Monday, September 6, 2010

பாடம் 083: பிராணனின் அளவு (பிரம்ம சூத்திரம் 2.4.13)

பிராணனின் அளவு நுண்ணியதாயினும் அது உடல் முழுவதும் வியாபித்திருக்கும் என்பதை யானையின் பிராணன் யானையளவும் பூனையின் பிராணன் பூனையளவும் இருக்கும் என்று வேதம் சொல்லும் உண்மையை இந்த பாடம் ஐந்து கோசங்களின் அமைப்பை விளக்குவதன் மூலம் தருகிறது.

அளவு

அன்னமயகோசம் பருவுடலாகும். மற்ற கோசங்கள் நுண்ணியவை. அவற்றின் அளவு விஞ்ஞானமய கோசம், மனோமயகோசம், பிராணமயகோசம், கடைசியில் ஆனந்தமயகோசம் என்று படிப்படியாக குறைந்து கொண்டே போகும்.

இடம்

அன்னமயகோசத்தினுள் விஞ்ஞானமயகோசம், அதனுள் மனோமயம். பின் பிராணமயம், கடைசியில் ஆனந்தமயகோசம் என ஒன்றினுள் ஒன்றாக ஐந்து கோசங்கள் அமைந்துள்ளன.

கால அளவு

அன்னமயகோசம் மரணத்தில் மறைந்து விடும். அடுத்த மூன்று கோசங்களும் பிரளயத்தில் மறைந்துவிடும். ஆனந்த மயகோசம் மட்டும் பரமனின் மாயாசக்தியின் ஒருபகுதியாக முக்தியடையும் வரை தொடர்ந்து இருக்கும்.

உண்மைத்துவம்

அன்னமயகோசம் பொய். விஞ்ஞானமயகோசம் அன்னமய கோசத்தைவிட அதிகம் உண்மைத்துவம் படைத்தது. பின் மனோமயகோசம், பிராணமயகோசம் கடைசியில் அனைத்தை விட உண்மைத்துவம் அதிகமானது காரணமயகோசம்.

கட்டுபாடு

உள்ளிருக்கும் கோசம் வெளியில் இருக்கும் கோசத்தை கட்டுபடுத்துகிறது.

ஆனந்தமயகோசம் நமது அனைத்து பாவ புண்ணிய கணக்கை கொண்டு மற்ற அனைத்து கோசங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது.

பிராணமயகோசம் நாளின் துவக்கத்திலிருந்து தொடர்ந்து மாறி ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று மூலப்பொருள்களின் ஆதிக்கத்தின் கீழ் மனோமயகோசத்தை மாற்றி மாற்றி கொண்டுவந்து கொண்டிருக்கும். எனவேதான் நமது மனநிலை வெளியுலகுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் தனித்திருந்தாலும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

மனோமயகோசம் புலன்களின் மூலம் பெறும் அனுபவங்களின் அடிப்படையில் அறிவை அடைகிறது. அந்த அறிவின் தரம்தான் விஞ்ஞானமயகோசத்தின் தரத்தை நிர்ணயிக்கும்.

விஞ்ஞானமயகோசம் என்ன அறிவைகொண்டிருக்கிறதோ அதற்கேற்றாற் போல்தான் நமது ஆளுமை (personality) அமையும். பருவுடல் நமது மனோமயகோசத்தால் நேரடையாக கட்டுபடுத்தபடும்.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் செயல்பாட்டுடன் நமது ஐந்து கோசங்களை ஒப்பிட்டால் அவற்றிற்கு இடையே உள்ள உறவை சரியாக புரிந்து கொள்ளலாம்.

அன்னமயகோசம்: எந்த ஒரு நிறுவனமும் முறையாக அங்கிகாரம் பெற்ற பதிவாளரின் கட்டளை (Certificate of incorporation given by the Registrar of companies) படியே ஒரு குறிப்பிட்ட பெயருடன் ஒரு குறிப்பிட்ட தினம் முதல் தோன்றுகிறது. நமது பருவுடலுக்கும் ஒரு பெயரும் பிறந்த தேதியும் உண்டு. வெளியுலகுடன் தொடர்புகொள்ள நமக்கு பருவுடல் எவ்வளவு அவசியமோ அதுபோல பதிவு பெற்ற நிறுவனம் மூலமாகத்தான் எல்லா தொழில் சம்பந்தபட்ட அனைத்து செயல்களும் நடக்கும்.

பிராணமயகோசம்: நிறுவனம் செயல் பட தேவையான அலுவலகம், தொலை தொடர்பு சாதனங்கள், மற்ற எந்திரங்கள் போன்ற தளவாடங்கள் பிராணமய கோசம் ஆகும். பிராணமயகோசம் இல்லாவிட்டால் உடல் சவம் எனப்படுவது போல இவையில்லாமல் நிறுவனம் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும்.

மனோமயகோசம்: நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து உழியர்களும் அதன் மனோமயகோசம் ஆகும். வெளியுலகுடன் தொடர்புகொண்டு நிறுவனம் நடத்தும் அனைத்து செயல்பாடுகளும் அதன் ஊழியர்களாலேயே செய்யப்படுகிறது.

விஞ்ஞானமயகோசம்: நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (Chairman and Managing Director) அனைத்து ஊழியர்களின் செயல்களையும் கட்டுபடுத்தும் அதிகாரி. இவர்தான் நிறுவனத்தின் மொத்த செயல்பாடுகளுக்கும் ஆதாரம். கீழ்நிலையில் இருக்கும் ஒரு ஊழியர் நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் முதலில் கைதாவது தலைமை நிர்வாகிதான். அரசாங்கத்தை பொறுத்தவரை நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இவர்தான் பொறுப்பாளி.

ஆனந்தமயகோசம்: நிறுவனத்தின் பங்குதாரர் (Shareholder) இவர். நிறுவனத்தின் செயல்பாடுகளில் இவருக்கு நேரடையாக எந்த பங்கும் இல்லாவிட்டாலும் நிறுவனம் இயங்கி அதன் மூலம் கிடைக்கும் லாப நஷ்டங்கள் இவரையே சாரும்.

முடிவுரை :

ஐந்து கோசங்கள் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள தொடர்பை அறிந்து கொண்டால் நமது செயல்பாடுகளின் சரியான பின்ணணி நமக்கு தெரியவரும்.

பயிற்சிக்காக :

1. அளவு, இடம், கால அளவு, உண்மைத்துவம் மற்றும் கட்டுப்பாடு என்ற நான்கின் அடிப்படையில் ஐந்து கோசங்களை வரிசைபடுத்துக.

2. ஐந்து கோசங்களை ஒரு நிறுவனத்துடன் ஒப்பிட்டு காட்டுக.

சுயசிந்தனைக்காக :

1. ஆனந்தமய கோசத்தின் தன்மைக்கு யார் காரணம்?

2. நாம் உண்ணும் உணவுக்கும் நமது ஆளுமைக்கும் தொடர்பு இருக்கிறதா?