எது சத்யமோ அது நித்யம் என்ற விளக்கத்தை கொடுத்து ஆத்மா என்பது என்றும் மாறாமல் அழியாமல் இருக்கும் தத்துவம் என்பதையும் இந்த பாடம் விவரிக்கிறது.
எது எவ்விதமாற்றமும் இல்லாமல் இருக்கிறதோ அதுவே நித்யம்
நம் உடல் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வளர்ந்து பின் தேய்ச்சியுற்று கடைசியில் மறைகிறது. இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல் மற்றும் மறைதல் என்ற ஆறு மாற்றங்களுக்கு உட்படும் உடல் பால்யம், கௌமாரம், யௌவனம் மற்றும் வயோதிகம் என்ற நான்கு வித பருவங்களை கடக்கிறது. ஆனால் நான் என்ற சொல்லின் சரியான பொருளான ஆத்மாவோ எவ்வித மாற்றத்திற்கும் ஆளாவதில்லை. உடலில் ஏற்படும் மாற்றங்களை உணரும் நாம், நான் என்ற உணர்வில் எவ்வித மாற்றமும் இல்லாமல் என்றும் ஒரே நிலையில் இருப்பதை நமது அனுபவத்திலிருந்து அறிகிறோம்.
உடலைப்போலவே மனதும் தொடர்ந்து மாறிவருகிறது. உடலின் மாற்றத்தையும், மனதின் மாற்றத்தையும் அறிய வேண்டுமானால் மாறாத ஆத்மா நானாக இருக்கவேண்டும். அவ்வாறின்றி மனதுதான் நான் என்பது உண்மையானால் என் மனதில் தோன்றும் மாற்றங்களை நான் அறிகிறேன் என்று சொல்வது யார்? நாம் அமர்ந்திருக்கும் வாகனம் நகர்கிறதா இல்லையா என்பதை அறிய நகராத பொருள்கள் அவசியம். நம்மைசுற்றியுள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு திசையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தால் நாம் ஒரே இடத்தில் இருக்கிறோமா இல்லை நாமும் ஏதாவது ஒரு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோமா என்று சொல்லவே முடியாது. உடலும் மனதும் மாறுவதை நாம் உணர்வதால் நான் என்பது மாறாத ஆத்மாவாக இருக்கவேண்டும் என்பதை நாம் யுக்தி பூர்வமாக அறியலாம்.
வேதம் ஆத்மா என்றும் மாறாமல் இருப்பது என்று கூறுகிறது. எனவே வேதம், அனுபவம், யுக்தி ஆகிய மூன்றும் மாற்றமற்ற ஆத்மாவை நமக்கு அறிவிக்கிறது.
பிரபஞ்சம் நித்யமானது அன்று
தோற்றம் மறைவு போன்ற மாற்றங்களுக்கு உட்படாமல் என்றும் இருக்கும் ஆத்மா மட்டும்தான் நித்யமானது. பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன் தோன்றியது என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நிச்சயம் அழியும் என்றும் அறிவியல் நமக்கு தெரிவிக்கிறது.
நாமும் நம் அனுபவத்தில் அனைத்தும் மாறுவதை அறிகிறோம். பிறந்தவை அனைத்தும் இறப்பதை பார்க்கிறோம். நிலையான ஒன்று என்று எதையும் குறிப்பிடமுடியாது என்பதை உணருகிறோம்.
வேதமும் தோன்றிய பிரபஞ்சம் பிரளயத்தில் அழியும் என்கிறது.
ஆக அறிவியல், அனுபவம் மற்றும் வேதம் ஆகிய மூன்றும் இந்த பிரபஞ்சம் நித்யமானது அல்ல என்ற கருத்தை நிலை நிறுத்துகின்றன.
எது நித்யமோ அதுவே சத்யம்
உண்மை என்றால் என்ன? நான் எதை உண்மை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேனோ அது மட்டும்தான் உண்மை என்பதும் பெரும்பாலான மக்கள் எதை உண்மை என்று ஒத்துக்கொள்கிறார்களோ அதுதான் உண்மை என்பதும் தவறான பதில்கள். எது ஒன்று எல்லோருக்கும் உண்மையாய் இருக்கிறதோ அதைதான் சத்யம் என்று கூறமுடியும். உதாரணமாக இவர் என் தாய் என்பது எனக்கு மட்டும்தான் உண்மை. என் தந்தைக்கு அதே நபர் மனைவியாவார். இதுபோல் ஒவ்வொருவர் பார்வைக்கு வெவ்வேறாக இல்லாமல் இருப்பது மட்டுமே சத்யம்.
எல்லோர் கண்ணுக்கும் மாம்பூ பூவாகத்தானே தெரிகிறது, அதனால் அதை சத்யம் என்று முடிவுசெய்யலாமா என்றால் முடியாது. இன்று பூவாக இருப்பது நாளை மாங்காயாக மாறி பின் மாம்பழம், விதை என்று தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் அதையும் சத்யம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. தாஜ்மஹால் சத்யமா? பூமியே பிரளயத்தில் அழியபோகிறதென்பதால் அதுவும் சத்யமல்ல.
எனவே எது மூன்று காலங்களிலும் மாறாமல் நித்யமாக இருக்கிறதோ அது மட்டுமே சத்யம்.
நேற்று இன்று நாளை என்ற காலச்சக்கரத்தின் பிடியில் அகப்படாமல் நித்யமாக இருக்கும் ஆத்மா மட்டுமே சத்யம் ஆகும். நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் என்று தொடர்ந்து மாறும் உயிரினங்கள் மற்றும் ஜடப்பொருள்கள் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் உண்மையல்ல. அது ஒரு மாயத்தோற்றம்.
உலகம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதை ஏன் என்றும் மாறும் சத்யம் என்று கூறக்கூடாது என்ற சந்தேகம் எழலாம். மாறும் பொருள்கள் நிச்சயம் ஒரு நாள் அழிவதால் அவற்றை சத்யம் என்று கூறமுடியாது.
மேலும் இருத்தல் என்பது அறிதல் என்பதை ஆதாரமாக கொண்டுள்ளது. யாராலும் எப்பொழுதும் அறிய முடியாத ஒரு பொருள் இருக்கவே முடியாது. அறியப்படும் பொருளின் இருத்தல் அறிபவனை சார்ந்திருப்பதால் அறிபவன் மட்டுமே சத்யம். அறியப்படும் பொருள் மாயை.
முடிவுரை :
என்றும் எவ்வித மாற்றதிற்கும் உட்படாமல் பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு கட்டுபடாமல் நித்யமாக இருக்கும் ஆத்மா மட்டுமே சத்யமானது.
பயிற்சிக்காக :
1. நித்யம் என்றால் என்ன?
2. எது சத்யம்?
சுயசிந்தனைக்காக :
1. பூமி தோன்றுவதற்கு முன் சூரியன் இருந்தது என்பதை அறிபவர் யார்?