Monday, May 10, 2010

பாடம் 059: அறிய முடியாதென்பது தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.37-41)

பல்வேறு மதங்களின் தத்துவுங்களை பயின்றோ அறிவியலின் துணையுடனோ கடவுள் யார், இவ்வுலகம் எவ்வாறு உருவானது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும் முயற்சியில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மைகள் மனித மனதின் அறியும் சக்திக்கு அப்பாற்பட்டது என்ற தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி என்ற தனிமனிதரின் கருத்தை அடிப்படையாக கொண்டு 'உண்மை அறியமுடியாதது' (Agnosticism) என்ற ஒரு கொள்கை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்தது.

அறிவியல் ஆதாரமற்ற எதையும் மறுப்பது, மதங்களின் முடிவுகளை சந்தேகிப்பது, எதிலும் நம்பிக்கை கொள்ளாமல் பிரபஞ்சத்தின் இரகசியங்களை 'யாராலும் தெரிந்து கொள்ள முடியாது' என்ற கொள்கையை பின்பற்றும் அறிய முடியாதென்போரின் (Agnostics) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அறிவியலின் ஆதிக்கம் அதிகமாக அதிகமாக மதங்களின் தத்துவங்களை நம்பிக்கையின் பெயரில் ஏற்றுக்கொள்வதென்பது குறைந்து கொண்டு வருகிறது. சிறுவயதிலிருந்து பெற்றோரின் வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலும் கல்வியறிவும் சுயமாக சிந்திக்கும் சக்தியும் அதிகரித்த பின் மத தத்துவங்களில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி இளைஞர்கள் பலர் அறியமுடியாதென்போர் (Agnostics) பட்டியலில் சேர்ந்து வருகிறார்கள்.

இவர்களின் கொள்கை தவறு என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

பரமன் வாக்குக்கும் மனதுக்கும் அப்பாற்பட்டவன் என்ற வேதத்தின் கூற்றையும், ஒன்றுமேயில்லை என்ற புத்தமதத்தின் கொள்கையையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தவறாக மேற்கோள் காட்டி கிருத்துவமதம், இஸ்லாமிய மதம் போன்றவை சித்தரிக்கும் கடவுளை மறுப்பது தவறு. மதங்களையும் மறுப்பதால் மதங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை. சர்வ வல்லமை பொருந்திய கடவுளை கிருத்துவமதமும் உருவமற்ற பரமனை இஸ்லாமிய மதமும் மிக சரியாக விளக்குவதை புரிந்துகொள்ள முயலாமல் எல்லாவற்றையும் மறுப்பதால் நஷ்டமடைவது மறுப்பவர்கள் மட்டுமே.

நம்பிக்கை என்பது அறிவின் முதல் படி. ஆசிரியர் மீதும் அவர் சொல்லித்தரும் பாடங்கள் மீதும் ஆரம்பத்தில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே முடிவில் அந்த நம்பிக்கை அறிவாக மலரும். வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு ஆசிரியரை கிண்டல் செய்து காலத்தை கழிக்கும் பணக்கார மாணவர்கள் தங்கள் அரைகுறை அறிவையும் செல்வாக்கையும் பயன்படுத்தி படிப்பு என்பதே அனாவசியம் என்ற மனோபாவத்தை அனைவரிடமும் ஏற்படுத்த முனைவது போல எந்த ஒரு மதத்தின் தத்துவத்தையும் முழுமையாக கற்றுத்தேறாமல் அனைத்தையும் நிராகரிப்பது அவர்களுக்கும் அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் பேரிழைப்பை ஏற்படுத்தும்.

பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சி ஆகியவை மனிதனுக்கு குறையாத இன்பத்தையும் தடையில்லாத நிம்மதியையும் தர முடியாது என்ற நிலையில் மதங்களின் துணையையும் இழப்பதால் 'அறியமுடியாது' என்ற கொள்கையை பின்பற்றுவோர்களுக்கு விடிவுகாலமே கிடையாது.

அறியமுடியாதென்பது ஏன் தவறு என்பதை பின்வரும் காரணங்கள் விளக்குகின்றன.

1. அறிய முடியாதென்பது ஒரு மூடநம்பிக்கை: அறிய முடியாது என்று இவர்கள் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனக்கு புரியாவிட்டால் யாருக்கும் புரியாது என்பது முட்டாள்தனத்தின் எல்லை. யாராலும் அறிய முடியாது என்ற கொள்கையை முன் வைக்க முறையான ஆராய்ச்சி அவசியம். அதை விடுத்து ஒரு துறையைப்பற்றி எதையும் தெரிந்து கொள்ளாமல் அதை மறுப்பது அறிவியல் அறிவுக்கு பொருந்தாத செயல்.

2. அறிய முடியாதென்பது தவறான முடிவு: அறிவு என்பது யாது, அறிவை பெறும் கருவிகள் யாவை, அவற்றை பயன்படுத்தி தாமாக அறிவை பெற முடியுமா அல்லது ஆசிரியரின் தேவை உள்ளதா என்பது போன்ற அனைத்து கேள்விகளையும் முறையாக ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் விளைவாக அறிய முடியாது என்று கூறாமால் எந்த முயற்சியும் எடுக்காமல் அறியமுடியாது என்று முடிவுகட்டுவது தவறான முடிவு.


வேதம் கூறும் மனதுக்கும் வாக்குக்கும் எட்டாதவன் என்ற தத்துவத்தை முறையாக கற்று தேர்ந்தால் அறிய முடியாததை அறிய முடியாது என்று அறிவது அதை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும் என்பது விளங்கும். முறையான கல்வியின் துணையில்லாமல் அறியமுடியாது என்று கூறுவது தவறு.

3. அறிய முடியாதென்பது அறிவுக்கு எதிர்பதம்: அறியவே முடியாது என்பதை உண்மையில் நாம் ஒப்புக்கொண்டால் அந்த நிமிடம் முதல் நமது தேடல் முழுவதுமாக நிற்க வேண்டும். தங்களை அறியமுடியாதோர் பட்டியலில் இணைத்துக்கொண்டு அதேநேரத்தில் என்னால் முடிந்த அளவு அறிந்து கொள்ள முயற்சிப்பேன் என்பது ‘இங்கு புதையல் எதுவும் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனாலும் என்னால் முடிந்த அளவு தோண்டி ஏதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பதில் எவ்வித தவறுமில்லை’ என்று சொல்வதற்கு சமம்.

4. அறிய முடியாதென்பது அஸ்திவாரம் இல்லாத கட்டிடம்: கிருத்துவ மதம் ஏசுநாதர் காட்டிய வழியிலும் இஸ்லாமிய மதம் குரானை பின்பற்றியும் வளர்ந்து வருகின்றன. அறியமுடியாதென்போருக்கு இது போல எவ்வித ஆதாரமுமில்லை. தன்னுடைய சொந்த கருத்தை வெளியிட ஹக்ஸ்லி உருவாக்கிய ஒரு சொல்லுக்கு 'கொள்கை' என்ற பெயரிட்டு அதை பின்பற்ற முயல்வது அஸ்திவாரம் இல்லாமல் பல மாடி கட்டிடம் கட்ட முனைவதற்கு ஈடாகும்.

5. மேலும், மதங்கள் கூறிய கருத்துக்களை முற்றிலும் உணர்ந்து கொண்டு 'முற்றுணர்ந்தோன்' என்ற நிலையில் இருக்கும் பல்வேறு ஞானிகளும் அவதாரங்களும் அறியமுடியாது என்ற கொள்கை தவறு என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக காண்பிக்கின்றனர்.

தேறியவர்கள் பலர் இருக்கும்பொழுது, தேர்வில் தோற்றவர்கள் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு விடைகளே இல்லை என்று கூறுவது எப்படி தவறோ அதுபோலவே அறியமுடியாதோர் என்பவர்களின் கொள்கையும் தவறு.

முடிவுரை :

வேதியியல் பாடங்கள் தவறாக புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு வேதியியல் வல்லுனரால் மட்டுமே சுட்டிக்காட்ட முடியும். வேதியியல் பற்றிய அரைகுறை ஞானம் உள்ள ஒருவருக்கு இத்தகைய மறுப்பு அறிக்கையை முன்மொழிய எவ்வித தகுதியுமில்லை. அதே போல் மத தத்துவங்களை முறையாக ஒரு ஆசிரியரின் துணையுடன் முழுவதும் கற்ற பின்னரே அதை பற்றி அபிப்பிராயம் கூற ஒருவருக்கு அருகதை ஏற்படும். மதங்கள் கூறும் தத்துவங்களை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு தவறாக அர்த்தம் செய்து கொண்டு பிரபஞ்சம் உருவானது எப்படி என்பதை யாராலுமே எப்பொழுதுமே தெரிந்து கொள்ள முடியாது என்று கூறுவது முற்றிலும் தவறு.

பயிற்சிக்காக :

1. அறியமுடியாதென்பவர்களின் கொள்கை என்ன?

2. அவர்களின் கொள்கை தவறு என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. அறியமுடியாது என்று சரியாக கற்று தேர்ந்தால் வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை ஏன் என்று கேள்வி கேட்காமல் சமபுத்தியுடன் ஏற்றுக்கொள்வது சாத்தியம்.‐ இது சரியா?