இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு என்றாலும் மனிதன் மட்டும்தான் பரமனின் முழுமையான பிரதிநிதி. பரமனின் அறிவு உருவம், ஆனந்தமயம் மற்றும் நித்தியமான சத்யம் என்ற மூன்று தன்மைகள் மனிதனின் இயல்பாக இருக்கின்றன என்பதை நிரூபிப்பதுடன் மாயாசக்தி மனிதன் மூலம் செயல்படும் விதத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.
இயற்கை தன்மை
பள்ளிக்கூடம் செல்லும்பொழுது பலிக்களத்துக்கு ஆடு செல்வது போல் செல்லும் சிறுவர்கள் மாலை பள்ளி முடிவதற்கான மணியோசை கேட்டவுடன் உற்சாகத்துடன் வெளியே வருகின்றனர். ஏனெனில் கட்டுப்பாட்டுடன் ஒரு இடத்தில் இருப்பது அவர்களது இயற்கை அன்று. எல்லோருக்கும் எப்பொழுதும் தங்கள் இயற்கை சுபாவத்துடன் இருப்பதே பிடிக்கும். அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் எப்படியாவது அந்த மாற்றத்தை நீக்கி இயற்கைத்தன்மைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சிப்பார்கள்.
அனைவரும் ஏன் எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்? ஏனெனில் ஆனந்தமாய் இருப்பதுதான் நமது இயல்பு நிலை. எரிச்சல், கோபம், ஏக்கம் போன்ற உணர்வுகள் நமது மனதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்பொழுது நாம் நிம்மதியாக இருப்பதில்லை. கூடிய சீக்கிரம் அந்த நிலையிலிருந்து வெளிவர காத்துக்கொண்டு இருப்போம். ஆனந்தமாய் இருக்கும்பொழுது மட்டும்தான் நாம் நம்மை மறந்து அதே நிலையில் தொடர்ந்து இருக்க விரும்புவோம். நமது சந்தோஷத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரேனும் ஏதாவது செய்வதை நாம் விரும்புவதில்லை. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமது இயல்பு என்று நிரூபணம் ஆகிறது.
மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயம் என்றாலும் மனிதர்கள் அனைவரும் ஏன் எப்பொழுதும் உயிர் வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள்? ஏனெனில் மனிதன் நிரந்தரமானவன், அழிவதில்லை. நித்தியமாக இருப்பதுதான் அவர்களது இயற்கைத்தன்மை.
தினமும் செய்தித்தாள்களை படித்து உலகில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் இவையெல்லாம் நிகழ காரணங்கள் யாவை என்று அலசுவதும் பெரும்பான்மையான மக்களின் இயற்கை குணம். எப்பொழுதும் ஆனந்தமாக உயிர் வாழ வேண்டும் என்ற இரு விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அறிவு மிக அவசியம். முதல் இரு ஆசைகளும் அனைத்து உயிரினங்களுக்கும் இருந்தாலும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற இந்த மூன்றாவது ஆசை மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது. மனிதர்களுக்கிடையே உள்ள பொருளாதார ரீதியான ஏற்றத்தாள்வுகளுக்கு அறிவு ஒரு மிகப்பெரிய காரணமாக உள்ளது. தொடர்ந்து அறிவை அதிகரித்து என்றாவது ஒருநாள் மரணத்தை வென்று என்றும் ஆனந்தமாக இருக்கும் நிலையை அடைந்து விடலாம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்தமாகவும், பேரறிவுடனும் நித்யமாகவும் இருப்பது மனிதனின் இயல்பு என்று வேதம் கூறுகிறது. இதனால்தான் இந்த மூன்று ஆசைகளும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கின்றன. ஆனால் இவை அடையப்பட வேண்டிய ஆசைகள் அல்ல. அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். நான் என்றுமிருக்கும் ஆனந்தமான அறிவுருவம் என்று நம்மையும் பரமனையும் ஒன்றாக்கி வேதம் கூறும் உண்மையை உணர்ந்து கொள்வதைத்தான் ‘வீடுபேறு’ என்ற தொடர் குறிக்கிறது .
வீடு பேறு என்பது நம் எல்லோராலும் ஏற்கனவே அடையப்பட்டுவிட்ட ஒரு நிலை. முறையாக வேதத்தை படித்து அதை அறிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.
மூன்று சக்திகள்
நான் பரமன். என்னுடைய உடலும் மனதும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள். இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்தி ஆகிய நமது மூன்று சக்திகள் மூலம் மாயாசக்தி செயல்படுகிறது.
இச்சா சக்தி: ஆசை படுவது.
ஞான சக்தி: அறிந்து கொள்ளும் திறன்.
கிரியா சக்தி: அறிந்ததை ஆசைபட்டு அதை செயல்கள் மூலம் அடையும் திறன்.
இந்த மூன்று சக்திகளும் ஒரு சேர உபயோகப்படுத்துவதாலேயே மனிதன் மற்ற விலங்கினங்களிலிருந்து வெகுவும் முன்னேறியவனாக இருக்கிறான். கற்காலம் தொடங்கி இன்றய நவீன விஞ்ஞான உலகம் உருவான விதத்தை அலசினால் பின்வரும் மூன்று அடிப்படை காரணங்கள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து செயல் பட்டிருப்பது தெரியவரும்.
முதல் அடிப்படை காரணம்: இச்சா சக்தி.
எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஆசை, விலங்குகள் போல் வாழ்ந்து வந்த மனிதனை வேட்டை ஆடும் ஆயுதங்கள் பற்றிய அறிவை அடையத்தூண்டியது.
இரண்டாவது அடிப்படை காரணம்: ஞான சக்தி.
அறிவுகூர்மையால் விலங்கினங்களை பின் தள்ளிவிட்டு முன்னேற ஆரம்பித்த மனிதன் தொடர்ந்து அறிவியல், சமூகவியல், பொருளியல் ஆகிய துறைகளில் அறிவை பெருக்கிக்கொள்ள ஆரம்பித்தான். புத்தகங்கள் மூலம் ஒரு தலைமுறையினர் கற்ற அறிவு அடுத்த தலைமுறைக்கு பயன்பட ஆரம்பித்தது. எனெவே மனித இனத்தின் அறிவு வெகு வேகமாக வளர்ந்தது.
மூன்றாவது அடிப்படை காரணம்: கிரியா சக்தி.
அறிவியல் கண்டுபிடிப்புகளை உபயோகித்து ஆசைபடுவதையெல்லாம் அடைய வேண்டிய உந்துதல் அனைத்து மக்களையும் ஓயாமல் செயல்களில் ஈடுபடுத்தியது. எனவே ஒட்டுமொத்த மனித இனம் இன்று வெகுவாக முன்னேறியுள்ளது.
தொடரும் முன்னேற்றம்.
இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற மூன்று சக்திகள் ஒவ்வொரு மனிதனின் மூலமும் வெளிப்பட்டு இந்த உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆயினும் மனிதன் தன் இயற்கை நிலையான ஆனந்தத்தை இன்னும் அடையவில்லை. ஏனெனில் வீடுபேறு என்பது நமது இயற்கையான சொரூபத்தை அறிந்து கொள்வதே தவிர அடையவேண்டிய இலக்கு அல்ல.
எனவே வெளியுலகில் இன்பத்தை தேடியலையும் செயலை நிறுத்திவிட்டு வேதம் கூறும் உண்மைகளை முறையாக படித்து தெரிந்துகொள்ள நாம் ஆசைபடவேண்டும். தற்போது நமது ஞான சக்தி உலகை அறிந்து கொள்வதில் தொடர்ந்து செலவிடப்பட்டுகொண்டிருக்கிறது. எப்பொழுது நாம் தேடுவது வெளிவுலகில் இல்லை என்ற மனப்பக்குவம் ஏற்படுகிறதோ அப்பொழுது நாம் நம் ஞான சக்தியை வேதத்தை படிக்க செலவிட ஆரம்பிப்போம். இத்தகைய மாற்றம் ஒரு சிலரிடம்தான் ஏற்படும். மற்றவர்கள் தொடர்ந்து கிரியா சக்தியால் உலகை மாற்றும் முயற்சியில் ஈடுபடும்பொழுது இவர்கள் தங்கள் கிரியா சக்தியை வேதம் படிப்பதில் செலவிடுவார்கள். செய்த புண்ணியத்தின் ஒருபகுதி நல்ல ஆசிரியரை இனம்காண இவர்களுக்கு உதவும். ஆசிரியரின் அனுக்கிரகத்துடனும் தனது ஞான சக்தியின் உதவியுடனும் இவர்கள் விரைவிலேயே வீடுபேறு அடைவார்கள்.
முடிவுரை :
அஞ்ஞானத்தை ஆதாரமாக கொண்டுதான் இந்த உலகம் இயங்கி வருகிறது. மாயை மனிதர்களிடம் உள்ள இச்சா,ஞானம்,கிரியா ஆகிய மூன்று சக்திகள் மூலம் உலகை தொடர்ந்து மாற்றி வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் இயற்கை நிலையான ஆனந்தத்தையும் அழிவின்மையையும் அறியாமையால் வெளியுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நீதான் பரமன் என்று முழக்கமிடும் வெதத்தை முறையாக பயில நாம் ஆசைகொள்ள வேண்டும். இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்கு புத்திசாலித்தனம், மனப்பக்குவம் மற்றும் சரியான ஆசிரியரின் துணை ஆகியவை தேவை.
பயிற்சிக்காக :
1. மனிதனின் இயல்பாக வேதம் கூறும் மூன்று தன்மைகள் யாவை?
2. மாயை எந்த மூன்று சக்திகளாக செயலாற்றுகிறது?
3. மனிதகுல முன்னேற்றத்திற்கான அடிப்படை காரணங்களை விவரி.
சுயசிந்தனைக்காக :
1. மனப்பக்குவம் என்றால் என்ன?
2. கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் அவசியம் என்ன?