ஆத்மா நித்யமானது, சத்யமானது, உணர்வு மயமானது, அறிவு உருவானது என்ற விளக்கங்களை கொடுத்த பின் ஆத்மா அளவிடமுடியாத அனந்தம் என்ற கருத்தையும் அனந்தம்தான் ஆனந்தம் என்ற உண்மையையும் இந்த பாடம் தருகிறது.
அளவில் மிக நுண்ணியதான ஆத்மா நம் நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே அமர்ந்து கொண்டு ஓட்டுநர் வாகனத்தை செலுத்துவதுபோல் நமது உடலை செலுத்தி வருகிறது என்பது போன்ற தவறான கருத்துக்கள் மக்களிடம் இருந்து வருகிறது. மேலும் சிலர் ஆத்மாவின் அளவு நமது கட்டைவிரலின் அளவு என்றும் அது நமது இருதயத்தில் இருந்து இயங்குகிறது என்றும் தவறாக நம்பி வருகிறார்கள்.
இது போன்ற தவறான கருத்துகளை நீக்கி ஆத்மாவின் உண்மையான அளவை வெகுத்தெளிவாக வேதம் விளக்கியுள்ளது. ஆத்மா அளவு கடந்தது. உயிரினங்கள் ஆத்மாவின் இருப்பை நமக்கு உணர்த்துகின்றன. உயிரினங்கள் மடிந்து விடுவதால் ஆத்மா எவ்வித மாற்றமும் அடைவதில்லை. ஆத்மாவின் அருளால் இயக்கப்படும் ஜடமான உடல்கள்தான் உயிரினங்களாக காட்சியளிக்கின்றன. ஆத்மா உடல்களுக்குள் இருந்து அவற்றை இயக்குவதில்லை. அது எங்கும் வியாபித்து அனைத்து ஜடப்பொருள்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. ஆத்மாவின் அறிவை பிரதிபலிக்கும் தன்மையுள்ள ஜடப்பொருள்கள் உயிரினங்களாக செயல்படுகின்றன.
பெயரில்லா பெருமாள் என்று பெருமாளை பெயரிட்டு அழைப்பது போல் அளவில்லா ஆத்மாவை அறிய சக்தியில்லாதவர்கள் ஆத்மாவை ஒரு அளவுக்கு உட்படுத்தி அறிய முயல்கிறார்கள். உண்மையில் ஆத்மா அனந்தமானது.
அனந்தம்தான் ஆனந்தம்
அளவுக்கு உட்பட்ட எதுவும் ஆனந்தம் அடைய முடியாது. இடத்தாலும் பொருளாலும் காலத்தாலும் அளவுக்கு உட்பட்டவை நமது மனதும் உடலும். அதனாலேயே கால காலமாக பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விண்வெளியின் கற்பனைக்கெட்டா தொலைவிலும் மனிதன் தொடர்ந்து எதை தேடுகின்றோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறான். மிருககாட்சி சாலை கூண்டில் அடைபட்ட மிருகம் எப்படி தன் சிறையை விரும்புவதில்லையோ அதே போல் மனிதனும் தொடர்ந்து இடம், பொருள், காலம் என்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற துடித்துகொண்டிருக்கிறான்.
காலம் என்ற கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை
எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்ந்தால் மட்டுமே ஆனந்தம், இன்றோ நாளையோ மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற நிலையில் எப்படி நம்மால் முழு அமைதியுடன் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் மரணத்தை வெல்ல தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மனிதனின் இந்த சாகா வரம் வேண்டும் என்ற ஆவலை தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்தும் சில ஆராய்ச்சி நிறுவனங்கள் மூளையை குளிர்பதனபெட்டியில் வைத்து பாதுகாக்கும் வியாபாரத்தை ஆரம்பித்து உள்ளன. மரணத்தை வெல்லும் நாள் வந்தபின் இன்று மரிப்பவர்களை உயிர்பிப்பதாக கூறி ஒரு பெரிய தொகையை இவை வசூலித்து வருகின்றன.
என்றும் நிரந்தரமாக வாழும் வாழ்க்கை கிடைத்தால் மட்டுமே முடிவில்லா ஆனந்தம் கிடைக்கும் என்ற உண்மையை சரியாக புரிந்து கொள்ளாமல் இது போல் ஏமாந்து வரும் மனிதர்கள் சஞ்சீவினி மருந்தை தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
பொருள் கட்டுபாட்டில் இருந்து விடுதலை
மனிதன் மனிதனாக இருக்க முடியுமே தவிர பறவையாக மாறி பறக்க முடியாது. மீனாக மாறி கடலினுள் மூழ்க முடியாது. இந்த கட்டுபாட்டிலிருந்து மீளவே ஆகாய விமானத்தையும் நீர்மூழ்கி கப்பலையும் கண்டுபிடித்து தன்னை அனைத்துமாக பாவிக்க மனிதன் முயற்சி செய்து வருகிறான். சூப்பர்மேன் அல்லது ஸ்பைடர்மேன் போன்ற கற்பனை கதாபாத்திரங்கள் குழந்தைகளை மட்டுமின்றி வளர்ந்தவர்களையும் கவர்வதற்கு காரணம் மனிதன் தன் உடலின் சக்தியில் திருப்தி அடையாமல் இருப்பதே. பொருள் கட்டுபாட்டில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்ற துடிப்பு எவ்வளவு சக்திவாய்ந்த ஒரு உருவத்தை அடைந்தாலும் அடங்காது. வடிவம் அல்லது உருவம் அனைத்துக்கும் அப்பாற்பட்டு யாவுமாக நின்றால் மட்டுமே மனிதன் நிறைவு பெறுவான்.
இடம் என்ற கட்டுபாட்டிலிருந்து விடுதலை
ஆறு அடி நிலத்துக்குள் அடங்கிவிடும் உருவத்தை கொண்ட மனிதன் இந்த பரந்த பிரபஞ்சத்தை ஒப்பிடும்பொழுது கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிபோல் தன்னை பாவித்து தொடர்ந்து தன் அளவை அதிகபடுத்திகொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறான். இந்த உலகம் முழுவதும் வலம் வர வேண்டுமென்றும் பிரபஞ்சம் முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் மனிதன் ஆசைபடுகிறான்.
நிலவில் அடியெடுத்து வைத்துவிட்டதால் படிப்படியாக நட்சத்திரங்களிடையே வலம் வரும் நாள் வந்துவிடும் என்று நம்புகிறான். சூரியன் அழிவதற்குள் பூமியை உதறிவிட்டு அனைத்து மனிதர்களும் வசிக்க கூடிய செயற்கைகோளை உருவாக்கும் சக்தி வந்துவிடும் என்றும் அப்பொழுது தொடர்ந்து பயணித்து பிரபஞ்சம் முழுவதையும் ஆட்சி செய்து ஆனந்தமாய் வாழலாம் என்பது போன்ற கற்பனைகளில் அவன் ஆழ்ந்துள்ளான்.
தியானத்தின் மூலம் விடுதலை
இடம் பொருள் காலம் ஆகிய மூன்று கட்டுப்பாடுகளிலிருந்து விடுபெற பெரும்பான்மையான மக்கள் அறிவியலின் துணையுடன் முயற்சி செய்துகொண்டிருக்கும் அதேவேளையில் ஒரு சிலர் தியானம்தான் இதற்கு சரியான பாதை என்ற தவறான முடிவுடன் சமாதி அனுபவத்திற்காக முயன்று கொண்டிருக்கிறார்கள்.
பத்மாசனத்தில் அமர்ந்து மனதின் எண்ணவோட்டங்களை முற்றிலும் நிறுத்திவிட்டால் நாம் இடம் பொருள் காலம் என்னும் மூன்று கட்டுபாடுகளிலிருந்தும் விடுபட்டு சமாதி நிலையை அடைவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மிக அதிக சாதனை தேவை என்பதால் இதை தவறான பாதை என்று வேதம் சொல்லவில்லை. உலகத்தை சமாதி அனுபவம் நிராகரிப்பதால்தான் அது தவறாகிறது.
உலகம் இருப்பது நம் அனுபவத்திற்காக. ஆனால் சமாதி என்பது உலகை பற்றிய எண்ணங்கள் இல்லாதபொழுது மட்டும்தான் சாத்தியம். எனவே ஆத்மா இடம் பொருள் காலம் ஆகிய கட்டுப்பாடுகளற்றது என்பதை அறிந்து கொள்ள சமாதி அனுபவம் ஒரு படிக்கட்டாக இருக்க முடியுமே தவிர இறுதிகுறிக்கோளாக இருக்கமுடியாது.
ஆத்மா அளவற்ற ஆனந்தம்
இடம், பொருள் மற்றும் காலம் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக வேதம் ஆத்மாவை சித்தரிக்கிறது. எனவே அறிவியல் மூலமாகவோ சமாதி அனுபவம் மூலமாகவோ இந்த கட்டுப்பாடுகளை நீக்கும் செயலில் ஈடுபடாமல் நான் என்ற சொல்லின் பொருள் அளவற்ற ஆத்மா என்று அறிந்து கொள்வது மட்டுமே புத்திசாலித்தனம்.
முடிவுரை :
நாம் பூரணமானவர்கள் என்பதை நமக்கு உணர்த்தவே மோதக பிரியனான பிள்ளையாருக்கு பூரணத்தை உள்ளே வைத்து செய்த கொழுக்கட்டையை படைக்கும் வழக்கத்தை நம் முன்னோர்கள் நம்மிடம் ஏற்படுத்தியுள்ளனர். ஆனந்தத்தை தேடி தொடர்ந்து அலையும் மனிதன் தான் குறையுள்ளவன் என்று அறியாமையால் தவறாக நினைத்துகொண்டிருக்கிறான். அதனாலேயே இடம் பொருள் காலம் போன்ற கட்டுபாடுகள் நீக்கி பூரணமாக அவன் தொடர்ந்து முயற்சித்து வருகிறான்.
பூரணத்துவம் மட்டும்தான் தடைபடாத ஆனந்தத்தை தரவல்லது என்பது உண்மை. ஆனால் மனிதனின் இடம்-பொருள்-காலம் ஆகியவற்றை வெல்லும் செயல்பாடுகளால் பூரணத்துவம் வராது. எது வருமோ அது போய்விடும். எனவே என்றுமிருக்கும் ஆனந்தத்தை பெறுவதற்கு வெளியுலகில் ஒருவன் செய்யும் முயற்சிகள் பயனிளிக்காது.
நாம் இடம், பொருள் மற்றும் காலத்தால் கட்டுப்பட்டவர்கள் என்ற அஞ்ஞானத்துடன் செயல்பட்டுகொண்டிருந்தால் நம்மால் முக்தியடைய முடியாது. முக்தி என்றால் முழுமை அல்லது நிறைவு என்று அர்த்தம். பூரணத்துவம் என்பது நமது உண்மையான சொரூபமாய் இருந்தால் மட்டுமே அது நம்மை விட்டு செல்லாது. வேதம் நாம் பூரணமாக என்றும் இருப்பவர்கள் என்ற கருத்தை ஆத்மா அளவுகடந்தவன் என்ற விளக்கத்தின் மூலம் அறிவிக்கிறது.
ஆத்மா அளவற்ற அனந்தமாயிருந்தால் மட்டுமே அது ஆனந்த மயமானவனாய் இருக்க முடியும். ஆத்மா அனந்தமானது என்ற அறிவு ஏற்படும்வரை குறையேதுமில்லை என்று வாய்வார்த்தையாக சொல்லமுடியுமே தவிர குறைவற்ற ஆனந்தத்தை உணர முடியாது.
பயிற்சிக்காக :
1. ஆத்மாவின் அளவு பற்றி வேதம் கூறும் கருத்து என்ன?
2. அனந்தம் எப்படி ஆனந்தம் ஆகும்?
3. தியானம் மூலம் சமாதி நிலையை அடைவது தேவையா?
சுயசிந்தனைக்காக :
1. ஆத்மா அனந்தமானது என்று முறையாக பயின்று பெற்ற அறிவிற்கும் சமாதி மூலம் ஆத்மா அனந்தமானது என்று பெறும் அனுபவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன? இவ்விரண்டில் எது சிறந்தது?
2. ஆத்மாவிற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவு என்ன?