Thursday, September 16, 2010

பாடம் 088: பிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11)

செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்கிறோம் என்பதால் செயல்களை பற்றியும் அவற்றால் விளையும் பலன்களின் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டு அதர்மமான செயல்களை தவிர்த்து தர்மமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட  அனைத்தையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பு நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்.

பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது. நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது. செய்த தவறுக்கு தண்டனையும் அடுத்தவர்களுக்கு செய்த உதவிக்கு உண்டான நற்பலனும் தனித்தனியே நம்மை வந்து சேரும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது. எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.

அதிர்ஷ்டம்

நம் வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள், நோய்-ஆரோக்கியம், வளமை-வறுமை, ஏற்ற-தாழ்வு போன்ற அனைத்துக்கும் காரணமாக அமைவது நமது பாவ-புண்ணியங்கள் மட்டுமே. வாழ்வில் நிகழும் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்கு கடுமையான உழைப்பு, விடா முயற்சி என்பது போன்ற தவறான காரணங்களை கற்பித்துவிட்டு ஒரு சிலவற்றிற்கு அதிர்ஷ்டம் காரணம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது தவறு. ஒன்று விடாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பதன் பொருள் நாம் ஏற்கனவே செய்த நற்செயல்கள் அல்லது தீயசெயல்களின் பலன் என்பது. எந்த செயலின் பயன் எப்பொழுது எந்த வகையில் நமக்கு பலனைத்தரும் என்பது மனித அறிவுக்கு எப்பொழுதுமே எட்டாது என்பதால் அதை கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டம் என்ற பெயரில் அழைக்கிறோம்.

நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாமல் தானாக ஏற்படுவதன்று. நமது அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் தீர்மானிப்பது நாம் மட்டுமே. எனவே முடிந்தவரை நல்ல செயல்களை செய்து எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை நமக்கு ஏற்படுத்திக்கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

எஞ்சியிருக்கும் கர்மபலன்

உண்ணும் ஒவ்வொரு வாய்க்கும் உழைக்க இரு கரங்கள் இருக்கின்றன. நாம் செய்யும் செயல்களின் அனைத்து பலன்களையும் நம்மால் அனுபவித்து தீர்த்து விட முடியாது. எஞ்சியுள்ள பலன்கள் எவ்வாறு நம்முடன் தொடர்ந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்ள கர்ம பலன்களை மூன்றுவிதமாக பிரித்து வேதம் நமக்கு விளக்கம் அளிக்கிறது. 


மூன்று வகை கர்ம பலன்கள்

நாம் ஏதாவது ஒரு செயலில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பாவ புண்ணியங்களை  தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். இவை ஆகாமி கர்மம் எனப்படும். இவற்றை வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்கு (Current Account) எனலாம். இவற்றின் பலனை பெரும்பாலும் நாம் அவ்வப்போது அனுபவித்துவிடுவோம். ஆயினும் ஒரு சிறுபகுதி நிச்சயம் எஞ்சி இருக்கும்.

இறக்கும்பொழுது எஞ்சியுள்ள ஆகாமி கர்ம பலன்கள், நாம் பலமுன் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மத்துடன் சேர்ந்து விடும். சஞ்சித கர்மத்தை நெடுங்கால வைப்பு நிதியுடன் (Fixed Deposit) ஒப்பிடலாம்.  பலனளிக்கும் காலம் (period of maturity) ஒவ்வொரு செயலுக்கும் வேறுபடும். சஞ்சித கர்மங்களில் ஒரு பகுதி பருவமடையும் பொழுது அவை ப்ராரப்த கர்மமாக மாறும். இது சேமிப்பு கணக்கு (Savings Account)  ஆகும். பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் பருவமடையும் ப்ராரப்த கர்மமும் ஆகாமி கர்மமும் மட்டுமே காரணமாகும். ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது நமக்கு கர்ம பலன்களை அனுபவிப்பதிலிருந்து ஓய்வு கிடைக்கிறது. கனவில் ஏற்படும் அனுபவங்கள் கூட நமது கர்ம பலன்கள் தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு ஏற்படுவது கர்மபலன்களை நாம் அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கும்.

பிறக்கும்பொழுது ஒருகுறிப்பிட்ட அளவு ப்ராரப்த கர்மத்துடன் பிறக்கிறோம். மனிதருக்கு மனிதர் இந்த அளவு மாறுபடுவதால் அவர்களின் வாழ்நாட்களின் எண்ணிக்கை ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. மரணத்திற்கு ஒரே காரணம் ப்ராரப்த கர்மம் தீர்ந்து விட்டது என்பதே.

முக்தி என்றால் என்ன?

பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே முக்தி எனப்படும். எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள் ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை எஞ்சியுள்ள ஆகாமி கர்மங்கள் மூலம் அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள் தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது நமது முயற்சியில்லாமல் தானாக நடை பெறாது.

பரமனை தெரிந்து கொள்வதால் மட்டுமே நாம் முக்தியடைய முடியும். எப்பொழுது ஞானம் அடைகிறோமோ அப்பொழுது நாம் சேர்த்து வைத்துள்ள மொத்த சஞ்சிதகர்மமும் ஆகாமி கர்மமும் அழிந்து விடும் என்று வேதம் கூறுகிறது. மேலும் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்தவுடன் புதிதாக ஆகாமி கர்மம் சேராது. எஞ்சியிருப்பது ப்ராரப்த கர்மம் மட்டுமே. எனவே பரமன் யார் என்ற ஞானம் அடைந்தபின் நம் வாழ்வு ப்ராரப்த கர்மத்தின் கட்டுப்பாட்டின்படி நடந்து அது தீர்ந்தவுடன் மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுவோம்.

முடிவுரை :

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும், நன்மக்கட்பேறு வேண்டும், வசதியான வாழ்க்கை வேண்டும், ஆரோக்கியமான உடல் வேண்டும், சமூகத்தில் எல்லோரும் நம்மை மதிக்க வேண்டும் என்பது போன்ற நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி தர்மமாக வாழ்ந்து நல்ல செயல்களில் ஈடுபடுவது மட்டுமே. 



பயிற்சிக்காக :

1. நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு காரணம் என்ன?

2. மூன்று வகை கர்மங்கள் யாவை?

3. மரணம் எவ்வகை கர்மத்தால் தீர்மானிக்க படுகிறது?

4. முக்தி என்றால் என்ன?   

5. அதிர்ஷ்டம் என்றால் என்ன?

6. நம் வாழ்வின் வெற்றி-தோல்விகளில் அதிர்ஷ்டத்தின் பங்கு எத்தனை சதவிகிதம்?   

சுயசிந்தனைக்காக :

1. சஞ்சித கர்ம பலன்கள் தீரும் வரை பிறவிகள் தோறும் எவ்வித செயலும் செய்யாமல் இருப்பதன் மூலம் மறுபிறவி ஏற்படுவதை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியுமா?


2. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் அவசியம் என்ன?