Thursday, April 15, 2010

பாடம் 051: கொடுமையோ பட்சபாதமோ அற்றவன் அவன் (பிரம்ம சூத்திரம் 2.1.34-36)


செல்வசெழிப்புடன் உல்லாசமாக வாழும் மக்கள் ஒருபுறமும் அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாமல் வாடும் மக்கள் மறுபுறமும் இருக்கும் இந்த படைப்பை பார்க்கும்பொழுது இதை படைத்த பரமன் கொடுமைக்காரனாகவும் பாரபட்சம் உள்ளவனாகவும்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருபவர்களின் எண்ணங்கள் தவறானவை என்று இந்த பாடம் விளக்குகிறது.

பரமன் கொடுமைக்காரனல்ல

பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போன்ற பழமொழிகளுக்கு ஆதாரமாக நம் வாழ்வில் தொடர்ந்து துன்பம் ஏற்படும் பொழுது படைப்புக்கு காரணமான பரமன் ஒரு கொடுமைக்காரன் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. மேலும் பட்டினிச்சாவு, உள்நாட்டு கலவரம், குடி, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, போதைபொருள்களின் தாக்கம் இது போன்ற சமூக கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாவதை பார்க்கும்பொழுது பரமன் மக்களின் துன்பத்தில் இன்பமடையும் கொடுங்கோலனா (sadist) என்ற சந்தேகம் எழுகிறது.

தங்கத்தை சுட்டால்தான் ஆபரணங்கள் செய்யமுடியும். அதுபோல நம் மனதை செம்மையாக்க துன்பமான சூழ்நிலைகள் அவசியம்.

உலகம் என்ற பள்ளியில் வாழ்க்கை என்னும் பாடத்தை படிக்கும்பொழுது கடினமான பாடங்களை கற்றுத்தேர்ந்தால்தான் மனிதன் பரிணாம வளர்ச்சிபெற்று அறிவுஜீவியாக (Gnostic being) முடியும். வல்லவன் மட்டுமே வாழலாம் (survival of the fittest) என்ற விலங்குகளின் கோட்பாட்டிலிருந்து விலகி அனைவரும் வாழலாம் என்ற முன்னேற்றத்தை மனித இனம் அடைந்துள்ளது. இந்தப்பாதையில் மேலும் முன்னேற்றமடைய உடலளவில் அதிக சக்தி தேவையில்லை. மனம் பக்குவமடைந்து கூரிய அறிவுள்ளவர்களாக மனித இனம் மாற வேண்டும். எனவே கத்தியை தீட்டுவதைவிட்டு நம் புத்தியை தீட்டும் நிலைக்கு நாம் உயர்ந்து வருகிறோம்.

கல்லை தொடர்ந்து உளியால் தாக்கி அதை கண்கவர் சிற்பங்களாக உருவாக்கும் சிற்பியை போல தொடர்ந்து துன்பங்களை கொடுத்து நம் மனதை செதுக்கி மனித குலத்தின் மேம்பாட்டுக்கு வழி செய்பவன் பரமன்.

பரமன் பட்சபாதம் அற்றவன்.

பள்ளியில் ஆசிரியர் ஒரு சில மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்குகிறார். வேறு சிலருக்கு வெகுகுறைவான மதிப்பெண்களும் அதிகப்படியான பிரம்படியும் தருகிறார். எனவே அந்த ஆசிரியர் பாரபட்சத்துடன் செயல்படுகிறார் என்று கூறுவது அறிவீனம்.

ஆசிரியர் அனைத்து மாணவர்களும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் அவரவர்களின் தகுதிகளையும் தேவைகளையும் மனதில் கொண்டு எவ்வித பாரபட்சமும் இல்லாமல் செயல்படுவது போல பரமன் அனைத்து மக்களின் நலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுத்தமான சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி கொடுக்கிறான்.

வினைப்பயன் (laws of karma) பற்றிய பூரண அறிவு இல்லாதவர்கள் ஏன், எப்படி, எதற்காக என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாத சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் தற்செயல் (by chance), விபத்து (accident), அதிர்ஷ்டம் (luck) போன்ற வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். இவை யார் வாழ்விலும் எப்பொழுதும் நடப்பதில்லை.

தினமும் இரண்டு மூன்று தினசரிகளையும் குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகளையும் பக்கத்து வீட்டு வாசலில் மட்டும் போடும் பேப்பர்காரனை 'என் வீட்டுக்கு மட்டும் ஏன் ஒன்றும் போடுவதில்லை' என்று கோபித்து பயனில்லை. பக்கத்து வீட்டுக்காரர் அனைத்தையும் கேட்டிருக்கிறார் மற்றும் அவற்றுக்குண்டான விலையை மாதாமாதம் தருகிறார். எனவே அவருக்கு எல்லாம் கிடைக்கிறது. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்ற வாசகங்கள் முற்றிலும் உண்மையானவை. இதில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு துளியும் கிடையாது. அவரவரின் விருப்பத்துக்கும் தகுதிக்கும் என்ன கிடைக்க வேண்டுமோ அது முறைப்படி இவ்வுலகில் அனைவருக்கும் கிடைக்கிறது. எனவே பரமன் பாரபட்சமானவன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நான் துன்பபடவேண்டுமென்ற விருப்பம் எனக்கில்லையே, பின் ஏன் எனக்கு இம்மாதிரி சோதனைகள் ஏற்படுகின்றன என்றால் நாம் பிறர் துன்பத்துக்கு காரணமான செயலை இந்த பிறவியிலேயோ அல்லது முன்பிறவிகளிலேயோ செய்ததன் பலனை நாம் இப்பொழுது அனுபவிக்கிறோம். மாலையில் கொலை செய்தவன் மறுநாள் காலை எழுந்ததிலிருந்து மிக நல்லவனாகவும் அனைவருக்கும் உதவி செய்பவனாகவும் இருக்கிறான் என்ற காரணத்தைகாட்டி அவனை கைது செய்யாமல் விட்டு விட வேண்டும் என்று போலீஸிடம் நாம் வாதாட மாட்டோம். வினை விதித்தவன் வினை அறுப்பான் என்ற சட்டத்தில் யாருக்கும் எப்பொழுதும் எவ்வித சலுகையும் கிடையாது.

பசிவர அங்கு மாத்திரைகள், பட்டினியால் இங்கு யாத்திரைகள் என்ற நிலைக்கு பரமன் காரணமல்ல. அவரவர்களின் வினைப்பயனின்படி வாழ்க்கை அமைகிறது. வாழ்க்கை என்னும் செயல் முறை கல்வியை தொடர்ந்து பயின்று நல்ல செய்கைகளின் மூலம் புண்ணியத்தை ஈட்டி என் விதியை தீர்மானிப்பது நான் மட்டும்தான் என்று உணர்ந்தவர்களால் மட்டுமே முக்தியடைய முடியும்.

நம் எதிர்காலம் செல்வசெழிப்பும் சுகமான சூழ்நிலைகளும் கொண்டதாக இருக்கச்செய்வது நம் கையில்தான் இருக்கிறது. இது தெரியாமல் பரமனை கொடுமைக்காரன் என்றும் பாரபட்சம் உள்ளவன் என்றும் கூறுவது பொறுப்பற்ற செயல்.

முடிவுரை :

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போன்ற மனித குலத்துக்கே உரிய பாரபட்சமான இயல்பை பரமனுக்கு கற்பிப்பது நம் அறியாமை. நம் வாழ்வு எங்கனம் அமைய வேண்டும் என்று தீர்மானிப்பது பரமனல்ல. நாம்தான். ஒரு சிலர் துன்பத்தால் சூழப்பட்டும் மற்றும் சிலர் சுகமாகவும் வாழ்வதற்கு அவரவர் வினைப்பயன் மட்டுமே காரணம்.

தங்கள் துன்பத்திற்கு மற்றவர் காரணமென்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டால் நம் வாழ்க்கை இன்பமாக அமைகிறதா இல்லையா என்பதில் நமக்கு எவ்வித பொறுப்பும் இல்லையென்றாகிறது. மேலும் துன்பத்தை தவிர்க்கவும் இன்பமாயிருக்கவும் நாம் செய்யும் அனைத்து முயற்சிகளும் அர்த்தமற்றவையாகின்றன.

நமது பாவபுண்ணியங்கள் மட்டுமே நமது சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்றன. இவற்றிலிருந்து நாம் பெறும் அறிவு நம்மை துன்பக்கடலை கடந்து இன்பக்கரையை அடைய படிப்படியாக உதவும்.

பயிற்சிக்காக :

1. பரமன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு காரணம் என்ன?

2. பரமன் கொடுமைக்காரன் அல்ல என்று நிரூபிக்கவும்.

3. மக்களிடையே இருக்கும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டுக்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஏன் மனிதர்களின் வாழ்வு முழுவதுவும் இன்பமாகவோ அல்லது முழுவதும் துன்பமாகவோ இருப்பதில்லை?

2. ஒருவேளை நாம் நமது சென்ற பிறவிகளில் நிறைய பாவம் செய்திருந்தால் இந்த பிறவியில் துன்பபட்டுத்தான் ஆகவேண்டுமா?