Wednesday, September 8, 2010

பாடம் 085: கரணங்களும் புலன்களும் (பிரம்ம சூத்திரம் 2.4.17-19)

கரணங்களும் புலன்களும் தனித்தனியான தத்துவங்கள் என்பதை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் இந்த பாடம் விவரிக்கிறது.

தோற்றம்

நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து தோன்றி பருவுடலில் உள்ள கோளங்களில் அமர்ந்து நமது கரணங்களும் புலன்களும் செயலாற்றுகின்றன.

நுண்ணிய பஞ்ச பூதங்கள்
நுண்ணிய கரணங்கள்
நுண்ணிய புலன்கள்
வெளி
பேசும் நாக்கு
காது
காற்று
கைகள்
மெய்
நெருப்பு
கால்கள்
கண்
நீர்
கருவாய்
சுவைக்கும் நாக்கு
நிலம்
எருவாய்
மூக்கு

பிரபஞ்சம் தோன்றும்பொழுது தோன்றிய நுண்ணிய உடலின் பாகங்களான இந்த பத்து உறுப்புகள் பிரளயம் வரை பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வரும்.

செயல்பாடுகள்

ஐந்து கரணங்களும் ஐந்து புலன்களும் செயல்பட தேவையான சக்தியை கொடுப்பது பிராணன். எருவாய் மற்றும் கருவாய் ஆகிய இருகரணங்கள் மட்டும் பிராணனின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகின்றன. என்ன செயல்களில் ஈடுபடவேண்டும் என்ற கட்டளையை ஐந்து புலன்களும் எஞ்சிய மூன்று கரணங்களும் மனதிடமிருந்து பெறுகின்றன.

இந்த பத்து உறுப்புகளும் ஜடப்பொருள்கள் போலன்றி உயிருள்ள மிருகங்கள் போல செயல் படும் திறன் வாய்ந்தவை. உதாரணமாக தினமும் நாம் வீட்டிலிருந்து வயல்வெளிக்கு மாட்டுவண்டியில் சென்று வந்தால் மாடுகளுக்கு வழி மனப்பாடம் ஆகிவிடும். யாரும் அவற்றை செலுத்தாமலேயே அவைகளால் தானாக பழக்கமான பாதையில் சென்று வர ஆரம்பித்துவிடும். அது போல நமது இந்த பத்து உறுப்புகளும் தினம் தினம் நாம் செய்யும் காரியங்களில் தங்களை பழக்க படுத்திக்கொண்டு விருப்பு வெறுப்புகளை வளர்த்து கொள்ளும்.

வயல்வெளிக்கு செல்லாமல் திடீரென்று ஒருநாள் பக்கத்து கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு செல்லலாம் என்று முடிவுசெய்தால் மாடுகள் முற்றிலும் ஒத்துழைக்காது. அவை பழக்கமான பாதையிலேயே செல்ல முயலும். அவற்றை வேறுபாதைக்கு மாற்றி ஓட்டுவது கடினம். அதே போல் தினமும் மாலையில் தேனீர் பருகும் வழக்கம் இருந்தால் சுவைக்கும் நாக்கு அதில் பழகிவிடும். ஒரு நாள் தேனீர் கிடைக்கவில்லையென்றாலும் அது மனதை நிம்மதியாக இருக்க விடாமல் தொடர்ந்து தேனீர் வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும்.

மனதில் இருக்கும் உறுதியை பொறுத்தே நாம் நம் புலன்களின் தேவையை பூர்த்தி செய்கிறோமா அல்லது அவற்றை அடக்கி வைக்கிறோமா என்பது தீர்மானம் செய்யப்படும். நல்ல செயல்களில் உறுப்புகளை பழக்கி வைத்திருந்தால் அவற்றை தீய வழிக்கு திருப்பவதும் கடினம். பிறவிகள் தோறும் தொடர்ந்து அனுபவங்களை பெற்று உறுப்புகள் தமக்கென்று விருப்பு வெறுப்புகளை வளர்த்து வைத்திருப்பதால் நாம் நமது அறிவின் திறம் கொண்டு ஆராய்ந்து எது நமக்கு நல்லதோ அதை மட்டும் செய்து தீயவற்றை தவிர்க்க வேண்டும். கண் போன போக்கிலே கால் போவதும் கால் போன போக்கிலே மனம் போவதும் தவறு.

பிராணனின் கட்டுப்பாட்டில் இருக்கும் எருவாயும் கருவாயும் கூட மற்ற உறுப்புகளை போல சுதந்திரமானவைதான். அதனாலேயே எப்பொழுதும் மரக்கறி உணவு உண்ணும் ஒருவர் ஒருநாள் அசைவ உணவு சாப்பிட்டால் ஜீரணிக்க முடியாமல் அவரது உறுப்புக்கள் தடுமாறும். மேலும் மற்றவர்கள் சுவையாக இருக்கிறது என்று சொல்லும் உணவு வகை அவருக்கு குமட்டலை ஏற்படுத்தும். உறுப்புகள் பழக்கமில்லாத எதையும் புதிதாக செய்வதற்கு விரும்பாததுதான் இதற்கு காரணம்.

செயல்திறன்

நமது உறுப்புகள் பிறவிகள் தோறும் செயல்படுவதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தினால் திறனுள்ளவையாக மாறுகின்றன. ஒருவரது கையெழுத்து திருத்தமாகவும் அழகாகவும் இருப்பது அவரது நுண்ணிய கையின் திறமையை பொறுத்தது. பிறக்கும்பொழுது நமது கைக்கு இருக்கும் இந்த திறனில் வெகுவான மாற்றம் எதுவும் ஏற்படாது. கையெழுத்து சரியாக இல்லை என்று குழந்தையை எவ்வளவு தூரம் திருத்த முயன்றாலும் அதனால் எவ்வித பயனும் இருக்காது. தினமும் கொடுத்த பயிற்சியாலேயே இந்த அளவுக்காவது எழுத்து படிக்கும்படி இருக்கிறது என்று பெற்றோர்கள் தங்களை சமாதானபடுத்திக்கொள்வதால் அது உண்மையாகி விடாது.

அதேபோல் உணவை ஜீரணிக்கும் சக்தியும் உடன் பிறந்தது. ஒரு சிலர் எவ்வளவு உணவை உட்கொண்டாலும் உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்தால் கூட ஒல்லியாக இருப்பார்கள். மற்றசிலர் மிகுந்த கட்டுப்பாடுடன் அளவுச்சாப்பாடு மட்டும் சாப்பிட்டு தீவிர உடற்பயிற்சி செய்தாலும் தொடர்ந்து அவர்கள் குண்டாகவே இருப்பார்கள்.

மேலும் பாடும் திறன், இசைக்கருவிகளை வாசிக்கும் திறன், நடிப்பு திறன், பேச்சுதிறன் போன்ற அனைத்து திறன்களும் உடன் பிறந்தவை. ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த பயிற்சியின் விளைவாக மட்டுமே நமது கரணங்கள் திறமையாக செயல் பட பழகுகின்றன. பிறக்கும்பொழுது இருக்கும் திறன் ஒரளவு மட்டுமே நாம் செய்யும் பயிற்சியால் வளரும். எனவே யாராலும் எந்த திறனிலும் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய முடியாது.

தனித்தன்மை

நீரிலிருந்து தோன்றிய கருவாயும் சுவைக்கும் நாக்கும் நீரைப்போல் சலனம் அடைபவை. ஐந்து புலன்களில் கண், காது மற்றும் மூக்கு ஆகிய மூன்றும் பொருள்களிடமிருந்து விலகியிருந்தே தங்கள் செயலை செய்யும் திறன் வாய்ந்தவை. மெய் மற்றும் சுவைக்கும் நாக்கு ஆகிய இரண்டு புலன்கள் மட்டும் அனுபவிக்கும் பொருளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டால் மட்டுமே செயல்புரியும் தன்மை வாய்ந்தன. இதனாலேயே பிரிவுத்துயர் என்பது காதலர்களுக்கிடையே ஏற்படுகிறது. அதே போல் பிடித்த உணவு வகை கிடைக்காத தூரதேசங்களில் பணிபுரிவோர் வீடுதிரும்பியதும் அவர்களின் முதல் விருப்பம் நல்ல உணவு உண்ணுவதே. கண்ணால் பார்க்கும் பொருள்களிடமோ, காதால் கேட்கும் ஒலியிடமோ அல்லது நுகரும் மணத்தின் மீதோ இது போன்ற பற்றுதல் ஏற்படாது.

முடிவுரை :

நமது நுண்ணிய உடலின் பாகங்களான ஐந்து புலன்களும் ஐந்து கரணங்களும் தனி உயிரினம் போன்று செயல்படும் சக்தி வாய்ந்தவை. அவை பிறவிகள்தோறும் செயல்பட்டு தமக்கென ஒரு தனி ஆளுமையை (personality) வளர்த்து வைத்துள்ளன. இதனாலேயே மனிதர்கள் ஒருவரிடமிருந்து மற்றவர் பெரிதும் வேறுபடுகிறார்கள்.

வீட்டில் வளர்க்கும் நாயை நம் விருப்பத்திற்கேற்றாற்போல் செயல்பட பழக்குவதைப்போல் நாம் நம் புலன்களையும் கரணங்களையும் நம் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் பயிற்சிகொடுத்து பழக்கி வைக்க வேண்டும். நமது புலன்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். தீய பழக்க வழக்கங்களில் அளவுக்கு மீறி ஈடுபட்டால் நம்மை அழிக்கும் அளவுக்கு இவை பலம் பெற்றுவிடும்.

குழந்தைகள் புலன்களின் திறனை பெற்றவர்களிடமிருந்து பெறுவதில்லை. உதாரணமாக நன்றாக பாடும் திறமை, குரல் வளம், சங்கீத ஞானம் ஆகியவை உடன் பிறந்தவை. இதில் பெற்றோர்களின் பங்கு சிறிதுமில்லை. சென்ற பிறவிகளில் செய்த பயிற்சிகளால் சேர்த்துவைத்து உடன்பிறந்த திறனை ஒப்பிடும்பொழுது இந்த பிறவியில் செய்யும் முயற்சியால் கிடைக்கும் திறன் மிகசொற்பமானதே.

ஒருவருக்கு பணம் இல்லையென்றால் மற்றவர் அவருக்கு அதை கொடுக்கலாம். ஆனால் அறிவு என்பது அவரவர் முயன்று கற்பதன் மூலம் மட்டுமே வளரும். அதுபோல நமது கரணங்களின் திறன் அவற்றை பயன்படுத்தும் விதத்தை பொறுத்தே அமையும். ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து செய்யும் பயிற்சியால் நமது அறிவின் கூர்மையும் கரணங்களின் திறனும் அதிகரித்து வருகின்றன.

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டுநீட்டினால் சின்ன தகரம்கூட தங்கமாகும் என்பது முற்றிலும் உண்மை. ஏனெனில் புலன்கள் எதில் பழக்கம் பெறுகிறதோ அதுதான் உலகத்தில் மிகவும் சிறந்தது என்று மனம் நினைக்க தொடங்கிவிடும். உண்மையில் அழகான பெண் என்று யாரும் கிடையாது. அது போல அழகற்ற பெண் என்றும் யாரும் கிடையாது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களை பொறுத்து மாறுபடும்.

நாம் நமது புலன்கள் மற்றும் கரணங்களின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவற்றை சரியான முறையில் பழக்கினால் அவை நம் வாழ்க்கை பயணத்திற்கு உறுதுணையாய் அமையும்.

பயிற்சிக்காக :

1. பிராணனின் நேரடிகட்டுப்பாட்டில் உள்ள இரு கரணங்கள் யாவை?

2. நீரில் தோன்றிய இரு உறுப்புகளின் சிறப்புத்தன்மை என்ன?

3. புலன்களின் தனித்தன்மையின் விளைவுகள் என்ன என்பது பற்றி இந்த பாடம் கூறிய கருத்துகளில் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.


சுயசிந்தனைக்காக :

1. அறுவை சிகிச்சை மூலம் நமது உறுப்புகளை மாற்றுவதனால் அவற்றின் செயல் திறனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?

2. காதலித்து கல்யாணம் செய்வது சிறந்ததா அல்லது பெற்றோர் முடிவு செய்த நபரை மணப்பது சிறந்ததா?