Monday, May 3, 2010

பாடம் 056: புத்த மதம் தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.18-27)


புத்தர் முறையாக வேதத்தை படித்தபின் இந்த துயரமான வாழ்விலிருந்து விடுதலை அடைவது எப்படி என்ற ஞானத்தை போதிமரத்தடியில் பெற்று மக்களுக்கு எடுத்து சொன்னார். அவரது உபதேசங்களை அடிப்படையாக கொண்டு தொடங்கிய புத்தமதம் இன்று உலகில் நான்காவது பெரிய மதமாக வளர்ந்துள்ளது. இதன் கொள்கைகள் எவ்வாறு தவறானவை என்றும் அவற்றை பின்பற்றி ஏன் முக்தியடைய முடியாது என்றும் இந்த பாடம் விளக்குகிறது.

மறுபிறப்பு, கர்ம பலன் போன்ற பல முக்கியமான தத்துவங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் இந்து மதமும் புத்த மதமும் சகோதர மதங்கள் என்று கருதப்படுகின்றன. ஆயினும் புத்தமதம் பின்வரும் விதங்களில் இந்து மதத்திலிருந்து வேறுபடுகிறது. இந்த வேற்றுமைகள் என்னென்ன என்றும் அவை ஏன் தவறானவை என்பதையும் இப்பொழுது ஆராயலாம்.

வேற்றுமை 1: சூனியவாதம்

உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை ஏற்றுக்கொண்டிருந்தாலும் இந்த உலகின் ஆதாரம் என்று உண்மையில் ஒன்றுமேயில்லை என்கிறது புத்தமதம். உண்மையை அடிப்படையாக கொள்ளாமல் ஒரு பொய்யை சொல்ல முடியாது. ஐந்து புலன்கள் மூலமாகவோ அறிவியல் பூர்வமாகவோ அறியமுடியாது என்ற காரணத்தால் பரமனை இல்லை என்று சொல்ல முடியாது.

சூனியம்தான் இருக்கிறது என்ற வாக்கியத்திலேயே முரண்பாடு உள்ளது. இருப்பதை சூனியமென்று புத்தமதமும் பரமனென்று வேதமும் சொல்கிறது. வார்த்தையில்தான் வேறுபாடே தவிர பொருளில் எவ்வித வேற்றுமையும் இல்லை. இதை புரிந்து கொள்ளாமல் சூனியம் என்பதற்கு ஒன்றுமேயில்லை என்று பொருள் சொல்வது 'நான் இல்லை' என்று சொல்வதற்கு சமம்.


வேற்றுமை 2: வாழ்க்கை துன்பகரமானது

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் துன்பத்திற்கு வித்திடுகிறது என்ற காரணத்தால் வாழ்வு துன்பகரமானது என்று முடிவெடுப்பது தவறு. வாழ்வு இன்பமயமானதா அல்லது துன்பகரமானதா என்பது நம் பார்வையை பொறுத்தது. உலகே மாயை. இருப்பது நான் மட்டும்தான் என்ற உண்மை புரிந்துவிட்டால் உலகில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாம் சரியான பார்வையில் பார்க்க முடியும். அதன் பின் வாழ்வு துன்பம் கலப்பற்ற இன்ப மயமானது என்று புரியும்.

வாழ்வே துன்பகரமானது என்று கூறுவது, மரணமடைந்தால்தான் பிறப்பு-இறப்பு-மறுபிறப்பு என்ற பிறவிச்சுழலிருந்து விடுபட முடியும் என்ற தவறான செய்தியை அளிக்கிறது. துன்பமான வாழ்வை விட்டு எப்பொழுதும் இன்பமான வாழ்வை அடைவது என்பது உயிரோடு இருக்கும்பொழுது மட்டும்தான் சாத்தியம். எனவே முக்தியடையும் வரை வாழ்க்கை துன்பகரமானது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

வேற்றுமை 3: ஆசையே துன்பத்திற்கு காரணம்

ஆசைக்கு காரணம் உலகப்பொருள்களில் இன்பம் இருக்கிறது என்ற தவறான எண்ணம்தான். நான்தான் ஆனந்தத்தின் உண்மை சொரூபம் என்ற அறிவுடன் ஆசைப்பட்டால் அந்த ஆசை நம்மை பந்தபடுத்தாது. ஆசைபட்ட பொருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நம் மனநிலை ஒன்றாகவேயிருக்கும். நம் இன்பத்திற்காக என்று அல்லாமல் நாம் இன்பமாக இருப்பதால் நம்மிடம் தோன்றும் ஆசைகள் உலகிற்கு நன்மைகள் அளிக்கும்.

மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை போன்றவை மட்டுமே துன்பத்திற்கு காரணம்.
கடவுள், உலகம் மற்றும் வாழ்வு பற்றிய உண்மை அறிவை அடைய வேண்டும் என்னும் ஆசை நம்மை என்றும் குறையாத இன்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். அவ்விலக்கை அடைந்த பின் ஏற்படும் ஆசைகள் மற்றவர்களின் வாழ்வை செம்மைபடுத்த உதவும்.

வேற்றுமை 4: கடவுள் இல்லை

கண்ணுக்கு தெரியும் உலகை மாயை என்று மறுத்துவிட்டதால் இல்லாத உலகை படைக்க புத்த மதத்தில் கடவுள் என்று ஒருவர் தேவைபடவில்லை. ஆனால் மாயை என்பதற்கு 'இல்லை' என்று அர்த்தம் கற்பிப்பது தவறு. எது உண்மையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் தோற்றமளிக்கிறதோ அதைத்தான் மாயை என்று குறிப்பிட முடியும். குதிரை கொம்பு என்பது மாயை அல்ல. அது பொய். உலகம் குதிரை கொம்பு போல் இல்லாதது அல்ல. எனவே மாயாஜாலத்தை செய்ய ஒரு மந்திரவாதி எப்படி அவசியமோ அது போல மாயமான இவ்வுலகை உருவாக்க கடவுள் என்று ஒருவன் இருக்க வேண்டும்.
மனிதனுக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு சக்தியையும் ஒத்துக்கொள்ளாத ஒரே சமயம் புத்தமதம் தான். அறிவுபூர்வமாக இறைவன் இருக்கிறானா என்று ஆராயமுடியாத பலருக்கு இறை நம்பிக்கை என்பது முக்தியை அடைய தேவையான ஒரு படிக்கட்டு. இறைவன் இல்லை என்ற மூடநம்பிக்கை இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை விட மோசமானது. ஏனெனில் இறைவன் யார் என்ற கேள்வியை கேட்கவும் அவனை பற்றிய பூரண அறிவை அடையவும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை அடிப்படை தேவை.

பிறவிப்பெருங்கடலை இறைவனடி சேராமல் நீந்திக்கடப்பது அரிது.

வேற்றுமை 5: வேதம் அவசியமற்றது

கர்மகாண்டத்தில் கூறப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனதை சுத்தபடுத்தி ஞானம் பெற வழி வகுக்கின்றன. ஆனால் கர்மகாண்டம் மட்டுமே முக்தி கொடுக்கும் என்று நம்புவது தவறு. ஞானகாண்டத்துக்கு வந்தால் மட்டுமே வேதத்தின் அருமை நமக்கு புரியும். அதை விடுத்து கடவுளை பிரார்த்திப்பதற்கு மட்டும் நம் காலத்தை செலவிடுவது தவறு. இந்த தவறை தவிர்க்க வேதமே அவசியமல்ல என்று போதிப்பதும் தவறு.

பள்ளிபடிப்பை முடித்தவனுக்கு மட்டும்தான் பாடபுத்தகம் தேவையில்லை. மற்ற அனைவருக்கும் அது மிக அவசியமான ஒன்று. அது போல் புத்தருக்கு வேதம் அவசியம் அல்ல என்பதால் யாருக்குமே அதனால் உபயோகம் இல்லை என்று முடிவு செய்வது தவறு.

வேற்றுமை 6: குரு தேவையில்லை

புத்தர் யாருடைய துணையுமில்லாமல் தானாகவே ஞானத்தை பெற்றார் என்பது தவறான கருத்து. புத்தர் பல வருடங்கள் முறையாக குருவின் உபதேசங்களை பெற்று வேதத்தை பயின்ற பின், போதி மரத்தடியில் அமர்ந்து தான் கற்ற பாடங்களை ஆழ்ந்து சிந்திக்கும்பொழுதுதான் ஞானம் பெற்றார். வகுப்பில் ஆசிரியர் கற்றுகொடுத்ததை முறையாக கேட்ட மாணவன் வீட்டுகணக்கை தானாக எவ்வித உதவியுமின்றி செய்வதில் பெரிய ஆச்சரியமேதுமில்லை.

மேலும் புத்த மதமே புத்தரை ஆசிரியராக மதித்து அவரின் உபதேசங்களை அடிப்படையாக கொண்டுதான் அமைந்துள்ளது. புத்தர் உயிரோடு இருக்கும்பொழுது அவர் கூறிய கருத்துக்களுக்கு வெவ்வேறு பொருள்களை கற்பித்து அவர் மறைவுக்குபின் புத்த மதம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துவிட்டது. புத்தர் உண்மையில் கூறியது என்ன என்பதை அறிய நமக்கு நிச்சயம் ஆசிரியரின் துணை தேவை.

முடிவுரை :

இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையை எப்படி குறையாத இன்பமயமாக மாற்றுவது என்ற உபாயத்தை கொடுப்பதுதான் சரியான சமயம். அதை விடுத்து வாழ்வு துன்பகரமானது என்றும் அந்த துன்பத்திலிருந்து விடுபட சரியான நம்பிக்கை, சரியான நோக்கம், சரியான பேச்சு, சரியான செயல்கள், சரியான வேலை, சரியான முயற்சி, சரியான மனசாட்சி, சரியான தியானம் என்கிற எட்டு வழிபாதையில் பயணிக்க வேண்டும் என்று மட்டும் உபதேசம் செய்வது பயனளிக்காது. என்றாவது ஒரு நாள் புத்தரை போன்று நாமும் நிர்வாண நிலையை அடைவோமா என்ற நம்பிக்கையில்லாத எதிர்பார்த்தலுடன் வாழ்வு முடிந்து விடும்.

பக்கத்து வீட்டுக்காரன் எட்டு வழிப்பாதையில் நடந்து புத்தரைப்போல் ஞானம் பெற்றுவிட்டான் என்ற செய்தி நாமும் முயன்று அந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுக்கும். ஆனால் ஆசிரியரின் துணையில்லாமல் சரியான பாதை எது என்பதிலோ அடைய வேண்டிய நிர்வாணம் என்பது என்ன என்பதிலோ முழு தெளிவு கிடைக்காது. எனவே புத்தரின் சிலைக்கு முன் காணிக்கைகள் செலுத்திவிட்டு அவர் உபதேசங்களை தொடர்ந்து கடைபிடித்து மனதை செம்மை படுத்த முடியுமே தவிர புத்த சமயத்தை மட்டும் பின்பற்றி முக்தியடைவது என்பது நடக்காது.

பயிற்சிக்காக :

1. புத்தமதம் வேதத்தின் கருத்துக்களிலிருந்து எவ்விதங்களில் வேறுபடுகிறது?

2. ஏன் புத்தமதம் நமக்கு முக்தியை கொடுக்காது?

சுயசிந்தனைக்காக :

1. புத்தருக்கு பின் ஞானமடைந்தவர்கள் புத்தமதத்தில் யாரேனும் இருக்கிறார்களா?