமிருக்காது.
தான்தோன்றித்தனம்
அறிவியல் அறிஞர்கள் உயிரினங்களுடன் கூடிய இந்த உலகத்தை உருவாக்க அவசியமான உயர்வகை அணுத்தொகுப்புகள் (Heavy elements) நட்சத்திரங்கள் தோன்றி அழியும் போது உண்டாகும் அளவிடமுடியாத வெப்பத்தில் பல முறை சமைக்கப்பட்டவை என்கிறார்கள். அவர்களின் கணிப்புபடி இந்த பூமியை உருவாக்க பிக் பேங்க்(Big Bang)ல் தொடங்கி இன்று வரை உருவாக்கப்பட்ட பல கோடி நட்சத்திரங்களை உள்ளடக்கிய இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுவதும் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த காரியம் தற்செயலாக நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. அறிவுருவான பரமனே காரணமாயிருந்திருக்க வேண்டும்.
எவ்வித அறிவின் துணையின்றி இவ்வுலகம் தானாக தோன்றியது என்றால் எந்த நொடியிலும் இது ஒரு அழிவுக்கு வரலாம். அழிவுக்கு பின் இது போல உயிரினங்கள் வாழத்தகுந்த ஒரு பூமி மறுபடியும் உருவாகுமென்பது சாத்தியமேயில்லை.
எனவே அறிவுருவான பரமன்தான் எவ்வித மூலப்பொருள்களுமில்லாமல் இவ்வுலகை படைத்துள்ளான் என்ற வேதத்தின் கருத்தை ஏற்றால் மட்டுமே நாம் எவ்வித கவலையுமில்லாமல் நிம்மதியாக இப்படைப்பின் அழகை ரசிக்க முடியும்.
முடிவுரை :
பரமனிடம் எவ்வித மூலப்பொருள்களும் இல்லை என்ற காரணத்தால் அவன் இவ்வுலகின் தோற்றத்துக்கு காரணமாயிருக்க முடியாது என்றால் வேறு எந்த விதத்தில் இவ்வுலகம் தோன்றியிருந்தாலும் மனிதன் தடையில்லாத நிம்மதியுடனும் குறைவில்லா இன்பத்துடனும் வாழ முடியாது.
இங்கிலாந்து அரசியின் ஆட்சியால் இந்தியாவுக்கு நன்மை அதிகமா தீமை அதிகமா என்று அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அதன் விளைவாக நாம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசாங்கம் என்பது மக்களுக்கு அந்நியமாய் இல்லாமல் மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாக இருக்க வேண்டுமென்ற சரியான முடிவால் நாம் சுயாட்சி கோரி போராடினோம்.
அதுபோல எங்கோ பரலோகத்தில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டுவிக்கும் கடவுளின் அடிமையாக நாம் இருக்கிறோமென்று தவறாக நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து பாவமன்னிப்பு கோரிக்கொண்டும் மன்னிப்பு கிடைக்காவிட்டால் கிடைக்கும் தண்டனை பற்றிய பயத்தில் உழன்று கொண்டும் வாழ்க்கையை ஒரு சுமையாக ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
நான்தான் பரமன் என்று அறிந்து கொள்பவர்கள் மட்டுமே முக்தியடைகிறார்கள்.
பயிற்சிக்காக :
1. பரமன் மூலப்பொருளில்லாமல் எவ்வாறு இவ்வுலகை உற்பத்தி செய்தார்?
2. நாம் முக்தியடைவதற்கும் படைக்கும் விதத்துக்கும் என்ன தொடர்பு?
சுயசிந்தனைக்காக :
1. பரமனை ஆதாரமாக கொள்ளாமல் வேறு எவ்விதத்தில் உலகம் தோன்றியிருக்க கூடும்?
2. உலகை உற்பத்தி செய்ய தேவை படும் மூலப்பொருளின் அளவு எவ்வளவு?