நுண்ணிய உடலில் உள்ள பிராணன் மற்றும் புலன்களின் எண்ணிக்கையில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து அவை தனித்தனியானவை என்ற உண்மையை இந்த பாடம் எடுத்துகாட்டுகிறது.
உறுப்புகளின் எண்ணிக்கை
நுண்ணிய உடலில் ஐந்து பிராணன்கள், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், மனம், புத்தி, அகங்காரம் மற்றும் சித்தம் என்று மொத்தம் பத்தொன்பது உறுப்புகள் உள்ளன.
மனம் என்பதை ஒன்று என்றோ, இரண்டு என்றோ நான்கு என்றோ வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வகையில் கணக்கிடுகிறார்கள். மனம் என்பது எண்ணங்களால் ஆனது. எனவே அதை ஒரே உறுப்பாக கொள்பவர்கள் இருக்கிறார்கள். எண்ணங்களின் தன்மைகேற்றவாறு மனம் மற்றும் புத்தி என்று இரண்டாகவோ அல்லது சித்தம், அகங்காரம் என்று மேலும் பிரித்து நான்காகவோ குறிப்பிடுவதும் வழக்கத்தில் உண்டு.
பிராணனை உறுப்பாக கருதாமல், மனம் என்பதை ஒரே உறுப்பாக கணக்கிட்டு வேதத்தில் சில இடங்களில் பதினோறு உறுப்புகள் பேசபட்டுள்ளன. மேலும் புலன்கள் என்ற சொல் சில இடங்களில் ஐந்து புலன்களை மட்டும் குறிப்பதாகவும் வேறுசில இடங்களில் ஐந்து கரணங்களையும் சேர்த்து பத்து புலன்கள் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.
நுண்ணிய உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல் பாடுகளை சரியாக புரிந்து கொண்டால் அதன்பின் மொத்தம் எத்தனை உறுப்புகள் என்ற எண்ணிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பது புரியும்.
மூன்று தத்துவங்கள்
பருவுடல், புலன்கள் மற்றும் பிராணன் ஆகியவை மூன்றும் தனிப்பட்ட தத்துவங்கள். எந்த ஒரு செயல்பாடும் இந்த மூன்று தத்துவங்களின் ஒருமித்த முயற்சியாலேயே நடக்கிறது. கனமான அரிசிப்பையை ஒன்றை ஒரு கையால் தூக்கும் செயலை உதாரணத்திற்காக எடுத்துகொண்டு ஆராய்வோம். வெளிப்பார்வைக்கு கை இந்த வேலையை செய்வதுபோல் காட்சியளித்தாலும் மேல் குறிப்பிட்ட மூன்று தத்துவங்களின் சேர்க்கையாலேயே இந்த செயல் நடக்கிறது.
கை என்பது பருவுடலை சேர்ந்தது. இந்த கையை கோளகமாக கொண்டு நுண்ணிய உடலை சேர்ந்த அகக்கைதான் உண்மையில் வேலை செய்கிறது. அகக்கைக்கு வேண்டிய சக்தியை அளிப்பது பிராணன்.
ஒரு நாட்டின் அதிபர் அண்டை நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அந்த செயல் வெளிப்பார்வைக்கு ஒரு தனிமனிதர் செய்த காரியத்தை போல் தோன்றினாலும் கண்ணுக்கு தெரியாத 'அதிபர்' என்ற பதவிதான் உண்மையில் அந்த செயலை செய்தது. அதே சமயத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதி என்ற மக்களின் சக்திதான் அதிபரின் கையெழுத்துக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கும். நாட்டுமக்கள் அவரை நிராகரித்துவிட்டால் அதிபர் என்ற பதவியை அவர் தொடர்ந்து வகித்தாலும் அவரது கையெழுத்துக்கு மதிப்பு இருக்காது.
மக்களின் மௌனச்சம்மதம் என்ற சக்தி அதிபரின் செயல்பாடுகளுக்கு எப்படி ஒரு அதிகாரத்தை கொடுக்கிறதோ அதுபோல பிராணன் என்ற மறைவான சக்தியின் உதவியாலேயே நமது நுண்ணிய உடலின் புலன்கள் செயல்படுகின்றன.
அதிபர் என்ற பதவி அந்த பொறுப்பை ஏற்றுகொள்ளும் ஒரு தனிபட்ட மனிதரை சாராமல் எவ்வித செயலையும் செய்ய இயலாதது. அதுபோல நுண்ணிய உடலை சேர்ந்த புலன்கள் பருவுடலை சேர்ந்த கோளகங்களின் துணையில்லாமல் எவ்வித செயலையும் செய்ய இயலாதவை.
இந்த உண்மையை அறியாமல் வழக்கில் இவை அனைத்தையும் ஒன்றாக்கி பல குழப்பங்கள் இருந்து வருகின்றன. அவற்றில் முக்கியமான நான்கு குழப்பங்களையும் அவற்றின் சரியான விளக்கங்களையும் ஆராய்வதன் மூலம் நுண்ணிய உடலின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
1.மூளையும் மனமும்:
மூளை என்பது நமது பருவுடலின் ஒரு பகுதி. மனம் என்பது நுண்ணிய உடலின் ஒரு பகுதி. மனம் மூளையை கோளகமாக உபயோகபடுத்தி தனது வேலையை செய்துவருகிறது.
2.மனமும் புத்தியும்:
மனம் மூளையை அலுவலகம் போல உபயோகித்து கொண்டிருந்தாலும் அதன் இருப்பிடம் நமது இருதயம். மனதின் இயல்பு சஞ்சலபடுவது. புத்தியின் வேலை தீர்மானிப்பது. மனதின் எண்ணங்கள் உணர்ச்சிகளின் அஸ்திவாரம். புத்தியின் எண்ணங்கள் அறிவின் அடிப்படை.
இந்த வேறுபாடுகளை அறியாத பாமரமக்கள், (தலையை சுட்டிகாட்டி) என் புத்தி இதை செய்யாதே என்று சொன்னாலும் (நெஞ்சில் கை வைத்து) என் இதயம் என்னவோ இதைத்தான் செய்ய வேண்டும் என்று என்னை தூண்டுகிறது என்று மனம், புத்தி, இதயம், மூளை ஆகிய நான்கு வேறுபட்ட உறுப்புகளின் செயல்பாடுகளை அறியாமல் குழம்பியுள்ளார்கள்.
3.பிராணனும் பருஉடலும்:
பிராணன் உள்ளிருந்து பருவுடலை இயக்குகிறது. பிராணன் சரியாக இயங்காவிட்டால் பருவுடல் நோய்வாய்படுகிறது. இதை உணர்ந்தவர்கள் பிராணனை கட்டுபடுத்தி உடல் நோயை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இது போன்ற மருத்துவ முறை உலகில் பல பகுதிகளிலும் பல பெயர்களில் (Pranic healing, Reiki, Chi energy, Tai Chi) மக்களிடையே பிரபலமாக உள்ளது.
4.பிராணனும் கரணங்களும்:
துடைப்பம் வீட்டை பெறுக்குகிறது. குப்பைதொட்டி எல்லா குப்பைகளையும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகிறது. ஆகவே துடைப்பம், குப்பைத்தொட்டி போன்ற உபகரணங்கள்தான் நமது வீட்டை துப்புரவாக இருப்பது காரணம் என்று சொல்வது தவறு என்று நமக்கு தெரியும். ஆனால் இருதயம் தொடர்ந்து துடித்து இரத்தத்தை நுரையீரல்களுக்கு அனுப்பி சுத்தம் செய்து உடல் முழுவதற்கும் அனுப்பிவைக்கிறது என்று அறிவியல் புத்தகத்தில் படித்ததை உண்மை என்று தவறாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் இந்த வேலைகளை செய்வது நமது பிராணன்.
இதுபோலவே நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் செய்வது பிராணனே. பிராணன் என்பது ஒரு தனிபட்ட தத்துவம். ஜடப்பொருளில் இருந்து தானாக உணர்வு தோன்றியது என்பது போன்ற தவறான கருத்துக்களின் தொடர்ச்சியாக பருவுடல் ஆரோக்கியமாய் இருப்பதால் மூச்சு காற்று வந்து போய்கோண்டிருக்கிறது என்பதும் பரவலாக நம்பபட்டு வருகிறது.
முடிவுரை :
பிராணமயகோசம் பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் என்ற ஐந்து பிராணன்களையும் மெய், வாய் (சுவைக்கும் நாக்கு), கண், செவி, மூக்கு ஆகிய ஐந்து புலன்களையும் கை, கால், வாய் (பேசும் நாக்கு), எருவாய், கருவாய் ஆகிய ஐந்து கரணங்களையும் கொண்டது.
மனோமயகோசம் மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் என்ற நான்கு உறுப்புகளை கொண்டது.
ஆக நமது நுண்ணிய உடலில் மொத்தம் பத்தொன்பது உறுப்புகள் உள்ளன. இந்த எண்ணிக்கை உறுப்புகளின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு நிறுவப்பட்டது.
பருவுடலின் ஒரு உறுப்பான நாக்கை எப்படி சுவைக்கும் நாக்கு என்றும் பேசும் நாக்கு என்றும் தனித்தனியாக பிரிக்கமுடியாதோ அதேபோல் நுண்ணிய உடலையும் பாகங்களாக பிரிக்க முடியாது. அதே சமயத்தில் நமது உடல் எப்படி செயல் படுகின்றது என்ற அறிவில் தெளிவு பெற எலும்பு கூடு, தசை மண்டலம், நரம்புகள் என்று தனித்தனியாக பிரித்து ஆய்வது போல நுண்ணிய உடலை பத்தொன்பது உறுப்புகளாக அதன் செயல்பாடுகளை அறியும் நோக்கில் பிரித்துள்ளோம்.
நமது உடலின் அனைத்து செயல் பாடுகளும் பருவுடல், நுண்ணிய புலன்கள் மற்றும் பிராணன் ஆகிய மூன்று தத்துவங்களின் ஒருமித்த செயலாக நிகழ்கின்றன.
பயிற்சிக்காக :
1. உறுப்புகளின் சரியான எண்ணிக்கை எவ்வளவு?
2. எந்த அடிப்படையில் உறுப்புகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது?
3. உறுப்புகளின் செயல்பாட்டை பற்றி நிலவிவரும் நான்கு குழப்பங்கள் யாவை?
4. எந்த மூன்று தத்துவங்களின் அடிப்படையில் செயல்கள் நடக்கின்றன?
சுயசிந்தனைக்காக :
1. இந்த பாடத்தில் கூறப்படாத குழப்பங்களை ஆய்க.