Monday, April 5, 2010

பாடம் 046: சாத்தான் என்று யாருமில்லை (பிரம்ம சூத்திரம் 2.1.21-23)

அனைத்துக்கும் காரணம் பரமனென்றால் தீய சக்திகளின் தலைவனான சாத்தான் உருவாவதற்கும் பரமன்தான் காரணம் என்றாகிறது. மேலும் அனைத்து மனிதர்களும் பரமனின் வடிவமென்றால் அவர்களை துன்புறுத்தும் வகையில் படைப்பை அமைப்பது யுக்திக்கு பொறுத்தமாயில்லை. யாரும் தன்னைதானே துன்புறுத்திக்கொள்ள முனைவதில்லை. எனவே பாலும் தேனும் ஆறாக ஓடி எல்லோரும் எப்போதும் சுகித்திருக்கும் வண்ணம் இந்த உலகத்தை பரமன் படைத்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் கடவுளுக்கு ஏறக்குறைய நிகரான சக்தியுடன் கொலை, கொள்ளை, பசி, பட்டினி, வறுமை, போர் போன்ற சமூக கொடுமைகளால் மக்களை வாட்டும் சாத்தானை படைத்தது ஏன் என்ற கேள்விக்கு இந்த பாடம் பதில் தருகிறது.

படைப்பின் நோக்கம்

இரண்டற்றதான பரமன் நான் பலவாக ஆகுவேனாக என்ற சங்கல்பம் செய்த மாத்திரத்திலேயே இந்த உலகம் உருவானது. இறைவனின் லீலையாக தோன்றிய இந்த படைப்பின் ஒரே நோக்கம் எல்லோரும் இன்புற்று இருப்பது மட்டுமே.

மாறாமல் என்றும் இருக்கும் பரமன் தனது ஆனந்தமான இயல்பை அனுபவத்திற்குள் கொண்டுவர எண்ணியதன் விளைவுதான் இவ்வுலகம். அழகான தன் முகத்தை பார்த்து ரசிப்பதற்கு எப்படி ஒரு கண்ணாடி அவசியமோ அதுபோல ஆனந்தமயமான பரமனின் இன்பத்தை அனுபவிக்க படைப்பு அவசியம்.

ஆக ஆனந்தம் என்பது மட்டுமே இந்த படைப்பின் நோக்கம். பூலோகம் ஆனந்தத்தின் எல்லை, இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தமில்லை என்பதுதான் உண்மை.

இருமைக்கு காரணம்

எல்லோரும் இன்புற்றிருப்பதுதான் படைப்பின் நோக்கமென்றால் ஏன் இவ்வுலகில் நன்மை-தீமை, ஏழை-பணக்காரன், இளமை-முதுமை போன்ற பாகுபாடுகள் காணப்படுகின்றன?

ஒன்று பலவாக ஆகும்பொழுது அனைத்தும் ஒன்றாக இருந்தால் படைப்பிற்கு பொருளில்லாமல் போய்விடும். ஒரு வகுப்பறையில் இருக்கும் அனைத்து மாணவர்களின் முகமும் உருவமும் ஒரே மாதிரியும் அவர்களின் செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் விருப்பு வெறுப்புகள் ஆகிய அனைத்தும் தொழிற்சாலையில் செய்யப்பட்ட ரோபோக்கள் போல ஒன்றிலிருந்து மற்றதற்கு எவ்வித வேற்றுமையும் இல்லாமலிருக்கும் ஒரு நிலையை கற்பனை செய்தால் இருமையின் அவசியம் நமக்கு புரியும்.

பறவைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். நறுமணம் வீசும் மலர்களிலிருந்து துர்நாற்றமடிக்கும் மலர் வரை மலர்களின் வகைகளுக்கு ஒரு எல்லையே இல்லை. இது போல உலகம் முழுதும் பரவி உள்ள வெவ்வேறு வகையான உயிரினங்களும் அவைகளுக்குள் இருக்கும் எண்ணிலடங்கா வேறுபாடுகள் மட்டுமே இவ்வுலகை வாழ்த்தகுந்த இடமாக ஆக்கியுள்ளது.

இயற்கையில் தோன்றிய எல்லாமும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுவது என்பது படைப்பின் அடிபடைத்தேவை. தோற்றத்தில் மட்டுமில்லாமல் மறையும் நாள்வரை அனைத்தும் தொடர்ந்து வேறுபட்டுகொண்டே இருப்பதுதான் படைப்பின் ரகசியம்.
முதுமை என்று ஒன்று இல்லாவிட்டால் இளமை என்பதற்கு அர்த்தமில்லை. பள்ளம் என்ற ஒன்றுதான் மேடு என்பதற்கு பொருளளிக்கிறது. ஒன்று மற்றதன் எதிர்பதமில்லை. ஒன்று மற்றதின் ஆதாரம். இருளில்லாமல் ஒளியில்லை. ஏழையில்லாமல் பணக்காரன் இருக்க முடியாது.

எனவே இருமை என்பது படைப்பின் இலக்கணம். இருமையில்லாமல் படைப்புக்கு அர்த்தமேயில்லை. இராவணன் இல்லாமல் இராமாயணம் சுவைக்காது. வாழ்வின் இருமைகளை இடைவிடாமல் தொடர்ந்து அனுபவிப்பதுதான் முக்தி. இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் வாழ்வின் இருமைகளை சமநோக்குடன் ஏற்றுக்கொள்வது மட்டுமே நிலையான அமைதியை பெறுவதற்கு ஒரே வழி.

சாத்தான் என்று யாருமில்லை

நல்ல குணங்கள் எதுவுமில்லாமல் முழுதும் கெட்டவன் என்று யாரும் இவ்வுலகில் கிடையாது. அதேபோல் முழுதும் நல்லவன் என்றும் யாருமில்லை. நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று நாயகனை பார்த்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் திகைத்தது அவர் மட்டுமல்ல.

புனிதரான ஏசுவை சிலுவையில் அறைந்து மற்றும் அஹிம்சைவாதியான காந்தியை துப்பாக்கியால் சுட்டுகொன்று நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் உள்ள வேறுபாடு அவரவர் பார்வையை பொறுத்துள்ளது என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது. தன்னலமற்ற நாட்டுபற்றுள்ள சுதந்திர போராட்ட வீரன் என்று ஒருசிலரால் கொண்டாடப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன், சூரன் பகத்சிங்க், விடுதலைப்புலி பிரபாகரன் போன்றவர்கள் மற்றவர்களின் பார்வையில் கொல்லப் படவேண்டிய குற்றவாளிகளாக காணப்படுகிறார்கள்.

எனவே தீய சக்திகளின் அதிபதியாக சாத்தானை கூறுவது வெறும் கற்பனையே. நல்லவை தீயவை என்று படைப்பின் இயற்கையை கூறுபோடுவது முக்தியை தராது. ஆனந்தமாக இருப்பதற்கு வாழ்வில் இருமைகள் அவசியம் என்பதை புரிந்து கொள்வது மட்டுமே நமது பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.

முடிவுரை :

உலகில் நடக்கும் நல்லவற்றுக்கெல்லாம் கடவுள் காரணமென்றும் தீவைகளுக்கு சாத்தான் காரணமென்றும் நினைப்பது அறியாமை. இது உண்மையென்றால் கடவுளுக்கு நிகரான சாத்தானுடன் நடக்கும் போரில் எப்பொழுதும் கடவுள்தான் வெற்றி பெறுவார் என்று சொல்லமுடியாது. என்றாவது ஒரு நாள் கடவுள் சாத்தானிடம் தோற்றுபோய் உலகத்தை நரகமாக்க அவர் ஒத்துக்கொள்ளும் நிலை வரலாம். எனவே நாம் நிம்மதியான வாழ்வுக்காக நேர்மையாக உழைப்பது வீண். கொலை, கொள்ளை பொன்ற செயல்களில் ஈடுபட்டு சாத்தானின் பக்கம் சாய்ந்து விடுவதே சிறந்தது என்று பலர் முடிவுகட்டிவிடலாம்.

உண்மை என்னவெனில் நன்மை-தீமை என்ற இரண்டும் ஒரே கோலின் இரு முனைகள். ஒன்றில்லாமல் மற்றது இருக்க முடியாது. காலசக்கரத்தின் சுழற்சியில் வெவ்வேறு மனிதர்களை நாம் சந்திப்பதும் பல்வேறு நிகழ்வுகளை நேர்கொள்வதும் தொடர்ந்து நடக்கும் பொழுது அவற்றில் சிலவற்றை நல்லவை என்றும் சிலவற்றை தீயவை என்றும் வகைபடுத்துவது அறிவீனம். எல்லாம் நன்மைக்கே. எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும். இதுதான் உண்மை.

வேட்டையாடும் பொழுது மன்னனுக்கு அடிபட்டு அவன் சிறுவிரல் தூண்டிக்க பட்டபொது அருகில் இருந்த அமைச்சர், "இது நன்மைக்கே" என்றதால் கோபமடைந்த மன்னன் அவரை சிறையிலடைத்தான். அடுத்த நாள் காட்டுவாசிகளிடம் தனியாக அகப்பட்டு கொண்ட மன்னனை அவர்கள் காளிக்கு பலிகொடுக்க முயன்றபோது அவன் சிறுவிரல் இல்லாமல் ஊனமுற்றவன் என்ற காரணத்தால் விடுதலை பெற்றான். "இது நன்மைக்கே" என்ற அமைச்சரின் வாக்கை நினைவு கூர்ந்த மன்னன் அவரை விடுதலை செய்து நீங்கள் சிறையிலிருந்தது எப்படி நன்மையாகும் என்று கேட்டான். அதற்கு அமைச்சர், "நீங்கள் என்னை சிறையலடைத்திருக்காவிட்டால் காட்டில் உங்களை நான் தனியாக விட்டிருக்க மாட்டேன். உங்களுக்கு பதில் காட்டுவாசிகள் என்னை பலி கொடுத்திருப்பார்கள்" என்றார்.

நம் வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் நல்லவை-கெட்டவை என்று தரம் பிரித்து கெட்டவற்றை ஒழித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டால் அது எப்பொழுதும் தோல்வியிலேயே முடியும். நம் வாழ்நாள் முழுவதும் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடி, அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடும் தொடர் ஓட்டமாகவே இருக்கும். உலகம் முழுதும் பரமனின் வெளிப்பாடு என்றும் அதில் சாத்தான் என்று யாருமில்லை என்றும் உணர்ந்து கொண்டால் மட்டுமே நாம் நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் என்றும் இருக்க முடியும்.


பயிற்சிக்காக :

1. படைப்பின் நோக்கம் என்ன?

2. பரமன் ஆனந்தமயமானவனாக இருக்கும் பொழுது உலகத்தை படைக்க என்ன அவசியம்?

3. ஹிட்லர், சதாம் ஹுஸேன் போன்றவர்கள் நல்லவர்களா?

4. இருமைக்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. எல்லாம் கடவுள் செயல் என்றால் நாம் கொலை செய்யலாமா?

2. உலகில் பலர் துன்பபடுவதன் காரணம் என்ன?

3. வறுமை மற்றும் போர் போன்ற கொடுமைகள் உலகில் இருக்கும் வரை நம்மால் எப்படி இன்பமாக இருக்க முடியும்