ஆத்மாவின் தன்மைகளை விவரித்தபின் ஆத்மா ஒன்றுதான் என்றால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தனியாக இருந்து செயல்படவைப்பது யார் என்ற கேள்விக்கு பதிலை வேதம் இந்த பாடத்தில் தருகிறது.
அகந்தை, அகங்காரம், அகம்பாவம் ஆகிய மூன்று சொல்களின் பொருள்கள் ஒன்றுகொன்று முற்றிலும் வேறுபட்டாலும் வழக்கில் பெரும்பாலோர் அந்த வேற்றுமைகளை அறியாமல் அகந்தை என்ற பொருளிலேயே மூன்று சொல்களையும் உபயோகித்து வருகிறார்கள்.
அகந்தை
அகந்தை என்றால் இறுமாப்பு, செருக்கு, கர்வம் மற்றும் தான்தான் சிறந்தவன் என்ற உயர்வு மனப்பாமை. அகந்தை ஒரு தவிர்க்கப்பட வேண்டிய குணம்.
உயர்வு தாழ்வு என்பது கடவுளின் திருவிளையாடல் என்று அறிந்தவர்களும் தான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவனல்ல என்று முறையாக ஆத்மாவின் தன்மைகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் அகந்தை என்பது இருக்கவே இருக்காது. தன்னுடைய நிலைக்கு தான் மட்டும்தான் காரணம் என்று நினைப்பவர்களில் பலருக்கு அகந்தை இருக்கலாம். என்றும் இன்பமாயிருக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய இந்த குணம் ஒரு பெரிய தடைக்கல்.
அகங்காரம்
அகங்காரம் என்பது 'நான்' மற்றும் 'எனது' என்ற எண்ணங்களை குறிக்கும்.
மனதில் தோன்றும் எண்ணங்களை 'எனது எண்ணங்கள்' என்றும் உடலின் செயல்பாடுகளில் சிலவற்றை 'எனது செயல்கள்' என்றும் சொந்தம் கொண்டாடுவது அகங்காரம்.
அகந்தை மற்றும் அகங்காரம் ஆகிய இரண்டும் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமானவை. வேறு எந்த உயிரினங்களுக்கும் அகந்தையும் அகங்காரமும் எப்பொழுதும் இருப்பது கிடையாது.
அகம்பாவம்
நான் என்ற சொல்லின் உண்மையான பொருள் ஆத்மா. ஆத்மா உணர்வுமயமானது. இந்த உணர்வின் நிழல் அல்லது பிரதிபிம்பம் அகம்பாவம் ஆகும். உணர்வுமயமான ஆத்மா அனந்தமானது என்பதால் இருப்பது இரண்டற்ற ஒரே ஆத்மா. சூரியனின் பிரதிபிம்பம் பல நீர்நிலைகளில் தனித்தனியாக தெரிவது போல் ஒவ்வொரு உயிரினத்தின் மனதில் தெரியும் ஆத்மாவின் பிரதிபிம்பமே அகம்பாவம்.
ஜீவன் அல்லது ஜீவாத்மா என்ற சொல் அகம்பாவத்தையே குறிக்கும். எண்ணிலடங்கா ஜீவாத்மாக்கள் ஆத்மாவின் பிரதிபிம்பங்கள்.
ஜடப்பொருள்களிலிருந்து உயிரினங்களை பிரித்து காண்பிப்பது அகம்பாவம். ஆத்மாவின் உணர்வை பிரதிபலிக்கும் தன்மை மனதிற்கு இருப்பதாலேயே ஜடமான பருவுடல் உணர்வுடன் இருப்பதாக காட்சியளிக்கிறது.
அகம்பாவமும் அகங்காரமும்
அகம்பாவம் என்பது உணர்வின் நிழல். அகங்காரம் என்பது அகம்பாவத்துடன், உடல் மற்றும் மனம் சேர்ந்த கலவையை குறிக்கும்.
'நான் யார்?' என்ற கேள்விக்கு பதிலை அறிந்து கொள்ள பொதுவாக யாரும் ஆசிரியரின் உதவியை நாடுவதில்லை. முறையான கல்வியில்லாத காரணத்தால் அனைவரும் அறியாமையில் மூழ்கி உடல், மனம், நிழல் உணர்வான அகம்பாவம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது ஏதாவது ஒரு கலவையையோ நான் என்ற சொல்லுக்கு பொருளாக எண்ணிக்கொண்டுள்ளனர். எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் நான் என்ற சொல்லின் பொருள் மாறிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தெளிவற்ற கலவையே அகங்காரம் ஆகும்.
ஒருவருக்கு தினசரி வாழ்வில் செயல்பட அகம்பாவம் மட்டுமே போதும். அகங்காரம் அவசியமில்லை. இந்த உண்மையை தெரிந்து கொண்டவர்கள் முக்தியடைந்தவர்களாவார்கள். இந்த உண்மை தெரியும்வரை செயல்களை செய்வது நான், அதிலிருந்து பெறும் பலன்களை அனுபவிப்பவனும் நானே என்ற தோரணையில் மற்ற அனைவரும் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.
அகங்காரம் என்பது மனதில் தோன்றும் ஒரு எண்ண ஓட்டம் என்று அறிந்தால் எனக்கென்ன மனக்கவலை என்று சுதந்திரமாக எப்பொழுதும் வாழ்வை சுவைக்கலாம். நான் செயல் செய்பவன் என்றோ அதன் பலனை அனுபவிப்பவன் என்றோ வாழ்க்கையின் நிகழ்வுகளை தலைமேல் சுமந்து வருத்தப்படவேண்டிய அவசியமில்லை.
தோற்றமும் மறைவும்
அகந்தை என்பது ஏதோ ஒரு காரணத்தால் ஏற்படுகிறது. உதாரணமாக பணபலமோ, இளமை அழகோ, வகிக்கும் பதவியோ அகந்தைக்கு காரணமாயிருக்கலாம். இந்த காரணங்கள் மறையும்பொழுது அகந்தையும் மறையும். கல்வியால் பொதுவாக அகந்தை ஏற்படக்கூடாது. ஆனால் அப்படி ஏற்பட்டுவிட்டால் அது சுலபத்தில் மறையாது. ஏனெனில் கல்வி மற்ற செல்வங்களைப்போல அழியகூடியதல்ல.
அகங்காரம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரிய எண்ண ஓட்டம். மனிதர்களைத்தவிர மற்ற உயிரினங்களுக்கு தன்னுணர்வு கிடையாது. அவை தான் உலகத்திலிருந்து தனிபட்டு இருப்பதாக நினைப்பதில்லை. குழந்தைகளுக்கு கூட ஓரிரு வயது வரை அகங்காரம் தோன்றுவதில்லை. அதனாலேயே நிலைக் கண்ணாடியை காட்டி அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தக் கூடாடதென்று முதியவர்கள் கூறுவார்கள். இரண்டுவயது குழந்தை தனக்கு வேண்டும் என்பதை 'எனக்கு வேண்டும்' என்று கூறாமல் 'தம்பிக்கு வேண்டும்' என்று சொல்லியே கேட்பான். ஏனெனில் நான், எனது என்ற எண்ணங்கள் பொதுவாக இரண்டு வயதிற்குபின்தான் தோன்றும். அறியாமையில் தோன்றிய அகங்காரம் அறிவு ஏற்பட்டால் மட்டுமே நீங்கும். வேதாந்தத்தை முறையாக பயின்று தேறியவர்களிடம் மட்டும் அகங்காரம் மறையும்.
அகம்பாவம் என்பதற்கு தோற்றம் மறைவு என்பது நமது பார்வையை பொறுத்தது. பருவுடலில் தென்படும் உணர்வு கர்பத்தில் தோன்றி மரணத்தில் மறையும். உயிரினங்களை ஜடப்பொருளிலிருந்து வேறுபடுத்திக்காண்பிப்பதே அகம்பாவத்தின் இருப்புதான். நுண்ணிய உடல் பருவுடலிலிருந்து விலகும்பொழுது அதனுடன் அகம்பாவமும் சேர்ந்து மறைந்து விடுவதால் மரணம் ஏற்படுகிறது. அதுவரை உணர்வின் நிழல் சாயலாடிக்கொண்டிருந்த உடல் சவமாக மாறிவிடுகிறது.
ஆனால் நுண்ணியவுடல் மரணத்தில் மறைவதில்லை. எனவே அகம்பாவம் நுண்ணிய உடலுடன் பயணித்து மறுபிறவி எடுத்து தன் பயணத்தை தொடர்கிறது.
பிரளயத்தின் பொழுது நுண்ணிய உடல்களும் மறைவதால் அடுத்த பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டு காரண உடல்களிலிருந்து நுண்ணிய உடல்கள் தோன்றும் வரை அகம்பாவம் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
முடிவுரை :
இருப்பது உணர்வுமயமான ஒரே ஆத்மா. இந்த உணர்வின் நிழல் அல்லது பிரதிபிம்பம் ஒவ்வொரு உயிரினத்தின் மனதில் பிரதிபலித்து அவற்றை உணர்வுடன் செயல்படுத்த காரணமாய் அமைகிறது. ஆத்மா அளவற்று எங்கும் வியாபித்திருப்பது. எண்ணற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் இருப்பது அகம்பாவம்.
அகம்பாவம் என்பதன் பொருள் 'நிழல் உணர்வு' என்பதாகும். நாம் செய்யும் அனைத்து செயல்களை செய்யும் கர்த்தா இந்த அகம்பாவமே. அதேபோல் நமது செயல்களின் விளைவை அனுபவிப்பதும் நம் அகம்பாவமே. ஜடப்பொருள்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யவோ அதன் விளைவாக தோன்றும் பலன்களை அனுபவிப்பதோ முடியாத காரியம். உணர்வுமயமானா ஆத்மாவோ எதனுடனும் தொடர்பில்லாமல் எல்லா இடத்திலும் வியாபித்து மூன்றுகாலங்களிலும் மாற்றமடையாமல் நித்யமாக இருப்பது. எனவே செயலும் அதன் பலனை அனுபவித்தலும் அகம்பாவத்தை சேர்ந்த நிகழ்வுகள்.
முக்தியடைய வேண்டும் என்று முழுமையை தேடி தன் பொறுப்பில் இருக்கும் உடல், மனம், புத்தி அனைத்தையும் ஆட்டுவிப்பது அகம்பாவம். இடம், பொருள், காலம் ஆகிய மூன்று கட்டுப்பாடுகள் இல்லாமல் முழுமையானதாக என்றும் இருப்பது ஆத்மாதான் அகம்பாவத்தின் உண்மை உருவம் என்பது நமது புத்திக்கு புலப்படதாதால் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கும் ஞானத்தங்கமாக நாம் இருக்கிறோம். நம் செயல்களின் பலனாக சேரும் புண்ணியத்தின் விளைவாக நல்ல ஆசிரியரை அடைந்து தான் உண்மையில் ஆத்மா என்ற அறிவு ஏற்பட்டவுடன் நமக்கு முக்தி கிடைக்கும்.
பயிற்சிக்காக :
1. அகந்தை, அகங்காரம் மற்றும் அகம்பாவம் ஆகிய சொற்களின் பொருள்களை ஆய்க.
2. முக்தியடைந்தவுடன் அகம்பாவம் அவசியமா?
சுயசிந்தனைக்காக :
1. முக்தியடைய அகந்தை ஏன் ஒரு தடைக்கல்லாக கூறபட்டுள்ளது?
2. அகங்காரத்தின் அவசியம் என்ன?
3. முக்தியடைந்தவர்கள் மரணமடைந்தவுடன் அகம்பாவம் மறைந்துவிடுமா?