Monday, May 24, 2010

பாடம் 062: காற்று வெளியிலிருந்து தோன்றியது (பிரம்ம சூத்திரம் 2.3.8)

காற்று நித்தியமானதல்ல. பிரபஞ்சம் உருவானபொழுது முதல் பொருளாக உருவானது வெளி. அதிலிருந்து தோன்றியதுதான் காற்று என்ற கருத்தை இந்த பாடம் தெளிவு படுத்துகிறது.

காற்று என்றால் என்ன?

அறிவியல் அறிஞர்கள் காற்று என்ற சொல் பாமர மக்கள் உபயோகபடுத்தும் ஒரு சொல்லாக கருதி அதற்கு நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களின் கலவை என்ற விளக்கத்தை மட்டும் தருகிறார்கள். மேலும் காற்று என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பொருளாகவும் அவர்கள் கருதுவதில்லை.

ஆனால் வேதத்தின் பார்வையில் காற்று என்பது இந்த பிரபஞ்சத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட ஐந்து மூலப்பொருள்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது. எனவே காற்றை பற்றிய பின் வரும் கருத்துக்களை நாம் வேதத்திலிருந்து பெறலாம்.

1. காற்று வெளியிலிருந்து உண்டானது. நித்தியமானது அல்ல.

2. வெளியில் உள்ள ஒலி என்ற உணர்வுடன் தொட்டுணரும் தன்மையையும் சேர்த்து உருவானதுதான் காற்று.

3. எனவே காற்று ஒலியுடன் கூடியது. காற்றின் சப்தத்தை நம்மால் கேட்க முடியும்.

4. மேலும் காற்று நம் மேல் படுவதை நம்மால் உணர முடியும்.

5. காற்று மெதுவாகவும் வேகமாகவும் செல்லும் சக்திபடைத்தது.

6. காற்றுக்கு ஈரத்தை உலர்த்தும் சக்தி உள்ளது.

7. பொருள்களை நகர்த்தும் சக்தி வாய்ந்தது.

8. நம் கைகளின் பலத்துக்கு ஆதாரம் காற்று.

9. காற்றை பெரும் பகுதியாக கொண்டு உருவானவை நம் நுண்ணிய உடலின் உறுப்புக்களான தோலும் கைகளும்.

பஞ்சபூதங்களிலிருந்துதான் பிரபஞ்சம் உருவாகியிருக்கிறது என்பதையோ நுண்ணிய உடல்களின் இருப்பையோ விஞ்ஞான உலகம் அறிவதில்லை. வேதங்கள் மட்டுமே இக்கருத்துக்களை தெளிவாக நமக்கு தந்துள்ளன.

முடிவுரை :

பரமன் மட்டுமே நித்தியமாக என்றும் இருப்பவன். பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருள்களும் இருத்தல் என்ற தன்மையை பரமனிடமிருந்து கடன் வாங்கியுள்ளன. வெளி இருத்தல் என்ற தன்மையுடன் ஒலி என்ற உணர்வை சேர்த்து உருவாக்கப்பட்டது. இந்த கலவையுடன் தொட்டு உணரும் சக்தியை சேர்த்து தோற்றுவிக்கப்பட்டது காற்று.

பிரளயத்தின் பொழுது எல்லா பொருள்களும் காற்றாக மாற்றபட்டு அதன்பின் காற்று வெளியினுள் மறையும்.

பயிற்சிக்காக :

1. காற்றின் தன்மைகள் என்று வேதம் கூறும் கருத்துக்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. உலகின் மற்ற பழங்கலாசாரங்கள் காற்றை பற்றி என்ன கருத்துக்கள் கொண்டிருந்தன?