Friday, May 14, 2010

பாடம் 060: கடவுள் நம்பிக்கையின்மை தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.42-45)


மனித குலத்தின் துவக்கத்திலிருந்தே பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக கடவுள் இருந்து வருகிறார். ஆனால் அதேசமயத்தில் கடவுள் இல்லை என்ற கொள்கையுடைய ஒரு சிலரும் ஆரம்பகாலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். கடவுளை பிரார்த்தித்து கேட்டது கிடைக்காத காரணத்தால் கடவுள் இல்லை’ என்ற கட்சிக்கு கட்சித்தாவல்கள் நடப்பது போல கடவுள் நம்பிக்கை இல்லாத பலர் வாழ்வில் பல சாதனைகள் நிகழ்த்திய பின் தங்கள் வெற்றி தோல்விகளின் காரணங்களை ஆராய்ந்து ‘கடவுள் இருக்கிறார்’ என்ற முடிவுக்கு வருவதும் உண்டு.

இந்த பரந்த பிரபஞ்சம் நம் முன் காட்சியளித்து கொண்டிருப்பதால் இதை நிர்மாணித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். உலகம் எப்படி உருவானது என்று நமக்கு தெரியாத காரணத்தால் மனிதன் கடவுளை உருவாக்க தேவையில்லை, அறிவியல் மூலம் நாம் அனைத்தையும் ஒரு நாள் அறிந்து கொள்ளாலாம் என்போர் கடவுள் இல்லை என்று நம்புபவர்கள். இரு தரப்பினரும் எவ்வித தீவிர ஆராய்ச்சியும் செய்யாமல் உண்டு என்றும் இல்லை என்றும் மூட நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். இதனாலேயே வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்றாற்போல் கட்சித்தாவல்கள் நடந்து வருகின்றன.

'கடவுள் உண்டு' என்ற மூட நம்பிக்கையை ஒப்பிடும்பொழுது 'கடவுள் இல்லை' என்ற மூட நம்பிக்கை தவறானது என்றும் கடவுள் மறுப்பு கொள்கையை (Atheism) பின்பற்றுபவர்களால் எவ்வாறு வாழ்வின் குறிக்கோளை அடைய முடியாது என்பதையும் இப்பாடம் விளக்குக்கிறது.

கடவுளின் அவசியம்

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை. மனிதன் எப்பொழுதும் இன்பமாக இருக்கவும் துன்பங்களை முழுதும் தவிர்க்கவும் விழைகிறான். இதுதான் அனைத்து மனிதர்களின் முடிவான குறிக்கோள். ஆனால் இந்த ஆசை எல்லா சமயங்களிலும் நிறைவேறுவதில்லை. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பல சமயங்களில் துன்பத்தை தவிர்க்க முடிவதில்லை. அம்மாதிரி நேரங்களில் இறைவன் இருக்கின்றானா என்ற சந்தேகம் கடவுளை நம்புபவர்களுக்கும் என்னுடைய முயற்சிகளுக்கு பலனில்லாமல் போவதற்கு கடவுள் நம்பிக்கையில்லாததுதான் காரணமா என்று கடவுளை மறுப்பவருக்கும் தோன்றுவது இயற்கை.

கடவுள் மீது ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள் என்ன கஷ்டம் வந்தாலும் கடவுள் காட்டிய வழி என்று வாழ்வு பயணத்தை தொடருவார்கள். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பது அவர்களின் நம்பிக்கை. பகுத்தறிவும் அறிவியல் ஞானமும் உள்ளவர்களால் இவ்வாறு இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக வாழ முடியாது. காரண காரிய அறிவால் ஆராய்ந்து அனைத்து நிகழ்வுகளுக்கும் முழுமுதற்காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளும் துடிப்பு அவர்களிடம் அடங்குவதேயில்லை.

முப்பத்தெட்டு வயதில் எவ்வித கெட்டபழக்கங்களுமில்லாத ஆரோக்கியமான குடும்பத்தலைவன் ஒருவன் காலை உடற்பயிற்சி செய்யும்பொழுது மரணமடைந்தால் ஏன் எப்படி என்ற கேள்விகள் அனைவரையும் ஆட்டுவிக்கும். மருத்துவர் பரிசோதித்து மாரடைப்பால் மரணம் ஏற்பட்டது என்று கூறினாலும் ஏன் மாரடைப்பு ஏற்பட்டது என்ற கேள்வி தொடர்கிறது. இந்த தொடர்கேள்விகளுக்கு விதியென்றோ, கர்ம பலன் என்றோ, ஆண்டவன் கட்டளையென்றோ ஏதாவது ஒரு மதச்சார்புடைய விளக்கம் மட்டும்தான் இறுதி பதிலாக இருக்க முடியும். இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாமல் அவன் தினமும் உணவில் நெய் சேர்த்து கொண்டதாலேயே மரணமடைந்தான், எனவே நாம் இனிமேல் நெய் சாப்பிடகூடாது என்று முடிவெடுப்பது அறிவீனம்.

படைத்தவன் யார்?

கடவுள் மனிதனை படைத்தானா அல்லது மனிதன் கடவுளை படைத்தானா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியவேண்டுமென்றால் முதலில் கடவுள் இருக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். கடவுளை இல்லை என்று மறுத்துவிட்டால் வாழ்வின் நிகழ்வுகளுக்கு முடிவான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை நாம் இழந்து விடுவோம்.

ஒரு கூடைக்குள் இருக்கும் மொத்த மாம்பழங்களில் பாதியை முதல் மகனுக்கும் மீதியில் பாதியை இரண்டாம் மகனுக்கும் கொடுத்து விட்ட பிறகு மீதி இருப்பது பத்து மாம்பழங்கள் என்றால் மொத்தம் இருந்தது எத்தனை என்பது போன்ற கணக்குகளுக்கு எளிதாக விடை கண்டுபிடிக்க மொத்த மாம்பழங்களின் எண்ணிக்கையை X என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்லி கொடுக்க ஆரம்பிக்கும்பொழுது அது எப்படி X ஆக இருக்க முடியும் என்ற குறுக்கு கேள்விகளை கேட்டால் கணித அறிவை பெற முடியாது. X என்பது உண்மையில் இல்லாமல் இருந்தாலும் அது கொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலை பெற உதவுகிறது. 'மொத்த மாம்பழங்களின் எண்ணிக்கை = X' என்று ஆசிரியர் கரும்பலகையில் எழுத ஆரம்பித்ததும் X என்பது ஒரு எண் அல்ல, இல்லாத எண்ணை இருப்பதாக நான் நம்பமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது போல்தான் இறைவன் இல்லை என்பதும்.

கண்ணுக்கு தெரியாத பரமனை நமக்கு அறிவிக்க புலன்களால் அறியக்கூடிய உலகத்தை படைத்தவன் ஆண்டவன் என்று வேதம் நமக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கிறது. கடவுளை மறுத்துவிட்டால் நம்மால் தொடர்ந்து பாடங்களை படிக்க முடியாது.

கணித கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க Xன் உதவி அவசியமாயிருப்பது போல வாழ்க்கையின் புதிர்களை விடுவிக்க கடவுள் அவசியம். இதை அறியாதவர்கள் கடவுளை ஒரு புரியாத புதிர் என்று எண்ணி கடவுளே இல்லை என பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையால் பாதிக்கப்படுவது இவர்கள் மட்டுமே. படைத்தவன் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களாலேயே என்றும் குறையாத இன்பத்தை பெற முடியும்.

முடிவுரை :

இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதை முறையாக ஆராய்ந்து முடிவு செய்யாமல் இல்லை என்று கூறுவது தவறு. இறைவன் இருக்கிறான் என்பதை எப்படி அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாதோ அதே போல் இறைவன் இல்லை என்பதையும் அறிவியலால் நிரூபிக்க முடியாது. நீருபணம் இல்லாமல் கடவுள் நம்பிக்கையின்மை என்ற கொள்கையை பின்பற்றுவது தவறு.

கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் அவர் யார், எங்கிருக்கிறார் என்ற கேள்விகளை கேட்பதில் தவறு இல்லை. முறையாகவும் தொடர்ச்சியாகவும் இறைவனை பற்றி ஆராய்ந்தால் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு தெளிவான பதில் நமக்கு கிடைக்கும்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. வேதத்திற்கு மாறாக இன்றைய வழக்கில் இருந்து வரும் மற்ற கருத்துக்களும் மதங்களும் ஏன் தவறானவை என்று அவற்றில் உள்ள குறைபாடுகளையும் முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டியபின் வேதம் மட்டுமே முறையான விளக்கத்தை கொடுத்து முக்தியை தரவல்லது என்ற நிரூபணத்துடன் இரண்டாம் அத்தியாயத்தின் இந்த இரண்டாம் பகுதி இவ்வளவில் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. கடவுளை நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

2. கடவுள் நம்பிக்கையின்மை ஏன் தவறானது?

சுயசிந்தனைக்காக :

1. கடவுள் நம்பிக்கையில்லாமல் இருப்பவர்களால் குறையாத இன்பம் என்ற குறிக்கோளை அடைய முடியுமா?