Monday, July 19, 2010

பாடம் 076: ஆத்மா பாகங்களற்றது (பிரம்ம சூத்திரம் 2.3.41-42)

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆத்மா இருக்கிறது அல்லது மனிதன் கடவுளின் அங்கம் என்பது போன்ற தவறான கருத்துக்களை நீக்கி இரண்டற்ற ஆத்மா பாகங்களற்றது என்ற விளக்கத்தை கொடுத்தபின் இத்தகைய தவறான கருத்துக்கள் மக்கள் உண்மையை அறிய படிக்கட்டுகளாக உபயோகபடுகின்றன என்ற செய்தியை இந்த பாடம் நமக்கு தருகிறது.

எது சரியான பாதை?

இந்த கேள்விக்கு சரியான பதில் தெரியவேண்டுமென்றால் முதலில் நாம் சென்றடைய வேண்டிய இடம் எது என்பது பற்றிய சரியான அறிவு நமக்கு தேவை. வெவ்வேறு மதங்கள் யார் ஜீவன், உலகம் எப்படி உருவானது, கடவுள் யார் என்பது போன்ற கேள்விகளுக்கு முற்றிலும் வேறுபட்டு ஒன்றுக்கொன்று முரணான பதில்களை தருகின்றன. இதில் எது சரியான பதில் என்று அறிந்து கொள்ள நாம் மூன்று படிகளை கடக்க வேண்டும்.

முதல் படி: வாழ்வின் இறுதிக்குறிக்கோள் என்ன என்ற தெளிவு முதலில் ஏற்படவேண்டும். இன்று இதுவேண்டும் நாளை அதுவேண்டும் என்று நாளுக்கு நாள் மாறாமல் இனி எதுவும் வேண்டாம் என்ற நிலையை எது கொடுக்குமோ அதுவே இறுதிக்குறிக்கோளாக இருக்க முடியும்.

இரண்டாவது படி: ஏதாவது ஒரு மதத்தை பின்பற்றினால் மட்டுமே நம்மால் நம் வாழ்வின் இறுதிக்குறிக்கோளை அடைய முடியும் என்ற மனப்பக்குவம் ஏற்பட வேண்டும்.

மூன்றாவது படி: நமது வாழ்வின் இறுதிக்குறிக்கோளை அடைய எந்த மதம் சரியான மதம் என்பதை நமது அறிவுத்திறன் கொண்டு ஆராய்ந்து அறிய வேண்டும்.

இந்த மூன்று படிகளை கடந்தபின்தான் நமது ஆன்மீக பயணம் ஆரம்பமாகும்.

மதங்களுக்குள் வேறுபாடுகள்

முக்தி என்பதுதான் அனைத்து மதங்களின் முடிவான குறிக்கோள். ஆனால் முக்தி என்றால் என்ன என்பதில் அவற்றுள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே மதங்களை ஒரே இடத்துக்கு அழைத்துச்செல்லும் வெவ்வேறு பாதைகள் என்று குறிப்பிடுவது தவறு.

பேருந்து நிலையத்தில் நிற்கும் ஒவ்வொரு பேருந்தின் முன்புறம் அதன் தடவரிசையும் சென்றடையும் கடைசி இடமும் தெளிவாக காட்டப்பட்டிருக்கும். நாம் செல்லவேண்டிய இடத்திற்கு நேரடையாக பயணம் செய்யும் பேருந்தை தேர்ந்தெடுக்கும் வேலை ஓட்டுநரையோ நடத்துநரையோ சேர்ந்தது அல்ல. அந்த பொறுப்பு நம்முடையது. அதுபோல பல்வேறு மதங்கள் கூறும் தத்துவங்களை எடுத்து உபதேசிக்கும் ஆசிரியர்கள் நம் வாழ்வின் இறுதிகுறிக்கோளை தீர்மானிக்க தகுதியற்றவர்கள். நமக்கு வேண்டியதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிக்கும் அறிவுத்திறன் நம்மிடம் இல்லையானால் யார் சொல்வதை வேண்டுமானாலும் கேட்கலாம். எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். இந்த இடத்துக்குத்தான் போகவேண்டும் என்ற கட்டாயமில்லாமல் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் ஒரு குளிரூட்டபட்ட சொகுசு பேருந்தில் அது எங்கே செல்கிறது என்பதைகூட விசாரிக்காமல் ஏறி அமர்ந்து கொள்ளலாம்.

பெரும்பாலோர் வாழ்வின் முடிவான குறிக்கோளை ஆராய்ந்து அறிவதில்லை. மதங்களினால் என்ன பயன் என்று ஆராயாமல் கடவுள் நம்பிக்கையற்றவன் என்ற அவப்பெயர் ஏற்படகூடாது என்ற ஒரே காரணத்துக்காக பெற்றோரின் மதத்தை பின்பற்றுகிறார்கள்.

சமயம் மூடநம்பிக்கை அல்ல

எது சரியான குறிக்கோள்/ பாதை என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். நான்தான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்று சொல்வது ஒரு நம்பமுடியாத அல்லது கிரகிக்க முடியாத கருத்தாக தெரிந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளகூடாது. அப்படி புரியாத கருத்தை ஏற்றுக்கொண்டால் அது மூடநம்பிக்கையாகிவிடும். பாற்கடலில் ஆதிசேஷனை படுக்கையாக கொண்டு லக்ஷ்மிதேவி காலடியில் அமர்ந்திருக்க சயனித்துகொண்டிருக்கும் மஹாவிஷ்ணுதான் முழுமுதல் கடவுள், நாமெல்லாம் அவனுக்கு தொண்டு செய்ய பிறந்திருக்கும் அடிமைகள் என்ற கருத்து ஏற்புடையதாக இருந்தால் அதை நாம் ஏற்றுக்கோள்வதில் தவறு இல்லை. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்று கூறினால் அதைகேட்டு நாம் நம் நம்பிக்கை சரிதானா என்று சந்தேகிக்க தேவையில்லை. ஏனெனில் நமக்கு புரியாத கருத்தை ஏற்றுக்கொண்டால்தான் அது மூடநம்பிக்கை. வேதத்தில் கூறப்பட்ட உண்மைகளில் எது நம் புத்திக்கு சரி என்று படுகிறதோ அதை நம் ஞானமாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதுபோல் வேறு சிலருக்கு நாம் கடவுளின் அங்கம் என்ற கருத்துதான் சரி என்று படும். எது சரி என்பது ஒவ்வொரு மனிதரின் அறிவுக்கு ஏற்றாற்போல் மாறுபடுவதால்தான் இவ்வுலகில் பல்வேறு சமயங்கள் நிலவிவருகின்றன.

ஆன்மீகபயணம்

மனிதன் எந்த சமயத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவன் பெற்றோரினால் முதலில் தீர்மானிக்கப்படுகிறது. பண்டிகைகளை கொண்டாடுவது மற்றும் மதசம்பந்தமான வழிபாட்டு முறைகளை அர்த்தம் புரியாமல் பின்பற்றுவது போன்ற செயல்கள் சமயதத்துவங்களில் ஈடுபாடு ஏற்படுத்துவதில்லை. தனது குறிக்கோளை அடைய தன்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரை மனிதனின் ஆன்மீகப்பயணம் ஆரம்பிப்பதில்ல.

எப்பொழுது மனிதன் தன் சுயமுயற்சியின் குறைபாடுகளை உணர்கிறானோ அப்பொழுது அவன் மதம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறான். மதம் மனதை சமைப்பதால் அதை சமயம் என்று அழைக்கிறோம்.

முதல் படி: தனக்கு அப்பாற்பட்டு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கட்டளைபடிதான் நாம் நடக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் தர்மமாக வாழத்துவங்குவது ஆன்மீக பயணத்தின் முதல் படி. இந்த படியில் கடவுள் ஒரு குறிப்பிட்ட வடிவமும் பெயரும் உள்ளவராக நம்பப்படுகிறார்.

இரண்டாம் படி: கடவுள் யார் என்று கேள்விகள் கேட்டு நாம் வேறு கடவுள் வேறு என்று நினைத்துகொண்டிருப்பது தவறு என்ற ஞானம் வந்ததும் உலகம் முழுமையையும் கடவுளின் பாகமாக உணரத்துவங்குவோம். என் கடவுள் மட்டும்தான் உண்மையான கடவுள் என்ற முதல் படியிலிருந்து முன்னேறி அனைவரது கடவுளரும் ஒரேஒரு கடவுளின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்பதை அறிவோம்.

மூன்றாம் படி: இதுதான் ஆன்மீக பாதையின் கடைசி படி. இந்த படியில் கடவுளுக்கு எவ்வித குணமோ, பெயரோ, உருவமோ இல்லை என்பதை முறையாக படித்து தெரிந்து கொள்வோம்.

நான் எவ்வித குணமோ பெயரோ உருவமோ இல்லாத இரண்டற்ற ஆத்மா என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைத்து படிகளையும் தாண்டி நமது ஆன்மீகப்பயணம் முற்று பெறும். அதன் பின் நாம் குறைவற்ற இன்பத்தை பெற்று நிறைவடைவோம். அதுவே முக்தி.

முடிவுரை :

மக்களின் அறிவுத்திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுவதுதான் இந்த உலகில் பல்வேறு மதங்கள் நிலவி வருவதற்கு ஒரே காரணம். கடவுள் யார் என்ற கேள்வியின் சரியான பதிலை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்கள் தங்கள் அறிவுக்கேற்றாற்போல் ஏதாவதொரு மதத்தின் கொள்கைகளை உண்மை என்று நம்புகிறார்கள். அப்படிபட்ட நம்பிக்கையை மூடநம்பிக்கை என்றும் மற்ற மதங்கள் தவறானவை என்றும் முற்றும் உணர்ந்த அறிஞர்கள் கூறுவதில்லை. இன்னும் பயணத்தை முடித்து வாழ்வின் முடிவான குறிக்கோளை அடையாதவர்கள் மட்டுமே ‘என் மதம்தான் சரியானது நீ செல்லும் பாதை தவறானது’ என்பது போன்ற விவாதங்களில் ஈடுபடுவார்கள்.

நம் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களும், நமக்கு ஏற்படும் அனைத்து அனுபவங்களும் நமது அறிவை தீர்மானிக்கின்றன. நமது அறிவு தொடர்ந்து வளர்ச்சி பெற்று முடிவில் முக்தியை அடையும். இந்த வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு முந்தய கட்டத்தில் நமக்கு இருந்த அறிவு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் அது இந்த படிக்கட்டுக்கு நம்மை அழைத்துவர உதவியது என்பதை நாம் மறக்க கூடாது. எனவே கடவுள் வேறு நான் வேறு என்று கூறுபவர்களும் நான் கடவுளின் ஒரு அங்கம் என்று கூறுபவர்களும் ஆன்மீக பயணத்தின் வெவ்வேறு படிக்கட்டுகளில் இருப்பவர்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

பயிற்சிக்காக :

1. மூடநம்பிக்கை உருவாக காரணம் என்ன?

2. ஆன்மீக பயணத்தை ஆரம்பிக்குமுன் கடக்க வேண்டிய மூன்று படிகள் யாவை?

3. ஆன்மீக பயணத்தின் மூன்று படிகள் யாவை?

4. முக்தி என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஆன்மீக பயணத்தில் ஈடுபடாமல் இவ்வுலகில் வாழும் இரண்டு வகை மக்கள் யார்?

2. உண்மையை உணராதவர்கள் முக்தியடைய முடியாதா?