Wednesday, April 28, 2010

பாடம் 054: படைப்பிற்கு உணர்வுதான் காரணம் (பிரம்ம சூத்திரம் 2.2.11)

உலகம் உருவானதற்கு உயிரற்ற ஜடம் காரணமாக இருக்க முடியாது என்றால் எஞ்சியுள்ள உணர்வுதான் காரணமா என்பதை இந்த பாடம் தர்க்கத்தின் மூலமும் காரண காரிய அறிவின் மூலமும் ஆராய்கிறது.

அணுவினால் ஆன உலகம்

வேதத்தின் துணையில்லாமல் உலகின் துவக்கத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் தற்போதுள்ள தடயங்களை கொண்டுதான் நமது ஆராய்ச்சியை தொடங்க வேண்டும்.

அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் நாம் காணும் அனைத்து பொருள்களும் அணுவினால் செய்யப்பட்டவை என்று தெரியவரும். நுண்ணிய அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நமக்கு இந்த பிரபஞ்சமாக காட்சியளிக்கின்றன.

அணுவைத்தவிர இவ்வுலகில் வேறு ஏதேனும் இருக்கின்றனவா? ஒளி, வெப்பம், புவியீர்ப்பு விசை போன்ற சக்திகள் அணுவின் வெளிப்பாடே. பொருளும் (mass) சக்தியும் (energy) அடிப்படையில் ஒன்று என்பதால் அணுவினால் ஆக்கப்படாதது எது என்ற நம் தேடல் தொடர்கிறது.

உயிர் இருக்கும் வரை செயல்படும் அணுக்களின் தொகுப்பான உடல், உயிர்பிரிந்ததும் பிணமாகிவிடுகிறது. உயிர் என்பது எவ்வித அறிவியல் கருவிகளுக்கும் புலனாகாத ஒன்று. உடல் செயல்பட்டால் உயிர் இருக்கிறது என்றும் நாடித்துடிப்பும் சுவாசமும் நின்றுவிட்டால் உயிர் இல்லை என்றும் அறியலாமே தவிர உயிர் என்றால் என்ன, அதன் தன்மைகள் என்ன, அதற்கு உருவம் இருக்கிறதா, அது ஒரு சக்தியா என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் பதில் கண்டுபிடிக்கவில்லை.

கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடியசைந்ததா? என்பது போன்ற தொடர் கேள்விகளை கேட்டு அணுதான் உயிரை உண்டாக்கியது என்ற தவறான முடிவுக்கு வருபவர்கள் பலர். விளக்கில் எண்ணை தீர்ந்துவிட்டவுடன் சுடர் அணைந்து விடுவதுபோல உடலின் ஆரோக்கியம் குறைந்தவுடன் உயிர் காணாமல் போய்விடுகிறது என்பது தவறான முடிவு. ஆரோக்கியமானவர்கள் மரணமடைவதில்லையா அல்லது மருத்துவர்களால் சில நாட்களுக்கு மேல் தேறாது என கைவிடப்பட்டவர்கள் பல வருடங்கள் வாழ்வதில்லையா?

மரணத்தின் காரணம் என்ன?

இயற்கை மரணத்திற்கு காரணம் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேடிக்கைக்குரிய செயல். தங்கள் வேலையை தொடர்ந்து செய்து வரும் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகள், உயிர் பிரியும் வேளை வரும்பொழுது ஒவ்வொன்றாக வேலை செய்வதை முழுவதும் நிறுத்தி கொள்கின்றன. யார் முதலில் வேலைநிறுத்தம் செய்தது என்று கண்டுபிடித்து குற்றவாளிகூண்டில் நிறுத்துவது அறிவீனம். இயற்கை மரணத்தின் ஒரே காரணம் உயிர் பிரிவதுதான்! உயிர் பிரிய காரணம் என்ன என்பது அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்டது. உயிர் பிரிவதால்தான் உடலின் செயல்பாடு நிற்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஊசிப்போன மசால் வடையை சாப்பிட்டதால்தான் உயிர் பிரிந்தது என்று உயிரைபற்றி எவ்வித அறிவும் இல்லாத மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை சிறுபிள்ளைத்தனமாக நம்புவது தவறு.

எப்படி திரி, எண்ணை போன்ற அனைத்து உபகரணங்களை சேர்த்து வைத்தவுடன் நெருப்பு தானாக தோன்றுவதில்லையோ அது போல ஜடமான அணுகூட்டத்தின் சரியான தொகுப்பில் உயிர் தானாக உருவாவதில்லை. உடலில் உள்ள அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருந்தாலும் உயிர் பிரிவது சாத்தியம் என்ற தொட்டில் சாவு (cradle death) பற்றிய மருத்துவ ஆய்வுகள் காட்டும் முடிவை ஏற்றுக்கொண்டு அனைத்து இயற்கை மரணங்களுக்கும் ஒரே காரணம் விதி முடிந்து விட்டது என்பது மட்டும்தான் என புரிந்து கொள்ள வேண்டும்.

நெய்க்கு தொன்னை ஆதாரம் என்பது வெளிப்பார்வைக்கு தெரிவதை வைத்து எடுக்கும் அவசர முடிவு. நெய் இல்லையென்றால் தொன்னை குப்பைத்தொட்டிக்கு போய்விடுவதைப்போல உயிரற்ற உடல் எரிக்கப்பட்டுவிடும். நெய் தொன்னையினால் உற்பத்தி பட்டதல்ல. அது போல உணர்வு அணுவினால் செய்யப்படாதது.

உணர்வு என்றால் என்ன?

நான் என்ற சொல்லின் உண்மையான பொருள் உணர்வு. நான் இருக்கிறேன் என்பதற்கு எவ்வித நிரூபணமும் தேவையில்லை. இதை ஒரு சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். நிசப்தமான ஒரு இடத்தில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு நாம் குருடாகவும், செவிடாகவும், தொட்டுணரும் சக்தியற்றவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டால் இந்த உலகம் மறைந்து விடும். உண்மையிலேயே நமக்கு இந்த ஐந்து புலன்களும் செயலிழந்துவிட்டால் நம்மால் உலகம் என்று ஒன்று இருப்பதை அறிந்து கொள்ளவே முடியாது. ஆயினும் நான் இருக்கிறேன் என்பதை மறுக்க முடியாது.

ஒருவேளை நம் மனம் செயல்பட்டு கொண்டிருப்பதால்தான் நம்மால் நான் இருக்கிறேன் என்று உறுதியாக சொல்ல முடிகிறதா என்பதை அறிய நாம் நம் தினசரி உறக்க அனுபவத்தை ஆராய வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின்போது ஐந்து புலன்களைத்தவிர நம் மனதும் முழுவதுமாக செயல்படுவதில்லை. ஆயினும் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்பது 'நான் ஒன்றும் அறியாமல் சுகமாக தூங்கினேன்' என்று விழித்ததும் கூறுவதிலிருந்து தெளிவாகிறது. ஒன்றையும் அறியவில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?

நான் என்பதற்கு உணர்வு என்ற பொருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

எனக்குள் இருவர்

ஆக என்னை ஆராய்ந்தால் என் உடல் என்கிற ஜடப்பொருள் ஒன்றும், உணர்வு என்கிற ஜடமல்லாத ஒன்றும் சேர்ந்த இருவர் இருப்பது தெரியவரும். என் உடலின் தோற்றம் எப்பொழுது என்பது தெரியும். தோன்றிய உடல் ஒரு நாள் மறையும் என்பதும் தெரியும். உணர்வு தோன்றியது எப்போது? உண்மையில் இந்த கேள்விக்கு 'எனக்கு தெரியாது' என்பதை தவிர நம்மால் வேறு பதில் சொல்ல முடியாது.

நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் ஒரு வெளிநாட்டுக்காரரை சந்திக்கும்பொழுது நீங்கள் எப்பொழுது வந்தீர்கள் என்ற கேள்வி கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியும். ஆனால் அவர் நம்மை பார்த்து 'நீங்கள் எப்பொழுது இங்கு வந்தீர்கள்?' என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லுவோம்? நான் எப்போதுமே இங்குதான் இருக்கிறேன் என்பதுதான் சரியான பதில். அதுபோல என்னுள் இருக்கும் உணர்வு என்று வந்தது என்று தெரியாவிட்டால் அது வரவேண்டிய அவசியமில்லை, அது என்றும் இருப்பது என்ற முடிவுக்கு வரலாம்.

உடலும் உணர்வும்

உணர்வு என்பது உடலினால் உற்பத்தி செய்யபட்டதோ, ஆரோக்கியமான உடலின் விளைவோ அல்லது உடலின் ஒரு உறுப்போ அல்ல. அது உடலுக்கு அப்பாற்பட்டு இருந்து உடல் முழுவதும் வியாபித்து அதற்கு உயிரூட்டும் ஒரு தனிப்பட்ட தத்துவம். உடலின் மறைவிற்கு பின் உணர்வின் இருப்பை அறிந்து கொள்ள முடிவில்லை என்பதனால் உணர்வு இல்லை என்று முடிவு செய்து விட முடியாது. உணர்வை வெளிபடுத்தும் சாதனம் மறைந்து விட்டதே தவிர என்றும் நிரந்தரமாக மாற்றமடையாமல் இருக்கும் உணர்வு இல்லாமல் மறைந்துவிட்டது என்று முடிவெடுப்பது தவறு.

முடிவுரை :

பிரபஞ்சத்தை ஆய்ந்தறிந்த அறிவியல் அறிஞர்கள் அனைத்தும் அணுவினால் ஆனவை என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர். உணர்வு (consciousness) என்பது அணுத்தொகுப்புகளின் ஒரு குறிப்பிட்ட கூட்டமைப்பின் விளைவு என்பது எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் பொதுமக்களிடையே நிலவி வரும் ஒரு வதந்தி.

உடல் தானாக உருவாகவில்லை. உணர்வே உடலுக்கு உயிர்கொடுக்கிறது. தோற்றம்-மறைவு என்ற கட்டுபாட்டுக்குட்படாத உணர்வு என்றும் இருப்பது.

என்றும் இருக்கும் உணர்வு இவ்வுலகின் தொடக்கத்திற்கு ஏன் காரணமாயிருக்க முடியாது? ஜடமான அணு தன்னை தானே உருவாக்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே அணுவிலிருந்து உற்பத்தி செய்யப்படாத என்றும் உள்ள உணர்வுதான் படைப்புக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பயிற்சிக்காக :

1. இயற்கை மரணத்திற்கு காரணம் கற்பிப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டது ஏன்?

2. எனக்குள் இருக்கும் இருவர் யார்?

3. உணர்வு என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. உணர்வைத்தவிர அணுவினால் செய்யப்படாத வேறு பொருள்கள் எதுவும் கிடையாதா?

2. உயிருக்கும் உணர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன?.

3. இயற்கை மரணம் எதனால் நிகழ்கிறது?

4. மரணம் என்றால் என்ன?