Thursday, September 2, 2010

பாடம் 081: பிராணன் பரமனிடமிருந்து உருவானது (பிரம்ம சூத்திரம் 2.4.8)

நமது நுண்ணிய உடலில் பிராணமயகோசம் வகிக்கும் முக்கிய இடத்தையும் அதன் தோற்றம் மறைவு பற்றியும் இந்த பாடம் விளக்குகிறது. பிராணமயகோசம் ஐந்து பிராணன்கள், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள் ஆகிய பதினைந்து உறுப்புகளை கொண்டது. இவற்றில் ஐந்து பிராணன்களின் முக்கியத்துவம் இங்கு ஆழமாக ஆராயப்படுகிறது.

பரமன் நித்தியமானவன். எனவே பரமனின் மாயா சக்தியும் என்றும் இருப்பது. ஆனால் மாயா சக்தி தோற்றம், இருப்பு, மறைவு என்ற சுழற்சியில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். பிரளயத்திற்கு பின் அனைத்து காரண உடல்களின் இருப்பிடம் மாயை ஆகும். சுழற்சியின் அடுத்த கட்டமாக, காரண உடல்களில் பதிவாகியுள்ள பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிப்பதற்கேற்றாற்போல் பிரபஞ்சத்தையும் நுண்ணிய உடல்களையும் மாயை உருவாக்கும்.

பிரபஞ்சத்தில் முதலில் ஜடப்பொருள்கள் தோன்றி அவை தொடர்ந்து மாற்றமடைந்து உயிரினங்கள் வாழக்கூடிய நிலை வந்தவுடன் நுண்ணிய உடல்கள் ஜடப்பொருளின் உட்புகுவதால் உலகில் உயிரினங்கள் தோன்றுகின்றன.

நுண்ணிய உடலை பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம் என மூன்று கோசங்களாக பிரிக்கலாம். ஜடப்பொருள்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை இயக்கி வைப்பது பிராணமய கோசம் ஆகும்.

அனைத்து உயிரினங்களிலும் மூன்று கோசங்களுடன் கூடிய நுண்ணுடல் இருந்தாலும் அடிமட்டத்தில் இருக்கும் தாவரம் போன்ற உயிரினங்களில் பிராணமயகோசம் மட்டுமே பிரதானமாக செயல் படும். சற்று வளர்ச்சியடைந்த பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களில் பிராணமயகோசத்துக்கு ஈடாக மனோமயகோசம் செயல்படுவதையும் காணலாம். மனிதர்களில் மட்டும்தான் விஞ்ஞானமயகோசம் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கிறது.

பிராணமயகோசத்தின் ஐந்து பிராணன்கள் முக்கியமான மூன்று செயல்களை செய்கின்றன. படைத்தல், காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களை பிரபஞ்ச அளவில் கடவுள் செய்து கொண்டிருப்பதற்கு ஈடாக, ஒரு தனிபட்ட உயிரினத்தின் பிறப்பு, இருப்பு மற்றும் இறப்பு ஆகிய மூன்று செயல்களை செய்வது பிராணன் ஆகும். ஜடப்பொருள்களுள் முதலில் நுழைவதும், அவற்றை காப்பதும், கடைசியில் வெளிவருவதும் பிராணனே. இதனாலேயே இறந்தவுடன் பிராணன் போய்விட்டது என்று வழக்கத்தில் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

உயிரினங்கள் பூமியில் அவதரிக்க முதல் படியாக மழைதரும் மேகத்தில் வந்து இறங்குகின்றன. அங்கிருந்து மழை மூலம் பூமியில் உயிர் சத்தாக மாறுகின்றன. பின் அவை உணவுடன் சேர்ந்து ஆணுடலின் விந்துவாக உருபெருகின்றன. பின் அது கருமுட்டையுடன் சேர்ந்து பெண்ணின் கருப்பையில் வளர ஆரம்பிக்கிறது. இதன் துவக்கத்தில் வேலை செய்ய ஆரம்பிப்பது பிராணமயகோசமே. கருவளர்ந்து குழந்தையாக பிறக்கும்வரை பிராணமயகோசம் மட்டுமே பிராதானமாக செயல்படுகிறது. அதன்பின் மெதுவாக மனோமயகோசமும் குழந்தை சுமார் இரண்டு வயதை அடையும்பொழுது விஞ்ஞானமயகோசமும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

அதன்பின்னும் குழந்தை வளர ஆதாரமாய் இருப்பது பிராணனே. உண்ணும் உணவை செரித்து அதில் உள்ள சக்தியை கொண்டு பருவுடலை வளர்ப்பது மற்றும் தொடர்ந்து காப்பது, புலன்களை செயல்படுத்துவது ஆகிய முக்கிய செயல்களை செய்வது பிராணன். அதனாலேயே ஆங்கிலத்தில் இவற்றை வைட்டல் ஃபோர்ஸ் (Vital force) என்று குறிப்பிடுகிறார்கள்.

அதேபோல் மரணமடையும்பொழுது கடைசியில் பருவுடலை விட்டு வெளியேறுவது பிராணமயகோசமேயாகும். அதுமட்டுமல்லாமல் நுண்ணிய உடலை பருவுடலை விட்டு பிரிக்கும் சக்தி நமது தொண்டையில் இருந்து செயல் படும் உதானன் என்கிற பிராணனிடம் மட்டும்தான் இருக்கிறது. சுவாசம் நிற்பதும், இதயதுடிப்பு நிற்பதும் முடிவான மரணத்தை குறிக்காது. இந்த நிலையை அடைந்தபின் கூட மரணத்தை தவிர்த்து உயிரை காப்பாற்றுவது சாத்தியம். ஆனால் உடலில் உள்ள சூடு தணிந்து சில்லிட்டபின் அது பிரேதம் ஆகிறது. உடலுக்கு வேண்டிய வெப்பநிலையை கடைசிவரை கொடுத்துவிட்டு பிராணமயகோசத்தின் கடைசி அங்கமாக உடலை விட்டு வெளியேறுவது அபானன் ஆகும்.

முடிவுரை :

பிராணமயகோசம் நுண்ணிய உடலின் ஒருபாகமாக பரமனிடமிருந்து தோன்றி உயிரினங்களின் செயல்பாட்டுக்கு முழுகாரணமாயிருக்கிறது. உயிரினங்களை ஜடப்பொருள்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது இந்த பிராணமய கோசமே. முதலில் உட்புகுந்து கடைசியில் வெளிவந்து நுண்ணிய உடலின் மற்ற பாகங்களான புத்தி, மனம் மற்றும் புலன்களின் செயல்பாட்டுக்கு ஆதாரமாக இருப்பது ஐந்து பிராணன்களே.

பயிற்சிக்காக :

1. பிராணமயகோசத்தில் உள்ள பிராணன்களின் மூன்று முக்கிய செயல்கள் யாவை?

2. ஒருவர் இறந்து விட்டார் என்பதை உறுதியாக தெரிந்து கொள்வது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. இறப்பது என்றால் என்ன என்பதை பற்றி அறிவியல் கருத்துகளை ஆய்க.