Friday, April 2, 2010

பாடம் 045: உலகம் வேறல்ல (பிரம்ம சூத்திரம் 2.1.14-20)

நான் இந்த உலகில் இருக்கிறேன் என்பதைவிட என்னில் இந்த உலகம் உள்ளிட்ட பிரபஞ்சம் அடங்கியுள்ளது என்பதுதான் சரி என்பதை வேதம் விளக்கிய பின் இந்த பாடத்தில் இதற்கு முரணான கருத்துக்களை நிராகரிக்கிறது. நான் இந்த உலகத்திலிருந்து வேறுபட்டவன் என்ற தவறான எண்ணம்தான் நமது துன்பங்களுக்கு அடிப்படை காரணம். எனவே நமக்கும் உலகத்துக்கும் உள்ள உண்மையான உறவை அறிந்து கொள்வதன் மூலம் துன்பங்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று என்றும் இன்பமாக வாழலாம்.

உலகமும் பரமனும்

தங்கத்திலிருந்து செய்யப்பட்ட ஆபரணம் எப்படி தங்கத்திலிருந்து வேறுபட்டதல்லவோ அது போல பரமனிடமிருந்து தோன்றிய இவ்வுலகம் பரமனிடமிருந்து வேறுபட்டதல்ல. பரமன்தான் உலகம். உலகம்தான் பரமன்.

உலகம் அழிந்தாலும் பரமன் அழியாதவன். நகைகளை அழித்தாலும் தங்கம் அழிவதில்லை. தங்கத்திலிருந்து மறுபடியும் நகைகள் உருவாக்கலாம். இந்த பிரபஞ்சம் தோன்றி சில காலம் இருந்து பின் மறைந்து பிறகு மீண்டும் தோன்றுவது என்ற நியதிக்கு உட்பட்டது. எனவே 'அழிவது' என்பதற்கு பதில் 'மறைவது' என்று சொல்வதுதான் சரிஉலகம் தோன்றி மறையும் இயல்புடையது. பரமன் மாறாதவன்.

ஈமச்சடங்கு பத்திரிக்கைகளிலும் கல்லறைகளிலும் 'தோற்றம்:', 'மறைவு:' என்று குறிப்பிடுவது பரமன் அழியாதவன் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டதுதான். "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎன்ற பாட்டு கண்ணதாசனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் தொடர்ந்து மாறுபவை. தோற்றம்-மறைவு என்ற நியதிக்கு உட்பட்டவை. அனைத்து உயிரினங்களின் ஜடமான உடலை உயிர்ப்பிக்கும் உணர்வுமயமான பரமன் ஒருவனே ஆனந்தமயமாக அழியாமல் என்றும் இருப்பவன். பிரளயத்திற்கு பிறகு பிரபஞ்சம் இல்லாமல் போய்விடுவதில்லை. அது ஒடுங்கிய நிலையில் பரமனிடம் தொடர்ந்து இருக்கிறது.

நாம் தூங்கியபின் விழிப்பதுபோல மறுபடியும் இவ்வுலகம் பரமனிடமிருந்து வெளிப்படும்.

2012ல் உலகம் அழியுமா?

நான் என்பதற்கு இந்த உடலும் மனமும் என்று பொருள்கொள்ளும்வரை இது போன்ற பயங்கள் நம்மை தொடர்ந்து நம்மை ஆட்டுவிக்கும். மரணம் என்பது எல்லாருக்கும் எப்படி தவிர்க்க முடியாத ஒன்றோ அது போல இந்த உலகமும் என்றாவது ஒரு நாள் அழிவது உறுதி. எந்தகணமும் நாம் மரணமடைவது சாத்தியமென்றாலும் ஏதோ நாம் மட்டும் இந்த விதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற முட்டாள்தனமான கற்பனையில் நம்மில் பலர் மரணத்தை பற்றி எண்ணுவதையே முழுவதும் தவிர்த்து வருகிறோம். உனக்கு புற்று நோய், உன் காலம் குறிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவர் கூறிவிடுவாரோ என்ற பயத்தில் மருத்துவ பரிசோதனைக்கு கூட பெரும்பாலோர் செல்வதில்லை.

உலகம் அழிவதாயிருந்தாலும் நான் மரணமடைவதாயிருந்தாலும் அதை பற்றிய செய்தி எதுவும் எனக்கு தெரிய வேண்டாம். நான் நிம்மதியாக இருக்க விழைகிறேன் என்பதுதான் எல்லோரின் விருப்பமும். ஆனால் நம்மை இப்படி அஞ்ஞானிகளாக இருந்துவிட இவ்விஞ்ஞான உலகம் அனுமதிப்பதில்லை.

இன்டர்நெட்டில் அமர்ந்தால் மாயன் நாட்காட்டிபடி உலகம் 2012ல் அழியும் என்ற செய்தி நம் விருப்பமில்லாமலேயே நமக்குள் நுழைகிறது. எனவே இந்த உலகம் வேறல்ல என்ற சரியான ஞானத்தை பெற்றாலன்றி நம்மால் நிம்மதியாக வாழ முடியாது.

உலகமும் மனிதனும்

பிரபஞ்சத்தின் வயதையோ, அளவையோ அல்லது சக்தியையோ ஒப்பிட்டால் மனிதன் அற்பமானவன். எவ்வளவுதான் அறிவியலில் முன்னேற்றம் கண்டாலும் மனிதனால் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுதும் அறிந்து கொள்ள முடியாது. அப்படியிருக்க இயற்கையை கட்டுப்படுத்தி தங்கள் விருப்பபடி நடத்துவது என்பது நடக்க முடியாத காரியம். எனவே இந்த பிரபஞ்சம் முழுதும் என்னில் அடக்கம் என்ற அறிவு மட்டுமே நமக்கு நிம்மதியை தரும்.

உலகம் அழிந்து விட்டால் மறுபடியும் உயிரினங்கள் தோன்றுமா மற்றும் இவ்வளவு அறிவுடன் கூடிய மனித குலம் தோன்ற எவ்வளவு காலமாகும் என்ற எண்ணங்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் நாம் எதுவும் செய்யாமலேயே பிரபஞ்சம் உருவாகி அதில் இந்த பூமி உருவாகி அதில் மனிதன் தோன்றியுள்ளான். எனவே இவை அனைத்தும் அழிந்தால் கூட மீண்டும் உருவாவது என்பது சாத்தியமே.

இந்த உலகம் தற்செயலாக உருவானது , பரிணாம வளர்ச்சியின் விளைவாக மனிதன் தோன்றினான் என்பது போன்ற தவறான கருத்துக்களை உண்மையென நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு உலகம் அழிந்து விட்டால் என்ன ஆகும் என்ற பயத்திலிருந்து விமோசனம் கிடைக்கவே கிடைக்காது.

உண்மையும் பொய்யும்

தங்கத்துக்கும் ஆபரணத்துக்கும் உள்ள வேற்றுமை வெறும் பெயரிலும் உருவத்திலும் மட்டுமே. பல்வேறு பெயர்களும் உருவங்களின் தொகுப்பே உலகம். தங்க நகைகள் உள்ள ஒரு பெட்டியை திறந்து காட்டி இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் தங்கம் என்று பதில் சொல்லாமல் வளையல், அட்டிகை, மோதிரம் என்ற பெயர்களை அவற்றின் உருவத்தை பார்த்து சொல்லுவோம். இன்று வளையலாக இருப்பது நாளை தோடாக மாறலாம். மாறாமல் இருக்கும் தங்கத்தை விட மாறும் உருவங்களே நமது கவனத்தை கவருகின்றன.

உருவங்களும் பெயர்களும் நிலையாக இருப்பதில்லை. எனவே அவை பொய். உருவங்களுக்கும் பெயர்களுக்கும் ஆதாரமாக இருக்கும் தங்கம் என்ற நிலையான பொருள் மட்டுமே உண்மை. அது போல உலகம் பொய். உலகத்துக்கு ஆதாரமாயிருக்கும் பரமன் மட்டுமே மெய்.

அவ்வாறில்லாமல் உலகமும் உண்மையாக இருந்தால் சுனாமி, ஓஸோன் மண்டலத்தில் தேய்வு, புவிசூடாதல், சுற்றுசூழல் மாசு போன்ற தவிர்க்கப்படமுடியாத நிகழ்வுகள் நம்மை தொடர்ந்து பயமுறுத்திக்கொண்டே இருக்கும்.

உலகமும் உடலும்

உலகம் என்பது எனது மனம் மற்றும் உடலை உள்ளடக்கியது. உலகம் தொடர்ந்து மாறி மறைவது என்ற நிகழ்வின் ஒரு சிறு பகுதிதான் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள். இதை புரிந்து கொண்டால் முதுமை என்ற இயற்கையான மாற்றத்தை மனநிம்மதியுடன் ஏற்றுக்கொள்வோம். நான் அழகாகவும் இளமையின் ஆற்றலுடனும் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நாம் செய்யும் எந்த முயற்சியும் நிச்சயம் தோல்வியில்தான் முடியும்.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்ற நோக்கில் செய்யப்படும் செயல்களில் தவறு இல்லை. உலகுடன் உறவாட நமக்கு இருக்கும் சாதனம்தான் நம் உடலும் மனமும். அவற்றை நமது வாகனத்தை போல் பராமரித்து பாதுகாக்க வேண்டும். ஆனால் உலகம் நமக்கு குறையாத இன்பத்தையும், நிலையான நிம்மதியையும் நிரந்தர பாதுகாப்பையும் தரும் என்று எதிர்பார்த்தால் நிச்சயம் ஏமாற்றத்திற்குள்ளாவோம்.



முடிவுரை :

கொடிக்கம்பத்தில் கொடியிருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு கொடி பறக்கும்பொழுது சரியான பதில் கொடுத்துவிடலாம். அப்படியில்லாமல் அந்த கொடி சுருட்டப்பட்டு ஒரு துணிப்பந்தாக இருக்கும்பொழுது என்ன பதில் சொல்வது? அது போல இந்த உலகம் நமது உணர்வுக்கு புலப்படும்பொழுது இருக்கிறது என்று தீர்மானமாக சொல்லலாம். ஆனால் பிரளயத்துக்கு பிறகு இந்த பிரபஞ்சம் துணிப்பந்தாக சுருட்டிவைக்கப்பட்ட கொடிபோல தொடர்ந்து இருப்பதால் இல்லை என்று சொல்ல முடியாது.

கொடி பறக்கும்பொழுது அதற்கு ஒரு உருவமும் பெயரும் கிடைக்கிறது. இது இந்திய நாட்டின் தேசியக்கொடி என்பது துணிபந்தாய் இருக்கும்பொழுது தெரியாது. அது போல பரமனின் மாயாசக்தியாக ஒடுங்கியிருக்கும்பொழுது பிரபஞ்சத்திற்கு வடிவமோ பெயரோ கிடையாது. கொடியேற்றத்திற்கு பிறகு அனைவருக்கும் தெளிவாக கொடி தெரிவது போல் படைப்பிற்குபின் உலகம் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

கொடி என்ற பெயருடைய துணி நூலினாலானது. பிரபஞ்சம் என்ற பெயருடைய மாயாசக்தி பரமனை ஆதாரமாக கொண்டது. துணியில் சித்திரக்கப்பட்ட வர்ணங்களும் வடிவங்களும் ஒன்று சேர்ந்து கொடியாக காட்சியளிக்கிறது. அது போல அனைத்து ஜடப்பொருள்களும் உயிரினங்களும் சேர்ந்த கலவைதான் பிரபஞ்சமாக காட்சியளிக்கிறது.

இந்த உண்மையை அறியாமல் நான் இந்த உலகத்தை விட்டு வேறான சுதந்திரமான மனிதன் என்று யாரெல்லாம் அறியாமையுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு முதுமை, மரணம், பிரளயம் ஆகியவற்றை பற்றிய பயம் எப்பொழுதும் ஆழ்மனதில் இருந்து கொண்டிருக்கும். எதிர்பாராத நடுக்கம் எப்படி சொகுசு கப்பலில் பயணம் செய்பவர்களின் கேளிக்கையாட்டங்களை நிறுத்தி விடுமோ அது போல எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியும் இம்மாதிரி மக்களின் வாழ்வையே திசைதிருப்பிவிடும்.

எனவே நான் இவ்வுலகிலிருந்து வேறுபட்டவன் என்ற அறியாமையை நீக்கி உலகம் வேறல்ல என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே முக்தியடைய முடியும்.

பயிற்சிக்காக :

1. உலகத்துக்கும் பரமனுக்கும் உள்ள உறவு என்ன?

2. மனிதனுக்கும் உலகத்துக்கும் என்ன உறவு?

3. உண்மை-பொய் என்று இந்த பாடத்தில் விளக்கப்பட்ட கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. உலகை விட்டு மனிதன் வேறு கிரகங்களுக்கோ அல்லது சூரிய மண்டலத்தை விட்டு வெளியேயோ சென்று விட்டால் அவன் உலகத்திலிருந்து வேறுபட்டவன் என்பது உண்மையாகாதா?

2. உலகின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம்தான் மனிதன் என்றால் சுயமுயற்சிக்கும் தனிமனித சுதந்திரம் என்பதற்கும் என்ன விளக்கம் கூற முடியும்?