Tuesday, May 18, 2010

பாடம் 061: வெளி நித்தியமானது அல்ல (பிரம்ம சூத்திரம் 2.3.1-7)


தொடர்ந்து மாறும் பிரபஞ்சம் தோற்றம்-மறைவு என்ற கட்டுகோப்புக்கு உட்பட்டது என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் வெளி (space) என்பது எப்பொழுதும் இருப்பது என்ற தவறான கொள்கையிலிருந்து அறிவியல் உலகம் முற்றிலும் வெளிவரவில்லை. பிக் பேங்க் (Big Bang)ற்கு முன் வெளி இருந்திருக்கவில்லை என்ற சமீபத்திய கண்டுபிடிப்பில் இன்னும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. ஆனால் வெளி என்பது பரமனிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொருள் என்ற உண்மையை வேதம் தெளிவாக எவ்வித முரண்பாடுமில்லாமல் குறிப்பிடுவதை இப்பாடம் விளக்குகிறது.

வெளி என்ற பொருளின் தோற்றம்

பரமன் மட்டும்தான் நித்தியமானவன். பிரபஞ்சம் தோன்றி மறைவது. நடராஜனின் கையில் உள்ள உடுக்கையை சொடுக்கிவிட்டவுடன் ஏற்பட்ட ஓம் என்ற பிரணவ மந்திரத்திலிருந்து பிரபஞ்சத்தின் முதல் அம்சமாக வெளி தோற்றுவிக்கப்பட்டது என்கிறது வேதம். ஒலியிலிருந்து வெளி உருவானது என்பது பௌதீக ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிக் பேங்க் (Big Bang) ன் பொழுது தோன்றி இன்று வரை வான வெளியில் தொடர்ந்து கேட்டுகொண்டிருக்கும் இந்த ஒலியை பற்றிய முழு அறிவை பெற அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டிருக்கின்றன.

வெளி என்பது ஒன்றுமில்லாத வெற்றிடம் (void) என்ற தவறான கருத்திலிருந்து அது ஒரு பொருள் (substance) என்ற வேதம் கூறும் உண்மையை தீவிர ஆராய்ச்சிக்கு பின் அறிவியல் வழிமொழிந்துள்ளது.

நீளம், அகலம், உயரம் மற்றும் நேரம் என்ற நான்கு பரிமாணங்களை உள்ளடக்கியது வெளி. நேரம் என்பது வெளியின் ஒரு பரிமாணம் என்பதால் வெளி-நேரம் (space-time) என்பது பிரிக்க முடியாத ஒரே பொருள். ஐன்ஸ்டினின் ஆராய்ச்சி முடிவு வேதத்தின் இந்த தத்துவத்தை நிரூபித்துள்ளது.

ஆக இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய வெளி என்ற பொருள் முதலில் படைக்கப்பட்டது.

பிரபஞ்சத்தின் ஆதாரம் வெளி

பிரபஞ்சம் என்பதை ஒரு உருளைக்கிழங்கு மூட்டைக்கு ஒப்பிடலாம். எப்படி ஒரு சாக்கு பை அனைத்து கிழங்குகளையும் ஒரிடத்தில் சேர்த்து வைத்திருக்கிறதோ அதேபோல் வெளி அனைத்து சூரிய குடும்பங்களையும் (galaxies) தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. சாக்கு பை போல வெளியும் ஒரு பொருள். உருளைக்கிழங்கு மூட்டையை உருவாக்க கூலியாள் முதலில் கையாளும் பொருள் கிழங்குகள் அல்ல. சாக்கு பைதான். அதுபோல பிரபஞ்சத்தை உருவாக்க முதல் பொருளாக வெளி உருவாகி அது மற்ற அனைத்து பொருள்களுக்கும் நிகழ்வுகளுக்கும் இடம் அளித்துக்கொண்டிருக்கிறது.

முதலில் வெகு சிறியதாக இருந்த வெளி தொடர்ந்து கடந்த பதினான்கு பில்லியன் வருடங்களாக விரிவடைந்து வருகிறது. தற்போது அதன் விட்டம் 280 கோடி ஒளி-வருடம் (light-year) என்று அறிவியல் உலகம் கணித்திருக்கிறது. தொடக்கம் முதல் இன்று வரை தொடர்ந்து விரிவடைந்து அனைத்து பொருள்களுக்கும் காலத்துக்கும் இடமளித்துக் கொண்டிருக்கும் வெளி, பிரளய காலத்தில் சுருங்கி பிரபஞ்சம் மறையும் பொழுது கடைசி பொருளாக மறைந்து இறைவனிடம் ஐக்கியமாகிவிடும்.

வெளியின் தொடக்கமும் மறைவும்

கடவுள்தான் பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும் முதல் படியாக வெளியை உருவாக்கினார் என்பதை அறிவியல் உலகம் ஒத்துக்கொள்ளாவிடினும் வெளியின் தோற்றத்திற்கு முன் என்ன இருந்தது என்பது பற்றி விஞ்ஞானிகள் தரும் விளக்கம் கடவுளை தெளிவாக சித்தரிக்கிறது.

பரமனை நாம் எல்லோரும் எப்பொழுதும் அனுபவித்தாலும் பரமன் இருக்கின்றான் என்ற அறிவு முறையாக வேதத்தை படித்தாலன்றி நமக்கு ஏற்படுவதில்லை. எனவே அறிவியல் ஆய்வுகள் பரமனின் இருப்பை தெளிவாக காட்டிய பின்னும் விஞ்ஞானிகள் பரமனை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றிய ஆய்வுகள் பல பிக்பேங்க்(Big Bang)ற்கு முன் இருந்ததை புலன்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு பரிமாணமற்ற புள்ளி (dimensionless singularity) என்கிறார்கள். அது தான் பரமன். ஆனால் அறிவியல் அறிஞர்கள் அதை அறிவற்ற ஜடப்பொருளாக உருவகம் செய்து தங்களது அறிவின் ஆதாரத்தை மறுத்து வருகிறார்கள்.

எனவே அவர்கள் ஆகாயத்தின் அளவற்ற அளவை தங்களோடு ஒப்பிட்டு தாம் இந்த பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒரு அற்பமான சிறுதுளி என்ற தவறான தாழ்வு மனப்பான்மை கொண்டுள்ளார்கள். உண்மையில் நான்தான் அறிவு மயமான பரமன். இந்த பரந்த வெளி என்னால் என்னிடமிருந்து உருவாக்கப்பட்டது என்ற சரியான விளக்கத்தை வேதம் நமக்களிக்கிறது.

இன்னும் ஆயிரம் கோடி வருடங்களுக்கு பின் இந்த பிரபஞ்சம் விரிவடைவது நின்று சுருங்க ஆரம்பித்து அனைத்து சூரிய குடும்பங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடைந்து இறுதியில் பரிமாணமற்ற புள்ளி (dimensionless singularity)யில் முடிவடையும் என்பது ஒரு அறிவியல் கருத்து. பிரளயத்தின் பொழுது கடைசியில் அழிக்கப்படவிருப்பது நீளம், அகலம், உயரம் மற்றும் நேரம் ஆகிய நான்கு பரிமாணங்கள் கொண்ட வெளி என்ற கருத்தை வேதம் தெளிவாக கூறுகிறது.

தோற்றத்திற்கு முன் அல்லது மறைவுக்கு பின் என்ற வார்த்தைகள் வெளி என்ற சொல்லுடன் பொருந்தா. ஏனெனில் காலம் என்பது வெளியின் ஒரு பரிமாணம். எனவே வெளியின் தோற்றத்திற்கு 'முன்' என்றோ 'பின்' என்றோ குறிப்பிட முடியாது.

வெளி ஒரு மாயை

பிரபஞ்சம் முழுவதும் இருப்பது போல் தோற்றமளிக்கும் ஒரு மாயை என்ற உண்மையை வேதம் விளக்கியிருப்பதால் பிரபஞ்சத்தின் முதல் அங்கமான வெளியும் மாயை என்று புரிந்து கொள்ளலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) வெளியின் விளிம்புக்கு மனிதனால் செல்லவே முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார். வெளி தொடர்ந்து விரிவடைவதால் ஐன்ஸ்டின் இந்த முடிவுக்கு வந்திருந்தாலும் வெளி ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் இதன் சரியான விளக்கம்.

வெளி என்பது இரண்டு பொருள்களுக்கிடையே இருக்கும் தொலைவு என்ற தவறான அறிவியல் விளக்கத்தை திறுத்தியவர் ஐஸக் நியூட்டன் (Isaac Newton). பொருள்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளி என்பதன் இருப்பு பாதிக்கப்படுவதில்லை என்று அவர் நிறுவினார்.

இம்மானுவேல் கான்ட் (Emmanuel Kant) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி மேலும் ஒரு படி சென்று காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கிடையே இருக்கும் இடைவெளி என்ற கருத்தை திருத்தி அது நமது வாழ்வின் அனுபவங்களை சித்தரிக்க நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு அவசியமான கருவி என்கிறார்.

இவ்விரு அறிஞர்களின் கருத்து வெளி என்பதை பற்றி வேதம் கூறும் கருத்துடன் மிக ஒத்துப்போகின்றது. வெளி-நேரம் (space-time) என்பது மனித மனதின் கற்பனை. நமது ஐந்து புலன்களும் இல்லாத உலகை இருப்பது போல் காண்பிப்பதை நமது மனது ஏற்றுகொள்வதால் ஏற்பட்ட விளைவுகளில் வெளியும் (நேரமும்) ஒன்று.

எனவே அனைத்து பொருள்களையும் நிகழ்வுகளையும் தனித்தனி இடத்திலும் காலத்திலும் சித்தரித்து இல்லாத உலகை இருப்பது போல் காட்டும் மாயா சக்தியின் முதல் வெளிப்பாடு வெளி என்பதாகும்.

மேற்கத்திய உலகம் வெளி என்பதை ஒரு பொருள் என்று கண்டுபிடித்து அதன் தன்மைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற அனைத்து பொருள்களைப்போல வெளியும் உண்மையில் இல்லாமல் ஆனால் இருப்பது போன்ற மாயத்தோற்றமளிக்கும் ஒரு பொருள் என்ற தத்துவத்தை வேதம் தருகிறது.

முடிவுரை :

பரமனின் மாயாசக்தியின் முதல் வெளிப்பாடான வெளி என்ற பொருள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்று காற்று, நெருப்பு, பின் நீர் மற்றும் நிலம் என்ற பஞ்சபூதங்களாக உருவாகியுள்ளது. இந்த பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு உருவானது தான் அனைத்து உயிரினங்களையும் ஜடப்பொருள்களையும் உள்ளடக்கிய இந்த பரந்த பிரபஞ்சம்.

பிரபஞ்சம் தொடர்ந்து மாற்றமடையும் ஒரு நிலையில்லாத மாயை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நமது உடலும் மனதும் மாயைதான். ஆனால் ஐம்புலன்கள் சேகரித்து தரும் தகவல்களை ஆதாரமாக கொண்டு இல்லாத உலகத்தை இருப்பதாக நம்புவதற்கு பரமனை பற்றிய நமது அறியாமைதான் காரணம்.

தொடர்ந்து நிகழும் மாற்றத்தில் காலம், இடம், பொருள் என்ற பிரிவுகளை நமது மனம் கற்பனை செய்துகொண்டுள்ளது.

வேதத்தின் இந்த முரண்பாடற்ற தத்துவங்களை வெவ்வேறு அறிவியல் ஆய்வுகளும் தத்துவ ஞானிகளும் சந்தேகமற நிரூபித்திருந்தாலும் தவறான கருத்துக்களுடன் அவை கலந்து உண்மை எது பொய் எது என்று கண்டுபிடிக்க முடியாமல், திக்குத்தெரியாத காட்டில் தொலைந்து போனவர்கள் இங்கும் அங்கும் அலைபாய்வது போல், பொதுமக்கள் தொடர்ந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக :

1. வெளி பற்றிய இரண்டு கண்டுபிடிப்புகளை விவரி.

2. வெளியில் அடங்கியுள்ள நான்கு பரிமாணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. வெளியை பற்றி அறிந்து கொள்ள கடவுள் நம்பிக்கை அவசியமா?