Thursday, September 9, 2010

பாடம் 086: படைப்பவர் கடவுள். ஜீவாத்மா அல்ல (பிரம்ம சூத்திரம் 2.4.20-22)

வேதத்தின் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் 'நான் கடவுள்' என்று கூறுபவர்களின் தவறான எண்ணங்களை சரி செய்யும் பொருட்டு ஜீவாத்மா படைப்பவனல்ல என்றும் அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழும் உலகமும் அவரவரால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் இந்த பாடம் விளக்குகிறது.

சரியான தத்துவம்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. நான் பரமன் என்று நினைத்து கொண்டால் முட்டிவலி மறைந்து விடாது. யார் பரமன் என்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள முறையாக வேதத்தை படித்தால் நான் பரமன் என்பதை அறிந்து என்றும் குறையாத இன்பத்தையும் தடையில்லாத அமைதியையும் நிரந்தரபாதுகாப்பையும் அடைவோம் என்பது இல்லாததை இருப்பதாக கூறும் தொலைகாட்சி விளம்பரம் போன்ற பொய்யான வாசகம் அல்ல. மேலெழுந்தவாரியாக அல்லாமல் முறையாக படித்தல் என்பது நமது குறிக்கோளை அடைய மிக அவசியமான ஒரு நிபந்தனை.

வேதத்தை முறையாக படித்திருந்தால் பின் வரும் உண்மைகளை நாம் உணர்ந்திருப்போம்.
  1. உணர்வுமயமாக அறிவுருவமாக என்றும் ஆனந்தமாயிருப்பவன் பரமன்.
  2. பரமனை அவன் மாயாசக்தியுடன் சேர்த்து கடவுள் என்ற பெயரில் அறிகிறோம்.
  3. பிரபஞ்சம் என்பது எவ்வித உண்மைப்பொருளும் (substance) கலக்காத வெறும் ஒலி-ஒளி காட்சி. பெயரும் உருவமும் மனிதர்களின் அறியாமையின் விளைவு.
  4. அளவிடமுடியாத பிரபஞ்சத்தை உடலாக கொண்டு நிரந்தரமாக இருப்பவர் கடவுள்.
  5. கால தேசம் என்ற கட்டுக்குள் செயல்படும் என் உடல் பிரபஞ்சத்தின் ஒரு மிகச்சிறுதுளி.
  6. நான் என்பதற்கு அகம்பாவம் என்று பொருள் கொண்டால் நான் கடவுளின் அடிமை.
  7. நான் என்பதற்கு என் உடல் என்று பொருள்கொண்டால் நான் கடவுளின் ஒருபகுதி அல்லது நானும் கடவுள் என்று கூறலாமே தவிர நான்தான் கடவுள் என்று கூறமுடியாது.
  8. நான் என்பதற்கு என் உணர்வு என்று மட்டும் பொருள் கொண்டால் நான் பரமன்.

கடவுளும் நானும்

நான் ஒரு தேனி என்றால் அனைத்து தேனிக்களும் தேன்கூடும் சேர்ந்த தொகுப்புதான் கடவுள்.

தேன் கூட்டை கட்டியது தேனீக்கள். நான்தான் இந்த கூட்டை கட்டினேன் என்று எந்த ஒரு தேனியும் சொல்லமுடியாது என்றாலும் தேனிக்கள் இல்லாவிட்டால் கூடு இருக்காது. அதே போல் எந்த ஒரு தனி மனிதனும் இந்த பிரபஞ்சத்தை படைத்தது நான்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும் அனைத்து உயிரினங்களின் கூட்டு முயற்சியாலேயே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டு தொடர்ந்து மாறிக்கொண்டு வருகிறது என்பதும் உண்மை.

தேன்கூடு என்பது எப்படி அனைத்து தேனீக்களின் ஒட்டுமொத்த உழைப்பினால் உருவாகி அவற்றின் இருப்பிடமாக இருக்கிறதோ அது போலதான் இந்த பிரபஞ்சமும் அனைத்து உயிரினங்களின் உழைப்பினால் உருவாகி நமது இருப்பிடமாக இருந்து வருகிறது.

உயிரினங்களின் உழைப்பு என்பது நாம் நம் செய்த செயல்களால் ஈட்டிய பாவ புண்ணியங்களை குறிக்கும். தேன்கூட்டின் தரம், அளவு போன்றவை தேனீக்களின் உழைப்பை பொறுத்து இருக்கிறது. அதேபோல் இந்த உலகம் இந்த நிலையில் இருப்பதற்கு அனைத்து உயிரினங்களின் செயல்பாடுகள் மட்டுமே காரணம்.

என்னுடைய மாயா சக்தி

பரமனின் மாயா சக்திதான் இந்த பிரபஞ்சம் என்றால் என் மாயா சக்தி என்னுடைய உடலும் மனமும். மாயா சக்தி செயல்படும்பொழுது இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ஆகிய சக்திகளாக பிரிந்து ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து ஒருசேர்ந்து செயல்படுகிறது.

இச்சா சக்தி என்பது நம் அகங்காரத்தின் மூலம் ஆசை கொள்ள தூண்டுவது. கிரியா சக்தி நம் கரணங்களை வேலை செய்வதில் ஈடுபடுத்துவது. ஞான சக்தி நம் புலன்கள் மூலம் நமக்கு அறிவை கொடுப்பது. இந்த மூன்று சக்திகளும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கற்காலத்தில் மனிதன் தோன்றியதிலிருந்து இன்று வரை இந்த உலகம் வெகுவாக முன்னேறி இருப்பதற்கு அனைத்து மனிதர்களுக்குள்ளிருந்து ஒரு சேர இயங்கும் இந்த மூன்று சக்திகளே காரணம். நமது ஒவ்வொரு செயலையும் ஏன் செய்கிறோம் என்று ஆராய்ந்தோமானால் இந்த மூன்று சக்திகளின் ஒருமித்த செயல்பாட்டை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் ஒரு திரைப்படம் பார்க்கும் செயலை எடுத்துக்கொள்ளலாம். அந்த படம் ஒரு திரையரங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிற அறிவு நமக்கு ஏற்பட நமது ஞான சக்தி காரணம். இந்த அறிவு இல்லாமல் நமக்கு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படாது. அறிவு மட்டும் ஆசையாக மாறாது. நமது அகங்காரம் அந்த படத்தை பார்த்தால் இன்பம் ஏற்படும் என்று இச்சா சக்தியின் துணையால் நம்மை ஆசை படவைக்கிறது. கடைசியில் கிரியா சக்தி நமது கரணங்களை தூண்டி நம்மை செயலில் ஈடுபடுத்துகிறது.

இது போல ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு செயலில் தொடர்ந்து ஈடுபடுத்தி பரமனின் மாயா சக்தி தொடர்ந்து இந்த உலகை மாற்றிக்கொண்டிருக்கிறது.

கடவுள் படைத்த உலகமும் என் தனிபட்ட உலகமும்

உலகத்தை படைத்தது கடவுள் என்றாலும் நாம் உலகத்தை எந்த பார்வையில் பார்க்கிறோம் என்பதை பொறுத்துதான் நமது உலகம் அமையும். கடவுள் அழகான பெண் என்று யாரையும் படைப்பதில்லை. அவரவர் பார்வையை பொறுத்தே ஒருவர் அழகானவரா அழகற்றவரா என்பது தீர்மானிக்கப்படும். பிறவிகள் தோறும் நாம் நம் புலன்களை எப்படி பழக்கி வைத்திருக்கிறோமோ அதை பொறுத்தே நாம் இந்த உலகை எப்படி பார்க்கிறோம் என்பது அமையும்.

தருமபுத்திரனும் துரியோதனனும் உலகை தனித்தனியாக வலம் வந்து அவர்களது பார்வையில் உலகம் எப்படி இருக்கிறது என்ற அறிக்கையை சமர்பித்தார்கள். தரும்புத்திரனின் அறிக்கை எங்கும் தருமம் தழைத்தோங்குகிறது என்றும் ஆங்காங்கே நிலவும் அதர்மங்கள் குறைந்து கொண்டிருப்பதாகவும் கூறியது. ஆனால் துரியோதனின் அறிக்கை அதற்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பொறாமையால் அழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பது அவனது கருத்து.

கடவுள் படைத்த உலகம் ஒன்றுதான். நாம் நம்முடைய அறிவுத்திறனுக்கேற்றாற்போல் வெவ்வேறு பொருள்களுக்கு ஆசை பட்டு அதற்கேற்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். மக்களது அறிவுத்திறன் வேறுபடுவதால் அவர்களின் செயல்பாடுகளும் வேறுபடுகின்றன.

எனவே கடவுள் படைத்த உலகத்தில் யாரும் வாழ்வதில்லை. அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு தனிபட்ட உலகத்தை படைத்து அதில்தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். எனவே தான் ஒருவர் உலகத்தை நரகம் என்று வர்ணிக்கும் அதே நேரத்தில் மற்றவர் பூலோகம் ஆனந்தத்தின் எல்லை என்று பாடிக்கொண்டிருக்கிறார்.

புதியதோர் உலகம் செய்வோம்

அனைத்து மக்களுக்கும் சரியான அறிவை புகட்டி எல்லோரையும் நல்ல காரியங்களில் ஈடுபடுத்தி புதியதோர் உலகம் செய்வோம் என்று முழங்குவது நடைமுறைக்கு ஒத்துவராத காரியம். ஏனெனில் மக்களின் புலன்களும் கரணங்களும் ஒரேயளவில் பயிற்றுவிக்கப்படவில்லை. எனவே நமது அறிவை பெருக்கி நமது வாழ்வை குறைவில்லாத இன்பமுடையதாக செய்து கொள்வது மட்டும்தான் நம்மால் முடியக்கூடிய காரியம்.

இது ஆபத்து வரும்பொழுது நெருப்புகோழி மணலுக்குள் தலையை புதைத்து கொண்டு உலகம் அமைதியானது என்று நினைத்துகொள்வது போலாகாது. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இருக்கும். எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. இது தான் உண்மை. இந்த உண்மையை தெரிந்து கொண்டு என்றும் இன்பமாயிருப்பது புத்திசாலித்தனம்.

ரோம் நகரம் தீக்கிரையாய் கொண்டிருக்கும்பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருப்பதை போல் நாம் சுயநலமாய் இருக்கவேண்டும் என்று இங்கு புகட்டபடவில்லை. மற்றவர்களின் துயரத்தை போக்க நம்மால் இயன்ற உதவிகளை நாம் நிச்சயம் செய்ய வேண்டும். ஆனால் முதலில் நமது துயரை தீர்த்து கொள்ளாமல் மற்றவர்களுக்கு உதவ முற்படுவது புத்திசாலித்தனம் அல்ல.

ஆகாயவிமானம் பறக்கத்துவங்கும் முன் ஆக்சிஜன் மாஸ்க்கை (Oxygen mask) உபயோகிக்கும் விதத்தை விளக்குவார்கள். நம் குழந்தைகளை காப்பாற்ற முனைவதற்கு முன் நம்மை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் சொல்வதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ளாமல் நான் சுயநலமற்றவன் என்று மற்றவர்களுக்கு முதலில் உதவ முனைவது தவறு.

ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் பணம் இருக்கவேண்டும். அது போல மற்றவர்களின் துயரத்தை போக்கவேண்டுமென்றால் முதலில் நாம் துயரத்திலிருந்து முழுவதும் மீள வேண்டும். வேதத்தை முறையாக படித்து தன்னுடைய தனிபட்ட உலகத்தை இன்பகரமானதாக படைத்துகொண்ட பின்தான் நாம் மற்றவர்களுக்கு உதவ தகுதியானவர்கள் ஆவோம்.

முடிவுரை :

நான் பரமன். என் உடலும் மனமும் மாயாசக்தியின் ஒரு பகுதி. இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகள் மூலம் நாம் கடவுள் படைத்த உலகில் நமக்கென ஒரு தனிபட்ட உலகத்தை படைத்து அதனுள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றும் இருக்கும் பரமன் நான் என்று அறிந்துகொண்டு நம்முடைய உலகத்தை சொர்க்கமாக மாற்றி குறைவில்லா இன்பத்துடன் வாழ்வதோ அல்லது நான் இந்த உடலும் மனதும்தான் என்று முடிவு செய்து தொடர்ந்து போராடி வாழ்க்கையை நரகமாக்கிகொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது.

யார் முதலில் உலகை மூன்று முறை வலம் வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்ற போட்டியில் கார்த்திகேயன் கடவுள் படைத்த உலகை வெல்லமுயன்றுகொண்டிருந்த அதே வேளயில் தனது தனிபட்ட உலகமான அம்மை அப்பனை வலம் வந்து ஞானபழத்தை வென்ற விநாயகனே சாமர்த்தியசாலி. அதுபோல் நாம் நம் உலகத்தை வெல்லுவது மட்டுமே சாத்தியம்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. பிரளயத்திற்கு பின் பரமனால் உருவாக்கப்பட்ட நமது புலன்களையும் கரணங்களையும் கொண்டு மாயாசக்தியின் ஒரு பகுதியாக செயல்பட்டு நாம் நமது தனிபட்ட உலகத்தை உருவாக்கியுள்ளோம் என்ற உண்மையை சுட்டிக்காட்டிய இந்த பாடத்துடன் இரண்டாம் அத்தியாயம் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. பரமன், கடவுள் மற்றும் நான் என்ற சொற்களின் பொருள்களை ஆராய்க.

2. மாயா சக்தியின் பிரிவுகளாக நம்முள் இயங்கும் மூன்று சக்திகள் யாவை?

3. தருமபுத்திரனும் துரியோதனனும் உலகத்தை வெவ்வேறு விதமாக வர்ணித்ததற்கு காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. முட்டி வலியுடன் குறைவில்லாத இன்பத்தை அனுபவிப்பது எப்படி?

2. குறைவில்லா இன்பத்தை அனுபவிக்கும்பொழுது இச்சா சக்தி நம்மிடம் வேலை செய்யுமா?