Tuesday, July 13, 2010

பாடம் 075: ஆத்மா ஒன்றுதான் (பிரம்ம சூத்திரம் 2.3.40)

ஜீவாத்மாக்கள் பல என்று கூறப்பட்டதால் ஒன்றுக்கு மேற்பட்ட ஆத்மாக்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு விடையை இந்த பாடம் தருகிறது.

பரவலான மூடநம்பிக்கை

உலகில் பல மூட நம்பிக்கைகள் உண்டு. அவற்றினுள் முதலிடம் வகிப்பது கடவுளுக்கும் உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றியது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் பெரும்பாலோர் கடவுள் மக்களிடமிருந்து விலகி எங்கோ இருப்பதாகவும் கடவுளின் கட்டளைபடி நாம் வாழ வேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய மூடநம்பிக்கை.

புத்தமதத்தை தவிர மற்ற அனைத்து மதங்களும் கடவுளை ஒரு சர்வ சக்திமான் என்றும் மக்களை அற்பர்கள் அல்லது பாபிகள் என்றும் வர்ணிக்கின்றன. இந்த உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்து பொருள்களும் கடவுளின் சொத்து என்றும் மனிதன் எப்பொழுதும் கடவுளுக்கு அடிபணிந்து பயபக்தியுடன் செயல் படவேண்டும் என்றும் உலகின் பெரும்பான்மை மக்கள் தவறான நம்பி வருகின்றார்கள்.

மூட நம்பிக்கைக்கு காரணம்

பகுத்தறிவை உபயோகித்து கேள்விகள் கேட்காதவரை மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நம்மிடையே வளர்ந்து வரும். பார்ப்பது அல்லது கேட்பதெல்லாம் அறிவாக மாறிவிடாது. ஐந்து புலன்களின் மூலம் பெறும் செய்திகள் பகுத்தறிவின் கூர்மையால் சோதனை செய்யபட்ட பின்தான் அவை அறிவாக மாறும். கிராமத்திலேயே என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு படிப்பறிவில்லா மூதாட்டியிடம் மனதில் தோன்றிய கற்பனை கதைகளை கூறி அவற்றை உண்மை என்று நம்பவைப்பது எளிது. ஆனால் ஏன் எப்படி என்று எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்கும் தற்கால இளைஞர்களிடம் உண்மையையே விளக்கினாலும் அவர்களது சந்தேகங்களை நீக்குவது கடினம். எங்கு அறிவுத்திறனும் யுக்திவலிமை அதிகமிருக்கிறதோ அங்கு மூடநம்பிக்கைகள் இருக்காது.

யாரும் தங்களது நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்று ஒத்துக்கொள்வது கிடையாது. அறிவுக்கு எட்டாத கருத்துக்களை நம்பிக்கை என்ற பெயரில் ஏற்றுக்கொள்வதைதவிர வேறு வழி கிடையாது. கடவுள் மற்றும் உலகத்தை பற்றி பல்வேறு மதங்கள் கூறிவரும் ஒன்றுடன் ஒன்று முரணான கருத்துக்களிலிருந்து எது உண்மை என்பதை ஆய்ந்து அறிவாக ஏற்றுக்கொள்வதோ அல்லது மூடநம்பிக்கை என்று நிராகரிப்பதோ அவரவரின் அறிவுத்திறனை பொறுத்தது.

வேதத்தில் கூறபட்டிருக்கிறது என்ற காரணத்திற்காக இது சரியாக இருக்கும் என்று எந்த ஒரு கருத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் வேதம் இதைத்தான் கூறுகிறது என்று எந்த ஒரு கருத்தையும் நிரூபிக்க முடியும். எனவே வேதத்தின் முடிவான கருத்து என்ன என்பதை அறிய நமது அறிவுகூர்மை மட்டுமே துணை. இதனால் எது சரியான கருத்து என்ற முடிவு ஆளுக்கு ஆள் வேறுபடும்.

வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தோன்றுவதால் வேதத்தை ஒதுக்கிவிட்டு அறிவியலின் துணை மட்டும் கொண்டு நாம் இன்பமாக வாழலாம் என்பதும் நடவாத காரியம். மதங்களில் கூறப்பட்ட தத்துவங்களை சரியாக தெரிந்து கொள்வது ஒரு பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு இன்றிமையாத தேவை. ஏனெனில் இன்பமான வாழ்வை அடையும் வழியை மதங்கள் மட்டுமே நமக்கு தருகின்றன. அறிவியலால் என்றும் அறிய முடியாத இவ்வழிகளை நம் அறிவின் திறனால் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மதங்கள் கூறும் மூன்று முரண்பட்ட அடிப்படை கருத்துகள் பின்வரும் ஆறு தொகுப்புகளின் கீழ் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. (கருத்து 1: துவைதம். கருத்து 2: விசிஷ்டாத்வைதம். கருத்து 3: அத்வைதம்.)

1.உயிரினங்கள்
கருத்து 1: ஜீவாத்மாக்கள் பல. அவை பரமாத்மாவிலிருந்து வேறுபட்டவை.
கருத்து 2: ஜீவாத்மாக்கள் பல. அவை பரமாத்மாவின் அங்கங்கள்.
கருத்து 3: ஜீவாத்மாக்கள் ஒரே பரமாத்மாவின் பிரதிபிம்பங்கள்.

2.உலகம்
கருத்து 1: உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளிடமிருந்து வேறுபட்டது.
கருத்து 2: உலகம் கடவுளின் ஒரு பகுதி. கடவுளிடமிருந்து தனிபட்டது அல்ல.
கருத்து 3: உலகம் ஒரு மாயை. உண்மையில் அது இல்லை.

3.கடவுள்
கருத்து 1: சகல நல்குணங்களுடன் கூடிய இறைவன் இந்த பிரபஞ்சத்தை ஆட்சிபுரிகிறான்.
கருத்து 2: சகல குணங்களுடன் கூடிய இறைவன் இந்த பிரபஞ்சத்தை காவல்புரிகிறான்.
கருத்து 3: எவ்விதகுணமோ பாகங்களோ இல்லாத இறைவன் பிரபஞ்சமாக காட்சியளிக்கிறான்.

4.துன்பத்திற்கு காரணம்
கருத்து 1: நான் சுதந்திரமானவன் என்ற அஞ்ஞானம்.
கருத்து 2: நான் கடவுளின் ஒரு பகுதி என்ற உண்மையை அறியாமை.
கருத்து 3: நான் உலகத்தை சார்ந்து இருப்பவன் என்ற அஞ்ஞானம்.

5.துன்பத்தை நிவர்த்திக்கும் வழி
கருத்து 1: கடவுளுக்கு தொண்டு செய்து அவன் புகழை தோத்திரம் செய்வது.
கருத்து 2: கடவுளிடம் சரணடைந்து அவனை உறுதியாக பற்றிக்கொள்வது.
கருத்து 3: நான்தான் உலகத்தின் ஆதாரம் என்று அறிந்து கொள்வது.

6.முக்தி
கருத்து 1: மரணத்திற்கு பின் கடவுளின் அடியை சேர்ந்து தொண்டு புரிவது.
கருத்து 2: மரணத்திற்கு பிறகு மீண்டும் பிறவாமல் கடவுளுடன் ஒன்றாகிவிடுதல்.
கருத்து 3: குறைவில்லா இன்பத்துடன் உலக வாழ்வை மரணம்வரை அனுபவித்தல்.

ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைபடுத்தப்பட்டுள்ள இந்த கருத்துகளில் எது உண்மை என்பதை நம் அறிவுகூர்மையால் ஆராய்ந்து அறிந்து அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மூன்றில் ஏதாவது ஒரு கருத்துதான் உண்மையாக இருக்கமுடியும். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று ஏதோ இந்த விஷயம் நமக்கு சம்பந்தபடாத ஒன்றாக நினைத்து ஒருவித முடிவும் எடுக்காமல் இருக்கமுடியாது. ஏனெனில் வாழ்வில் சரியான பாதையில் நாம் பயணிக்கிறோமா இல்லையா என்பது இந்த மூன்றில் எந்த கருத்தை நாம் ஏற்றுகொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது.

துவைதம் ஆன்மீக பாதையில் முதல் படி. விசிஷ்டாத்வைதம் இரண்டாம் படி. அத்வைதம் ஆன்மீக பாதையின் முடிவு. பாதையின் முடிவை அடைய படிகள் அவசியம். எனவே கடவுள் மேல் நம்பிக்கையில்லாமல் இருப்பதைவிட கடவுள் மேல் மூடநம்பிக்கையுடன் இருப்பது சிறந்தது. நம்பிக்கையின் அடிப்படையில் ஆரம்பித்த கடவுள் பக்தி, வேதங்களை முறைப்படி படிக்கவும் அதன் பின் கடவுளை பற்றிய சரியான அறிவை அடையவும் துணை செய்யும்.

முடிவுரை :

ஆத்மா ஒன்றுதான். உலகில் வாழும் பல்வேறு ஜீவாத்மாக்கள் உண்மையில் தனித்தனியானவை அல்ல. ஆத்மாவின் பிரதிபிம்பங்கள் உடல் மனது ஆகிய ஜடப்பொருள்களுடன் சேர்ந்து ஜீவாத்மாக்களாக காட்சியளிக்கின்றன.

தச்சன் கருவிகளை உபயோகிக்கும்பொழுது தச்சனாகவும் மற்ற சமயங்களில் சாதாரண மனிதனாகவும் இருக்கிறான். அதுபோல ஜீவாத்மா மனம் உடல் போன்ற கருவிகளை உபயோகிக்கும்பொழுது கர்த்தாவாகவும் மற்ற சமயங்களில் ஆனந்தமயமாயும் இருக்கிறதா என்ற சந்தேகம் பல ஜீவாத்மாக்கள் இவ்வுலகில் செயல்படுவதை காணும்பொழுது ஏற்படலாம். உண்மையில் ஆத்மா என்பது எதனுடனும் சம்பந்தபடாமல் தானும் கர்த்தாவாக இல்லாமல் மற்ற யாரையும் செயலுக்கு தூண்டிவிடாமலும் இருப்பது.

ஆத்மாவின் பிம்பமான அகம்பாவம் ஒவ்வொரு உயிரினத்தின் மனதில் பிரதிபலித்து ஆத்மாவின் உணர்வை கடன் வாங்கி உடலுக்கு கொடுத்து அதை ஜடப்பொருளிலிருந்து வேறுபடுத்திகாட்டுகிறது. உண்மையில் ஜடப்பொருள்கள் கூட தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டிருக்கும் அணுகூட்டத்தின் தொகுப்புகள் என்பதை அறிவியல் நமக்கு தெளிவாக காட்டித்தருகிறது. எனவே மற்ற ஜடப்பொருள்களைப்போல உயிரினங்களின் பருவுடல்களும் தொடர்ந்து தோன்றி வளர்ந்து மாற்றமடைந்து மறைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அறியாமையால் நமது மனம் உயிரினங்களின் செயல்பாட்டுக்கு அகம்பாவம்தான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறது. தன்னை அகம்பாவம் மற்றும் உடலுடன் ஒன்றுபடுத்தி வாழ்வு துன்பமயமானது என்ற முடிவுக்கு பெரும்பாலோர் வந்துள்ளனர்.

கர்த்தா என்று யாருமில்லை. உலகம் என்று ஏதுமில்லை. எவ்வித துன்பங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆனந்தமான ஆத்மா நான் என்று எப்பொழுது நமது மனதிற்கு புரிகிறதோ அப்பொழுதிலிருந்து குறைவில்லா இன்பத்துடன் நம் வாழ்வு அமையும்.

பயிற்சிக்காக :

1. மதங்கள் கூறும் ஆறு கருத்து தொகுப்புகள் யாவை?

2. வேதத்தில் கூறப்படும் மூன்று கருத்துக்களில் எது சரியானது?

சுயசிந்தனைக்காக :

1. அறிவுத்திறன் குறைவாயிருப்பவர்களுக்கு முக்திகிடைக்காதா?

2. துவைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் ஆகிய கருத்துக்கள் தவறா?

3. அனைத்து கருத்துக்களையும் சரி என்று அத்வைதம் ஏற்றுக்கொள்ள முடிவதற்கு காரணம் என்ன?