Friday, April 23, 2010

பாடம் 053: படைப்பிற்கு ஜடம் காரணமாயிருக்க முடியாது (பிரம்ம சூத்திரம் 2.2.1-10)

பாடம் 053: படைப்பிற்கு ஜடம் காரணமாக இருக்க முடியாது

பாடல்:172 - 181 (II.2.1-10)

இந்த உலகம் எப்படி தோன்றியது என்ற கேள்விக்கு சரியான பதிலை வேதம் நமக்கு தந்துள்ளது. வேதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெவ்வேறு கருத்துக்களை உண்மை என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். உணர்வில்லாத ஜடப்பொருள்தான் இந்த படைப்பிற்கு ஆதாரம் என்று பரவலாக நிலவிவரும் ஒரு கருத்தை தர்க்க ரீதியாகவும் பகுத்தறிவின் துணையுடனும் ஆராய்ந்து அது அர்த்தமற்றது என்று இந்த பாடம் விளக்குகிறது.

உணர்வும் ஜடமும்

நம்மை சுற்றியுள்ள உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்ற அறிவுடன் கூடிய உயிரினங்களை பார்க்கிறோம். கல், மண், கடல் போன்ற உணர்வற்ற ஜடப்பொருள்களையும் பார்க்கிறோம். முதலில் தோன்றியது ஜடப்பொருள்களா இல்லை உயிரினங்களா என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் எளிது. உடலுடன் கூடிய உயிரினங்கள் முதலில் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவைகளால் ஜடப்பொருள்கள் எதுவுமில்லாமல் தனித்து இயங்க முடியாது. எனவே உணர்வற்ற ஜடப்பொருள்கள்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.

ஜடப்பொருள்கள் தாமாக தம்மை உருவாக்கிகொண்டன என்பது நமது அறிவுக்கு சற்றும் பொருந்தாத கருத்து. ஆயினும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பகுத்தறிவாளர்களுக்கு ஒரு மிக இக்கட்டான சோதனை காத்துக்கொண்டிருக்கிறது. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன் தோன்றிய ஜடப்பொருள் தானாக தோன்றவில்லையென்றால் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவதால், ஜடம்தான் படைப்பிற்கு காரணம் என்று பல அறிவாளிகள் நம்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் 'ஜடப்பொருள்கள் எப்படி தாமாக தோன்றின?' என்ற கேள்விக்கு அறிவியல் பதில் கண்டுபிடித்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையில் இவர்கள் தர்க்கத்துக்கு சற்றும் பொருந்தாத கருத்துடன் தங்கள் வாழ்நாளை கழித்து வருகிறார்கள்.

ஜடப்பொருள்தான் இந்த படைப்பிற்கு ஆதாரம் என்ற கருத்து தவறு என்பதை பின்வரும் காரணங்களால் நிரூபிக்கலாம்.
  1. யார் காரணம்?
உலகம் தோன்றியதற்கு காரணம் யார் என்ற ஆராய்ச்சியை முழுவதும் முடிக்காமல் ஜடம்தான் காரணம் என்று தீர்மானம் செய்வது கொலைசெய்யப்பட்டவனை கடைசியாக சந்தித்தவன்தான் கொலைகாரன் என்று முடிவு செய்வதற்கு சமம். அறிவியல் அறிஞர்கள் தற்கால நிகழ்வுகளை ஆராய்ந்து பின்னோக்கி பயணித்து பிக் பேங்க் (Big Bang) வரை சென்றுள்ளனர். பிக் பேங்க் எப்படி உண்டானது அதற்கு முன் என்ன நிகழ்ந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். எனவே பத்திரிக்கையாளர்களுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் ஏமாந்தவனை பிடித்து கொலைகாரன் என்று ஜெயிலில் அடைக்கும் போலீஸ்காரர்களைப்போல அறிவற்ற ஜடப்பொருள்தான் உலகத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இது உண்மையென்றால் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை தொடர்வதில் அர்த்தமேயில்லை. இன்னும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்வதிலிருந்து ஜடம்தான் உலகின் ஆதாரம் என்ற கருத்து உண்மையல்ல என்று தெளிவாகிறது.
  1. பிழையான பிக் பேங்க் (Big Bang)
பெரிய வெடித்து சிதறல் எதுவும் பிக் பேங்கின்பொழுது நடக்கவில்லை என்பது பிரபலமாகாத அறிவியல் உண்மை. ஒரு பலூனை ஊதும்பொழுது அது எப்படி பெரிதாகிறதோ அது போல்தான் இந்த அண்டம் தொடக்கத்திலிருந்து இன்றளவும் தொடர்ந்து விரிவடைந்து கொண்டு இருக்கிறது. எனவே அண்டத்தின் துவக்கத்தை ஒரு அணுகுண்டு வெடிப்பதற்கு ஒப்பிடுவது பிழை.

ஒரு பட்டாசு வெடித்தபின் துகள்கள் எரிந்து நாலாபக்கமும் சிதறுவது போல் இந்த அண்டம் தோன்றியிருந்தால் ஒருவேளை ஜடம்தான் இதற்கு காரணம் என்று முடிவு செய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து விரிவடையும் பலூனுக்கு எப்படி ஊதுபவன் என்று ஒருவன் அவசியமோ அது போல இந்த அண்டத்தின் தொடர்ந்த விரிவாக்கத்திற்கு ஒரு சக்தி அவசியம். இதை 'தெரியாத சக்தி' (dark energy) என்ற பெயரில் அழைத்து அறிவியல் உலகம் தங்கள் இயலாமையை ஒத்துக்கொண்டுள்ளது.
  1. காரண-காரிய அறிவு
வெளிச்சமும் இருளும் போல ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத எதிர்மறை குணங்கள் கொண்டவை உணர்வும் ஜடமும். வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருள் இருக்க முடியாது. இருள் இருக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்க முடியாது. இதே போல் உணர்விலிருந்து ஜடமோ ஜடத்திலிருந்து உணர்வோ உருவாக முடியாது. நம் காரண காரிய அறிவு இதை தெளிவாக காண்பிக்கிறது. ஆயினும் நாம் உணர்வும் ஜடமும் கலந்து இருப்பதை பார்க்கிறோம். நம் உடல் வெறும் ஜடம். நாம் உயிருடன் இருக்கும்வரை இந்த ஜடமான உடல் உணர்வுடன் கூடியதாக செயல்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும்? இந்த கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதற்காக ஜடம்தான் உணர்வை உருவாக்கியது என்று முடிவுசெய்வது புத்திசாலித்தனமில்லை. ஏனெனில் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்று மட்டும் நம்மால் அறியமுடியுமே தவிர உயிரை தனித்து உணர எவ்வித கருவிகளாலும் முடியாது. அறிவியல் அறிவுக்குள் அகப்படாத உணர்வை எவ்வாறு ஜடமான உடல் உருவாக்க முடியும்?

மேற்கூறப்பட்ட மூன்று காரணங்களிலிருந்து படைப்பிற்கு ஆதாரம் யார் என்ற கேள்விக்கு நமக்கு பதில் கிடைக்காவிட்டாலும்கூட ஜடம் காரணமாயிருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.



முடிவுரை :

உயிரினங்களை உருவாக்க உணர்வு மற்றும் ஜடம் என்று இரண்டு பொருள்கள் தேவை. உணர்வற்ற ஜடப்பொருள்களை நாம் அறிகிறோம். ஆனால் ஜடமற்ற உணர்வை நாம் பொதுவாக அறிவதில்லை. எனவே அறியாத உணர்வு படைப்பிற்கு காரணமாயிருக்க முடியாது என்றும் அறிந்த ஜடப்பொருள்கள்தான் தானாக இவ்வுலகை உருவாக்கின என்று முடிவு செய்வது அறிவீனம்.

நியூட்டனின் முதல் விதியின் படி அசையும் பொருள்களின் அசைவை நிறுத்தவதற்கும் அசையா பொருள்களை அசைய வைக்கவும் ஒரு தனிப்பட்ட சக்தி தேவை. அந்த சக்தியும் தானாக எவ்வித செயலையும் செய்ய தொடங்க முடியாது. எனவே இந்த உலகத்தின் படைப்பிற்கும் இயக்கத்துக்கும் காரணமாக ஜடப்பொருள்கள் இருக்க முடியாது.

உணர்வை அறிந்து கொள்ள அறிவியலால் முடியவில்லை என்ற காரணத்தால் ஜடப்பொருள்களுக்கு உணர்வை உருவாக்கும் சக்தி இருப்பதாக நாம் முடிவு செய்ய கூடாது.

பயிற்சிக்காக :

1. முதலில் தோன்றியவை ஜடப்பொருள்களா உடலுடன் கூடிய உயிரினங்களா?

2. ஜடப்பொருள்கள்தான் படைப்பிற்கு ஆதாரம் என்பதை மறுக்க கொடுக்கப்பட்ட மூன்று காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஜடப்பொருள்கள் படைப்பிற்கு ஆதாரம் என்பதை மறுக்க வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?

2. உணர்வுதான் படைப்பிற்கு ஆதாரம் என்பதை தர்க்க பூருவமாக மறுக்க முடியுமா?

3. படைப்பிற்கு ஆதாரம் எது என்று தெரிந்து கொள்வதன் அவசியமென்ன?