Thursday, May 6, 2010

பாடம் 058: கிருத்துவ மதம் தவறு (பிரம்ம சூத்திரம் 2.2.33-36)

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய ஏசுநாதரின் உபதேசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகிய கிருத்துவ மதம் இன்று உலகமதங்களில் முதன்மையிடம் வகிக்கிறது. ஒரு சில உட்பிரிவுகள் இருந்தாலும் அனைத்து பிரிவுகளுக்கும் பொதுவான அடிப்படை கருத்துக்களில் உள்ள தவறுகளை இப்பாடம் விவரிக்கிறது.

ஏசுநாதரும் கிருத்துவ மதமும்

கண்ணனின் வாழ்க்கை வரலாறும் அவனது உபதேசமான கீதையும் வியாசரால் எழுதபட்ட மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்கு கிடைத்துள்ளது. அதேபோல் ஏசுநாதரின் உபதேசங்களையும் மற்றும் அவரது வாழ்க்கை சரித்திரத்தையும் அவரது சீடர்களின் குறிப்புகளை (Gospels) உள்ளடக்கிய பைபிள் மூலம் நாம் அறிகிறோம். இருவரது உபதேசங்களிலும் எவ்வித வேறுபாடும் இல்லாவிட்டாலும் அவர்களை பின்பற்றி மனிதனால் உருவாக்கப்பட்ட மதங்களில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. யாதவ குலத்தில் பிறந்த கண்ணன் மட்டும்தான் ஒரே கடவுள் என்று ஒரு சிலர் (ஹரே கிருஷ்ணா இயக்கம்) கொண்டாடுவது போல யூத குலத்தில் பிறந்த ஏசுதான் கடவுளின் ஒரே மகன் என்று நினைப்பவர்களின் மதம்தான் கிருத்துவ மதம்.

அவதார புருஷர்களின் உபதேசங்களை முறையாக கற்காமல் அவர்களது வாழ்க்கைசரிதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மதங்கள் உருவாகுமே தவிர மக்களது துயரம் அகலாது.

உலகின் துன்பங்களை நீக்கி அனைவரும் எப்பொழுதும் இன்பமாக வாழ்வது எப்படி என்கிற உபாயத்தை காலந்தோறும் வெவ்வேறு ஞானிகள் அவதரித்து உபதேசித்து வந்தாலும் ஒரு சிலர் அத்தகைய அவதாற புருஷர்களின் பெயரில் மதங்களை உருவாக்கி தங்கள் சுயலாபத்திற்காக வியாபாரம் செய்துவருகின்றனர். உதாரணமாக தனது ஆட்சியின் செல்வாக்கை அதிகபடுத்திக்கொள்ளும் ஒரே நோக்கில் ரோம் நாட்டு மன்னன் கான்ஸ்டன்டைன் உருவாக்கியதுதான் கத்தோலிக்க மதம். அப்பாவி மக்களிடமிருந்து பொருளை அபகரிக்கும் திட்டமாக அன்று தொடங்கய கிருத்துவ மதம் இன்றுவரை தொடர்ந்து அதே பாதையில் வளர்ந்து வருகிறது.

கிருத்துவ மதம் மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கு பதிலளிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் ஏன் செய்ய வேண்டும், கடவுள் யார், மனிதன் யார், அவனது துன்பத்திற்கு காரணம் என்ன என்பது போன்ற தத்துவ விளக்கங்களை ஏசுநாதரின் உண்மை உபதேசத்துக்கு மாறாக இன்றைய கிருத்துவ மதம் உபதேசித்துவருகிறது.

கிருத்துவ மதத்தில் உள்ள தவறுகளை தர்க்கரீதியாக ஆராயும்பொழுது ஏசு நாதரின் உபதேசங்களிலிருந்து இன்றய கிருத்துவ மதம் முற்றிலும் மாறியுள்ளது என்ற உண்மை தெரியவரும். ஏன், எப்படி என்று ஏசுநாதர் தம் ஆறாம் வயதில் கோவில் குருக்களை கேள்விகள் கேட்டது போல் நாமும் கேட்டால்தான் நமக்கு முக்தி கிடைக்கும்.

மனிதன் பாவியா?

கிருத்துவ மதத்தின் கொள்கைபடி அனைத்து மக்களும் பாவிகளே. பாவமன்னிப்பு கோரி ஏசுவிடம் சரணடைந்தவர்கள் மட்டுமே சுவர்க்கத்துக்கு செல்லும் வாய்ப்புடையவர்கள். மற்றவர்கள் நரகத்தில் முடிவில்லாமல் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுவார்கள். சற்றும் தர்க்கத்திற்கோ அறிவுக்கோ பொருந்தாத இக்கருத்துக்கள் வேதம் கூறும் 'நீ பரமன்' என்ற உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டது.

கோப்பை பாதி காலியாயிருக்கிறது என்று சொல்வதும் பாதி நிரம்பியிருக்கிறது என்று சொல்வதும் எப்படி ஒரே நிலையை வர்ணிக்கிறதோ அதேப்போல் கிருத்துவ மதமும் வேதமும் மனிதனின் நிலையை வெவ்வேறு கண்ணோட்டத்தில் வர்ணிக்கின்றன. 'நீ பாவி. உன்னை கடவுளிடம் முழுதாக அர்ப்பணம் செய்தால்தான் உனக்கு விடுதலை கிடைக்கும்' என்ற கிருத்துவமதத்தின் கொள்கையை 'நீ என்ற சொல்லுக்கு அழியும் உடலையும் மனதையும் பொருளாக நினைத்து மயங்கியிருக்காமல், நான் பரமன் என்ற அறிவை பெற்று விழித்தெழு' என்ற வேதத்தின் முழக்கத்தோடு ஒப்பிட்டால் எது சரியான பார்வை என்று விளங்கும்.


யார் காரணம்?

ஆடம் (Adam) செய்த தவறுக்கு நான் ஏன் பிராயசித்தம் செய்ய வேண்டும். என்னுடைய பாவங்களுக்கு ஏன் ஏசு சிலுவையில் மரிக்கவேண்டும் என்பது போன்ற நியாயமான கேள்விகளுக்கு கிருத்துவ மதத்தில் முறையான பதில் கிடைப்பதில்லை. மறுபிறவி என்ற கோட்பாடை ஏற்றுக்கொள்ளாததனால் கூன், குருடு, செவிடு, பேடு என்ற குறைகளோடு ஏன் ஒரு சில குழந்தைகள் பிறக்கின்றன என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் திருப்தியளிப்பதாக இல்லை.

நம் வாழ்வில் உள்ள துயரத்துக்கு மற்றவர்கள் மீது பழி சொல்வது ஆரோக்கியமான வழியல்ல. நாம் செய்யும் பாவங்களை பாவமன்னிப்பு கோரினால் அழித்துவிடலாம் என்ற கோள்கை பணக்காரர்களை மேலும் பாவம் செய்ய அனுமதிக்கிறது. வாழ்வு முழுவது நம் விருப்பம்போல் வாழ்ந்துவிட்டு இறக்கும்பொழுது இறைவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதால் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஞாயமான கொள்கையல்ல.

பரலோகம் எங்கிருக்கிறது?

இங்கிலாந்தில் இருந்து கொண்டு இந்தியாவை ஆட்சிசெய்த இராணியை போல இப்பூவுலகில் வசிக்காமல் எங்கோ தொலைதூரத்தில் அமர்ந்து நமது செயல்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிருத்துவ கடவுளுக்கு நாம் எதற்காக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அடிமை வாழ்வை துறந்து விடுதலை பெறுவதுதான் அனைத்து உயிரினங்களின் அடிப்படை வேட்கை. அப்படியிருக்க நாம் ஏன் கடவுளுக்கு அடிமையாக மாறி வாழ்நாழ் முழுவதும் சேவை செய்ய வேண்டும்?

மரித்தபின் சுவர்க்கத்துக்கு செல்லுவதற்காக இந்த பூலோக சுவர்க்கத்தை சுதந்திரமாக அனுபவிக்காமல் ஆண்டவன் கட்டளை படி வாழ்வதென்பது இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முற்படும் செயலாகும்.

ஆறு நாட்களில் உலகை படைத்து ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டார் என்று கூறுவது கடவுளின் அளவுகடந்த சக்தியை குறைத்து மதிப்பிட்டு அவரை அவமதிப்பதற்கு சமம்.

இது போல நம்பமுடியாத கருத்துக்களை உண்மை என்று அறிவுக்கூர்மையும் படிப்பறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இக்காரணத்தால் வளர்ந்த நாடுகளில் கிருத்துவ மதம் மெதுவாக தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது. இன்னும் வறுமையில் பிடியிலிருந்து விடுபடாமல் பின்தங்கியுள்ள நாடுகளில்தான் கிருத்துவ சமயம் வளர்ந்து வருகிறது.

நம்பிக்கையுடன் மதக்கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு தத்துவங்களை முறையாக கற்பித்து நம்பிக்கை ஞானமாக மாற சமயம் உதவ வேண்டும். இந்த முக்கியமான செயலை கிருத்துவ மதம் செய்யத்தவறுவதால் ஆரம்ப கால நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக மாறுகின்றன. எனவே கிருத்துவ மதம் தவறு.

முடிவுரை :

கிருத்துவனாக பிறந்து வளர்வது மிகவும் நல்லது. ஆனால் கிருத்துவனாகவே மடிவது துர்பாக்கியம். ஞாயிறுதோறும் தேவாலையத்துக்கு சென்று பாதிரிமார்களின் உபதேசங்களை கேட்டு கருணையுடனும் அன்புடனும் மற்றவர்களுக்கு உதவுவது நமது இளவயதில் மிகவும் அவசியம். இது வேதத்தின் கர்மகாண்டம் போல மனதை தூய்மை படுத்தவும் பக்குவபடுத்தவும் உதவும். ஆனால் அதற்கு பிறகு ஏன், எப்படி என்பது போன்ற கேள்விகளை கேட்க கிருத்துவமதம் அனுமதிப்பதில்லை. மேலும் ஏசு நாதரின் உபதேசங்களுக்கு அது தவறான விளக்கங்களை கொடுப்பதால் நமக்கு முக்தி கிடைக்க வாய்ப்பேயில்லை.

உதாரணமாக 'கடவுளின் ராஜ்ஜியம் உனக்குள்ளே இருக்கிறது' (Luke 17:21) மற்றும் 'உண்மையை உணர்ந்தால் நீ விடுதலையடைவாய்' (John 8:32) போன்ற வசனங்கள் 'நீதான் பரமன்' என்ற வேதத்தின் கருத்தை தெளிவாக வெளியிட்டாலும் கிருத்துவ மதத்தின் கட்டுக்கோப்புக்குள் இவற்றை புரிந்து கொண்டு முக்தியடைய முடியாது. எனவே கிருத்துவமதம் தவறானது.

பயிற்சிக்காக :

1. பைபிள் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் அடங்கியுள்ள இரு விஷயங்கள் என்னென்ன? இரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது?

2. மனிதன் பாவி என்று கிருத்துவ மதம் சொல்வதில் என்ன தவறு?

3. பகுத்தறிவாளர்கள் கிருத்துவ மதத்திலிருந்து விலகி செல்வதன் காரணம் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. கிருத்துவ மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.

2. உலகில் இவ்விரு மதங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதற்கு காரணம் என்ன?