Saturday, May 1, 2010

பாடம் 055: வேதம் தவறு என்றால் முக்தி கிடைக்காது (பிரம்ம சூத்திரம் 2.2.12-17)


வேதத்துக்கு மாறாக ஜடம்தான் படைப்பிற்கு காரணமென்றோ அணுவிலிருந்துதான் அனைத்தும் தோன்றியதென்றோ கூறுபவர்களின் வாதம் தவறு என்றும் புலனறிவுக்கு புலப்படாத உணர்வுதான் இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும் என்றும் தர்க்கத்தின் மூலமும் அறிவியல் ஆய்வின் மூலமும் நிலைநாட்டிய பின் இந்த முடிவுகள் தவறாக இருந்தால் மனிதனுக்கு நிலையான அமைதியும் குறையாத இன்பமும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற முக்கியமான கருத்தை இந்த பாடம் தருகிறது.

அடிப்படை கேள்விகள்

பிரபஞ்சம் எப்படி தோன்றியது, உலகம் தானாக உருவானதா, ஜடப்பொருள்கள் எவ்வாறு உயிரினங்களாக மாறின என்பது போன்ற அடிப்படை கேள்விகள் மனித மனதை தொடர்ந்து ஆட்கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் மனிதன் கலையாத நிம்மதியை தேடிக்கொண்டிருப்பதுதான்.

முயற்சிகள் பல செய்தும் அடையமுடியாத பலன் ஒரு சிலசமயம் நாம் எதிர்பாராத சமயத்தில் தானாக கிடைக்கிறது. உண்மை உழைப்பும் ஊக்கமும் உள்ள அறிவாளிகள் ஒரு சிலர் வாழ்க்கையில் முன்னேற முடியாத போது அறிவில்லாத சோம்பேறிகள் பலர் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள். செயலுக்கும் விளைவுக்கும் (Input-output) இடையே உள்ள தொடர்பு புரியாத புதிராகவே உள்ளது. இது போன்ற அனுபவங்களை ஆராயும்பொழுது நாம் எல்லோரும் கடவுளின் விளையாட்டு பொம்மைகளா அல்லது நமது வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்ச்சிகளும் முன்கூட்டியே தீர்மானிக்க பட்டுவிட்டனவா என்பது போன்ற கேள்விகள் மனதில் தோன்றுகின்றன. இம்மாதிரி கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நாம் தொடர்ந்து செயல் புரிவது கடினமாக இருக்கிறது.

இது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு தங்கள் கொள்கைகளின் அடிப்படையில் மதங்களும் கோட்பாடுகளின் அடிப்படையில் அறிவியல் அறிஞர்களும் வெவ்வேறு பதில்களை அளிக்கிறார்கள். இவற்றில் நமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற ஒரு பதிலை சரியான பதிலாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறோம். ஆயினும் இந்த பதில்கள் நமக்கு திருப்தி அளிப்பனவாக இல்லை. அதனால்தான் நாம் இன்னமும் கலையாத நிம்மதியை நாடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலை முறைப்படி பயின்று புரிந்துகொண்டவர்கள் மட்டுமே இனி எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நிம்மதியாக இருக்கிறார்கள்.

வேதத்தை தவிர மற்ற மதங்களோ அறிவியலோ வகுத்த பாதையில் பயணிப்பவர்களுக்கு ஏன் முக்தி கிடைப்பதில்லை என்பதை இப்பொழுது ஆராயலாம்.

ஜடம் அல்லது அணுவை ஆதாரமாக கொண்ட உலகம்.

அணுக்கள் தானாக ஒன்றுடன் ஒன்று இணைந்து ஜடப்பொருள்கள் உருவாகி அதில் தற்செயலாக உயிர் தோன்றியது என்பது உண்மையானால் நாம் எதற்கும் காரணம் கேட்க கூடாது. ஏதோ எல்லாம் எப்படியோ நடக்கிறது என்ற மனப்பான்மையுடன் எவ்வித கேள்வியும் கேட்காமல் மிருகங்கள், பறவைகள் போன்ற மற்ற உயிரினிங்களை போல நாமும் நிம்மதியாக வாழலாம். ஆனால் நம் பகுத்தறிவு இதை உண்மை என ஏற்றுக்கொள்ளாது. எனவே நாம் நிலையான அமைதியை அடைவது என்பது நடக்கவே நடக்காது.

எதிர்காலம் மனிதனின் கையில்.

ஜடப்பொருளிலிருந்து தானாக உலகம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று நம்புபவர்களில் பலர் இந்த பிரபஞ்சத்தின் எதிர்காலத்துக்கு மனிதன் பொறுப்பேற்றுள்ளான் என்று நம்ப விழைகிறார்கள். மனிதன் நல்லவன் ஆனால் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்ற கூற்றுக்கு இவ்வுலகில் நடைபெறும் போர், தீவிரவாதிகளின் தாக்குதல் போன்ற நிகழ்வுகளே அத்தாட்சி.

பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து அதனுள் இருக்கும் அனைத்து தங்கத்தையும் அடைய நினைக்கும் முட்டாள்தனமான பேராசையுடன் மனிதன் இந்த வளமிக்க பூமியை சூறையாடி வருகிறான். அறிவியல் வளர்ச்சி ஆக்கபூர்வமான செயல்களுக்கு உதவுவதை விட மனித இனம் உள்ளிட்ட பெரும்பாலான உயிரினங்களை முழுதும் அழிக்கும் சக்தியை அதிகப்படுத்துவதில்தான் முனைந்துள்ளது.

இந்த நிலையில் மனிதன்தான் இவ்வுலகின் எதிர்காலத்துக்கு பொறுப்பாளி என்பது உண்மையென்றால் அது மிகுந்த அச்சத்தை கொடுக்க கூடிய ஒரு செய்தி. அறிவில்லாத சிறுகுழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்துவிட்டு அது சுடாது என்ற நம்பிக்கையுடன் நம்மால் எப்படி வாழமுடியும்? உலகத்தின் அழிவு எந்த நொடியிலும் நிகழலாம் என்ற பயத்தினுடன்தான் நம் வாழ்நாட்கள் நகரும்.

கடவுள்தான் ஆள்பவர்.

ஜடப்பொருள்களிலிருந்து தானாக உலகம் தோன்றியது என்ற கருத்தை ஏற்று கொள்ளாமல் கடவுள்தான் எங்கோ இருந்து நம்மை படைத்து ஆட்டுவிக்கிறார் என்று நம்புபவர்களுக்கும் நிம்மதி கிடைக்காது. கண்ணால் பார்க்க முடியாத கடவுளை திருப்தி படுத்த வேதத்தின் பொருள் புரியாத மதத்தலைவர்களின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து வாழ்வை துயரத்தில் கழிப்பவர்கள் பலர். ஒரு குருடன் மற்றொரு குருடன் கையை பிடித்து அழைத்து சென்றால் கீழே விழுவதன் வாய்ப்பு இருபங்காகிவிடும். அது போல கடவுளை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாவர்களின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து மூடநம்பிக்கையுடன் வாழ்நாளை கழிப்பவர்களால் நிரந்தர அமைதியை பேற முடிவதில்லை.

நாம் கோவிலுக்கு சென்று வரும் வேளைகளில் மன அமைதியை தருவது போல் தோன்றினாலும் கடவுள் நம்பிக்கை நமக்கு முழுநிம்மதியை தருவதில்லை.

நான் பரமன்

இதுதான் வேதத்தின் முடிவு. நான் பரமனென்று அறிந்துகொண்டால் மட்டுமே நாம் முக்தி அடைவோம். இரவில் படுக்கச்செல்லும் பொழுது அறை கதவை தாழிட்டுவிட்டு தனியாக தூங்கும் ஒருவன் காலையில் விழிக்கும்பொழுது கதவு முழுவதுமாக திறந்திருப்பதை பார்த்தால் என்ன நினைப்பான். நான் திறக்காமல் கதவு எப்படி தானாக திறந்து கொண்டது என்று அவன் தீவிரமாக யோசித்து, திருடன் வெளியிலிருந்து கதவை திறந்திருப்பானோ அல்லது எதோ பேய், பிசாசு அறையில் இருந்திருக்குமோ என்று பல்வேறு முடிவுகளை ஆராய்ந்து கடைசியில் நான் தான் என்னையறியாமல் தூக்கத்தில் நடந்து போய் கதவை திறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டும். வேறு எந்த முடிவுக்கு வந்தாலும் அவனுக்கு நிம்மதி கிடைக்காது.

எனக்கு தெரியவில்லையே என்பதால் நானக இருக்க முடியாது என்று முடிவெடுக்க கூடாது. உலகை உருவாக்கியது நாம்தான். அது தெரியாமல் நான் இல்லை என்று தீர்மானம் செய்துவிட்டால் வாழ்நாழ் முழுவதும் சரியான பதிலை தேடி அலைந்து கொண்டிருப்போம்.

முடிவுரை :

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய். நாம் கண்ணால் காணும் உலகத்தின் அடிப்படையிலும் அறிவியல் அறிஞர்களின் கூற்றை கேட்பதன் அடிப்படையிலும் உலகம் தானாக தோன்றியது என்று முடிவு செய்வது தவறு. அறிவியல் ஆராய்ச்சியும் புலன்களின் வழியே கிடைக்கும் செய்திகளின் ஆதாரத்தில்தான் செயல்படுகிறது. காண்பதெல்லாம் பொய் என்பதற்கு இந்த உலகம் இருப்பது போல் காணப்பட்டாலும் அது பொய் என்பதுதான் அர்த்தம். எனவே அறிவியல் கண்டுபிடுப்புகள் இந்த பொய்யான உலகத்தின் பொய்யான ஒரு பகுதி. பொய்களை விட்டு உண்மையை வெளியே தேட வேதம் மட்டுமே நமக்கு உதவும்.

உணர்வுதான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்றால் அந்த உணர்வு நமற்கு அப்பாற்பட்டதல்ல.

தண்ணீரில் தெரிவது தன்னுடைய பிம்பம்தான் என்று தெரியாமல் 'எதிரியை' கொல்வதற்காக கிணற்றுக்குள் குதித்த சிங்க ராஜாவை போல் வேதம் குறிப்பிடும் உணர்வு நான்தான் என்று தெரிந்து கொள்ளாமல் வேதத்தை மறுத்து போராடுவது நம்மை மீளாதுயரத்தில் ஆழ்த்தும். வேதத்துக்கு வேறான திசையில் உண்மையை தேடி யாரும் இதுவரை முழு அமைதியை அடையவில்லை என்பதிலிருந்தே அவை தவறான திசைகள் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நான்தான் இந்த பரந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். என்னுடைய மாயாசக்தியால்தான் இந்த உலகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் மரணமற்று என்றும் நிரந்தரமாக முழுஅமைதியுடனும் குறையாத இன்பத்துடனும் இருப்பவன் என்று தெரிந்து கொண்டு முக்தியடைவது என்பது வேதத்தை படிப்பதைதவிர வேறு எவ்வகையிலும் சாத்தியமில்லை.

பயிற்சிக்காக :

1. அடிப்படை கேள்விகள் என்றால் என்ன?

2. முழுஅமைதிக்கும் அடிப்படை கேள்விகளுக்கும் என்ன தொடர்பு?

3. ஏன் வேதத்தைதவிர மற்ற பாதைகள் நமக்கு முக்தியை தரா?

சுயசிந்தனைக்காக :

1. தீரவிசாரிப்பது என்றால் என்ன?