Monday, July 5, 2010

பாடம் 072: ஆத்மா அறிய முடியா அறிவு (பிரம்ம சூத்திரம் 2.3.18)

தோற்றம் மறைவு என்ற கட்டுக்கோப்புக்குட்படாமல் எவ்வித மாற்றமுமில்லாமல் என்றும் இருக்கும் நித்யமான ஆத்மா மட்டுமே சத்யம் என்ற கருத்தை கூறியபின் ஆத்மா உணர்வுமயமானது என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.

உயிருள்ள உடல் மரணமடைந்தவுடன் ஜடப்பொருளாக மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் உயிர் இருக்கும்பொழுது இருந்த உணர்வு இப்பொழுது இல்லாமல் போய்விட்டது என்ற வழக்கமான விளக்கம் தவறானது. மின்விளக்கு உடைந்து போனபின் அதிலிருந்து வெளிச்சம் வராததற்கு காரணம் மின்சாரம் இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தமல்ல. அதுபோல் மரணத்திற்கு பின் உடல் உணர்வை வெளிபடுத்தாதால் உணர்வு மறைந்து விட்டது என்று முடிவு செய்யகூடாது. உணர்வு என்றும் இருப்பது. அழியாதது. என்றும் நித்யமாய் இருக்கும் அந்த உணர்வுதான் ஆத்மா.

அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் பொதுவான ஒரு இயல்பு. அறிந்து வைத்துள்ள விஷயங்களை பொறுத்தும் அவ்வறிவை உபயோகபடுத்தி வாழ்வின் தரத்தை உயர்த்தும் சாமர்த்தியத்தை பொறுத்தும் அறிவின் திறன் மதிக்கப்படும். மரணத்தில் உடலிலிருந்து பிரியும் உயிர் என்பது யாது என்பதை அறிந்துகொள்ள அறிவியல் அறிஞர்கள் அனைவரும் தீவிரமாக முயற்சி செய்தும் ஆத்மா என்பது அவர்களது அறிவுக்குள் அகப்படாததற்கு காரணம் ஆத்மா அறியமுடியாத அறிவு என்பதேயாகும்.

அறியும் அறிவே ஆத்மா

அறிவு உருவானது ஆத்மா. ஆத்மாவை அறிய முடியாது என்று அறிந்து கொள்ள வேதம் விளக்கின் ஒளியை உதாரணமாக கொடுக்கிறது.
  1. அறியும் அறிவை நாம் எப்பொழுதும் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது ஒளி. ஒளியில்லாவிட்டால் நம்மால் பார்க்கவே முடியாது. எனவே நான் பார்க்கிறேன் என்பது உண்மையானால் அங்கு ஒளி நிச்சயம் இருக்கிறது என்று நாம் அறிவோம். ஆனால் நாம் ஒளியை பொதுவாக கவனிப்பதில்லை. அதுபோல் நம்மை சுற்றியுள்ள பொருள்களை அறியும் அறிவு ஒன்று இருக்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்டினால் மட்டுமே நாம் உணர்கிறோம்.
  1. அறியும் அறிவு இருப்பதால்தான் மற்ற பொருள்களை நம்மால் அறிய முடிகிறது.
அறையில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு கட்டில், நாற்காலி, தொலைகாட்சிபெட்டி என்பது போன்ற பதில்கள் வருமே தவிர ஒளி என்ற பதில் வரவே வராது. ஒளி என்பதை நாம் எப்பொழுதும் பார்த்துகொண்டிருக்கிறோம். மேலும் ஒளி இருப்பதனால் மட்டுமே நம்மால் எந்த ஒரு பொருளையும் பார்க்க முடிகிறது.

நான் இருக்கிறேன் என்ற உணர்வு எப்பொழுதும் இருப்பதால்தான் நம்மால் நம்மை சுற்றியுள்ள உலகத்தை பற்றிய அறிவை பெற முடிகிறது.
  1. அறியும் அறிவு அளவற்றது.
ஒரு நாற்காலியை நாம் பார்க்கும்பொழுது அதன் மீது படர்ந்து அதன் இருப்பை நமக்கு அறிவிக்கும் ஒளி நாற்காலியை மட்டுமல்லாமல் அனைத்து பொருள்களையும் ஒளிர்விக்கிறது. நாற்காலிக்கு ஒரு குறிபிட்ட வடிவமும் அளவும் இருக்கிறது. ஆனால் ஒளி எவ்வித வடிவத்திலும் அடங்காமல் அளவற்றதாய் எங்கும் வியாபித்திருக்கிறது.

மேலும் நாற்காலி, மேஜை என்று பல பொருள்கள் இருந்தாலும் அனைத்து பொருள்களையும் நமக்கு காட்டிக்கொடுக்கும் ஒளி ஒன்றே ஒன்றுதான்.

நாற்காலியை பற்றிய அறிவு அருகில் உள்ள மேஜையின் அறிவிலிருந்து வேறுபட்டது. அதுபோல் ஒவ்வொரு பொருள்களை பற்றிய அறிவும் அந்தந்த பொருள்களின் தன்மைகேற்றவாறு வேறுபடும். ஆனால் அறியும் அறிவில் எவ்வித வேறுபாடும் இல்லை. நாற்காலியை அறியும் அறிவு மேஜையை அறியும் அறிவிலிருந்து வேறுபடுவதில்லை. எனவே அறியும் அறிவு ஒன்றே.

நாற்காலியை பற்றிய அறிவு ஒரு வரைமுறைக்கு உட்பட்டது. ஆனால் அறியும் அறிவு எவ்வித கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் எல்லா சமயங்களிலும் எல்லா இடங்களையும் வியாபித்து இருப்பது.
  1. அறியும் பொருள்கள் இல்லாமல் போனாலும் அறியும் அறிவு தொடர்ந்து இருக்கிறது.
ஒளி இல்லாமல் போகலாம். ஆனால் அறியும் அறிவு இல்லாமல் போவதில்லை. நாம் விழித்திருக்கும் பொழுது நம்மை சுற்றியுள்ள பொருள்களை அது நமக்கு அறிவிக்கிறது. நாம் கனவு காணும்பொழுது கனவில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள உதவுகிறது. நம் ஆழ்ந்த உறக்கத்தில் ஒன்றையும் அறியாமல் சுகமாக தூங்கினோம் என்பதையும் அறியும் அறிவு அறிகிறது.
  1. அறியும் அறிவை அறியமுடியாது.
ஒளியை நம்மால் நேரடையாக பார்க்கவே முடியாது. ஒளியால் ஒளிர்விக்கப்பட்ட பொருள்களை பார்ப்பதால் மட்டுமே ஒளி இருக்கிறது என்று நாம் அறிகிறோம். விண்வெளியில் பயணம் செய்யும்பொழுது நம் கண்முன் பொருள்கள் எதுவும் இல்லாமல் இருந்தால் நமது முதுகின் பின் சூரியன் மிக அதிகமான ஒளியை வீசிக்கொண்டிருந்தாலும் முழு இருட்டைத்தான் அனுபவிப்போம். ஒளியை தரும் சூரியனை பார்க்கமுடியுமே தவிர ஒளியை பார்க்கவே முடியாது.

அது போல எல்லா பொருள்களையும் நாம் அறிவதால் அறியும் அறிவு ஒன்று இருக்கிறது என்று நாம் உணர முடியுமே தவிர நாற்காலி அல்லது மேஜையின் அறிவை நாம் அடைவது போல் அறியும் அறிவை நம்மால் அறிய முடியாது.

முடிவுரை :

ஆத்மா அறிய முடியா அறிவு என்று சொல்லுவதற்கு காரணம் ஆத்மாவே அறிவு உருவமாக இருப்பதால்தான். தீயை எரிக்கமுடியாது. எது எரிக்கப்பட்டதோ அது தீயாக இருக்க முடியாது. ஏனெனில் எரிப்பது என்பது தீயின் இயல்பு. தீயைத்தவிர எரிக்ககூடிய பொருள் வேறு ஏதுமில்லை. அதுபோல அறிதல் என்பது அதன் இயல்பாக இருப்பதால் ஆத்மா அறியமுடியாத அறிவாகும். எது அறியப்பட்டதோ அது ஆத்மாவாக இருக்க முடியாது ஏனெனில் ஆத்மாவைத்தவிர அறிய கூடிய பொருள் வேறு ஒன்றுமில்லை.

நான் என்ற சொல்லின் பொருளே ஆத்மா என்பதால் யாராலும் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது என்று வேதம் கூறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஆத்மாவை ஒளியுடன் ஒப்பிட்டு வேதம் சொல்லும் ஐந்து கருத்துக்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஆத்மாவை யாராலும் அறிந்து கொள்ள முடியாதென்பதால் அதை இல்லை என்று சொல்ல முடியுமா?