Tuesday, September 7, 2010

பாடம் 084: புலன்களை ஆளுபவர் (பிரம்ம சூத்திரம் 2.4.14-16)

புலன்கள் தனித்தன்மையுடைய சுதந்திரமான தத்துவங்கள் என்று கூறியதால் அவை சுதந்திரமாக செயல்புரிகின்றன என்ற தவறான கருத்து பரவகூடாது என்பதற்காக அவற்றின் உண்மையான எஜமானன் யார் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.

புலன்களின் தந்தையர்

ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து படைக்கப்பட்டது என்று படித்திருக்கிறோம். உதாரணமாக நமது நுண்ணிய கண் நுண்ணிய நெருப்பிலிருந்து தோன்றியது. இதுபோல் நமது அனைத்து புலன்களும் ஒவ்வொரு பூதங்களிலிருந்து படைக்கப்பட்டது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது எப்படி வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்சபூதங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இயங்குகிறதோ அதேபோல்தான் நாம் நம் புலன்களை உபயோகபடுத்தும்பொழுது நுண்ணிய பஞ்சபூதங்கள் ஐந்தும் சேர்ந்து செயல்படுகின்றன. எனவே ஒவ்வொரு புலனும் எந்த பூதத்தை பிரதானமாக கொண்டு படைக்கப்பட்டதோ அதனால் ஆளப்படுகிறது எனலாம்.

தோற்றமும் மாற்றமும்

நமது உடல் தொடர்ந்து மாறிவருகிறது என்பது ஒரு கவலைதரும் உண்மையாக பலருக்கு தெரிகிறது. மாற்றம்தான் வாழ்வு. உடலில் மாற்றம் நிகழ்கிறது என்பதை அனைவரும் உணர்வோம். ஆனால் நமது புலன்கள் உள்ளிட்ட நுண்ணிய உடலின் மாற்றத்தை நாம் அறிவதில்லை.

பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகித கலவையினால் உருவானதுதான். துவக்கத்திலிருந்து இன்றுவரை பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. இந்த மாற்றத்தின் ஒருபகுதியாக நமது நுண்ணிய உடலும் கூட தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

புலன்களின் செயல்பாட்டுக்கு யார் காரணம்?

புலன்கள் அறிவற்ற ஜடம் என்பதை நாம் அறிவோம். எனவே அவற்றால் தானாக செயல்பட முடியாது. அவற்றை ஆளும் பஞ்சபூதங்களும் ஜடம். ஆகவே அவை புலன்களின் இயக்கத்திற்கு ஆதாரமாக மட்டுமே இருக்கமுடியும். பொதுவாக எல்லோரும் புலன்களை செயல்படுத்துவது மனம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். குதிரை என்ற புலன்களை கட்டுபடுத்தி செயலில் தூண்டுவது மனம் என்ற கடிவாளம் என்பது உண்மை என்றாலும் மனம் கூட கடிவாளத்தைப்போல ஒரு உணர்வற்ற ஜடம் என்பதை நாம் பெரும்பாலும் அறிவதில்லை. நமது உடல் உணர்வுடன் கூடியதாக செயல்படுவதற்கு காரணம் மனம் என்று நம்பப்படுவதால் மனம் ஜடமாக இருக்க முடியாது என்பது ஒரு அனுமானமே. அதில் உண்மையில்லை.

நேப்பால், இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவிடமிருந்து கடன் மற்றும் நிவாரண நிதி பெறுவதால் உலக நாடுகளில் தலைசிறந்த வல்லரசு இந்தியாதான் என்று முடிவுகட்டிவிட முடியாது.

உடல் மனதிலிருந்து உணர்வை கடன் வாங்குவதுபோல் மனம் உணர்வை அகம்பாவத்திலிருந்து கடன் வாங்குகிறது. அகம்பாவம் என்பது ஆத்மாவின் நிழல் உணர்வு என்றும் ஆத்மாவும் பரமனும் ஒன்று என்றும் படித்திருக்கிறோம்.

ஆக நமது செயல்களுக்கு யார் காரணம்?

உணர்வை இயல்பாக கொண்ட ஒரே பொருள் பரமன். பரமனின் மாயாசக்தியால் நமது நுண்ணிய உடல்களும் பிரபஞ்சமும் படைக்கப்பட்டுள்ளது. மாயா சக்தி பரமனை சார்ந்து தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தின் ஒருபகுதிதான் நமது செயல்கள்.

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கைநீட்ட, கிளையில் கொடியிணையும்படி ஆனதும் ஏனோ என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? அறிவியல் முறையில் ஆராய்ந்து மரம் ஆடாமல் நிற்கிறது. கொடி நகர்ந்து போய் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. எனவே கொடிதான் இதற்கு காரணம் என்று முடிவுகட்ட கூடாது. இயற்கையின் வளர்ச்சிமுறை என்பதுதான் சரியான விடை.

அதுபோல் நுகருகின்ற புலன்களும் நுகரப்படுகின்ற பொருள்களும் பஞ்சபூதங்களின் கலவையில் ஏற்படுகின்ற மாற்றங்கள். மரத்தில் இருந்த மாம்பழம் இப்பொழுது சிறுவன் கையில் இருக்கிறது. மரம் அசையாது. எனவே சிறுவன்தான் இதற்கு காரணம் என்று முடிவெடுப்பது நடைமுறை வாழ்வுக்கு மட்டும் உதவும். உண்மையான விடை: இயற்கையின் மாற்றம்.

'நான் இந்த மரத்தை பார்க்கிறேன்'. இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள பொருள்கள்: மரம், உடலில் இருக்கும் கண் என்ற கோளகம், அதை செயல்படுத்தும் பிராணன், அதனுள் இருக்கும் நுண்ணிய கண், அதை கட்டுபடுத்தும் மனம் ஆகியவை. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களினால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பவை. பரமனின் பிம்பம் என் மனதில் பிரதிபலிக்கும் காரணத்தால் நான் பார்ப்பவனாகவும் மரம் பார்க்கப்படும் பொருளாகவும் வேறுபடுத்தபட்டு நான் பார்ப்பதற்கு காரணமான புலன்களை செலுத்துவது யார் என்ற கேள்வி எழுகிறது. மரம் பார்க்கப்பட்டு கொண்டிருப்பதற்காக எதுவும் செய்யவில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதே போல் அதை பார்ப்பதற்காக நான் எதுவும் செய்யவில்லை என்ற உண்மையை புரிந்து கொள்வது சிறிது சிரமம்தான்.

இதனாலேயே ஐன்ஸ்டீனின் (Albert Einstein) பேரண்டத்தை பற்றிய ஆராய்ச்சியும் அணுவை துளைத்து ஹைசன்பர்க் (Werner Heisenberg) செய்த ஆராய்ச்சியும் மற்றும் இவ்விரண்டையும் ஒன்றிணைத்து ஸ்டீவன் ஹாக்கிங்க் (Stephen Hawking) நிகழ்த்திய கண்டுபிடிப்பும் முடிவில்லா தேடலின் ஒருபகுதியாகவே இருந்து வருகின்றன.

ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது கண்டுபிடிப்பு, அனைத்தின் சாராம்ச கொள்கையை (Theory of Everything) எட்டிவிடும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டாலும் கண்டுபிடிப்பின் முடிவுகள் இன்னும் தெரிந்து கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்ற உண்மையை மட்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் நாம் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல. நான் என்கிற உண்மையை விட்டுவிட்டு எஞ்சியிருக்கும் பொய்யான பிரபஞ்சத்தை மட்டும் அறிவியல் அறிஞர்கள் ஆய்வதால் அவர்களால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரமுடிவதில்லை.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் நட்சத்திர துகள்களால் (star stuff) ஆனவை என்பதை விஞ்ஞானிகள் மிகச்சரியாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வேதம் கூறும் இந்த கருத்தை அறிவியல் முழுதும் ஒத்துக்கொண்டாலும் 'என் புலன்களை செலுத்துவது யார்?' என்ற கேள்விக்கு விடையை தெரிந்துகொள்ள முயலாமல் பேரண்டத்தின் விளிம்பிலும் அணுவின் ஆழத்திலும் ஆராய்ச்சி நடத்தி கொண்டிருந்தால் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற நிலை என்றும் தொடரும்.

உண்மை என்று ஒன்று நமக்கு வெளியே இருந்தால் அதை நிச்சயம் என்றாவது ஒரு நாள் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்துகொண்டிருப்பது உண்மையை அல்ல. அது மாயை. மாயை என்றால் புரிந்து கொள்ள முடியாதது என்று அர்த்தம். அதை புரிந்து கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவர்கள் மட்டுமே முற்றுணர்ந்தோர்கள்.

முடிவுரை :

சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு மட்டுமே அறிவியலால் பதில் கொடுக்கமுடியும். யார் சந்திரனை உருவாக்கியது, எதனால் அது பூமியை சுற்றுகிறது என்ற கேள்விகளின் முடிவான விடை அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம். அதுபோல புலன்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால் அவை ஏன் செயல் படுகின்றன அல்லது யார் அவற்றை ஆள்பவர் என்ற கேள்விக்கு விடை வேதத்திலிருந்து மட்டுமே கிடைக்கும்.

புலன்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவற்றை உருவாக்கிய பஞ்சபூதங்களும் என்ன செயல்களில் ஈடுபடவேண்டும் என்பதை மனதும் தீர்மானிக்கின்றன. சந்திரன், சூரியன், பூமி இவற்றைப்போல நமது மனதும் உடலும் ஜடப்பொருள்களே. எனவே இவற்றால் தானாக அறிவுபூர்வமாக ஒரு முறையுடன் இயங்க முடியாது.

அனைத்து இயக்கமும் மாயையை சேர்ந்தது. மாயை தன் இயக்கத்திற்கு உணர்வுருவமான பரமனை சார்ந்திருக்கிறது.

பரமனின் உணர்வை மனம் பிரதிபலிப்பதால் நாம் சந்திரனை போல் ஜடம் அல்ல என்றும் சுதந்திரமாக செயல் செய்து பலனை அனுபவிக்கும் சக்திவாய்ந்தவர்கள் என்றும் அறியாமையால் எண்ணிக் கொண்டிருக்கிறோம். வேதம் கூறும் கருத்தை புரிந்துகொண்டால் பிரபஞ்சத்தின் தொடர்ந்த இயக்கத்தில் நமது புலன்களின் செயல்களும் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்ளலாம்.

பயிற்சிக்காக :

1. புலன்களின் தந்தையர் யார் யார்?

2. யார் முற்றுணர்ந்தோர்?

சுயசிந்தனைக்காக :

1. இந்த பாடத்தில் குறிப்பிடபட்ட அறிவியல் ஆய்வுகளின் தற்போதைய முடிவுகளை ஆய்க