Monday, September 20, 2010

பாடம் 089: தீவினை செய்வோரின் கதி (பிரம்ம சூத்திரம் 3.1.12-21)


நமது செயல்களின் பலனை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டுமென்பதாலும் நம் ஆசைகள் நமது வாழ்வின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பதாலும் நாம் இவ்விரண்டின் தன்மைகளை அறிந்து கொண்டு தீவினைகளை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசையும் செயலும்

நமது அனைத்து செயல்களும் நமது ஆசையின் அடிப்படையிலேயே அமைகின்றன. நமது செயல்கள் மூலம் நாம் தொடர்ந்து பாவ புண்ணியங்களை ஈட்டி வருகிறோம். எந்த கடைக்கு போய் என்ன பொருள் வாங்குகிறோம் என்பது நாம் எதன்மேல் ஆசை கொண்டுள்ளோம் என்பதையும் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் பொறுத்துள்ளது. அது போல வாழ்வில் நாம் அடையவேண்டிய குறிக்கோளை நமது ஆசைகளும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறோம் என்பது நமது பாவ புண்ணியங்களை பொறுத்தும் தீர்மானிக்கபடுகிறது.

சொர்க்கமும் நரகமும்

தீதும் நன்றும் பிறர்தர வாரா. யார் எப்பொழுது எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தாலும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவரவர் வினைப்பயன்களைதான் நாம் எல்லோரும் எப்பொழுதும் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். எனவே ஒருவரது நிலைக்கு இன்னொருவர் காரணமாக இருக்க முடியாது.  இந்த பூவுலகை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது. கடவுள் நமது வினைப்பயன்களை அனுபவிக்க இந்த பூமியை படைத்துள்ளார். அதில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பபடியும் வினைப்பயன்களுக்கு தக்கபடியும் வாழ்ந்து வருகிறோம்.

சம்ஸார சுழல்

ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும் ஆசையில் அதற்கு தேவையான அனைத்து செயல்களை செய்தும்கூட சில சமயங்களில் அந்த ஆசை நிறைவேறுவது இல்லை.

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கஎன்ற தொடர் இந்த நிலையை தெளிவாக எடுத்துக்கூறுகிறது. செயல்களை ஆசை தூண்டிவிட்டாலும் அவை என்ன பயனை கொடுக்கிறது என்பது அவை மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் நன்மை அல்லது தீமையை கொடுத்தது என்பதை பொறுத்தே அமையும். மேலும் செய்த செயல்களின் பலன்கள் எப்பொழுது நம்மைச் சேரும் என்பதும் நமக்கு தெரியவராது. எனவே வாழ்க்கையில் எல்லோரும் தொடர்ந்து ஏதாவது ஒரு குறிக்கோளை அடையும் நோக்கில் செயல்களை செய்து கொண்டேயிருப்பார்கள்.

நாம் செய்யும் செயல்கள் நமது பிடித்தவை-பிடிக்காதவை என்ற பதிவுகளை மேலும் உறுதிபடுத்தி அதனால் நம் ஆசைகளையும் அதிகபடுத்துகின்றன. எனவே செயல் செய்யாமல் இருப்பது என்பது செயல் செய்வதை விட மிக கடினமானது.

ஏழை ஒருவன் மூட்டை தூக்கி கூலிவேலை செய்வதில் தொடங்கி சொந்தமாக சிறுதொழில் ஒன்றை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி மாதம் பத்து லட்சம் நிகரலாபம் சம்பாதித்துகொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். பணம் வேண்டும் என்ற ஆசையினால் அதிகமாக உழைக்க ஆரம்பித்தவன் இப்பொழுது போதிய அளவு பணம் இருக்கிறது என்பதால் உழைப்பை நிறுத்திக்கொள்ள முடியாது. மருத்துவர்கள் பரிசோதித்து படுக்கையை விட்டு எழுந்தால் எமலோகப்பயணம் நிச்சயம் என்று சொன்னால் கூட கடைசி மூச்சு உள்ளவரை உழைக்கும் ஆசை அவனை விட்டு போகாது. ஏனெனில் உழைப்பு என்பது அவனுக்கு பழகி போய்விட்டது. திருட்டு கொள்ளை போன்ற தீயசெயல்களில் ஈடுபட்டுகொண்டிருப்பவர்களுக்கும் இதே உதாரணம் பொருந்தும். முதலில் ஆசை செயலில் ஈடுபட தூண்டும்.


ஆசை நிறைவேறும் வரை மட்டும் செயல் செய்வது என்பது சரித்திரத்தில் என்றும் நடந்ததில்லை. ஏனெனில் செயல்கள் ஆசையை தொடர்ந்து பெரிதாக வளர்த்து விடும். எனவே நிறைவேறாத ஆசைகள் என்று ஒரு பட்டியல் எப்பொழுதும் மனிதனுக்கு இருந்து கொண்டேயிருக்கும்.

ஆசை நிறைவேறும் பொழுது ஏற்படும் உற்சாகம், இது நிலைக்குமா என்ற திகிலுடன் கலந்து நம் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் பயணம் போல தொடர்ந்து மேலும் கீழும் அலைகழிக்கப்பட்டு கொண்டிருப்பதைதான் சம்ஸாரச்சுழல் என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த சுழலை முறியடிக்க தீய செயல்களை முடிந்தவரை தவிர்த்து நற்செயல்களை அதிகரித்து கொள்ள வேண்டும்.

தர்மமும் அதர்மமும்

தர்மம் செய்தால் புண்ணியமும் அதர்மம் செய்தால் பாவமும் ஏற்படும். புண்ணியம் நமக்கு இனிமையான சூழ்நிலைகளையும் பாவம் நாம் துன்பபடக்கூடிய சூழலையும் உண்டாக்கும். இது பிறவிகள் தோறும் தொடரும். பாவம் இரும்புச்சங்கிலி என்றால் புண்ணியம் தங்கசங்கிலி. இரண்டும் நம்மை தொடர்ந்து சம்ஸாரச்சுழலில் பந்தப்படுத்தி முடிவில்லாமல் செயல்களில் ஈடுபடுத்தும். எனவே நமக்கு பாவம் புண்ணியம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை கிடைத்தால் மட்டுமே மீண்டும் பிறவா நிலையான முக்தியை அடைவோம்.

அதர்மமான செயல்கள் செய்பவர்களுக்கு இந்தசுழலில் இருந்து விடுதலை என்பது கிடையவே கிடையாது. தர்மமாக நடப்பவர்களின் புண்ணியத்தின் ஒரு சிறுபகுதி அவர்களுக்கு நல்லறிவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும். புண்ணியத்தின் பலனாக நற்சான்றோர்களின் அறிமுகம் தர்மமாக நடப்பவர்களுக்கு மட்டும் ஏற்படும். எனவே இவர்களுக்கு சான்றோர்களின் துணையுடன் சம்ஸார சுழலிலிருந்து மீளும் வாய்ப்பு கிடைக்கும்.

முடிவுரை :

தானாக உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே கிடையாது. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படவேண்டியவை என்ற அறிவு இல்லாமல் தீயகாரியங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து துன்பபட்டு நரகத்தில் உழலுவதைத்தவிர வேறு வழியில்லை.

நம்மை செயல் செய்ய தூண்டுவது நம் ஆசைகள். எதில் ஆசை படுகிறோம் என்பது நமது அறிவை பொறுத்து உள்ளது. எது நல்லது எது கெட்டது என்ற அறிவு எல்லோருக்கும் எப்பொழுதும் இருக்கும். ஒரு திருடன் திருடும்பொழுது குற்றவுணர்வுடன்தான் திருடுவான். அது பழகிப்போனாலும் அது தவறு என்ற உண்மையை அவனால் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

எனவே தவறான செயல்களை தவிர்ப்பது எல்லோராலும் சாத்தியமே. ஆனால் செயல் செய்யாமல் இருப்பது என்பது யாராலும் முடியாது. தீய செயல்களை செய்யக்கூடாது என்றும் நல்ல செயல்களை செய்யவேண்டும் என்றும் நமக்கு நாமே ஒரு கட்டாயத்தை விதித்துகொண்டு தர்மமான காரியங்களை மட்டும் செய்துவருவது மிக அவசியம்.

பயிற்சிக்காக :

1. ஆசைகளுக்கும் செயல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை விவரிக்கவும்.

2. ஏழை மக்களின் துன்பத்திற்கு காரணம் என்ன?

3. சம்ஸார சுழல் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. நற்காரியங்களை மட்டும் செய்து இன்பமாக இருப்பவர்கள் ஏன் சம்ஸார சுழலிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்?